Published:Updated:

நான்கு மகள்களில் இருவருக்கு மனநலச் சிக்கல்; மகள் வீட்டில் தஞ்சம் - கரூர் கிருஷ்ணம்மாளின் கண்ணீர் கதை

கிருஷ்ணம்மாள் சிதைந்த வீட்டு முன்பு..
கிருஷ்ணம்மாள் சிதைந்த வீட்டு முன்பு..

``எங்களுக்கு இந்த அல்லற்பட்ட பொழப்பு இன்னும் சீரழியணும்னு நெத்தியில எழுதி இருந்திருக்கும்போல. எங்க அஞ்சு உசிருக்கும் அடைக்கலம் கொடுத்த குடிசை வீடும் திடீர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி மழையில் சேதமாயிட்டு’’

பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்ததும், பெற்றோருக்கு பெரும் நிம்மதி வரும். அவர்கள் நல்ல விதமாக வாழ்கிறார்கள் எனும்போதுதான் அந்த நிம்மதியின் ஆயுள் கூடும். ஆனால், கரூர் மாவட்டத்து கிருஷ்ணம்மாளுக்கு அந்த நிம்மதி கிட்டவே இல்லை.

கிருஷ்ணம்மாள், சிதைந்த வீட்டு முன்பு...
கிருஷ்ணம்மாள், சிதைந்த வீட்டு முன்பு...

கிருஷ்ணம்மாளுக்கு நான்கு பெண்கள். அவர்களைப் படிக்க வைக்கவும் திருமணம் செய்துகொடுக்கவும் சொல்ல முடியாத கஷ்டங்களைப்பட்டுள்ளார். இதற்கிடையில், கிருஷ்ணம்மாளின் கணவரும் இறந்துவிட, துயரம் இன்னும் கூடியது.

Vikatan

கரூர் மாவட்டம், புகளூர் ஒன்றியத்தில் இருக்கும் தோட்டக்குறிச்சிதான், கிருஷ்ணம்மாள் வசிக்கும் கிராமம். மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள், அவர்களின் குழந்தைகளோடு தனது இரண்டாவது மகள் மீனாட்சி வீட்டில் வசிக்கவேண்டிய சூழல் கிருஷ்ணம்மாளுக்கு. சோகம் சூழ நின்ற கிருஷ்ணம்மாளிடம் பேசினோம்.

கிருஷ்ணம்மாள்
கிருஷ்ணம்மாள்

"என் கணவர் பேரு மாரிமுத்து. எங்களுக்கு செல்வி, மீனாட்சி, மாலதி, அமுதானு நான்கு பெண்கள். நாங்க குடியிருக்க ஒரு ஓட்டைக் குடிசை வீடு இருந்துச்சு. வேற எந்த சொத்துபத்தும் எங்களுக்குக் கிடையாது. வீட்டுக்காரரும் நானும் கூலிவேலைக்குப் போய், அதுல கிடைச்ச கொஞ்ச வருமானத்துலதான் பிள்ளைங்கள வளர்த்து ஆளாக்கினோம். மூணாவது பொண்ணு மாலதியை காலேஜ் வரைக்கும் கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம். 15 வருஷத்துக்கு முன்னாடி கடன் வாங்கி, என் மூத்த மக செல்வியை பக்கத்தூருல ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெச்சோம். தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் அவ திருமணத்தை நடத்தினோம். ஆனா, 'வரதட்சணை பத்தலை'னு அவளை ரொம்பக் கொடுமை பண்ணினாங்க.

அவளுக்கு அந்த கஷ்டத்தை நினைச்சு நினைச்சு, ஒரே வருஷத்துல மனநலம் சரியில்லாமப் போயிடுச்சு. அவளைத் துரத்தி விட்டுட்டாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இந்தக் கவலையிலேயே, கடந்த 12 வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். 'அவர் இல்லாம எப்படி மீதியுள்ள மூணு பிள்ளைங்கள கரைசேர்ப்பேன்'னு விக்கித்துப் போனேன். ஆனா, என்னோட ரெண்டாவது பெண் மீனாட்சி என்கூட கூலி வேலைக்கு வந்தா.

செல்வி
செல்வி
நா.ராஜமுருகன்

மறுபடியும் கடனவுடன வாங்கி மீனாட்சியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமார்ராஜாவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். குமார்ராஜா என் வயித்துல பொறக்காத மகனா, என் குடும்பத்துக்கு ஆதரவா இருக்கார். அந்தத் தெம்புலேயே இருக்கிறத வெச்சு, பக்கத்து ஊர்கள்ல மூணாவது பொண்ணு மாலதியையும், நான்காவது பொண்ணு அமுதாவையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்.

கடன் கழுத்தை நெறிச்சாலும், பார்க்கிறவங்க கண் அடையுற மாதிரி மத்த மூணு பிள்ளைங்களையும் கட்டிக்கொடுத்துட்டேன்னு நிம்மதியானேன். ஆனா, நான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டது எந்தக் கடவுளுக்கும் பொறுக்கலை போல. கணவர் வீட்டுல ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணுனு ரெண்டு பிள்ளைகளோட வாழ்ந்துட்டு வந்த மூணாவது பொண்ணு மாலதிக்கும் மனநிலை சரியில்லாமப் போயிட்டு. அவங்க படுத்துன கொடுமைதான் அதுக்குக் காரணம்.

மாலதி
மாலதி

அவங்களும் நெஞ்சுல ஈரமே இல்லாம மாலதியை எங்க வீட்டுக்கு ரெண்டு பிள்ளைகளோட விரட்டி அடிச்சுட்டாங்க. மூத்த பொண்ணு செல்வியையும், மூணாவது பொண்ணு மாலதியையும் மருத்துவமனை மருத்துவமனையா அழைச்சுட்டுப் போனேன். நலமாக்கி அவங்கங்க புருஷன் காலை கையைப் பிடிச்சாவுது, சேர்த்து வச்சுரலாம்னு நினைச்சேன். ஆனா, அந்த நினைப்பு வெறும் நினைப்பாவே போயிட்டு. ரெண்டு பேருக்கும் இன்னும் குணமாகல.

'விதி விட்டது வழி'னு தினமும் கூலி வேலைக்குப் போயி, ரெண்டு பெண்களுக்கும், மாலதியோட பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊத்திக்கிட்டு இருந்தேன். ஆனா, எங்களுக்கு இந்த அல்லற்பட்ட பொழப்பு இன்னும் சீரழியணும்னு நெத்தியில எழுதி இருந்திருக்கும்போல. எங்க அஞ்சு உசிருக்கும் அடைக்கலம் கொடுத்த குடிசை வீடும் திடீர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி மழையில் சேதமாயிட்டு. உள்ளார குடியிருக்க முடியாத நிலைமை. ஏற்கெனவே கடன் கழுத்தை நெரிக்குது. அதனால், இந்த வீட்டை சரிபண்ண வசதியில்லாத கொடுமையான நிலைமை.

சிதைந்த வீடு..
சிதைந்த வீடு..
நா.ராஜமுருகன்

அஞ்சு உசிரும் திக்கத்து, அண்டி வாழ வழியத்து நின்னோம். அப்போதான், என் இரண்டாவது மக மீனாட்சியும், அவளோட கணவரும் வந்து, 'நாங்க இருக்கோம், கலங்காம வாங்க'னு கூப்பிட்டாங்க. இப்ப அவங்க வீட்டுலதான் அஞ்சு பேரும் இருக்கோம். நான் இருக்கிற வரைக்கும் கஞ்சியோ, கூழோ நாலு உசிருக்கும் கொடுத்திருவேன். ஆனா, என் காலத்துக்குப் பிறகு இவங்களோட நிலைமை என்னங்கிறத நினைச்சாதான், ராத்திரி பொழுதுகள்ல கண்ணுல தூக்கம் தங்க மாட்டேங்குது" என்றார், கண்களில் கண்ணீர் கசிந்தபடி.

அடுத்து பேசிய, கிருஷ்ணம்மாளின் இரண்டாவது மகளான மீனாட்சி, "என் அக்கா செல்விக்கும், பி.ஏ படிச்ச மாலதிக்கும் எங்க சக்தியை மீறி செலவு பண்ணித்தான் திருமணம் பண்ணி வெச்சோம். ஆனா, பணத்தாசைப் பிடிச்ச ரெண்டு வீட்டுக்காரங்களும் என்னோட சகோதரிகளைக் கொடுமைப்படுத்தி, மனநிலை பாதிக்கிற அளவுக்குப் பண்ணிட்டாங்க. ஆனா, என் சகோதரிகளை ரெண்டு ஆண்களும் ஈஸியா துரத்திவிட்டுட்டாங்க. ஆனா, இவங்க நிலைமை இப்படி ஆயிட்டு.

மீனாட்சி
மீனாட்சி

எங்கம்மாவோடு அவங்க வீடு இடிந்து தவிச்சு நின்னபோது, என் கணவர்தான், 'போய் அவங்களை நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வா'னு சொன்னார். நான் உடனேபோய் அவங்களை அழைச்சுட்டு வந்தேன். இனி, என்னோட ரெண்டு சகோதரிகளையும், மாலதியோட ரெண்டு பிள்ளைங்களையும் நாங்க சாப்பிடுற சாப்பாட்டுல பகிர்ந்து கொடுத்து, காபந்து பண்ணுவோம். என்ன கஷ்டம் வந்தாலும், நான் ரெண்டாவது தாயா இருந்து அவங்களைப் பாதுகாப்பேன். அந்த இடிந்த வீட்டைச் சரிபண்ண அரசோ, சமூக அக்கறையுள்ளவர்களோ உதவினா, அவங்களை நாங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு