Published:Updated:

#NFT என்றால் என்ன? அமிதாப் முதல் கமல் வரை... பகுதி 1

சொப்பன சுந்தரி வைத்திருந்த கார், காதலியின் முதல் முத்தம், காந்தியின் மூக்கு கண்ணாடி, கடந்து சென்ற இந்த நொடி - இவை எல்லாமே நான் ஃபஞ்சிபிள் வகையைச் சேரும்.

#NFT என்றால் என்ன? அமிதாப் முதல் கமல் வரை... பகுதி 1

சொப்பன சுந்தரி வைத்திருந்த கார், காதலியின் முதல் முத்தம், காந்தியின் மூக்கு கண்ணாடி, கடந்து சென்ற இந்த நொடி - இவை எல்லாமே நான் ஃபஞ்சிபிள் வகையைச் சேரும்.

Published:Updated:

உங்களுக்கு 'வின்சென்ட் வேன் கோ’-வைத் தெரியுமா? (தெரியவில்லை என்றாலும் சொல்லத்தான் போகிறோம்!) 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெதர்லாந்து ஓவியர். குறைவாக பேசுபவர். அதிகம் யோசிப்பவர். ஓவியத்தில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கியவர். வரைவதையே வாழ்க்கையாய்க் கொண்டிருந்த வேன் கோ-வின் ஓவியங்களை அவர் வாழ்ந்த காலத்தில் யாருமே மதிக்கவில்லை...

2017 நவம்பர்... நியு யார்க்கின் சத்தமில்லாத ஒரு செவ்வாய்க்கிழமையில், புகழ்பெற்ற கிரிஸ்டீஸ் நிறுவன ஏலத்தில் வேன் கோவின் 'Laboureur Dans Un Champ' எனும் ஓவியம் 81.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு) ஏலம் போனது. தன்னுடைய கலைக்கு இவ்வளவு பெரிய மதிப்பும், அந்தஸ்தும் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் மனம் நொந்து தன்னுடைய 37-வது வயதில் வேன் கோ இறந்திருக்க மாட்டார். ஆம், ஒரு தோட்டாவின் உதவியோடு அவர் தற்கொலை செய்துகொண்டார்!

வின்சென்ட் வேன் கோ
வின்சென்ட் வேன் கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, NFT என்றால் என்ன?

'பீப்பிள்' (Beeple) எனப்படும் மைக் வின்கெல்மேன் -Mike Winkelmann (இரட்டை n நியூமராலாஜிக்காக இருக்குமோ என்னவோ!) அமெரிக்க டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ஆவார். கடந்த 15 வருடங்களாக தினசரி ஒரு டிஜிட்டல் ஓவியம் வரைந்து(!) தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர். பெரும்பாலும் அழிவை நோக்கிச் செல்லும் சமூகம் (எ) Dystopian வகை, சர்ரியலிச ஓவியங்களைத் தீட்டுவதில் வல்லவர்.

பீப்பிள்-க்கும் NFT என்றால் என்னவென்று தெரியாது. தன்னுடைய ஓர் ஓவியத்துக்கு அதிகபட்சமாக கிடைத்த தொகை வெறும் 100 டாலர் என்று அவரே கூறுகிறார். தன்னுடைய டிஜிட்டல் படைப்பை NFT-யாக மாற்றி ஏலம் விட்டபோது, 'Everydays: the First 5000 Days' எனும் ஓவியம் $69.3 மில்லியன் டாலருக்கு (520 கோடி ரூபாய்க்கு) வாங்கப்பட்டது! (உபரித் தகவல் - இவ்வளவு காசு கொடுத்து வாங்கியவர் ஒரு தமிழர் - சிங்கப்பூர் வாழ் விக்னேஷ் சுந்தரேசன்!)

சுமார் 520 கோடி ரூபாய்க்கு விலை போன பீப்பிளின் 5000 படங்கள் அடங்கிய தொகுப்பு.
சுமார் 520 கோடி ரூபாய்க்கு விலை போன பீப்பிளின் 5000 படங்கள் அடங்கிய தொகுப்பு.

வேன் கோ போல வின்கெல்மேன் 100 வருடம் காத்திருக்கவில்லை. 15 வருடத்திலேயே ஜாக்பாட் அடித்தார். அதை சாத்தியமாக்கியது NFT எனும் ஆற்றல் (அல்லது அதுதானா? பார்ப்போம்...)

மீண்டும், NFT என்றால் என்ன?

#NFT என்றால் என்ன? அமிதாப் முதல் கமல் வரை... பகுதி 1

அமாவாசைப் பூசணி போல் உடைத்துச் சொல்ல வேண்டுமானால், NFT என்பது 'ஒரு டிஜிட்டல் சொத்து'. NFT விரிந்தால் Non Fungible Token (நான் ஃபஞ்சிபிள் டோக்கன்).

ஃபஞ்சிபிள் என்றால் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளக்கூடியது. உதாரணத்துக்கு ஒரு 500 ரூபாய்த் தாளை எங்களிடம் கொடுங்கள் (நம்புங்கள், திருப்பிக் கொடுத்து விடுவோம்). இப்போது, அந்த 500 ரூ. தாளுக்கு பதிலாக வேறொரு 500 ரூ. தாளை உங்களிடம் கொடுக்கிறோம், (செல்லும் நல்ல நோட்டுதான்!) அதை நீங்கள் வாங்கிக்கொள்வீர்கள்தானே! நீங்கள் கொடுத்த நோட்டு வேறு, நாங்கள் கொடுத்த நோட்டு வேறு, ஆனால் இரண்டுமே 500 ரூபாய்தான். அந்த நோட்டுகளைக் கசக்கி, நனைத்து, காயப் போட்டு கையில் தந்தாலும் அந்த இரண்டு நோட்டுகளின் மதிப்பும் ஒன்றுதான்.

ரூபாய், டாலர், யூரோ எல்லாமே ஃபஞ்சிபிள்!
ரூபாய், டாலர், யூரோ எல்லாமே ஃபஞ்சிபிள்!

ரூபாய் நோட்டுகள், உருளைக் கிழங்கு, பால் பாக்கெட், பாதாம் பருப்பு, பக்கத்து வீட்டில் கடனாக வாங்கிய காஃபி பொடி - இவ்வாறு ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளக்கூடிய அல்லது பரிமாறிக்கொள்ளக்கூடிய பொருள்களை ஃபஞ்சிபிள் என்கிறோம். இரவல் வாங்கிய பின் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கூட கொடுக்கலாம். நண்பனிடம் வாங்கிய கடனை மாதாமாதம் தவணையாய் தருவது போல... (சிலர் திருப்பித் தருவதில்லை என்பது வேறு விஷயம்.)

நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியது:
ஃபஞ்சிபிள் வகைப் பொருள்களுக்கு 'தனித்தன்மை' என்று ஏதும் கிடையாது. இதுவே நான் ஃபஞ்சிபிள் என்பது தனித்தன்மை வாய்ந்தது.

NFT-யை பிரதி எடுக்க முடியாது! ஏன்?

வேன் கோ-வின் ஓவியத்தைப் போலவே ஆயிரம் பேர் அச்சு அசலாக வேறொரு ஓவியத்தை வரையலாம். பிரதி எடுக்கலாம். பிரின்ட் போடலாம். ஆனால் அசல் அசல்தான்! அதனால்தான் அதற்கு அவ்வளவு மதிப்பு. சரி, வேன் கோ வரைந்தது, வண்ணமும் தூரிகையும், மணிக்கணக்கான சிந்தனையும் கலந்து படைக்கப்பட்ட அசல் ஓவியம். ஆனால் பீப்பிளின் ஓவியம் ஒரு டிஜிட்டல் படைப்பு. 'அவருடைய வலைத் தளத்துக்குச் சென்று அதனை நான் வலது சொடுக்கி (Right click செய்து) தரவிறக்கம் செய்துகொள்ளலாமே' என்றால் கொள்ளலாம்! நீங்களும் தரவிறக்கலாம், உங்கள் நண்பரும் கூட... எனவே உங்கள் கம்ப்யூட்டரிலும் உங்களின் நண்பர் கம்ப்யூட்டரிலும் தரவிறக்கப்பட்ட பீப்பிளின் டிஜிட்டல் ஓவியம் ஒன்றுதானே என்றால் ஒன்றுதான்! ஒரு .jpg ஃபைலையா விக்னேஷ் சுந்தரேசன் கோடி கொடுத்து வாங்கினார் என்றால், அதுதான் இல்லை. வி.சு. வாங்கியது பீப்பிளின் NFT-யை!

சொப்பன சுந்தரியின் கார் 'நான் ஃபஞ்சிபிள்' வகையை சேரும்.
சொப்பன சுந்தரியின் கார் 'நான் ஃபஞ்சிபிள்' வகையை சேரும்.

சொப்பன சுந்தரி வைத்திருந்த கார், காதலியின் முதல் முத்தம், காந்தியின் மூக்கு கண்ணாடி, கடந்து சென்ற இந்த நொடி - இவை எல்லாமே நான் ஃபஞ்சிபிள் வகையைச் சேரும். இவற்றைப் பிரதி எடுக்க முடியாது. காரணம் இவை ஒவ்வொன்றுக்கும் மதிப்பு வெவ்வேறானது. இவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய தனித்தன்மை உண்டு. பீப்பிளின் ஓவியத்தை NFT-யாக மாற்றும்போது அதற்கும் 'தனித்தன்மை' எனும் உயர்பதவி கிடைக்கிறது. அதனால்தான் வடக்கே அமிதாப் பச்சன் முதல் தெற்கே கமல்ஹாசன் வரை தங்களின் படைப்புகளை NFT-களாக மாற்றி வருகிறார்கள்!

#NFT என்றால் என்ன? அமிதாப் முதல் கமல் வரை... பகுதி 1

சரி, NFT-க்கு தனித்தன்மை தருவது எது? இரண்டாம் பகுதியில் அதற்கான விடை…

அதற்கு முன், NFT பற்றிய ஜாலியான இந்தக் குவிஸ்-ஸில் கலந்துகொண்டு உங்களின் ஸ்கோர் என்ன என்று கண்டுபிடியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism