Published:Updated:

ஒரு கோடி ரூபாய் வெல்வாரா கௌசல்யா? பரபரப்பில் கோடீஸ்வரி!

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

கேள்விகள் ஆரம்பித்தன, கண்கள் மட்டுமே அப்போது கௌசல்யாவின் துணை. ஒவ்வொரு கேள்விக்கும் தன் கையில் உள்ள ஆப்ஷனுக்கான அட்டைகளைக் காட்டி, லாவகமாய் பதிலளித்து தற்போது நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை எட்டி உலகத்தையே பரபரப்பாக்கியுள்ளார்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே, 'கோடீஸ்வரி' (ஹூ வாண்ட்ஸ் டு பி ஏ மில்லியனர் - தமிழ்) கேம்ஷோவின் உச்சபட்ச பரிசை வெல்லும் வாய்ப்பு முதன்முறையாக ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு வசமாகியிருக்கிறது. முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய முதல் ஹூ வாண்ட்ஸ் டு பி ஏ மில்லியனர் நிகழ்ச்சி எனும் சிறப்போடு களம் கண்ட கலர்ஸ் தமிழ் சேனலின் 'கோடீஸ்வரி' கேம்ஷோ தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கிய கேம்ஷோவின் முதல் கோடீஸ்வரியாக மதுரையைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகா வாகை சூடுவாரா என்பதை ஜனவரி 21ஆம் தேதி பார்க்கப்போகிறோம்!

திறமைக்கான களம்...

6 பக்கம் கொண்ட தாயக் கட்டையை உருட்டினால் என்ன விழும்? 1/6 எனும் சாத்தியத்தின் (probability) கீழ் என்னவேண்டுமானாலும் விழலாம், கை நழுவிய பின் தாயக் கட்டையின் விதி நம் கையில் இல்லை. கிட்டத்தட்ட இதுதான் பல தொலைக்காட்சி கேம்ஷோக்களின் நிலைப்பாடும். அதிர்ஷ்டத்தின் போக்கில் நடத்தப்படும் சுவாரசியமான தொலைக்காட்சி கேம்ஷோக்களின் மத்தியில் சுவாரசியத்துக்கு குறைவில்லாமல், அதேசமயம் திறமைக்கு மட்டுமே வெகுமதி என அடித்துச் சொல்லும் கோடீஸ்வரி நிகழ்ச்சியோடு களமிறங்கியது கலர்ஸ் தமிழ்.

ஒரு கோடி ரூபாய் வெல்வாரா கௌசல்யா? பரபரப்பில் கோடீஸ்வரி!

பல்லாயிரக்கணக்கான பெண் போட்டியாளர்களை சலித்துப் பிரித்துத் தொகுத்து, ராசியில்லாதவள் என ஒதுக்கப்பட்ட இல்லத்தரசி, போஸ்ட்வுமன், தந்தையின் ஸ்தானத்தில் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பதின்வயதுப் பெண், சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசுக் கல்லூரியில் சேரமுடியாத மாணவி எனச் சிட்டாக ஒவ்வொரு போட்டியாளரையும் தேர்ந்தெடுத்து, ஹாட் சீட்டில் அமர்த்தி அவர்களுக்கான அடையாளத்தை உலகுக்குக் காட்டி பெருமை தேடிக்கொண்டது கோடீஸ்வரி...

காது கேளாத, வாய் பேச இயலாத திறனாளி அசத்தல்...

அன்று வழக்கம்போல பாஸ்டஸ்ட் பிங்கருக்கான கேள்வியை ராதிகா சரத்குமார் கேட்க, 5.37 வினாடிகளில் மின்னல்போலப் பதிலைப் பதிந்து ஹாட் சீட்டுக்கு வந்து சேர்ந்தார் கௌசல்யா கார்த்திகா. மாற்றுத் திறனாளி எனும் சொல்லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கௌசல்யா. சுத்தமாக காது கேட்காது, அவர் பேசினால் யாருக்கும் எளிதில் புரியாது, இருந்தாலும் தன்னம்பிக்கையோடு படித்து இன்று மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணியில் உள்ளார் அனுதாபங்களை விரும்பாத இந்த அசத்தல் பெண். கௌசல்யா பி.எஸ்சி பேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி ஐடி மற்றும் எம் பிஏ முடித்துள்ளார் எனும் தகவல் அவர்மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு கோடி ரூபாய் வெல்வாரா கௌசல்யா? பரபரப்பில் கோடீஸ்வரி!

பேசுவது கடினமாக இருந்தாலும் தன்னுடைய கணவரை மாமா என வாஞ்சையோடு அழைக்கும் கௌசல்யாவுக்கு ஓர் ஆசை உண்டு. காது கேட்கவில்லை என ஒருபோதும் ஏங்காதவர், தன் குழந்தையின் மழலை மொழியை செவி கொடுத்து கேட்டுவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்.

கௌசல்யா கோடிஸ்வரி ஆவாரா?

கேள்விகள் ஆரம்பித்தன, கண்கள் மட்டுமே அப்போது கௌசல்யாவின் துணை. ஒவ்வொரு கேள்விக்கும் தன் கையில் உள்ள ஆப்ஷனுக்கான அட்டைகளைக் காட்டி, லாவகமாய் பதிலளித்து தற்போது நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை எட்டி உலகத்தையே பரபரப்பாக்கியுள்ளார் கௌசல்யா.

15வது கேள்விக்கு பதில் சொல்லி, உலகத்திலேயே, இந்தப் போட்டியில் வென்ற முதல் மாற்றுத் திறனாளியாகவும், தமிழ்நாட்டின் முதல் கோடீஸ்வரியாகவும் ஆவாரா கௌசல்யா?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஜனவரி 20 & 21 (திங்கள் & செவ்வாய்), இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள கோடீஸ்வரி எபிசோடுகளில் கிடைக்கப்போகிறது இதற்கான விடை. அதுவரை நமக்கும் ஹாட்சீட்தான்!

பின் செல்ல