Election bannerElection banner
Published:Updated:

சீமானின் வெற்றியூர் ஆகுமா திருவொற்றியூர்?

நாம் தமிழர் - சீமான்
நாம் தமிழர் - சீமான்

சென்னை மாநகரின் இதயம் வடசென்னை. வடசென்னையின் ரத்தநாளமாக விளங்குவது திருவொற்றியூர். உழைக்கும் அடித்தட்டு மக்களும், மீனவ மக்களும் அதிகம் வாழும் இத்தொகுதியில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு திராவிடக் கட்சிகளே மாறிமாறி வெற்றிபெற்று வந்துள்ளன.

தொகுதி முழுக்க மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் இரசாயன தொழிற்சாலைகள், கனரகத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம் ஆகியவை உள்ளன. தொழிற்சாலைகள் வளர்ந்தன. தொழிற்சாலைகளின் பெரு முதலாளிகள் வளர்ந்தனர். ஆண்ட கட்சிகளும், ஆட்சியாளர்களும் வளர்ந்துள்ளனர்.

ஆனால் மக்கள்? மக்களின் வாழ்க்கைத்தரம் வளர்ந்துள்ளதா?

இந்த ஐம்பதாண்டுகளில் திருவொற்றியூரை அதன் நில, நீர், கடல் வளங்களை, மக்களின் உடல் உழைப்பைச் சுரண்டி பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க தரகு வேலை பார்த்த ஆட்சியாளர்கள், தங்களை வாக்களித்து வெற்றிபெறச் செய்த அந்தப் பாமர மக்களுக்கு, மீனவர்களுக்குச் செய்த நன்மைகள் என்ன? ஐம்பதாண்டுகள் மாறிமாறி வென்றபிறகும் மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் கூட இன்றி வறுமையிலும் ஏழ்மையிலும் அம்மக்கள் அல்லலுறுவது ஏன்? அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பான வாழ்விடம், சத்தான உணவு, தரமான கல்வி, முறையான மருத்துவம், தூய குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் நல்ல சாலைகள் இவையேதும் கிடைக்காமல் பின்தங்கிய பகுதியாக இருப்பதற்குக் காரணமென்ன? இந்த நிலைக்கு யார் காரணம்? யார் இதை மாற்றுவது? சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்காமல் பணத்தைக் கொடுத்து, இலவசத்தைக் கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு இதுவரை வென்றவர்கள் ஆளானது ஏன்?

நாம் தமிழர் - சீமான்
நாம் தமிழர் - சீமான்

தங்களை ஆண்டவர்கள் சரியில்லாதபோது, சரியானவர்களை ஆள வைப்பது ஒன்றே அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் தீர்வாக அமையும். திருவொற்றியூர் மண் ஏற்றம்பெற வேண்டுமெனில் திருவொற்றியூர் மக்கள் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

சரி, திருவொற்றியூர் தொகுதிக்கு நாம் தமிழர் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்ன? நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதுவரை இருக்கும் அவல நிலையிலிருந்து மாற்றிவிட முடியுமா?

நிச்சயமாக முடியும் என்கின்றனர் சீமானும் அவர் தம்பிகளும். வெற்றிபெற்ற பிறகு திருவொற்றியூரில் நாம் தமிழர் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை ஒருமுறை பார்த்தாலே நம்மால் உணர முடியும் என்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை முன்வைக்கின்றனர் என்று பார்ப்போம்.

மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளைப் போல் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகள் சீரமைக்கப்பட்டு அழகான பூங்காக்கள் அமைத்து மீன் உணவகங்கள், குளிரூட்டப்பட்ட மீன் விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக மீனவ பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடல்சார் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை மேற்கொண்டு வணிகக் கப்பல்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணூர் திருவொற்றியூர் பகுதிகளில் கூடுதலாகப் படகு குழாம்களை அமைத்துக் கட்டுமரங்கள், பைபர் படகுகள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் புதிதாகத் தூண்டில் வளைவுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச தரத்திலான மீன் விற்பனை மையம் அமைக்கப்படும். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். திருவொற்றியூர் விம்கோ நகர், தாழங்குப்பம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள் கொண்ட மீன் விற்பனை அங்காடிகள் அமைக்கப்படும்.

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் அகற்றி நவீனமயமான படகுத்துறை அமைக்கப்பட்டு மகாபலிபுரம் வரை சுற்றுலா பயணம் செல்லும் வகையில் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்.

திருவொற்றியூரில் காலம் காலமாக வாழ்ந்துவரும் சலவைத் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காலடிபேட்டை பகுதியில் நவீன உபகரணங்களுடன் கூடிய சலவை கூடம் அமைத்துத் தரப்படும்.

ஆன்மீக நகரமான திருவொற்றியூரில் உள்ள பழமையான கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் நவீன கழிப்பிடங்கள், தங்கும் விடுதிகள், அமைத்துத் தரப்படும். திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் திருக்குளம் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தியாகராஜர் கோயில் திருக்குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள், நடைபாதைகள் பூங்காக்கள் அமைக்கப்படும்.

திருவொற்றியூரில் வெளியூர் பேருந்து நிலையம் ஒன்றை அமைக்க உறுதியான முயற்சி எடுக்கப்படும்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை 65 அடி அகலம் கொண்ட சாலையாக அகலப்படுத்தப்படும். ராமகிருஷ்ணா நகர் முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை உள்ள நெடுஞ்சாலை தடுப்புகளுடன் கூடிய சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றிட நெடுஞ்சாலைத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணூர் முதல் ஆர்.கே.நகர் வரை பக்கிங்காம் கால்வாயையொட்டிள்ள சாலை இருவழிச் சாலையாக மாற்றியமைக்கப்படும்.

நாம் தமிழர் - சீமான்
நாம் தமிழர் - சீமான்

திருவொற்றியூர் அண்ணாமலை நகர், விம்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். துறைமுகங்களுக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குப் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காணப்படும்.

மணலி மாத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாவடியை உடனடியாக அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தப்படும்.

புழல் ஏரி கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை முறையாக வடிவமைக்கப்பட்டு வெள்ளநீர் எண்ணூர் முகத்துவாரம் வழியாகக் கடலுக்குச் செல்ல கால்வாய்கள் அமைக்கப்படும். எண்ணூர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அரசு நிலங்கள் மக்கள் சேவைக்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் உள்ள ரசாயன ஆலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் வகையில், சுமார் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட சிறப்புச் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகருக்கு வரும் விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தண்டையார்பேட்டையில் ரயில் முனையம் அமைப்பதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படும்.

திருவொற்றியூர் கோமாதா நகர் கால்நடைச் சந்தைப் பகுதியில் புதிதாக மாட்டுச்சந்தையும், மாட்டுச்சாணம் மூலம் எரிவாயு உற்பத்தி மையம் ஏற்படுத்தப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்காக மாத்தூர், மணலி ஏரிகள், திருவொற்றியூரில் ரயில்வே நிலங்களில் உள்ள குட்டைகள் சீரமைக்கப்பட்டு மழை நீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாத்தாங்காடு இரும்பு மொத்தவிற்பனை வளாகம் முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். கனரக வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்த மையமும் ஏற்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுத் தனியார்ப் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கனரகத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பில் உள்ளூர் பகுதி மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும்.

திருவொற்றியூர் எண்ணூர் மணலி பகுதிகளில் நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ள பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைவாக முடித்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நாம் தமிழர் முன்னெடுக்கப்போகும் குறைந்தபட்ச செயல்திட்டங்கள். இவற்றையெல்லாம் தாண்டி திருவொற்றியூரை நிலம், நீர், காற்று ஆகியவை சீர்கெடாத சுற்றுச்சூழலுடன் கூடிய எழில்மிகுந்த தொகுதியாகவும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு உலகத் தரத்திற்கு இணையாக நாம் தமிழர் கட்சி உறுதியாகச் செய்துதரும் என்கின்றனர் அக்கட்சியினர்.

தொடர்ச்சியாக புழுதி நிறைந்த வாழ்வை வாழும் திருவொற்றியூர் மக்களின் வாழ்வில் தூய தென்றல் காற்று வீசுமா? அதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா? சீமானின் வெற்றியூர் ஆகுமா திருவொற்றியூர்? மே-2 ஆம் நாள் வரை காத்திருப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு