Published:Updated:

`ஸ்தக்கா... தக்... தக்கர்..!' #MyVikatan

Representational image

தக்கர்கள் என்பவர்கள், வட இந்தியப் பகுதிகளில் 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் பூர்வீகம் பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானம்.

`ஸ்தக்கா... தக்... தக்கர்..!' #MyVikatan

தக்கர்கள் என்பவர்கள், வட இந்தியப் பகுதிகளில் 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் பூர்வீகம் பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானம்.

Published:Updated:
Representational image

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாக்பூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் நான்கு வழிச்சாலை ஆங்காங்கே சேதமுற்றிருந்தன. இரண்டு புறமும் காட்சிகள் மாறிவிட்டன. நாங்கள் கடந்து வந்த தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காணப்பட்ட கட்டமைப்பு வசதிகள் இங்கே இல்லை. நாக்பூரைக் கடந்த பிறகு தக்காணப் பீடபூமியிலிருந்து இறங்கி, ஏறக்குறைய கடல் மட்டத்துக்குச் சமமாக இருக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கு வந்து விடுகிறோம். பருத்தி, நெல் போன்ற பயிர்கள் பயிரிடுவதைக் காண முடிந்தது. முதல் இரண்டு நாள்கள் பயணத்தில் ஆயிரத்து நூறு கிலோமீட்டர்களைக் கடந்திருந்தோம். மூன்றாம் நாள் பயணத்திலும் 700 கிலோ மீட்டர்கள் கடந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின்போது அந்தந்த ஊர்களின் உணவுகளைச் சுவைக்க வேண்டும். பயணம் என்பது தொலைவுகளைக் கடப்பதும், அங்கே இருக்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அல்லது இயற்கை எழிலைக் காண்பதும் மட்டுமல்ல. புதிய மனிதர்களோடு பேசுவதும், பழகுவதும், அதன் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், கலாசாரங்களையும் அறிந்துகொள்வதும் சுற்றுலாக்களில் நோக்கங்களாக இருக்க வேண்டும். சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பயணங்களில் `மூன்று வேளையும் இந்திய உணவு பரிமாறப்படும்' என்ற விளம்பரம் இருக்கும். குழுச் சுற்றுலா போகிறவர்கள் மூன்று வேளையும் இந்திய உணவு விடுதிகளில் உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உணவு மனிதர்களின் கலாசாரத்தோடு தொடர்புடையது. பயணத்தின்போது புதிய உணவுகளைச் சுவைப்பது பயணத்துக்குச் சுவையூட்டும்.

Representational image
Representational image

நானும் என் நண்பர்கள் சம்பத்தும், குமாரும் மூன்றரை ஆண்டுகளாக பேலியோ உணவு முறையைப் பயன்படுத்துகிறோம். உணவைப் பற்றிய எந்த மதக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள் நாங்கள். வெளிநாடுகள் போகும்போது விமானத்தில் ஏறியது தொடங்கி, அரசியலாக்கப்பட்டிருக்கும் விலங்குகளை மகிழ்ச்சியாக உண்பவர்கள் நாங்கள் (உள்நாட்டிலும் உண்போம்). எனவே, எங்களுக்கு எந்த உணவைச் சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. ஆனால், சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் அல்லது சூரியகாந்தி எண்ணையையே உணவகங்கள் பயன்படுத்துகின்றன. கடலை எண்ணெய், எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு எனக்கிருந்த அல்சர் பிரச்னை நிரந்தரமாகவே தீர்ந்துவிட்டது. அதனால் பயணத்தின்போது முடிந்த அளவுக்கு சமைத்து உண்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் இரு வேளை மட்டுமே உணவு உண்பவர்கள். இரண்டு உணவுக்கு இடையே எந்தத் தின்பண்டமும் உண்ண மாட்டோம். அதனால் இன்னமும் எளிது.

சம்பத் ஒரு அருமையான சமையல்காரர். ஹைதராபாத் பிரியாணியை ஹைதராபாத்தில் சாப்பிடுவதைவிட, சம்பத் சமைத்துச் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். நானும் ஓரளவு சமைப்பேன். 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கினோம். அதன் மேலேயே வைத்துக் கொள்ளக்கூடிய கேஸ் பர்னர் ஒன்று வாங்கினோம். 3 லிட்டர் குக்கர், தோசைக்கல், பால் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம் இவ்வளவு மட்டும் எடுத்துக்கொண்டோம். எங்களுக்குத்தான் அரிசி, பருப்பு தேவையில்லையே. 60 முட்டைகள், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, மிளகாய், கல் உப்பு, கொஞ்சம் காய்கறிகள், சமையல் பொடிகள் இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டோம்.

கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் ஒவ்வொரு லிட்டர். காலையில் ஆளுக்கு நான்கு வேகவைத்த முட்டை. கூட தக்காளி மற்றும் காய்கறிகள் குருமா. மாலை வேளை வேக வைத்த சிக்கன். எங்கள் சமையல் தொழில்நுட்பம் எளிமையானது. அரிந்து வைத்த வெங்காயம், பூண்டு, காய்கறிகள், மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு மிளகாயோடு, வேண்டிய பொடிகளைப் போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை சமைத்து, வேக வைத்த முட்டையோடு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கோழிக்கறி சமையலும் இதே போலத்தான். வெங்காயம், தக்காளி, இஞ்சி, உப்பு, மிளகாய் இவற்றோடு வேண்டிய பொடிகளைச் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைத்து, உடன் சுடச்சுட சாப்பிட்டால் அருமையான உணவு.

Representational image
Representational image

சாலையோரங்களில் நல்ல நிழலிருக்கும் பகுதியாகத் தேர்ந்தெடுத்து, நாங்கள் கொண்டுவந்திருந்த 10 x 6 அடி தார்பாளினை விரித்து உட்கார்ந்துகொண்டு, அருமையாகச் சமையல் செய்து நிம்மதியாகச் சாப்பிட்டோம். இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பயணம் இப்படி இனிமையாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் கூட மாட்டு வண்டியில்தான் போக வேண்டும். வேலைக்காரர்கள் அவரோடு நடந்து வருவார்கள்.

இப்படி வரும்போது ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக இன்னொரு பெரிய கூட்டம் பயணம் செல்வது போல கூட வரும். பெண்களையும், குழந்தைகளையும் பார்த்தவுடன் நம்பிக்கை ஏற்பட்டு, வழித் துணையாக இருக்கட்டும் என்று எல்லோரும் இணைந்து பயணம் போவார்கள். செல்வந்தர் கூட்டத்தில் இருப்பதைவிட மற்ற கூட்டத்தில் ஆண்கள் அதிகமாக இருப்பார்கள். ஓரிரு நாள்கள் நெருங்கிப் பழகி, நம்பிக்கையானவர்கள் என்ற நிலை வந்த பிறகு ஒரு மாலை வேளையில் ஆட்டம், பாட்டத்துடன் விருந்து நடக்கும். விருந்தில் மது தாராளமாகப் பரிமாறப்படும். செல்வந்தரும் அவருடன் வந்தவர்களும் மது குடித்துக்கொண்டிருக்க, கூட வந்தக் கூட்டம் மதுவை அதிகமாகக் குடிக்காமல் இருக்கும்.

சில மணி நேரத்துக்குப் பிறகு சிறிய குழந்தைகளைத் தனியாக அழைத்துப் போய் விடுவார்கள். கொஞ்சம், கொஞ்சமாக கொலைகாரக் கூட்டத்தின் ஆட்கள், செல்வந்தர் கூட்டத்தின் ஆட்களிடையே ஒருவருக்கு ஒருவரோ அல்லது இருவரோ உட்கார்ந்து கொள்வார்கள். அப்பொழுது கொலைக்கூட்டத்தின் தலைவன் `தம்போக்கா லாவ்' (புகையிலை கொண்டு வா) என்று சத்தமிடுவான். அடுத்த நிமிடம் கொலைகாரர்கள் தங்கள் பக்கத்தில் இருக்கும் ஆட்களின் மீது சுருக்குக் கயிறுகளை வீசி, கழுத்தை படுவேகமாக இறுக்குவார்கள்.

திமிருபவனாக இருந்தால் பக்கத்தில் இருப்பவன் காலைப் பிடித்துக்கொள்வான். சில மணித்துளிகளில் செல்வந்தரும் அவர் ஆட்களும் மொத்தமாக கொல்லப்படுவார்கள். இறந்த உடல்களை மொத்தமாக ஒரு குழியில் போட்டு புதைத்து விடுவார்கள். அதன் பிறகு குளித்துவிட்டு தங்கள் குலதெய்வமான காளிக்கு பூஜை செய்துவிட்டு உணவருந்துவார்கள். சிறிய குழந்தைகளை, ஆண்களாக இருந்தால் அவர்களை வளர்த்து அவர்களைப் போன்ற தக்கிகள் ஆக்குவார்கள். பெண்களாக இருந்தால் வளர்த்து தாங்களே திருமணம் செய்துகொள்வார்கள். பயணக் கூட்டத்தின் மொத்த செல்வத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.

தக்கர்கள்
தக்கர்கள்

தக்கர்கள் என்ற இந்தக் கொலைகாரர்கள் வட இந்தியப் பகுதிகளில் 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் பூர்வீகம் பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானம். உயரமான உடலமைப்பும் அழகிய உருவமும் கொண்டவர்கள். இந்தியாவைச் சேர்ந்த எல்லாச் சாதியினரும் இவர்களோடு காலப்போக்கில் இணைந்திருக்கிறார்கள்.‌ இவர்கள் காளியை குலதெய்வமாக வழிபடக் கூடியவர்கள். `ஸ்தக்கா' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு வஞ்சகன், திருடன் என்று பொருள்.

இதுவே தக் (ஏமாற்றுபவன்) என்று இந்தியில் மருவி தக்கர் என்ற சொல் வழங்கியது. நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் தர்மபுரி மாவட்டத்தில், ரொம்பவும் ஏமாற்றும் ஒருவனை ``அவன் சரியான தக்கிடி" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்றைக்கும் கிராமங்களில் தக்கிடி என்ற சொல் வழங்கி வருகிறது. ஆங்கிலத்தில் வழங்கி வரும் Thug என்ற சொல் தக்கிகள் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இவர்கள் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் சில கிராமங்களையே ஆக்கிரமித்திருந்தார்கள். ஆண்டு முழுவதும் பயணம் செய்து கொலை கொள்ளைகளை நிகழ்த்திவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி, குடும்பத்தோடு காளிதேவிக்கு விழா எடுப்பார்கள்.

இவர்களுக்கு பல குறுநில மன்னர்களின் ஆதரவு இருந்தது. தாங்கள் கொள்ளையடிக்கும் பொருளில் ஒரு பகுதியைக் கையூட்டாக இந்த மன்னர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். அவர்களும், சாவது வெளியூர்ப் பயணிகள் தானே என்று இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அன்பு, கருணை, இரக்கம், தர்ம, நியாயம் ஏதுமின்றி சக மனிதர்களை சுயநலத்துக்காகக் கொன்று குவித்த இந்தக் கொடியவர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று ஒருவர் முடிவெடுத்தார். அதன்படியே துல்லியமாகத் திட்டமிட்டு, படிப்படியாக காய் நகர்த்தி, வலைகள் பின்னி, நாலா திசைகளிலும் தக்கர்களை வளைத்துப் பிடித்தார்.

பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தந்து, தக்கர் இனத்தையே அடியோடு அழித்து ஒழித்தார். தக்கர்கள் ஒழிப்பு வரலாற்றில் அழுத்தமாகப் பொறிக்கப்பட்ட அந்த ஆங்கிலேயரின் பெயர் வில்லியம் ஹென்றி ஸ்லீமன். இங்கிலாந்து நாட்டின் காரன்வால் பகுதியில் உள்ள ஸ்டிரேட்டன் நகரத்தில் பிறந்த ஸ்லீமன் தன் இருபதாவது வயதிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய இந்தியா வந்து விட்டார். 21-ம் வயதில் நேபாள போரில் பங்கேற்று பெரும் புகழடைந்தார். கல்கத்தாவின் வில்லியம்ஸ் கோட்டையின் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பிரெஞ்சு நாட்டுப் பயண எழுத்தாளர் ஜீன் டி தேவ்நாட் எழுதிய நூலைப் படிக்கும் பொழுது இந்தியாவில் உள்ள பயங்கரமான கொள்ளையர்கள் பற்றி எழுதியிருந்தார்.

Representational image
Representational image

``டெல்லி ஆக்ரா செல்லும் பாதைகளில் திரிந்த அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அழகிய இளம் பெண், பயணிகள் வரும் பாதையில் கண்ணீர் விட்டபடி நிற்பாள். பரிதாபப்பட்டு அவள் கதையைக் கேட்டால், நீங்கள் செல்லும் வழியிலே அவளும் செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி, உங்கள் மாட்டு வண்டி, குதிரை எதிலாவது அவனும் ஏறிக்கொள்வாள். பயணத்தின்போது நீங்கள் சற்று அயர்ந்த வேளையில், தன்னுடைய நீண்ட சுருக்குக் கயிற்றை உங்கள் கழுத்தில் ஒரு நொடிப்பொழுதில் வீசி, கொன்று விடுவாள். அதற்காக காத்திருந்த அவளது கூட்டத்தினர் அவள் முயற்சியை முழுவதுமாக முடிப்பார்கள்" இதைப் படித்த ஸ்லீமன் தக்கர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஒருநாள் கலெக்டராக இருந்த அவருடைய நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, அலமாரியில் இருந்த டாக்டர் ஷெர்வுட் எழுதிய Of The Murderers Called Phansigars என்ற நூலைப் படித்தார். கழுத்தில் தூக்குக் கயிற்றை வீசி கொலை செய்யும் முறைக்கு பான்சிகாரி என்ற பெயர் இருந்தது.

அந்த நூல் அவர் வாழ்க்கையை மாற்றியது. அதன்பிறகு 47 ஆண்டுகள் தக்கர் ஒழிப்பையே தன் வாழ்க்கைப் பணியாகச் செய்தார் ஸ்லீமன். ஒருமுறை தன்னுடைய கூடாரத்தில் மகளோடு விளையாடிக்கொண்டிருந்தபோது திரைக்குப் பின்னால் யாரோ இருப்பது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது. அவரிடம் எந்த ஆயுதங்களும் இல்லை. துணிவுடன் ``நீ யாராக இருந்தாலும் வெளியே வந்துவிடு. இல்லையென்றால் என் துப்பாக்கியால் சுட்டு விடுவேன்" என்று எச்சரித்தார். இடது கையால் தன் மகளை தன் பின்னால் இழுத்து அணைத்துக்கொண்டு, வலது கையால் திரைச்சீலையை வேகமாக விளக்கினார்.

அங்கே வளைந்த ராஜபுத்திர கத்தியுடன், உயரமான தக்கி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் கண்ணை நேராகப் பார்த்து ``உன் கையில் இருக்கும் ஆயுதத்தை என்னிடம் கொடுத்து விடு" என்றார். அவன் உடனடியாக அந்தக் கத்தியை அவரிடம் கொடுத்துவிட்டான். இப்படிப்பட்ட பல ஆபத்துகளைச் சந்தித்துப் போராடிய அவர் 1854-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 1856-ம் ஆண்டு கப்பலில் தன் தாய்நாடு நோக்கிப் புறப்பட்டார். பிப்ரவரி 10-ம் தேதி காலை 3.45க்கு ஸ்லீமன் உயிர் பிரிந்தது. மறுநாள், 11.2.1856 அன்று ராணுவ மரியாதைகளுடன் கடலின் ஆழத்துக்கு அவர் உடல் அர்ப்பணிக்கப்பட்டது. எந்த நாட்டுக்காகப் பணியாற்றினாரோ அந்த நாட்டின் எல்லையிலேயே அவர் உயிர் பிரிந்தது. தக்கர்கள் ஒழிப்பை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த ஹென்றி ஸ்லீமன் தன் மகனுக்கு `தக்கி' என்று பெயரிட்டிருந்தார்!

ஸ்லீமன்
ஸ்லீமன்

தக்கர்கள் அழிக்கப்பட்ட பின்னரும் 1904-ம் ஆண்டு வரை காவல்துறையில் அந்தப் பிரிவு இருந்தது. ஜபல்பூர் போலீஸ் கமிஷனர் 1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஜேம்ஸ் ஸ்லீமனின் பேரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:

``அன்புள்ள கர்னல் ஸ்லீமன் அவர்களுக்கு,

வணக்கம்!

தாமதமாக பதில் எழுதியதற்காக மன்னிக்கவும்.

எல்லா இடங்களிலும் இருந்துவரும் தகவல்களில் எந்தவிதத் தக்கர்கள் பற்றிய சிறு செய்தியும் இல்லை. உங்கள் தாத்தா ஸ்லீமன் எல்லாவற்றையும் சுத்தமாக காலி செய்துவிட்டு போய்விட்டார். தக்கர்கள் செயல்பாடுகள் முற்றிலுமாக முடிந்து போய்விட்டன"

(ஆர்வமுள்ளவர்கள் இரா. வரதராசன் எழுதிய தக்கர் கொள்ளையர்கள் என்ற நூலைப் படிக்கலாம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது)

ஜபல்பூரிலிருந்து நாங்கள் இரவு தங்கத் திட்டமிட்டிருந்த மைஹர் என்ற ஊருக்குச் செல்லும் வழியில், ஜபல்பூரில் இருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்லீமனாபாத் என்ற ஊர் இருக்கிறது. தம் நாட்டில் நிலவிய ஒரு கொடும் கலாசாரத்தை ஒழித்த மாவீரனுக்கு இந்திய மக்கள் செய்திருக்கும் எளிய நன்றி அது.

- மருத்துவர் இரா. செந்தில்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/