Published:Updated:

`கூகுள் மேப் செய்த உதவி’ - 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு!

கலிலுல்லா.ச

கூகுள் மேப் உதவியால் 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி ஒருவர் அவரின் தந்தையுடன் சேர்ந்துவைக்கப்பட்டுள்ளார்.

google maps
google maps

மேற்கு டெல்லியில் உள்ள கிர்ட்டி நகர் பர்னிச்சர் மார்க்கெட்டில் 12 வயது சிறுமி ஒருவர் ரிக்ஷா ஒன்றில் ஏறியுள்ளார். அந்தச் சிறுமியிடம் ரிக்ஷா ஓட்டுநர், `எங்கே செல்ல வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தச் சிறுமி எந்தப் பதிலும் அளிக்கமால் முழித்துள்ளார். இதைக்கண்ட ஓட்டுநர் அவரை, கிர்ட்டி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்தச் சம்பவம் ஹோலிப் பண்டிகையான மார்ச் மாதம் 21-ம் தேதி நடந்துள்ளது.

google maps
google maps

அப்போது சிறுமியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில்,``தான் `குர்ஜா’ கிராமத்தைச்சேர்ந்தவர். தந்தை பெயர் ஜீடன்” என்று சிறுமி கூறியுள்ளார். குர்ஜா என்ற பெயரையொட்டிய டெல்லியில் உள்ள கஜீரிகாஸ், கௌரஜி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், `சிறுமி காணவில்லை’ என்பது போன்ற எந்த ஒரு புகாரும் பதிவாகியிருக்கவில்லை. பல்வேறு பகுதிக்குச் சிறுமியை அழைத்துச்சென்றும் அந்தச் சிறுமியை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

மேலும், `சில நாள்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி அவர் மாமா `பின்டு’ என்பவருடன் டெல்லிக்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது சிறுமியை வாஷ்ரூமுக்கு அழைத்துச்சென்றவர், ஆடைகளை களைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே சிறுமி சத்தமாக அழத்தொடங்கியதும் அங்கேயே விட்டுச்சென்று ஓடிவிட்டார்” என்று காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மார்ச் 22-ம் தேதி சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் ஐ.பி.சி 354 ஏ போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு
child
child

இதையடுத்து, `நிர்மல் சாயா’ என்ற தொண்டு நிறுவனத்திடன் சிறுமி ஒப்படைக்கப்பட்ட போதும் விசாரணை நடைபெற்று வர, உத்தரப்பிரதேசம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா கிராமத்துக்குச் சிறுமியை காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ``நாங்கள் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்தச் சிறுமிக்கு அவளது கிராமத்தின் பெயரை சரியான முறையில் சொல்லத் தெரியவில்லை.

பலமுறை குர்ஜா பகுதிக்கு சிறுமியை அழைத்துச்சென்றும் அங்கிருக்கிறவர்களால் சிறுமியை அடையாளம் காட்டமுடியவில்லை” என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மீண்டும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் `சாகபர்’ என்ற கிராமத்தின் பெயரைக் கூறியுள்ளார். இதையடுத்து, கூகுள் மேப் உதவியுடன் உத்தரப்பிரசேத்தில் சித்தார்த் நகர் மாவட்டத்தில் `சாகபர், `சான்பர்சா’ `குர்ஜா’ உள்ளிட்ட கிராமங்கள் அங்கிருப்பது கண்டறியபட்டது.

பின் காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதி சிறுமியின் தந்தை ஜீடன், டெல்லி வந்து சிறுமியை மீட்டுள்ளார். `பிண்டு என்ற எந்த அங்கிளும் இல்லை’ என்று சிறுமியின் தந்தை கூறியதும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை காவல்துறையினர் கைவிட்டனர்.