Published:Updated:

"பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும்" - டாக்டர் மரியஸீனா ஜான்சன்

Dr Mariazeena Johnson
Dr Mariazeena Johnson

கல்வி வழங்குவதைத் தாண்டி, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில் இளைய தலைமுறையினரைத் தயார் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் சத்யபாமா செயல்பட்டுவருகிறது.

கடந்தாண்டு சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பொறுப்பிலிருந்து வேந்தராக பதவி உயர்த்தப்பட்டார் டாக்டர் மரியஸீனா ஜான்சன்... கொரொனோ காலத்திலும் தங்களின் 29-வது பட்டமளிப்பு விழாவை, டாக்டர் மரியஸீனாவின் தலைமையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். பெருந்தொற்று காலத்திலும் கல்லூரிப் பணிகள், சமூகப் பணிகள் என ஓயாது இயங்கிவரும் முனைவர் மரியஸீனா ஜான்சனிடம் சில கேள்விகள்...

எப்போதும் உற்சாகமாக இருக்கிறீர்களே! எப்படி?

தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதில்தான் எனது தினசரி உற்சாகத்தின் ரகசியம் அடங்கியுள்ளதாக நினைக்கிறேன். நமக்காக செயல்படுவதை விட பிறருக்காக, அவர்களின் நலன் மேல் அக்கறை கொண்டு செயல்படும்போது கூடுதல் உற்சாகம் பிறக்கிறது. ஒருவரின் ஆக்கப்பூர்வமான கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த உதவியைச் செய்யும்பொழுது அளவற்ற ஆற்றலும் மனநிறைவும் கிடைப்பதாக உணர்கிறேன்...

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தராக உங்கள் பயணம் எப்படி இருக்கிறது?

வேந்தர் பதவியேற்ற பின் பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளதை நன்கு உணர்கிறேன். இருப்பினும் இதைப் பணி சார்ந்த பயணம் எனப் பார்ப்பதைவிட, வாழ்க்கையின் கொண்டாட்டமான ஒரு பகுதியாகவே எடுத்துக்கொண்டுள்ளேன். என்னுடைய தந்தை ஜேப்பியார் அவர்களின் கனவை நிறைவேற்றுவதில் என்னுடைய பங்களிப்பும் இருப்பதை பெரும் கொடுப்பினையாகக் கருதுகிறேன்.

"பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும்" - டாக்டர் மரியஸீனா ஜான்சன்

கல்வி வழங்குவதைத் தாண்டி, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில் இளைய தலைமுறையினரைத் தயார் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் சத்யபாமா செயல்பட்டுவருகிறது. இந்த எண்ணமே ஒவ்வொரு முறை சத்யபாமாவின் வளாகத்துக்குள் நுழையும்போதும் எனக்கு மிகப்பெரும் மன நிறைவினை வழங்குகிறது.

பல விருதுகளையும் பாராட்டுகளையும் இளம் வயதிலேயே பெற்றிருக்கிறீர்கள், விருதுகள் குறித்த உங்கள் பார்வை என்ன?

பாராட்டுகளும் விருதுகளும் நம்முடைய செயல்பாடு இன்னும் மேம்பட சமுதாயத்தால் வழங்கப்படும் ஊக்க சக்தியாக திகழ்கின்றன. நம் வேலைக்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் அவை என்றாலும் உண்மையில் நம் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட உதவும் விஷயங்களாகவே அவற்றை நான் பார்க்கிறேன். பாராட்டுகளை எப்போதுமே என் தலைக்குள் ஏற்றிக்கொண்டது கிடையாது, விருதுகளின் எண்ணிக்கையைவிட சமுதாயத்துக்காக செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன!

தொடர்ந்து NAAC அமைப்பின் A கிரேடு பெறும் கல்வி நிறுவனமாக சத்யபாமா இருப்பது எப்படி?

அரசின் நிறுவனங்களான NAAC போன்ற அமைப்புகளின் உயரிய அங்கீகாரம் சத்யபாமாவுக்கு தொடர்ந்து கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். இருப்பினும் இவ்வாறான அங்கீகாரங்களை மட்டுமே எங்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், எங்களுக்கெனவொரு தரத்தை நிர்ணயம் செய்து அதை நோக்கியே எப்போதும் செயல்பட்டுவருகிறோம். தரமான கல்வி வழங்குவதில் என்றுமே நிலையானதொரு இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எங்களுக்குள்ள தெளிவு, கல்வித் தரத்தில் சிறப்பான முடிவுகளை ஈந்துள்ளதாக எண்ணுகிறேன்

பெண்கள் முன்னேற்றத்தில் தங்களின் தற்போதைய பணிகள் குறித்து அறிய விரும்புகிறோம்...

பெண்கள் முன்னேற்றத்துக்காக பிரத்யேகமான பல திட்டங்களை வகுத்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறது சத்யபாமா பல்கலைக்கழகம். ஏழைப் பெண்களுக்கு உதவும் வகையில் திறன் வளர்ச்சித் திட்டங்கள், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டங்களைத் தற்போது செயல்படுத்தி வருகிறோம்.

சமுதாயப் பணிகளைத் தாண்டி, நிர்வாகப் பொறுப்புகளில் முக்கிய இடங்களைத் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் முன்னேற்றத்தில் உதவ முடியும் என்பது என் கருத்தாகும்.

புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்யும் தமிழக நிபுணர் குழுவில் டாக்டர் மரியஸீனா ஜான்சன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த கட்டுரைக்கு