Published:Updated:

சாப்பாடு இல்லாமல் சாக வேண்டுமா?! -பெரம்பலூர் டு மகாராஷ்டிராவுக்கு நடந்து செல்லும் தொழிலாளர்கள்

நடந்து செல்லும் தொழிலாளர்கள்
நடந்து செல்லும் தொழிலாளர்கள்

``நாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது. நாங்கள் பொறுக்கலாம். சிறு பிள்ளைகளால் பொறுக்கமுடியுமா? சாப்பாட்டுக்குச் சாவதா இல்லை கொரோனா வந்து சாவதா என்று தெரியாமல்தான் எங்களது சொந்த ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.''

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையால் ஒரு பிடி சோற்றுக்குப் பிஞ்சுக் கைகளும் முதியோர்களும் சாலை சாலையாகச் சுற்றித்திரியும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொடிய நோயான கொரோனாவுக்கு 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடமாநிலத்தவர்கள் நடைப் பயணம்
வடமாநிலத்தவர்கள் நடைப் பயணம்

கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு முடிந்தும் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மே 3-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார் பிரதமர் மோடி. இன்றளவும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மீண்டும் ஊரடங்குகளை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அத்தியாவசியத் தேவைகள் தவிர மக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனத் தெரிவித்தார்.

வடமாநிலத்தவர்கள் பயணம்
வடமாநிலத்தவர்கள் பயணம்

அதன்படி, அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்துத் தொழில்களும் முடங்கியது. இதனால் வருமானத்துக்கே வழியில்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சாலையோர வாசிகள், ஆதரவற்றோர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் ஒரு பிடி சோற்றுக்குக் கையேந்தும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களையும் இந்த ஊரடங்கு முடக்கியுள்ளது. திருச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரோனா விவகாரத்தால் பிழைக்க வழி தெரியாமல், சாப்பாடு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல முடிவெடுத்து திருச்சியிலிருந்து பெரம்பலூர் வழியாக நடந்தே செல்லும் நிகழ்வு நடந்துள்ளது.

வடமாநிலத்தவர்கள்
வடமாநிலத்தவர்கள்

மேலும், கைக்குழந்தையுடன் உயிர் பிழைக்க ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோர் இந்த ஊரடங்கு முடக்கத்தால் நடந்தே செல்கின்றனர். இதனிடையே, நடந்து சென்ற கூலித்தொழிலாளி குடும்பத்துக்கு காவல்துறையினர் உணவு அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசுகையில். ``ஊரடங்கு உத்தரவு இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று பல நாள்கள் கடந்துவிட்டோம். நிலைமையும் சரியாகவில்லை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது. நாங்கள் பொறுக்கலாம்.

நடைபயணம் மேற்க்கொள்ளும் வடமாநிலத்தவர்
நடைபயணம் மேற்க்கொள்ளும் வடமாநிலத்தவர்

சிறு பிள்ளைகளால் பொறுக்கமுடியுமா? சாப்பாட்டுக்குச் சாவதா இல்லை கொரோனா வந்து சாவதா என்று தெரியாமல்தான் எங்களது சொந்த ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இருப்பவர்களை எல்லாம் தனி விமானம் மூலம் இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்து வருகின்றனர். ஆனால், எங்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று வேதனைப்பட்டுக்கொண்டு நடக்கத்தொடங்கினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு