Published:Updated:

ஆண் வடிவ அன்னை தெரசாவாக வாழ்ந்தவர்! - `குட்டகையன்’ மணவாளன் குறித்து நெகிழும் எழுத்தாளர் #MyVikatan

குட்டகையன் வண்ணாரப்பேட்டையில வாழ்ந்த ஒரு மாபெரும் நடனக் கலைஞன். வடசென்னை பகுதியில் அவர் நடனம் ஆடாத சாவு வீடுகளே இல்லை.

Poster
Poster

ஒவ்வொரு தருணத்திலும் நாம் கடந்து செல்லும் ஏராளமான நிஜ மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களை `நான்காம் சுவர்' என்ற எழுத்தோவியத் தொடராக ஆனந்த விகடனில் இடம் பெற வைத்தவர் எழுத்தாளர் பாக்கியம் சங்கர். இதில் ஏராளமான முகங்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் சோகமும், துயரமும், வலியும், போர்க்குணமும், விடாமுயற்சியும் நிறைந்தவர்கள். விகடனில் 35 வாரங்கள் இது தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றது. இந்த தொடரைப் பலரும் ஆர்வமுடன் வாசித்து வந்தனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள். ஒவ்வொருவிதமான பிண்னணி வாழ்க்கையும் தொழிலும் கொண்டவர்கள் இதில் உலா வந்தவர்கள்.

Representational Image
Representational Image

பிணக்கூராய்வு பணியாளர்கள், மனநல காப்பக பணியாளர்கள், பிச்சைக்காரர்கள், துணை நடிகர்கள், கயிற்றில் நடக்கும் வித்தைக்காரர்கள், நாடோடிகள், பாலியல் தொழிலாளர்கள், குறவன் குறத்திகள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கண்பார்வை அற்ற தெரு பாடகர்கள், ரயில் தண்டவாளங்களில் அடிபட்ட பிணங்களை அகற்றும் பணியாளர்கள் (பாடிமேன்), ஊர்ஊராகச் சென்று மரம் வெட்டுபுவர்கள் (வெட்டுக்காரர்கள்), குடும்பத்தையே இழந்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்குள் சுற்றித் திரியும் மனிதர், குடிக்கு அடிமையானவர்கள், நாடக கலைஞர்கள், சினிமா தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி ஏமார்ந்தவர்கள், குப்பைக் கிடங்கு அருகே வாழும் மலைவாழ் மக்கள், டிஜிட்டல் வந்ததால் தடுமாறிப்போன ஓவியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படாதபாடு படும் ஏழைகள், திருவிழா காலங்களில் கடைவிரிக்கும் தேநீர் கடை வியாபாரிகள், சர்க்கஸ்காரர்கள் என்று நாம் கடந்துசெல்லும் எளிய மனிதர்களைப் பற்றி பேசிய தொடர் நான்காம் சுவர்.

இத்தொடரில் இடம்பெற்றவர்களில் ஒருவர்தான் வடசென்னையைச் சேர்ந்த மணவாளன் என்ற குட்டகையன். அவர் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரில் ‘ஆனந்த விகடனின் நான்காம் சுவர் நாயகன் குட்டகையன் E.மணவாளன் என்றே அவருடைய நட்பும் குடும்பமும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நான்காம் சுவர் தொடர் எழுதிய எழுத்தாளர் பாக்கியம் சங்கரை தொடர்புகொண்டு குட்டகையனைப் பற்றி விசாரித்தேன். “குட்டகையன் வண்ணாரப்பேட்டையில வாழ்ந்த ஒரு மாபெரும் நடனக் கலைஞன். வடசென்னை பகுதியில் அவர் நடனம் ஆடாத சாவு வீடுகளே இல்லை. அவருக்கு முறையான வழிகாட்டலும் வாய்ப்பும் கிடைத்திருந்தால் அவரும் திரை உலகில் ஒரு பிரபுதேவாவாகவும் லாரன்ஸாகவும் உருவாகி இருந்திருப்பார். உயர்ந்த மேடைகளில் ஆடினால் நடன சிகாமணி ஆகிறார்கள் துக்க வீடுகளில் ஆடினால் சாவுக்கு நடனம் ஆடுபவர் ஆகிறார்கள். எல்லாம் நடனம்தானே. எல்லோரும் கலைஞர்கள்தானே. ஆனால், நடனத்தில் உச்சம் தொட்ட கலைஞன்.

Bakkiyam Shankar
Bakkiyam Shankar

இதை எல்லாம் தாண்டி அவருக்கு இன்னொரு முகமும் குணமும் இருந்தது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னைப் பகுதியின் பாழடைந்த மண்டபம் ஒன்றில் ஏராளமான தொழுநோயாளிகள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கியவர் குட்டகையன். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டவர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர். எவ்வித அசூயையும் இல்லாமல் அவர்களை ஆரத் தழுவிக்கொண்டவர். நன்றாக உடை உடுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்ட மனிதர். இவரைப்போலவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடை உடுத்தி அழகு பார்த்தவர். சொல்லப்போனால் அவர் இன்னொரு ஆண் வடிவ அன்னை தெரசாவாக வாழ்ந்தவர்.

`கைமால்’ என்று சொல்லக்கூடிய நேருக்குநேர் ஒண்டிக்கு ஒண்டி மோதும் ஒருவித மல்யுத்தப் போட்டியில் வெற்றி கண்ட வீரன். சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடியவர். ஆனால், அப்படி தன்னுடன் மோதியவர்களை ஒருபோதும் விரோதமாகப் பார்க்காமல் அவர்களுடன் நட்பாய் இருந்த மனிதன். அப்படிப்பட்ட மகத்தான மனிதரை நான் எழுத்தாக்கியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனந்த விகடனின் ‘நான்காம் சுவர்’ தொடரில் இடம்பெற்றதை அடையாளப்படுத்தி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் நினைவஞ்சலி போஸ்டர் அச்சடித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றி...” என மிகுந்த நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர்.

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/