Published:Updated:

``குழந்தைகளை, வேன்ல கரெக்டா எண்ணி ஏத்தியிருந்தா அந்தக் குழந்தை உயிரோட இருந்திருக்கும்!'' - ஒரு வேன் டிரைவரின் அனுபவம்

ஆ.சாந்தி கணேஷ்

''அந்தக் குழந்தைங்களை நம்பித்தான் எங்க வாழ்க்கை இருக்கு. இதை எல்லா வேன் டிரைவரும் மனசுல வைச்சுக்கிட்டாலே எந்தக் குழந்தையும் வேன் சக்கரத்துல சிக்காதுங்க.''

``குழந்தைகளை, வேன்ல கரெக்டா எண்ணி ஏத்தியிருந்தா அந்தக் குழந்தை உயிரோட இருந்திருக்கும்!'' - ஒரு வேன் டிரைவரின் அனுபவம்
``குழந்தைகளை, வேன்ல கரெக்டா எண்ணி ஏத்தியிருந்தா அந்தக் குழந்தை உயிரோட இருந்திருக்கும்!'' - ஒரு வேன் டிரைவரின் அனுபவம்

சில நாள்களுக்கு முன்பு, தினசரிகளில் வந்த செய்தி ஒன்று. 6 வயது சிறுவன் ஒருவன், தினமும் வேனில்தான் பள்ளிக்கூடம் சென்று வருவான். காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்காக வேனில் ஏறிய குழந்தை, மயக்கமடைந்து வேனுக்குள்ளயே சுருண்டு படுத்துவிட்டிருக்கிறான். மயங்கிக் கிடந்த அந்தச் சிறுவனை, அந்த வேன் டிரைவர் மாலை 3 மணிக்குத்தான் பார்த்திருக்கிறார். அதன் பிறகு, மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றும் பலனில்லை. குழந்தை இறந்துவிட்டது.

'பள்ளி வேன் ஏறி சிறுவன் பலி; சிறுமி பலி'. 'தான் வந்த அதே வேன் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி படிக்கிற குழந்தை பலி' என்கிற செய்திகள் அடிக்கடி நம் கண்களில்  கண்ணீரை வரவழைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. மேலே சொல்லப்பட்டுள்ள சம்பவமும் இன்னொரு கண்ணீர்த் தருணமாகத்தான் இருந்தது. அதே நேரம் இப்படியொரு சம்பவம், இனி நிகழாமல் இருக்க நாமும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா? சென்னை, தனியார் பள்ளியொன்றில், பிள்ளைகளை, கடந்த 25 வருடங்களாக அழைத்துச் செல்லும் வேன் டிரைவர் மதிவாணனிடம், மேலே சொல்லப்பட்டது போன்ற துர்சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அவருடைய அனுபவத்திலிருந்து சில வழிமுறைகளைக் கேட்டோம். 

``குழந்தைகளை, வேன்ல கரெக்டா எண்ணி ஏத்தியிருந்தா அந்தக் குழந்தை உயிரோட இருந்திருக்கும்!'' - ஒரு வேன் டிரைவரின் அனுபவம்

''வேனில் எத்தனை குழந்தைகளை ஏறுகிறார்களோ, இறங்கும்போதும் அந்த எண்ணிக்கை சரியா இருக்கான்னு பார்க்கணும். அப்படி செஞ்சிருந்தாலே ஒரு குழந்தை கீழே இறங்கலைன்னு அந்த வேன் டிரைவருக்குத் தெரிஞ்சிருக்கும். உடனே வேனுக்குள்ளே ஏறிப் பார்த்திருப்பாரு. அந்தக் குழந்தையும் இன்னிக்கு உயிரோட இருந்திருக்கும்'' - சீரியஸாக பேச ஆரம்பித்தார் மதிவாணன். 

''கடந்த 25 வருஷத்துக்கும் மேல குழந்தைங்களுக்கான ஸ்கூல் வேன் ஓட்டிக்கிட்டிருக்கேன். இது என்னோட சொந்த வண்டி. என்னைப் பொறுத்தவரைக்கும் சொந்த வேனோ, வாடகை வேனோ, டிரைவரோட ஒரு அட்டெண்டரும் இருக்கணும். என் வண்டியில் என் வொய்ஃப் இல்லன்னா, என் சிஸ்டர்தான் அட்டெண்டரா வருவாங்க. நம்ம சொந்தக்காரங்கன்னா, நம்ம மேலே இருக்கிற அக்கறையில குழந்தைங்களை இன்னும் கவனமாகப் பார்த்துப்பாங்க இல்லையா, அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.  

``குழந்தைகளை, வேன்ல கரெக்டா எண்ணி ஏத்தியிருந்தா அந்தக் குழந்தை உயிரோட இருந்திருக்கும்!'' - ஒரு வேன் டிரைவரின் அனுபவம்

என் வண்டியில 15 குழந்தைங்க வர்றாங்க. காலை, சாயங்காலம்னு ரெண்டு வேளையும் என் வேன்ல வர்ற குழந்தைங்கன்னா, அவங்க ஸ்கூலுக்கு வந்திருக்காங்க அல்லது வரலைங்கிறது எனக்கு கன்ஃபார்மா தெரியும். அந்தப் பிள்ளைகளை கரெக்டா வீட்ல கொண்டுபோய் சேர்த்திடுவேன். சில குழந்தைகள் சாயங்காலம் மட்டும்தான் வேன்ல வருவாங்க. அவங்களை, காலையில அவங்க பேரண்ட்ஸே டிராப் பண்ணிடுவங்க. இப்படிப்பட்ட குழந்தைங்க விஷயத்துல இன்னும் கவனமா இருக்கணும். சாயங்காலம் மட்டும் வேன்ல வர்ற ஒரு குழந்தை, ஒரு நாள் ஸ்கூலுக்கு வரலைன்னா,  அதோட பேரண்ட்ஸ் எனக்கு காலையிலேயே போன் பண்ணி தகவல் சொல்லிடுவாங்க. நானும் இன்னிக்கு இந்தப் பிள்ளை வராதுன்னு மனசுல வைச்சிப்பேன். ஆனா, இதுல ஒரு குழப்பம் நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. இன்னிக்கு என் பிள்ளை ஸ்கூலுக்கு வராதுன்னு சொன்னவங்க, திடீர்னு லீவை கேன்சல் பண்ணிட்டு பிள்ளையை ஸ்கூல்ல டிராப் பண்ணிடுவாங்க. வேலைக்குப் போற அவசரத்துல அதை எனக்குச் சொல்லவும் மறந்துடுவாங்க. அப்ப அந்தக் குழந்தைகளோட நிலைமை என்னாகும்னு நினைச்சுப் பாருங்க. இந்த மாதிரி சூழ்நிலையிலதான் என்னை மாதிரி வேன் டிரைவருங்க உஷாரா இருக்கணும். பேரண்ட்ஸ் இன்னிக்கு என் பிள்ளை ஸ்கூலுக்கு வராதுன்னு சொன்னாலும், மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி, பிள்ளை ஸ்கூலுக்கு வரலை என்பதை கன்ஃபார்ம் பண்ணிக்குவேன். 'இல்ல மதி. லீவ் போடலை. பிள்ளை ஸ்கூல்லதான் இருக்கான்'னு பேரண்ட்ஸ் சொன்னா, அந்தப் பிள்ளையையும் அன்னிக்கு டிராப் பண்ற கணக்குல வைச்சுக்கணும். இந்த மாதிரி பல தடவை நடந்திருக்குங்க'' என்றவர், தான் வந்த பள்ளி வேன் சக்கரத்திலேயே பலியாகும் குழந்தைகளைக் காப்பாற்றுவது பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 

''ஒண்ணாவது, ரெண்டாவது படிக்கிற வரைக்குமே குழந்தைங்க ரொம்ப குட்டியா இருப்பாங்க. அவங்க வேனையொட்டி கிராஸ் பண்ணா டிரைவருக்குத் தெரியாது. அதனால, வேனைவிட்டு குழந்தைங்க கீழே இறங்கிறதுக்கு முன்னாடி, வேன்ல இருக்கிற அட்டெண்டர் கீழே இறங்கணும். பிள்ளைங்க வேனை கிராஸ் பண்ணித்தான் ஸ்கூலுக்குள்ளேயோ, வீட்டுக்குள்ளேயோ போகணும்னா, வேனுக்கு முன் பக்கமா கிராஸ் பண்ண விடக் கூடாது. பின் பக்கமா மூணு அடி தள்ளிதான் கிராஸ் பண்ண வைக்கணும். அதை எங்க அட்டெண்டர் சரியா பார்த்துப்பாங்க. இதுக்கப்புறம் எப்படிங்க, குழந்தைங்க மேலே வேன் ஏறும் சொல்லுங்க? அதுங்க சின்ன பிள்ளைங்க... ஒரு குழந்தையை வேனுக்குள்ளே ஏத்தும்போது, இன்னொரு குழந்தை கீழே இறங்கப் பார்க்கும். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைங்கன்னா, கையில காசு இருக்கும். டக்குனு ரோட்டை கிராஸ் பண்ணி எதிர்ல இருக்கிற கடைக்குப் போயிடுங்க. கண் சிமிட்டுற நேரத்துல வேனுக்கு முன்னாடிப் போயிடும். அதட்டவும் முடியாது. வேன் டிரைவரும் அட்டெண்டரும் 100 சதவிகிதம் கவனமா இருக்கிறதைத் தவிர வேற வழியில்ல. அந்தக் குழந்தைங்களை நம்பித்தான் எங்க வாழ்க்கை இருக்கு. இதை எல்லா வேன் டிரைவரும் மனசுல வைச்சுக்கிட்டாலே எந்தக் குழந்தையும் வேன் சக்கரத்துல சிக்காதுங்க'' மதிவாணன் குரல் அழுத்தம் திருத்தமாக ஒலிக்கிறது. 

Vikatan