Published:Updated:

பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர்... டெல்லியில் தமிழக ரேஸருக்கு நடந்த கொடுமை! #rajinikrishnan

தமிழ்த்தென்றல்
பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர்... டெல்லியில் தமிழக ரேஸருக்கு நடந்த கொடுமை! #rajinikrishnan
பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர்... டெல்லியில் தமிழக ரேஸருக்கு நடந்த கொடுமை! #rajinikrishnan

ஒரு வருடத்தின் அருமை - மாணவனைக் கேட்டால் தெரியும்;

ஒரு மாதத்தின் அருமை - மாதச் சம்பளக்காரரைக் கேட்டால் தெரியும்.

ஒரு விநாடியின் அருமை - விபத்தில் பாதிக்கப்பட்டவரைக் கேட்டால் தெரியும்.

ஒரு மைக்ரோ விநாடியின் அருமை - ஒரு ரேஸரைக் கேட்டால் தெரியும்.

அதுவும் ரேஸர் ரஜினி கிருஷ்ணன், அப்படி மைக்ரோ விநாடி வித்தியாசத்தில் சில சாம்பியன்ஷிப்களைத் தவறவும் விட்டிருக்கிறார்.  அதைவிட 9 தடவை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் அடித்து தமிழகத்துக்குப் பெருமையும் தேடித் தந்திருக்கிறார். இந்த முறையும் ரஜினி கிருஷ்ணன் (Rajini krishnan), டெல்லியில் நடந்த ஜேகே டயர் சூப்பர் பைக் நேஷனல் சாம்பியன்ஷிப்பை மிஸ் செய்துவிட்டார். ஆனால், இந்த தடவை நடந்த ரேஸில்,  அவர் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதுதான் கேவலமான விஷயம்.

சினிமாவுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், ரேஸுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் இந்த ரஜினி. இந்தியா தவிர சீனா, மலேசியா, பீஜிங் என்று நாடுவிட்டு நாடு தாண்டியும் தனது பைக்கைச் சீறவிட்டு, போடியம் ஏறி பல டைட்டில்களை ஜெயித்தவர் ரஜினி. ஒரு கட்டத்தில் ரஜினி கலந்துகொண்டால், மற்ற ரேஸர்கள் பரபரப்பாகிவிடும் சூழ்நிலைகூட நிலவிவரும் அளவுக்கு, 16 வருட ரேஸ் அனுபவத்தைக் கொண்டவர் ரஜினி கிருஷ்ணன்.

ஆனால், அண்மையில் இந்த ரேஸ் சூப்பர் ஸ்டார், டெல்லியில் நடந்த சூப்பர் பைக் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தால், சாம்பியன்ஷிப் கோப்பையைத் தவறவிட்ட அனுபவத்தைச் சொன்னார். ‘‘சின்ன வயசில இருந்து பைக் ஓட்டியிருக்கேன். எத்தனையோ ரேஸ்கள்ல கலந்திருக்கேன். மரியாதையா தோற்றுப் போய் வெளியே வந்த அனுபவங்கள் என்னை அடுத்த ரேஸில் வெறியேற்றும்; என்னைப் பக்குவப்படுத்தும். ஆனா, இப்போ நடந்த சம்பவம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!’’ என்று கண்கள் கலங்க அந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘சூப்பர் பைக்குகளுக்கான நேஷனல் சாம்பியன்ஷிப் என்பது ரொம்ப காஸ்ட்லியான ரேஸ். பெருமையான விஷயம். இது சென்னையில் நடக்காது. இது டெல்லியில் உள்ள புத் இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக்கில் மட்டும்தான் நடக்கும். என்னோட கவாஸாகி 1000 சிசிதான் என் செல்லம். செம காஸ்ட்லி. பொதுவா ரேஸ் மூன்று நாள்கள் நடக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு. வெள்ளிக் கிழமை பிராக்டிஸ் மற்றும் குவாலிஃபையிங் ரேஸ் நடத்துவாங்க.

வழக்கம்போல், வெள்ளிக் கிழமை பிராக்டிஸ் ரேஸ் நடந்தது. என்னைப் பொறுத்தவரை, நான் எல்லாத்தையும் ஃபைனல் ரேஸ் மாதிரிதான் ட்ரீட் பண்ணுவேன். பிராக்டிஸ் ரேஸ்ல நான்தான் வின்னர். 3.6 செகண்ட் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். சாயங்காலம் குவாலிஃபையிங் ரேஸ் நடந்தது. இதில் ஜெயிக்கிறதைப் பொறுத்துத்தான் அடுத்த நாள் நடக்கும் ரேஸிங்கில் பொசிஷனைத் தேர்ந்தெடுப்பாங்க. குவாலிஃபையிங்கில் 1.34 செகண்ட்ல முன்னாடி வந்தேன். செம ஹேப்பியா இருந்துச்சு.

வழக்கம்போல், மறுநாள் ரேஸுக்கு பிராக்டீஸ் பண்ணிட்டு, ட்ராக்குக்குள்ளே இருக்கும் பிட் ஸ்டாப்பில் பைக்கை நிறுத்திட்டுத் தூங்கப் போயிட்டோம். மறுநாள் ரேஸ். ரொம்ப உற்சாகமா இருந்தேன். காலையில பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு ட்ராக்கில் முதல்ல இருந்து ரேஸைத் துவக்கினேன். திடீர்னு என்னோட பைக் முக்கி முக்கிப் போக ஆரம்பிச்சது. அதாவது, பெட்ரோல் ரிஸர்வ் ஆகும்போது அடைச்சு அடைச்சுப் போகுமே... அதே மாதிரி. எவ்வளவு திருகினாலும் பைக் ஒரு ஸ்பீடுக்கு மேல போகவே இல்லை. அதுக்குள்ள... எனக்கு முன்னாடி எல்லோரும் பறந்துட்டாங்க. சரி; ஓகே... இன்னும் ஈவ்னிங் ரேஸ்ல பார்த்துக்கலாம்னு சமாதானம் ஆகிட்டேன்.

பைக்கை மெக்கானிக்கிடம் கொடுத்து செக் பண்ணப்போ, பேட்டரி வயரிங் லூஸா இருந்துச்சு. ‘மெக்கானிக் மிஸ்டேக்’னு முடிவு பண்ணிட்டு, அடுத்த ரேஸுக்குக் கிளம்பினேன். அதுலேயும் அதே பிரச்னை. இதில தோத்துட்டா அவ்வளவுதான். நொந்து போயிட்டேன். பைக்கைத் திரும்பவும் ஃபுல்லா செக்-அப் பண்ணினோம். டேங்க்கெல்லாம் கழட்டி, ஃப்யூல் சிஸ்டத்தையெல்லாம் சோதனை போட்டப்போதான் தெரிஞ்சது. பெட்ரோல் டேங்க்குக்குள்ள யாரோ தண்ணியை ஊத்தி வெச்சிருக்காங்க. ஃப்யூல் சிஸ்டத்துக்குப் போற பைப்பில் இருந்து தண்ணியும் சேர்ந்து வர ஆரம்பிச்சது. என் வாழ்க்கையில் இந்த மாதிரி அனுபவம் இதுதான் எனக்கு முதல் தடவை. இதை நான் யார் மேல பழி போடுறதுன்னு தெரியலை. என்கூடக் கலந்துக்கிட்டவங்க முக்கால்வாசிப் பேர் நார்த் இந்தியா பசங்க. சென்னைப் பசங்க ஒண்ணு ரெண்டு பேர்தான் இருக்காங்க. எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் ரேஸ்ல கலந்துக்குறோம். ஏன் இப்படி நடந்துக்கிறாங்கனு தெரியலை. CCTV கேமரா இல்லாததால, இதுல யார் மேல சந்தேகப்படுறது?’’ என்று நொந்து போய்ப் பேசினார் ரஜினி கிருஷ்ணன்.

பெட்ரோல் டேங்க்கில் தண்ணீரை ஊற்றியவர்கள், பைக்கைப் பற்றி நன்றாக அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவரது சந்தேகம். ஏனென்றால், டேங்க்கில் அதிகளவு தண்ணீர் ஊற்றினால், உடனே என்ன பிரச்னை என்று தெரிந்து அதைச் சரி செய்து, ரேஸில் ரஜினி கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால், திட்டமிட்டு வெறும் 200 மில்லி தண்ணீர் மட்டுமே பெட்ரோல் டேங்க்கில் ஊற்றியிருக்கிறார்கள். குறைந்த அளவு தண்ணீர் என்பதால், பெட்ரோலுடன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பைக் தனது வேலையைக் காட்டும். பைக்கின் இன்ஜினிலும் சொட்டு சொட்டாகத் தண்ணீர் இறங்கி, இன்ஜின் மொத்தத்தையும் பழுதடையச் செய்துவிடும். இது வெள்ளத்தில் பைக் மூழ்குவதைவிட ஆபத்தான விஷயம். சூப்பர் பைக் என்பதால், இதற்குச் செலவும் பழுத்துவிடும் என்பதுதான் பரிதாபம். ‘‘நானும் ஸ்பான்ஸர்கள் மூலமாதான் பைக் ஓட்டுறேன். இப்போ இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை.’’ என்ற ரஜினி, மறுநாள் ரேஸில் கலந்துகொள்ள பைக் இல்லாமல், அன்றிரவே சென்னைக்குக் கிளம்பும்படி ஆகிவிட்டதைச் சொன்னபோது வருத்தமாக இருந்தது.

நேருக்கு நேர் மோதுவதுதான் வீரத்துக்கு அழகு. தமிழன் என்றில்லை; யாருக்கு இது நேர்ந்தாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். தண்ணீர் மேல் வைத்திருந்த நம்பிக்கையை, தங்கள் பைக்கின் மீது வைத்து ட்ராக்கில் ரஜினியுடன் மோதி ஜெயித்திருந்தால் மட்டுமே, அது உண்மையான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.