Published:Updated:

கச்சேரின்னா ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ்  அறவே கிடையாது - செந்தில் - ராஜலட்சுமி

எஸ்.கதிரேசன்
கச்சேரின்னா ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ்  அறவே கிடையாது - செந்தில் - ராஜலட்சுமி
கச்சேரின்னா ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ்  அறவே கிடையாது - செந்தில் - ராஜலட்சுமி

1980 களில் சினிமா பாடல்கள் பாடி திருவிழாக் கூட்டத்தைக் கட்டிப்போட்டிருந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர்களுக்கு இணையாக, மண்வாசனையுடன் கூடிய நம் தமிழ் மண்ணின் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாடி `மக்கள் இசை'க்குப் பெரும்புகழ் சேர்த்தவர்கள் மதுரை விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர். அவர்களைத் தொடர்ந்து 90 களின் மத்தியில் புகழ் சேர்த்தவர்கள் புஷ்பவனம் - குப்புசாமி தம்பதி. இப்போது அந்தக் களத்தில் செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியர்...

 `பொறந்தது மலைக்கோட்டை (திண்டுக்கல்)... புகுந்தது புதுக்கோட்டை... ரெண்டு கோட்டைக்கு நான் சொந்தக்காரி சேட்டையெல்லாம் இங்க வேணாம்' எனப் பெருங்குரல் எடுத்துப் பாடி தன் கணவரை மிரட்டுகிறார் ராஜலட்சுமி . பாசமாகப் பம்முகிறார் செந்தில் கணேஷ். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது. 

நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கி வந்த ராஜலட்சுமியிடம், `மக்கள் இசை' யில் ஏற்பட்ட ஆர்வம் அதற்கான தயாரிப்பு மற்றும் அவரின் கம்பீரக் குரலுக்கான ஆரோக்கியப் பராமரிப்பு ஆகியன குறித்து அவரிடம் கேட்டோம்.   

``சின்னவயசிலிருந்தே பாட்டுன்னா எனக்கு அவ்வளவு இஷ்டம். யார் கிட்டயும் முறையா பாட்டு க்ளாஸ்க்கெல்லாம் போனதில்ல. பள்ளிக்கூடம் போன நேரம் போக வீட்டுல நெசவு நெஞ்சுக்கிட்டே நான்பாட்டுக்கு மனம் போன போக்கில பாடிக்கிட்டு இருப்பேன்.  

இந்தப் பழக்கம் எந்த இடத்துல ஆரம்பிச்சதுனு பார்த்தீங்கன்னா அம்மா அடுப்படியில வேலையா இருப்பாங்க. தங்கையோ தம்பியோ  சின்னக்குழந்தையா இருக்கும். `பிள்ளைய, தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கவை'னு சொல்லுவாங்க. அப்போ தாலாட்டுப் பாடும்போதிலிருந்து எனக்கு இந்தப் பழக்கம் வந்துச்சு. எனக்குனு இல்ல தலைச்சனா பொறந்த புள்ளைங்க எல்லாருக்குமே பெரும்பாலும் இது வாய்க்கும். அப்புறம் சினிமா பாடல்கள், பக்திப் பாடல்கள்னு பாடுவேன். 

பத்தாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் பக்தி பாடல்களை நல்லா ராகத்தோட பாடுவேன். அப்படி நான் பாடுவதைக் கேட்டுட்டு  தாடிக்கொம்புங்கிற ஊரைச் சேர்ந்த நடராஜன் அண்ணா, `உனக்குக் குரல் நல்லா இருக்கு. பக்திப் பாடல்கள் பாடு. உன்னோட இந்த வாய்ஸ்  நாட்டுப்புறப் பாடல்கள் பாட நல்லா வரும்' னு சொன்னார். அத்துடன் எங்க வீட்டுக்கு வந்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடவும் கற்றுக் கொடுத்தார். 

ஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு பார்த்தீங்கன்னா, ஆசிரியர் அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தான் நமக்குக் கற்றுத்தருவார். ஆனா, குருதான் நாம எந்தத் துறையில சிறந்து விளங்குவோம்கிறதைக் கண்டுபிடிச்சு அதுல நம்மைத் தயார்படுத்துவார். அப்படித்தான் அவர் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களைப் பாட கற்றுத்தந்தார். 

அதுக்குப்பிறகுதான் மக்கள் இசையைப் பாட நிறைய குழுக்கள்கிட்ட இருந்து அழைப்புகள் வந்துச்சு. திருவிழா, பொங்கல் விழா போன்ற நம் மண்ணுக்கே உரிய விழாக்கள்ல பாடுற வாய்ப்பு தொடர்ந்து கிடைச்சுது. அப்படித்தான் எங்க வீட்டுக்காரரோட பொறந்த ஊரான புதுக்கோட்டைக்குப் பக்கத்துல களபம்கிற ஊர்ல நடந்த நிகழ்ச்சிக்குப் பாடப் போனேன். 

முதன்முதலா அவருடன் சேர்ந்து பாடுன நிகழ்ச்சியே எங்களுக்கு நல்லபேர் வாங்கித் தந்துச்சு. அவருக்கு நாட்டுப்புறப் பாடல்களை பாட, பயிற்சி கொடுத்தவர் `களபம் செல்லதங்கைய்யா'. 

அதுக்கு அப்புறம்,  ஒரே மேடைல அடிக்கடிப்  பாட்டுப் பாட ஆரம்பிச்சோம். அப்படிப் பாடும்போதுதான் முதன்முதலா நான் கவனிச்சேன், அவர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது ஆடிக்கிட்டே பாடுவார் னு. அப்போதான் `பாடி லாங்க்வேஜி'ன் மதிப்பு எனக்குப் புரிஞ்சுது. 

எங்க வீட்டுக்காரருக்கு சின்ன வயசிலேருந்தே ஆக்‌ஷனோட பாடுவதற்கு அவருடைய குருநாதர் செல்லதங்கைய்யா பயிற்சி கொடுத்திருந்தார். அதன் பிறகு நின்ன இடத்திலிருந்து கொண்டே சின்னச்சின்ன ஸ்டெப்ஸ்களோடு பாட ஆரம்பிச்சேன். தொடக்கத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு இப்போ கிட்டத்தட்ட ஆயிரம் மேடைகளுக்கு மேல பாடியாச்சுங்கிறதால பெருசா ஒண்ணும் சிரமம் இல்ல'' என்றவரிடம் 

``உங்களின் குரலைப் பராமரிக்க என்ன மாதிரியான முறைகளைக் கையாளுகிறீர்கள் எனக் கேட்டோம். 

``எங்க வீட்டுக்காரர் அதில் ரொம்ப கவனமா இருப்பார். ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ் இதையெல்லாம் அறவே தொட மாட்டார். அவருக்குச் சட்டுனு தொண்டை கட்டிக்கும். 

பொதுவா கச்சேரிக்கு முதல்நாளிலிருந்தே சாப்பாட்டு விஷயத்துல ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருப்போம். மற்றபடி எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவோம். அதேமாதிரி கச்சேரி முடிச்சிட்டு, கீழே இறங்கினதும் ஸ்கார்ப் கட்டிக்குவோம். குறிப்பா இரவு நேரத்துல பயணம் பண்ணும்போது ஜன்னலோரங்களைத் தவிர்த்திடுவோம். காலைல நிகழ்ச்சி முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்னா அதிகம் பேசமாட்டேன். அப்படியிருந்தால்தான் சாயங்காலத்துல இருக்கும் கச்சேரியில சிறப்பா பாட முடியும்.

என்ன ஒண்ணு... நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப் பழக வீட்டுல பயிற்சி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டம். உச்சஸ்தாயிலதான் பெரும்பாலான பாடல்களைப் பாட வேண்டியிருக்கும். அதுக்காக தனி தியேட்டர்களெல்லாம் கெடையாது. நாங்க பாடுற மேடைகள்தான் எங்களுக்குப் பயிற்சிக்கூடங்கள். ரசிகர்களோட கைதட்டல்கள்தான் எங்களுக்கு உற்சாக டானிக். அதுதான் இன்னிக்கு எங்களை விஜய் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக்கி சினிமாவிலும் பாடல்கள் பாட வைச்சிருக்குது'' எனக்கூறி புன்னகையோடு விடைகொடுத்தார்.