Published:Updated:

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

ராகுல் சிவகுரு

சிறிய சைஸ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் விலை, ஏப்ரல் 2020-க்குப் பிறகு BS-6 விதிகளின் வரவால் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!
625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

BS-6 மாசு விதிகளுக்குட்பட்ட தனது புதிய பெட்ரோல் இன்ஜின்களைக் காட்சிப்படுத்திய அதே தினத்திலேயே, BS-6 டீசல் இன்ஜின்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது மஹிந்திரா. தற்போதைய BS-4 சூழ்நிலையில், மொத்தம் எட்டு வகையான டீசல் இன்ஜின்களை தனது கார்களில் இந்த நிறுவனம் பயன்படுத்திவருகிறது. இதில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் BS-6 மாசு விதிகளுக்கேற்ப மேம்படுத்தப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. KUV 1OO NXT-ல் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் அந்த ஒன்று. இந்த காம்பேக்ட் கிராஸ் ஓவரின் விற்பனை, மஹிந்திரா எதிர்பார்த்தவாறு அமையவில்லை. எனவே, இதற்கு முதலீடு செய்வதில் அந்த நிறுவனம் ஆர்வம்காட்டவில்லை எனத் தெரிகிறது. மற்ற டீசல் இன்ஜின்களில் என்ன அப்டேட்?

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

1. தனது இலகு ரக கமர்ஷியல் வாகனங்களில் பயன்படுத்தப்படும் 625சிசி (ஜீத்தோ) மற்றும் 909சிசி (சுப்ரோ) Naturally Aspirated டீசல் இன்ஜின்கள் இரண்டுமே, BS-6 மாசு விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படும். எனவே, அவற்றில் டர்போ சார்ஜர் மற்றும் Lean NOx Trap இணைக்கப்படும். கூடவே 909சிசி இன்ஜினின் NA வகையிலான BS-6 வெர்ஷனும் வெளிவரும் (45bhp/9.8kgm). விலை அதிகமான Selective Catalytic Reduction (Urea Injection Method) பயன்படுத்தாமலேயே, இந்த டீசல் இன்ஜின்களின் NOx - PM (Particulate Matter) அளவுகளை BS-6 விதிக்கேற்ப குறைத்திருக்கிறது மஹிந்திரா. (Emission Reduction from BS-4 to BS-6: 68% less NOx & 82% less PM).

2. போட்டியாளர்கள் அனைவரும் ஒரே இன்ஜினை பல்வேறு கார்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஒரே சைஸில் (1.5 லிட்டர்) மூன்று வெவ்வேறு டர்போ டீசல் இன்ஜின்களைக்கொண்டிருக்கிறது மஹிந்திரா. பொலேரோ பவர் ப்ளஸ் மற்றும் TUV 3OO கார்களில் இருக்கும் 3 சிலிண்டர், 1,493சிசி இன்ஜின் - வெரிட்டோவில் இருக்கும் ரெனோவின் 1,461சிசி, 4 சிலிண்டர் இன்ஜின் - மராத்ஸோ (115bhp/30kgm) மற்றும் XUV 3OO (123bhp/30kgm) கார்களில் இருக்கும் புதிய 1,497சிசி, 4 சிலிண்டர் இன்ஜின் என அனைத்துமே BS-6 மாசு விதிகளுக்கேற்ப அப்டேட் ஆகும். எனவே, இதில் Diesel Particulate Filter (DPF) மற்றும் Selective Catalytic Reduction (SCR) ஆகிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படும். SCR இயங்குவதற்குத் தேவையான யூரியா, காரின் பின்பகுதியில் பெட்ரோல் டேங்க்குக்கு அருகே, தனியாக ஒரு டேங்க்கில் வைக்கப்படும். 

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

3. ஸ்கார்ப்பியோ மற்றும் XUV 5OO ஆகிய எஸ்யூவிகளில் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் BS-6 வரையறைக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படும். இவை தற்போது இருப்பதுபோலவே இருவிதமான டியூனிங்கில் வெளிவரும் (ஸ்கார்ப்பியோ: 140bhp/32kgm; XUV 5OO: 155bhp/36kgm). இதிலும் DPF மற்றும் Urea Injection உடனான SCR அமைப்பு இருக்கும். அடுத்த தலைமுறை XUV 5OO - தார் - ஸ்கார்ப்பியோ ஆகியவற்றில் அறிமுகமாக இருக்கும் புதிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், BS-6 மாசு விதிகளுக்கேற்பதான் வடிவமைக்கப்படும்.

4. மஹிந்திராவின் பெரிய மற்றும் 30 ஆண்டுகள் பழைய 2,523சிசி டர்போ டீசல் இன்ஜினும், காலத்துக்கு ஏற்ப BS-6 அவதாரத்தில் களமிறங்க உள்ளது. வழக்கமான பொலேரோ (75bhp/20kgm) மற்றும் பொலேரோவை அடிப்படையாகக்கொண்ட பிக்-அப் டிரக் (65bhp/19kgm) ஆகிய வாகனங்களில் இந்த 4 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இப்படி விதவிதமான வாகனங்களுக்கு வகைவகையான டீசல் இன்ஜின்களை தன்வசம் வைத்திருக்கும் மஹிந்திரா, ஏறக்குறைய அனைத்தையுமே மீட்டெடுத்திருக்கிறது. 

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

5. சிறிய சைஸ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் விலை, ஏப்ரல் 2020-க்குப் பிறகு BS-6 விதிகளின் வரவால் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே தனது டியாகோ மற்றும் டிகோரில் இருக்கும் 1.05 லிட்டர் Revotron டீசல் இன்ஜினை வருங்காலத்துக்கேற்ப மாற்றியமைக்காது எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தப் பட்டியலில் ஃபோக்ஸ்வாகனின் 1.5 லிட்டர் TDi டீசல் இன்ஜின் மற்றும் ஃபியட்டின் புகழ்வாய்ந்த 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின், 85bhp பவர்கொண்ட ரெனோவின் 1.5 லிட்டர் DCi டீசல் இன்ஜின் ஆகியவையும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

6. இப்படி தனது டீசல் இன்ஜின்களை BS-6 மாசு விதிகளுக்கேற்ப முன்னேற்றுவதற்காக, சுமார் 1,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது மஹிந்திரா. மேலும், 136 கார்களில் இதற்கான Prototype-கள் பொருத்தப்பட்டு, அவை 69,00,000 கிமீ-க்கும் அதிகமான தூரம் டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. தவிர, இதற்கான பணிகளின்போது 30 காப்புரிமைகளைப் பதிவுசெய்ததுடன் 1,482 புதிய பாகங்களையும் இந்த நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது.

மஹிந்திராவின் நிர்வாக இயக்குநரான பவன் கோயங்கா, ``BS-4 to BS-6 Transition காரணமாக, 4 மீட்டருக்குட்பட்ட டீசல் கார்களின் விலை 80,000 ரூபாயும், 4 மீட்டருக்கும் அதிகமான டீசல் கார்களின் விலை 1 லட்சம் ரூபாயும், பெட்ரோல் கார்களின் விலை 20-30 ஆயிரம் ரூபாயும் அதிகரித்தால், அது வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

625சிசி முதல் 2523சிசி வரை... மஹிந்திராவின் புதிய BS-6 டீசல் இன்ஜின்கள்!

இத்தகைய குறைவான விலை உயர்வுக்கு, உதிரிபாக உற்பத்தியாளர்களிடம் கலந்தாலோசிப்பது - அதிகப்படியான Localisation - டிசைன் அளவிலேயே முன்னேற்றங்களைச் செய்வது எனப் பல காரணங்கள் வழிவகுக்கும்'' என்றார்.

மாருதி சுஸூகி கார்களின் BS-4 பெட்ரோல்/டீசல் மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம், தற்போது 1 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கிறது. இது BS-6 சூழலுக்கு வரும்போது, அது 2.5 லட்சம் ரூபாயாக மாறுவதற்கு அதிக சாத்தியமிருப்பதாக அந்த நிறுவனம் எண்ணியிருக்கிறது. எனவேதான் `ஏப்ரல் 2020 முதலாக டீசல் இன்ஜின்களைத் தயாரிக்கப்போவதில்லை' என அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட நேர்ந்திருக்கிறது.

Vikatan