Published:Updated:

இடைத்தேர்தல் ரிசல்ட் -ஏழு பேரு எகிடுதகிடா பேசுறாங்க!

விகடன் விமர்சனக்குழு
இடைத்தேர்தல் ரிசல்ட் -ஏழு பேரு எகிடுதகிடா பேசுறாங்க!
இடைத்தேர்தல் ரிசல்ட் -ஏழு பேரு எகிடுதகிடா பேசுறாங்க!

கறுப்புப் பணம், அப்போலோ மேட்டர்னு ஆளாளுக்கு பிஸியா இருக்கும்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றி ஏழு பேர் எகிடுதகிடாப் பேசினதைக் கேளுங்க... 

தாமரைக்கண்ணன் :

இடைத்தேர்தல் நடந்த எல்லாத் தொகுதியிலும் நாங்க மூணாவது இடத்துக்கு முன்னேறியிருக்கோம். இதிலிருந்தே மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறாங்கங்கிறதைப் புரிஞ்சுக்கோங்க. பணப்பட்டுவாடா மட்டும் நடக்காம இருந்திருந்தா, நாங்க ஃபர்ஸ்ட் வந்திருப்போம் தெரியுமா? ஒருவேளை இந்த அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடியே வந்திருந்தா, பணப்பட்டுவாடா நடக்காம நாங்க ஆட்சியையே பிடிச்சிருப்போம்னுகூடத் தோணுது. கெஞ்சிக் கூத்தாடியும் எங்களுடன் கூட்டணி வைக்காம, டாட்டா காட்டிட்டுப்போன அந்தக் கட்சி எங்களைவிட கம்மியா ஓட்டு வாங்கிருக்குது பார்த்தீங்களா?

கோபாலபுரம் கோபாலு :

என்னதான் இடைத்தேர்தலில் நாங்க தோற்றுப் போயிருந்தாலும் இரண்டாவது இடம் எங்களுக்குத்தான். தி.மு.க-வுக்கு மாற்று நாங்கதான்னு சொன்ன பல கட்சிகள் இப்போ இருந்த இடமே தெரியாமப் போயிட்டாங்க. அட அவங்கள்லாம் குறைந்தபட்சம் டெபாசிட் வாங்கவாவது முயற்சி பண்ணியிருக்கலாம் கடைசியில் அதுகூட இல்லாமப் போயிட்டாங்க. இந்த இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயிச்சது ஒண்ணும் நேர்மையான வெற்றி இல்லை. எல்லா ஏரியாவிலேயும் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டா கொடுத்து இருக்காங்க. எப்பவும் இடைத்தேர்தல்ல ஆளும் கட்சிதான் ஜெயிக்கும்னு எல்லோருக்கும் தெரியும். அதேதான் இப்பவும் நடந்திருக்கிறது. இது எங்கள் செயல்பாட்டினை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்தச் செயல்படாத அரசை சீக்கிரமே அகற்றி 2021-ல் கழகம்தான் கோட்டையைப் பிடிக்கும். 

முரசு மணி : 

இடைத்தேர்தலில் கடந்த 12 வருசமா ஆளும்கட்சிதானங்க ஜெயிச்சிக்கிட்டுருக்கு. ஆளும்கட்சி பலமும், பணநாயகமும்தான் இடைத்தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்குது. நாங்க ஆட்சில இருந்திருந்தா, நாங்கதான் இதுலயும் ஜெயிச்சிருப்போம்.அரசியல்ல தோல்விங்கிறது சகஜம். மிகப்பெரிய கட்சியெல்லாம் தேர்தல்ல தோற்ற வரலாறு இருக்கு. எவ்வளவு தோல்வி வந்தாலும் மக்கள் பிரச்னைகளுக்கு நாங்க குரல் கொடுக்க நாங்கள் தவற மாட்டோம்.


தம்பி முருகன் : 

கடந்த தேர்தலில் எங்களிடம் பந்தயம் கட்டிய மற்ற பயந்தாக்கொள்ளிக் கட்சிகள் எல்லாம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமலேயே புறமுதுகு காட்டி எல்லையிலேயே நின்றுவிட்ட சூழலில், ஏழை சனங்களுக்குப் பணத்தாசை காட்டி ஓட்டுகளை அபகரிக்கும் இந்த ஈனக் கட்சிகளோடு நெஞ்சுக்கு நேராய் மார்பைக்காட்டி அண்ணனைப் போல் வீரமாய் நின்றதற்கே தம்பிமார்கள் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்கள் அள்ளி இறைத்துக் கிள்ளிய ஓட்டுகளோடு ஒப்பிடும்போது இந்த 0.6 சதவிகித ஓட்டு தன்மானம் மிக்க தமிழர்கள் அளித்த பரிசு. முப்பாட்டன் முருகனின் அருளால், அடுத்த தேர்தலில் இந்த 0.6 சதவிகிதத்தை 60 சதவிகிதமாக்கி வெற்றிக் காணிக்கையைத் தமிழர்களுக்குச் சமர்ப்பிப்போம் என நெஞ்சு புடைக்க முழங்குவோம். வீழ்ந்துவிடாத வீரம்! மண்டியிடாத மானம்!

'அம்மா' அரவிந்தசாமி :

ஒருபுறம் எங்கள் இதயதெய்வம், புரட்சித் தலைவி, தங்கத்தாரகை, கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தீவிர சிகிச்சை அறையிலிருந்து இருந்து தனி அறைக்கு மாற்றபட்டுள்ளார், மறுபுறம் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க. நாளை சரித்திரம் சொல்லும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ரத்தத்தின் ரத்தங்களான எங்களுக்கு இப்போதுதான் தீபாவளியே ஆரம்பமாகிறது. 'எங்க அம்மா தூங்கிட்டு இருக்கும்போது ஒரு கொசு வந்து கடிச்சுடுச்சுனா... அந்தக் கொசு பெரிய ஆள் ஆகிட முடியாது. எங்க அம்மா எழுந்திரிச்சு பட்டுனு அடிச்சு கொசு பொட்டுனு போகிடும்' என்பதை நாங்கள் சொல்லிக்கொண்டே இருந்தோம். இன்று நடந்துவிட்டது. மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழும் எங்கள் புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் மக்களின் பிராத்தனையால் மறுபிறவி எடுத்துள்ளார். இனி, அவர் பிள்ளைகளாகிய நமக்கு நன்மையே செய்வார், நம்பிக்கையோடு இருப்போம்!

மாம்பழ முருகேசன் :

நாங்க தோத்ததுக்குக் காரணம் ரொம்ப சிம்பிள். சின்னய்யாவுக்கும் ஒபாமாவுக்கும் பல வருஷப் பழக்கம்.  அமெரிக்கத் தேர்தல்ல ஒபாமா கட்சிக்காக சின்னய்யா பிரசாரம் பண்ணதால லோக்கல் பாலிடிக்ஸ்ல கவனம் செலுத்த முடியலை. ஆனா, இது ஒரு தற்காலிகத் தடைதான். அடுத்து உள்ளாட்சி இருக்கு. அதுக்கப்புறம் பார்லிமென்ட் தேர்தல் இருக்கு. அது முடிஞ்ச கொஞ்சநாள்லயே அடுத்த அசெம்பிளி தேர்தல் வந்துடும். இப்படித் தொடர்ச்சியா வாய்ப்புகள் இருக்கிறதால சின்னய்யா கையெழுத்து மேல கையெழுத்தா போடுறது உறுதி. அப்புறம், ஒரு முக்கியமான விஷயம்... நீங்க பிரசாரம் பண்ணதாலதான் ஒபாமா கட்சி தோத்துடுச்சுனு திராவிடக் கட்சிகள் அவதூறு பரப்பறாங்க. நம்பவே நம்பாதீங்க!

ஒப்பீனியன் உலகநாதன் :

முழுக்க முழுக்கப் பணம்தான் அ.தி.மு.க-வோட வெற்றிக்கு ஒரே காரணம்னு தி.மு.க குரூப் சொல்லுது. அப்படினா இங்கே ஜெயிச்ச அ.தி.மு.க. நெல்லித்தோப்பு தொகுதியிலேயும் பணம் கொடுத்து ஜெயிச்சிருக்கலாமே... ஏன் ஜெயிக்க முடியலை?. நாராயணசாமி ஆளுங்கட்சிங்கிறதாலதான் ஜெயிச்சார் இல்லைனா அ.தி.மு.க தான் ஜெயிச்சிருக்கும்னு அதிமுக குரூப் சொல்லுது. அப்படினா ஆளுங்கட்சியா இருக்கிற காரணத்தாலதான் தமிழ்நாட்டுல மூணு தொகுதிலேயும் அ.தி.மு.க ஜெயிச்சுச்சா? என்னங்க உங்க லாஜிக், ஒண்ணுமே புரியலை! இங்கே கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவே இல்லை ஆனா இதே தேதியில் நடந்த திரிபுரா மாநில இடைத்தேர்தல்ல ரெண்டு தொகுதியிலேயும் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயிச்சிருக்கு. ஆனால் மேற்கு வங்க இடைத்தேர்தல்ல இதே கம்யூனிஸ்ட் கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் ஜெயிச்சிருக்கு. நம்ம நாட்டுல, கட்சிகளோட கொள்கைகளுக்கும், நடக்கிற தேர்தல்களுக்கும் சம்பந்தமே இல்லைங்கிற விஷயம் மட்டும் இதில் இருந்து நல்லாத் தெரியுது!