Published:Updated:

அனைத்து ராசி அன்பர்களுக்கும்...பல்லேலக்கா ராசிபலன்...!

விகடன் விமர்சனக்குழு
அனைத்து ராசி அன்பர்களுக்கும்...பல்லேலக்கா ராசிபலன்...!
அனைத்து ராசி அன்பர்களுக்கும்...பல்லேலக்கா ராசிபலன்...!

'நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது' என ஃபீல் பண்ணி புலம்பித்தள்ளும் கைப்புள்ளைகளைத் தெம்பூட்டும் விதமாக  கம்ப்யூட்டர் சிவகாமியின் இந்த வார ராசிபலன் இதோ...

மேஷம்:

எவ்வளவு அடிச்சாலும் வடிவேலு காமெடியைப் பார்த்தது போல சிரித்த முகமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே...

ஆளும் கட்சியின் செய்தி சேனலைப் போல உங்கள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டு. நீங்களே ஷாக் ஆகும்படி நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த கடன் வசூலாகும். ஆனால் அந்தப் பணமெல்லாம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வந்து கன்னத்தில் கை வைக்கச் செய்யும். இந்த வருசமாவது கல்யாணம் காட்சி நடக்குமா என ஏங்கித் தவிப்போர் வழக்கம்போல ஊட்டிக்குத் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும். 

அதிர்ஷ்ட எண்: 111

அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், டார்க் பிங்க், லைட் பிங்க், 

ரிஷபம்: 

நண்பர்கள் சொன்ன ரகசியத்தை ஊருக்கே மைக் போட்டுச்சொல்லிவிட்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே...

சீரியல் பார்க்கும்போது ரிமோட்டைப் பிடுங்குபவர்களை அடிக்க, அடிக்கடி கரண்டியைத் தூக்குவதால் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த நற்செய்தி புதிய 500 ரூபாய் நோட்டைப் போல தாமதமாக வந்து சேரும். தொடர்ந்து நாஞ்சில் சம்பத் போல பேசிக்கொண்டிருந்தால், பணிபுரியும் அலுவலகத்தில் அழகான பெண் அண்ணா என்றழைக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் வாய்ப்பேச்சைக் குறைக்கவும். வங்கியில் பணிபுரிவோருக்கு கனவிலும் பெரிய வரிசை கண் முன்னாடி வந்து செல்லும்.

அதிர்ஷ்ட எண்: 000000000000

அதிர்ஷ்ட நிறங்கள்: ராமராஜன் சட்டை நிறங்கள்

மிதுனம்:

எதைக் கேட்டாலும் தெரியாது எனச் சொல்லாமல் எகத்தாளமாய் பேசி எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே...

இந்த வாரம் அனுகூலமான காரியங்கள் நடக்கும் வாய்ப்பிருக்கிறது. வங்கி வரிசையில் ஊரே காத்துக்கொண்டிருந்தாலும் நீங்கள் மட்டும் நைஸாக முன்னால் போய் நிற்பீர்கள். மாங்கு மாங்கென்று வேலை செய்தாலும் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்கும் வாய்ப்பில்லை. இளைஞர்கள் பெற்றோர்களின் காலில் விழுந்து கதறி அழுதாவது வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. காதலியுடன் வழக்கம்போல் சண்டை போட்டு நீங்களே மன்னிப்பும் கேட்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: XIXI

அதிர்ஷ்ட நிறங்கள்: வானவில் நிறங்கள்

கடகம்:

சிங்கிளாக இருப்பதை மிகவும் பெருமையான விஷயமாக நினைக்கும் கடக ராசி வாசகர்களே...

கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது. அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்களை மேனேஜர் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அங்குள்ள குழந்தைகள் அங்கிள் என்றழைத்து பல்பு கொடுப்பார்கள். திருமண விஷயத்தில் சிக்கல் நீடிக்கும். திருமணமானவர்கள் ரிமோட்டிற்காக சண்டை போடாமல் இருப்பது நல்லது. சைட் அடிக்கும் பெண்ணிற்காக 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றிக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். முக்கியமான நாளன்று முட்டக்குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: எதுவுமில்லை

அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ளாக் & வொய்ட்

சிம்மம்:

மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சிம்ம ராசி வாசகர்களே...

வீட்டில் அனைவரும் வெளியூருக்குச் செல்லும் வாய்ப்பிருப்பதால், குடும்பத்தில் வெகுநாட்களாக நீடித்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கும். ஆழ்ந்த யோசனையில் தம்மடித்து விரலை சுட்டுக்கொள்வீர்கள். பெண்கள் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செய்வது நல்லது. நீண்ட நாள் தலை முடி உதிர்வுப் பிரச்னைக்கு மொட்டை அடித்து தீர்வு காண்பீர்கள். மீட்டிங்கில் உறங்கி உயர் அதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 0/2

அதிர்ஷ்ட நிறங்கள்: ரூபாய் நோட்டு நிறங்கள்

கன்னி:

வருடம் முழுவதும் 'நோ ஷேவ் நவம்பர்' கொண்டாடும் கன்னி ராசி அன்பர்களே...

கையில் இருக்கும் காசை எல்லாம் செலவழித்துவிட்டு, கடன் வாங்கி வாழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. படியில் வழுக்கிவிழும் வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனம் தேவை. புதிய முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளை வழக்கம்போல் கடைசி நேரத்தில் விரைந்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஓசி ட்ரீட் கிடைக்கும் யோகம் இருக்கிறது. தொழில் புரிவோருக்குப் பணவரவு உண்டு. வேலை கிடைக்காதவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண்: 7 1/2

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சோந்தி நிறம்

துலாம்:

கத்தையாகப் பணம் கேட்போருக்கு ஒத்தையாகக் கொடுத்து வெறுப்பேற்றும் சிக்கனமான துலாம் ராசி அன்பர்களே...

டயட் இருப்பதாய் சொல்லிவிட்டு பஜ்ஜி திங்கும்போது நண்பர்களிடம் சிக்குவீர்கள். செய்யும் தொழில் லாபகரமாக இருக்கும். மொக்கைப் படத்திற்குக் கூப்பிடும் நண்பர்களை அடித்துத் துரத்துவது உடம்புக்கு நல்லது. கடைசிக் கை சோற்றில் மிளகாய் கடிபட்டதுபோல சிற்சில துன்பங்கள் வந்து போகும். சகோதர சகோதரிகளுடன் மோதல் போக்கைக் கையாண்டு முகத்தில் குத்து வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அடக்கி வாசிப்பது நல்லது ( நாங்க சொல்லல... கட்டம் சொல்லுது ).

அதிர்ஷ்ட எண்: 02

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் சிவப்பு

விருச்சிகம்:

யார் என்ன சொன்னாலும் சொல்பேச்சைக் கேட்காமல் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே...

எடுத்த வேலையை முடிக்க முடியாமல் எடுத்த இடத்திலேயே நிற்கும்படி அலைச்சல் அதிகமாக இருக்கும். நீண்டநாள் கனவை நனவாக்குவீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாணவர்கள் பிட் அடித்தாவது பாஸ் பண்ணி படிப்பில் முன்னேற்றம் காட்டுவார்கள். அதையும் மீறி வற்புறுத்தினால் வயிறு சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் படுத்துறங்கவும். வியாபாரிகளைப் பொறுத்தவரை கடன் தொகையை வசூல் செய்ய புது யுத்தியைக் கையாள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2.0

அதிர்ஷ்ட நிறம்: அஜித்தின் தாடி முடி நிறம்.

தனுசு:

கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டால் உசேன் போல்ட்டைப் போல பாய்ச்சல் காட்டும் தனுசு ராசி அன்பர்களே...

குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவிவந்த சிக்கல்கள் குறையும். சிற்சில உடல் உபாதைகள் வந்து போகும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். 'இம்புட்டு நேரம் திருட்டுப்பயகூடவா சவகாசம் வெச்சிருந்தோம்' எனத் தெளிவு பிறந்து சில நண்பர்களை அப்ரூட்டாக கட் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஆசையிருந்தாலும் நிறைவேறாத காரணத்தால், 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பயணம் மேற்கொள்வீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் ஏரியா ஆட்டோக்காரர்களிடம் மானாவாரியாகத் திட்டு வாங்க நேரிடும்.

அதிர்ஷ்ட எண்: 994084084

அதிர்ஷ்ட நிறம்: டோலிவுட் செட் நிறம்

மகரம்:

சுட்டெரிக்கும் வெயிலிலும் மிஸ்டர் கூலாக நடைபோடும் மகர ராசி நேயர்களே...

சம்பளம் வந்த சில நாட்களுக்கு மட்டும் உங்களின் பொருளாதாரச் சிக்கல் நீங்கும். நிறையக் காரியங்களை செய்ய 'மட்டும்' நினைப்பீர்கள். முன் அனுபவம் இல்லாத வேலைகளைப் புதிதாக முயற்சித்து முக்கிக்கொண்டிருப்பதற்குப் பதில் உள்ள வேலையைச் செய்யுங்கள். நீங்கள் வாங்கிச் சாப்பிடும் எக்ஸ்ட்ரா ப்ளேட் பிரியாணி வயிற்றுச் சிக்கலை ஏற்படுத்தும். மனைவி வழி சொந்தங்கள் விருந்தினராக வந்து வீட்டைவிட்டுச் செல்வதற்குள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். திருமணமாகாதவர்கள் ஜொள்விட்டே பொழுதைப் போக்க நினைப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1x1x1x1x1x1x1x0

அதிர்ஷ்ட நிறம்: சூரிய நிறங்கள்.

கும்பம்:

வெளியில் கெத்தாகப் பேசித் திரிந்தாலும் உள்ளுக்குள் நடுநடுங்கும் கும்ப ராசி நேயர்களே...

இந்த ஒரு வாரத்திற்கு நங்கு நங்கென்று வாழ்க்கை உங்களை மல்லாக்கப் போட்டு கும்மும் வாய்ப்புள்ளது. எவ்வளவு அடித்தாலும் சத்தம் மட்டும் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பு காட்டுவீர்கள். பெண்களைப் பின்தொடரும்போது தெருவில் உங்களை நாய் துரத்தும். சகோதர சகோதரிகளால் சிற்சில பல்புகள் வாங்க நேரிடும். நண்பர்களுக்குக் கடன் தரும்போது கவனம் தேவை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவீர்கள். அடுத்து என்ன நடக்கும் என யோசிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 420

அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு, காவி, பச்சை.

மீனம்:

அடுத்தவர் ட்ரீட் தந்தால்கூட அளவாய் சாப்பிடும் மீன ராசி நேயர்களே... 

உங்களின் எதிர்வீட்டுக்காரரைப் போல உங்கள் ராசிநாதன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் துன்பங்கள் விலகி ஓடும். புளி வைத்துத் தேய்த்தெடுத்த பித்தளைப் பாத்திரம் போல வாழ்க்கை துலங்கும். காதலியால் பணவிரயம் அதிகமாகும். இதுவரை உங்களிடம் பேசாதவர்களும் வந்து பேசி வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். அலுவலக நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஹெல்மெட் போடாமல் சென்றாலும் ட்ராஃபிக் போலிஸிடம் சிக்காமல் வீடு திரும்பும் யோகம் உள்ளது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் படுத்ததும் குறட்டைவிடும் அதிர்ஷ்டம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: -4, -3, -2, -1,

அதிர்ஷ்ட நிறம்: மேக நிறங்கள்.

குறிப்பு: மேற்சொன்ன ராசிபலன்கள் அனைத்தும் கற்பனையே! ஒருவேளை உங்கள் வாழ்க்கையோடு பொருந்திப் போனால் அதற்கு ராசிபலன் சொன்ன கம்ப்யூட்டர் சிவகாமி பொறுப்பல்ல! இன்று போனால், நாளை ஒரு நாள் கிடைக்கும். ஆனால், போன அந்த ஒருநாள் மீண்டும் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்பதை உணர்ந்து உழைத்தால் எல்லா நாளும் இனிய நாளே!