Published:Updated:

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை சர்... சர்...! என்ன காரணம்? #RoyalEnfield

ராகுல் சிவகுரு
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை சர்... சர்...! என்ன காரணம்?  #RoyalEnfield
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை சர்... சர்...! என்ன காரணம்? #RoyalEnfield

ஏப்ரல் 1, 2017 முதலாக, இரு சக்கர வாகனங்களில் AHO வசதி மற்றும் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்ட இன்ஜின் ஆகியவை கட்டாயமாக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை அதற்கேற்ப மேம்படுத்தி வருவதுடன், அவற்றை இந்திய டூ-வீலர் சந்தையில் அறிமுகப்படுத்தியும் வருகின்றனர். அந்தப் பட்டியலில் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது. AHO வசதி மற்றும்  BS-IV இன்ஜின் உடனான பைக்குகளின் உற்பத்தி தொடங்கிவிட்டதுடன், சில டீலர்களில் அவை காணக் கிடைக்கின்றன. எனவே இந்த மேம்படுத்தப்பட்ட மாடல்களின் புக்கிங்குகளை, RE நிறுவனத்தின் டீலர்கள் ஏற்கெனவே துவக்கிவிட்டனர். தற்போது விற்பனை செய்யப்படும் BS-III பைக்குகளின் விலையைவிட, புதிய பைக்குகளின் விலை சுமார் 3,000 - 4,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால் இவற்றில் மெக்கானிக்கலாகவும், தோற்றத்திலும் எந்த மாற்றங்களும் இல்லை. 

கடந்த 2016 ஆண்டு, மிலன் நகரத்தில் நடைபெற்ற EICMA மோட்டார் ஷோவில், ஜரோப்பிய சந்தைகளுக்கு எனப் பிரத்யேகமான பைக்குகளைக் காட்சிப்படுத்தி இருந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அனைத்து பைக்கிலும் பின்பக்க டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், யுரோ-4 விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்ட இன்ஜின் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த விஷயங்கள் எதுவும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் BS-IV மாடல்களில் இல்லாதது, இந்த பைக்கின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்; ஏனெனில் இந்த பைக்குகளைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கக்கூடிய டூரிங் பைக்குகளிலேயே, மேலே சொன்ன வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. மேலும் எந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களும் RE நிறுவனத் தயாரிப்புகளில் இல்லை; இருந்தாலும், கடந்த இரு வருடங்களில் இவர்களது தயாரிப்புகள் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதே நிதர்சனம். அதில் கிளாஸிக் 350 பைக்கிற்கு மிகப் பெரும் பங்குண்டு. இந்த பைக்கின் மாதாந்திர விற்பனை, 40 ஆயிரம் இலக்கை நெருங்கி வருகிறது.

கடந்த நவம்பர் 2016 மாதத்தில், மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, வாகன விற்பனை கணிசமாக பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அப்போதும்கூட, வாகன விற்பனையில் சரிவின்றி ஏற்றம் கண்ட ஒரே நிறுவனம் RE மட்டும்தான்! மேலும் கான்டினென்ட்டல் ஜிடி மற்றும் ஹிமாலயன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, அந்நிறுவனம் புதிய செக்மென்ட்களையும் (கஃபே ரேஸர், அட்வென்ச்சர்) உருவாக்கியும்விட்டது. தற்போது ஹார்லி டேவிட்சன் பைக்கிற்குப் போட்டியாக, ட்வின் சிலிண்டர் 750சிசி இன்ஜின் கொண்ட பைக் ஒன்றை இந்த நிறுவனம் களமிறக்க உள்ளது. அதன் வாயிலாக இந்தியாவின் மிடில் வெயிட் பைக் செக்மென்ட்டை ஆளும் முடிவில் இருப்பதுடன், புதிய சந்தைகளில் கால்பதிக்கும் எண்ணத்தில் இருக்கிறது RE. அந்த புதிய பைக்கானது, இப்போது விற்பனையில் இருக்கும் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, மாடர்ன்னாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹீரோ - பஜாஜ் - ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக, அதிக மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனம் REதான்! டிவிஎஸ் நிறுவனத்தை முந்திவிட்டு, இந்த பெருமையை அவர்கள் பெற்றிருப்பதை இங்கு சொல்லியாக வேண்டும்! 

 - ராகுல் சிவகுரு.