Published:Updated:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

நித்திஷ்

பாலிவுட் பக்கம் போனால் பொம்மன் இரானி, பரேஷ் ராவல், ஜானி லீவர் என பட்டாசு கொளுத்தும் கலைஞர்கள், அப்படியே தென்னிந்தியா பக்கம் இறங்கிவந்தால் பிரம்மானந்தம், வடிவேலு, சந்தானம் என பின்னிப் பெடலெடுக்கும் ஸ்டார்கள் - நகைச்சுவைப் பிரியர்களுக்கு இவர்கள் தேவதூதர்கள். இவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உண்டு. இப்போது இவர்களுக்கு அடுத்தத் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது. யூ-டியூப் தான் அந்த இளைஞர் பட்டாளத்தின் ஏரியா. சும்மா இறங்கி இறங்கி அடிக்கிறார்கள். அப்படி யூ-டியூபில் கலக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் சிலரைப் பற்றிய அறிமுகம் இது.

அபிஷ் மாத்யூ:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

யூ-டியூப் உலகின் மிஸ்டர்.சார்மிங். மலையாளம் வாடை வீசும் ஆங்கிலத்தில் பேசும் அபிஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஐ.பி, ஈஸ்ட் இண்டியா கம்பெனி என யூ-டியூப்பின் முன்னணி காமெடி சேனல்கள் அனைத்திலும் அபிஷுக்கு பங்குண்டு. அரசியல், மதம், சினிமா என எதையும் விட்டு வைக்காமல் வெளுத்து வாங்குவதில் கில்லாடி. இதன் காரணமாகவே அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். இவரின் 'சன் ஆஃப் அபிஷ் ஷோ' வெளியான கொஞ்ச நேரத்திலேயே லட்சக்கணக்கான வியூஸ்களை அள்ளும். கேரள நடிகை அர்ச்சனா கவிக்கும் இவருக்கும் கடந்த ஆண்டுதான் டும்டும்டும் நடந்தது.

கண்ணன் கில்:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

இளசுகளின் இதயம் அள்ளும் ஹேண்ட்சம் ஜென்டில்மேன். பெங்களூருதான் பூர்வீகம். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்த கையோடு சாஃப்ட்வேரில் கீபோர்ட் தட்டிக்கொண்டிருந்தவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது ஒரு டேலன்ட் ஹன்ட் ஷோ. அதிலிருந்து முழுநேர காமெடியன் அவதாரம். இவரும் சக காமெடியனான பிஸ்வ கல்யாண் ரத்தும் இணைந்து பிரபல பாலிவுட் படங்களை எல்லாம் ரிவ்யூ செய்கிறோம் என கிழித்துத் தொங்கவிடுவார்கள். அப்பேர்ப்பட்ட கண்ணனின் லேட்டஸ்ட் அவதாரம் - நூர் படத்தின் மூலம் பாலிவுட் என்ட்ரி.

அதிதி மிட்டல்:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

நியூயார்க்கில் கை நிறைய சம்பாதித்துக்கொடுத்த வேலையை விட்டுவிட்டு காமெடிதான் இனி நம்ம ஏரியா என இந்தியா வந்து இறங்கினார் அதிதி மிட்டல். இந்தியாவின் பெண் ஸ்டாண்ட் அப் காமெடியன்களுள் முக்கியமானவர் இவர். பெண்கள் மீதான பொதுப்பார்வை, பெண்கள் பேசத் தயங்கும் விஷயங்கள் போன்றவற்றை போகிறபோக்கில் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டுப் போவது அதிதியின் ஸ்டைல். ஏ.ஐ.பி நடத்திய சர்ச்சைக்குரிய ரோஸ்ட்டில் ஆண் காமெடியன்களுக்கு நிகராக வி.ஐ.பிக்களை வறுத்தெடுத்தார். இப்போது உலகம் முழுக்க பறந்து பறந்து காமெடி செய்துகொண்டிருக்கிறார்.

பப்பா சி.ஜே:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

இந்தியாவின் சீனியர் மோஸ்ட் சின்சியர் காமெடியன் இவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த கையோடு லண்டனில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அந்த வேலை போரடிக்கவே முழுநேர காமெடியனாகிவிட்டார். பி.பிசி. என்.பி.சி, காமெடி சென்ட்ரல், எம்.டிவி என முன்னணி சேனல்கள் அனைத்திலும் ஷோக்கள் செய்திருக்கிறார். 'இந்தியாவின் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன், ஆசியாவின் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் என எக்கச்சக்க பட்டங்கள் இவர் கைவசம். அண்டார்டிகா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் ஷோ செய்து வரும் இவர் ஒரு யோகா நிபுணரும் கூட.

டேனியல் பெர்ணாண்டஸ்:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள்

பார்ட்டி நகரமான கோவாதான் இந்த இளைஞருக்கு சொந்த ஊர். மற்ற கலைஞர்களைப் போலவே எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலை பிடிக்காமல் முழுநேர காமெடியனானவர். சீரியஸ் விஷயங்களை சிரிப்பு கலந்து சொல்வதில் வித்தகர். பேச்சு சுதந்திரம், தூக்குத் தண்டனை, அதிகரிக்கும் மாணவர்கள் தண்டனை என யாரும் தொடாத தலைப்புகளின் கவனம் செலுத்துவது டேனியலின் ஸ்டைல். காமெடிக்கு இவரின் சேனல் கியாரன்டி.