Published:Updated:

மஹிந்திரா பாதி... புல்லட் மீதி! - `பாகுபலி-2' ராணாவின் காட்டெருமை வண்டி ரகசியம் சொல்கிறார் சாபு சிரில்! #VikatanExclusive

தமிழ்த்தென்றல்
மஹிந்திரா பாதி... புல்லட் மீதி! -  `பாகுபலி-2' ராணாவின் காட்டெருமை வண்டி ரகசியம் சொல்கிறார் சாபு சிரில்! #VikatanExclusive
மஹிந்திரா பாதி... புல்லட் மீதி! - `பாகுபலி-2' ராணாவின் காட்டெருமை வண்டி ரகசியம் சொல்கிறார் சாபு சிரில்! #VikatanExclusive

சரித்திரப் படங்களுக்கு, கதையெல்லாம் அவசியம் இல்லை; மேக்கிங்தான் முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. ‘செம சீன்ல’ என்று ஒவ்வொருவரையும் மெஸ்மரிசம் செய்தது ‘பாகுபலி 2’-வின் ஒவ்வொரு சீனும். பெரிய பெரிய யானைகளும், மகிழ்மதி தேசத்தின் சுவர்களும், அரண்மனைக் கட்டடங்களும் கலை இயக்கத்தின் உச்சகட்டம். அதிலும் ராணாவின் காட்டெருமை வண்டி... 3D எஃபெக்ட் இல்லாமலேயே நம் கழுத்தையும் சீவுகிறது அந்த சாரட் வண்டியின் பிளேடுகள். ‘‘இது எல்லாவற்றுக்கும் சாபுசிரில்லுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்று திறமைக்கு மரியாதை செய்கிறார் ராஜமௌலி. ஆம்! இயக்குநரைத் தாண்டி இதற்குப் பின்னால் கடுமையாக உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபுசிரில். 

`‘ `ஏதோ காட்டெருமைகளை கிராஃபிக்ஸ் பண்ணி வண்டியை இழுத்திருப்பாங்க’ என்று சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது அந்தக் காட்சியை. அந்த மிரட்டல் வண்டி,  ராயல் என்ஃபீல்ட் புல்லட் என்றால் நம்புவீர்களா? புல்லட் இன்ஜின், மஹிந்திரா கார்களின் ஸ்டீயரிங் செட்-அப், கியர் பாக்ஸ் ஆகியவற்றைப் பொருத்தி...' என்று அந்த ஒரு வண்டிக்காக மட்டும் கிட்டத்தட்ட பல நாள்கள் யோசித்து திரையில் காண்பித்திருக்கிறார் சாபுசிரில்.

‘‘எப்படி வந்தது இந்த ஐடியா?’’ - சாபு சிரிலிடமே கேட்டோம்.

‘‘ `பாகுபலி'-யில் குதிரைகள்தான் ராணாவின் சாரட் வண்டியை இழுத்துப் போவதுபோல் வடிவமைத்திருந்தோம். முன் பக்கம் அரிவாள்கள் இருக்கும். ` `பாகுபலி 2'-ல் முற்றிலும் வேறு மாதிரி வாகனம் டிசைன் செய்ய வேண்டும்' என்று ராஜமௌலி சார் சொல்லிவிட்டார். அரிவாள்களுக்குப் பதில் பிளேடுகளை வைத்துவிட்டோம். குதிரைகளுக்குப் பதில் காட்டெருமைகள். ஆனால், `சாரட் வண்டி வேகமாகப் போக வேண்டும். இதற்கு இன்ஜின் இருந்தால்தான் செட் ஆகும். என்ன செய்யலாம்?' என்று யோசித்தபோது, சட்டென ராயல் என்ஃபீல்டு ஞாபகம் வந்தது. இப்போதைக்கு இந்தியத் தயாரிப்பிலேயே பிக்-அப்பும் டார்க்கும்கொண்ட பைக் ராயல் என்ஃபீல்டு புல்லட்தான். வெளி மார்க்கெட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு புல்லட் வாங்கி, அதன் 500 சிசி இன்ஜினை சாரட் வண்டியின் அடியில் பொருத்தினோம். அந்த இன்ஜின் மூலம்தான் பிளேடுகள் சுற்றும், வாகனம் பறக்கும். மஹிந்திரா கார்களின் கியர்பாக்ஸும் ஸ்டீயரிங்கும் மெக்கானிக்கலாக வலிமைவாய்ந்தவை. பழைய மஹிந்திரா பிக்-அப் ட்ரக்கை வாங்கி அதன் கியர் பாக்ஸையும், ஸ்டீயரிங்கையும் பொருத்தினோம். நினைத்ததுபோலவே அந்தக் காட்சிக்கு நல்ல வரவேற்பு!’’ என்கிறார் சாபுசிரில்.

உறுதியாகவும் இருக்க வேண்டும்; லைட் வெயிட்டாகவும் இருக்க வேண்டும். இதற்காக ரேஸ் கார்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் இழைகளைக்கொண்டும் பல விஷயங்களை உருவாக்கியிருக்கிறார் சாபுசிரில்.

நீங்கள் படம் பார்க்கும்போது, எருமைகள்தான் வண்டியை இழுப்பதுபோலிருக்கும். ஆனால், உள்ளே டிரைவர் இருப்பார். சாரட் வண்டியின் முன் பக்கம் சின்ன ஓர் ஓட்டை இருக்கும். அதன் வழியே சாலையைப் பார்த்துதான் டிரைவர் கியரைப் போட்டு, ஸ்டீயரிங்கைத் திருப்பி வாகனம் ஓட உதவிபுரிவார். இது படம் பார்க்கும் யாருக்கும் தெரியாமல், போர்க்காட்சிகளின்போது இந்த வாகனம் விரைந்து தூள்பறக்கும்போதுகூட, உள்ளிருக்கும் ஓட்டுநர் தெரிய மாட்டார். அப்படி தத்ரூபமாகக் காட்சியமைத்ததில் இருக்கிறது சாபுசிரில்லின் கைவண்ணம்!

‘‘இதுக்கான பட்ஜெட் என்ன?’’ 

‘‘ `படத்தின் பட்ஜெட், 250 கோடி ரூபாய்'னு பத்திரிகையில பார்த்துத்தான் எனக்கே தெரியும். ‘கார் வாங்கணும்; காசு கொடுங்க’னு கேட்டா, புரொடியூஸர் கொடுத்துடுவார். பட்ஜெட்டா சார் முக்கியம்; படத்தைப் பாருங்க!’’ என்று காமெடியாகச் சொல்கிறார் சாபுசிரில்.