Published:Updated:

"ஜஸ்டின் பீபர் ஏமாற்றிவிட்டார்!" - குற்றம் சாட்டும் இந்திய ரசிகர்கள்!

நா.செந்தில் குமார்
"ஜஸ்டின் பீபர் ஏமாற்றிவிட்டார்!"  - குற்றம் சாட்டும் இந்திய ரசிகர்கள்!
"ஜஸ்டின் பீபர் ஏமாற்றிவிட்டார்!" - குற்றம் சாட்டும் இந்திய ரசிகர்கள்!

"பல ஆயிரங்களில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்கு வந்தால், நேரடியாகப் பாடாமல் ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கு ஜஸ்டின் பீபர் வெறும் வாயை மட்டும்தான் அசைத்தார்" என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். 

ஐந்து நாள் இந்தியப் பயணமாக வந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், மும்பையின் வெப்பம் தாங்கமுடியாமல் தென் ஆப்ரிக்கா கிளம்பிச் சென்றார். ஜஸ்டின் பீபருக்கு குளிரூட்டப்பட்ட அறைகள் பிடிக்காதாம். எப்போதும் திறந்தவெளியில் இருக்க விரும்பும் அவருக்கு மும்பையின் வெக்கை சுத்தமாக ஒத்துக்கொள்ளவில்லையாம். மும்பையின் சேரிப் பகுதி, ஒட்டகப் பயணம், கோவா சொகுசுக் கப்பலில் பார்ட்டி எனப் பல பிளான்களுடன் வந்திருந்த அவர், ஒரே நாளில் எஸ்கேப் ஆகிவிட்டார். 

ஜஸ்டின் பீபரின் மும்பை இசை நிகழ்ச்சி பெரும் கோலாகலமாக நேற்று நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த இந்தி திரையுலக விஐபிகளும் ஆஜராகியிருந்தனர். முக்கியமாக அவர்களின் வாரிசுகள் வந்திருந்தனர். 

'பிலைபெர்ஸ்' என்றுதான் தங்களை பீபரின் ரசிகர்கள் அழைத்துக்கொள்கிறார்கள். இந்த பிலைபெர்ஸ்தான் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு சீட்டு வாங்கி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 4000 ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை இந்தச் சீட்டுகள் விலை போயின. இது தவிர, ப்ளாக்கில் 1 லட்ச ரூபாய்களுக்கு மேல் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டனவாம். இத்தனை எதிர்பார்ப்போடு கலந்துகொண்ட ரசிகர்கள், தங்களின் அபிமான பாடகர் ஏமாற்றிவிட்டார் எனப் புகார் தெரிவித்தனர். தன் மகளுடன் கலந்துகொண்ட இயக்குநரும் நடிகருமான அனுராக் பாசு, "அவர் மொத்தம் நான்கு பாடல்களுக்கு மட்டுமே வாய் விட்டுப் பாடினார். மற்றதெல்லாம் வெறும் வாயசைப்பு மட்டுமே செய்தார். மேடை நிகழ்ச்சி நடத்தவரும் கலைஞன் தன் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது" என்றார். 

"மொத்தம் 90 நிமிடங்கள் மட்டுமே அவர் மேடையில் இருந்தார். ஆனால், எட்டு மணிக்கே அனைவரையும் வரச்சொல்லி பல மணி நேரம் காக்கவைக்கப்பட்டனர். ஶ்ரீதேவி போன்ற இந்தியப் பிரபலங்களே, தங்கள் பிள்ளைகளுக்காக பொறுமையுடன் உட்கார்ந்து இருந்தனர்" என புனேயைச் சேர்ந்த ரசிகர் தெரிவித்தார். இவர் ஒரு டிக்கெட் 76 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி மனைவியுடன் வந்திருந்தார்.