Published:Updated:

`குட்டிச் சிறுவனின் சுட்டி மெஸேஜ்!' - டெலிவரியை மாற்றிய ஜொமோட்டோ

ராம் பிரசாத்

மும்பையைச் சேர்ந்த இர்ஷாத் என்பவரின் ட்விட்டர் பதிவு, இணையத்தைக் கவர்ந்துள்ளது.

சிறுவன்
சிறுவன்

மும்பையைச் சேர்ந்தவர், இர்ஷாத் தப்தாரி. ஆகஸ்ட் 5-ம் தேதி தனது மகன் செய்த சேட்டைகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ஜொமோட்டோவில் தனக்கு விருப்பமான பொருள்களை வேண்டுமென்று கூறினால், அவர்கள் கொண்டுவந்து தருவார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறான்” எனப் பதிவிட்டவர், தனது மகன் பலூன்கள், கார், விளையாட்டுப் பொருள்கள் வேண்டும் என கேட்க, சொன்னதை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து பதிவுசெய்தார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

இர்ஷாத் தப்தாரியின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலானது. சில பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும் அவர்கள் கேட்பதையும் அதில் பதிவிட்டிருந்தனர். அதில் ஒருவர், “எனது மகன் நினைத்துக்கொண்டிருக்கிறான், ஏ.டி.எம் போனால் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்றாலும் எடுத்து வரலாம்” என கமென்ட் செய்திருந்தார். இப்படி நிறைய கமென்ன்டுகள் அவரது பக்கத்தை ஆக்கிரமித்திருந்தன.

இந்த ட்விட்டர் விவகாரம் எப்படியோ ஜொமோட்டோ நிறுவனத்தை எட்டியுள்ளது. அவர்கள், உடனடியாக இந்தச் சிறுவன் கேட்ட விளையாட்டுப் பொருள்களை அனுப்பிவைத்துள்ளனர். இது, இர்ஷாத்துக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இர்ஷாத், “ ஜொமோட்டோவில் இருக்கும் நல்ல உள்ளங்களிடம் இருந்து சிறப்பான பரிசு எனக்கு வந்துள்ளது. எனது 4 வயது மகனுக்கு சிறந்த ஆச்சர்யம் கிடைத்துள்ளது. அந்தப் பரிசுகளுடன் வீட்டைச்சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறான். அவனது 8 மாத சகோதரியும் அந்தப் பொருள்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.