`எனக்கு எண்டு கார்டே இல்லை' என்பதுபோல் நாள்தோறும் புதுப் புது மோசடிகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இப்படி மோசடிகள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம்? காலம் முன்புபோல் இல்லை, இப்போது மோசடி நபர்கள் பெருகிவிட்டர்கள் என்பதுதானே உங்கள் கூற்று. ஆனால், உண்மையில் நமது அலட்சியமும், அஜாக்கிரதையும்தான் காரணம் என்பதை நாம் உணர மறந்துவிட்டோம்.
மும்பையில் ஒரு பெண்மணி IRCTC வலைதளத்தில் ரயில் பயணம் செய்ய மூன்று டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து உள்ளார். இந்த பெண்மணிக்கு மூன்று டிக்கெட்டுகளும் RAC-யாக பதிவாகியுள்ளது. RAC டிக்கெட்டுகள் உறுதியாகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள மும்பை பெண்மணி IRCTC ட்விட்டரில் கணக்கில் ரயில் டிக்கெட்டுகளுடன் தனது செல்போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார்.
இவர் ட்விட்டரில் பதிவு செய்த சில மணி நேரத்திலேயே இவருக்கு கஸ்டமர் சப்போர்ட்டிலிருந்து போன் செய்வதாகக் கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசிய நபர், அந்தப் பெண்மணியின் போனுக்கு வரும் லிங்கில் அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்து, ரூ.2 செலுத்தினால் ரயில் டிக்கெட் உறுதியாகிவிடும் என்று கூறியுள்ளார். இந்தப் பெண்மணியும் அவ்வாறு செய்ய அடுத்த சில நொடிகளிலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.64,000 எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

நமக்கு ரூ.1 அல்லது ரூ.2 அனுப்பினால் இலவச பொருள் அல்லது இலவச சேவை கிடைக்கும் என்ற குறுஞ்செய்தி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இவ்வளவு குறைவான தொகைதானே, என்ன ஆகிவிடப்போகிறது என்ற அலட்சியத்தில் நாமும் அந்த தொகையை அனுப்பிவிடுவோம். இந்த ரூ.1, ரூ.2 தான் நமது ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணத்தைப் பறிக்கப் போகிறது என்பதை நாம் அறிவதில்லை. நாம் google pay மற்றும் phone pe பயன்படுத்தும்போதுகூட, ஒருவருக்கு ரூ.1-ஐ அனுப்பி போன் நம்பர் சரிதானா என்பதைக் காணும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்தப் பழக்கத்தை முதலில் நாம் முற்றிலும் நிறுத்த வேண்டும்.
அடுத்ததாக, நமது தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்தால் என்ன ஆபத்து வரும் என்பதற்கு இந்த சம்பவமே பெரும் சாட்சி. யார் கேட்டாலும் நமது தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது என்ற விழிப்புணர்வை நிச்சயம் நாம் அனைவரும் பெற வேண்டும்.

இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா கூறியதாவது, ``UPI மூலம் மோசடி, வங்கி தகவல்கள் மூலம் மோசடி என ஆன்லைன் மோசடிகள் இரண்டு வகைப்படுகிறது. UPI-யில் code ஸ்கேன் செய்ய கூறியோ, பின் நம்பர் பதிவு செய்ய சொல்லியோ மோசடி நடக்கிறது. பணப்பறிமாற்றத்தை நாம் தொடங்காதபட்சத்தில் எக்காரணத்தைக்கொண்டும் நாம் நமது UPI-யில் பின் நம்பரை பதியக் கூடாது. நாமே பணப் பரிமாற்றம் செய்யும்போதுகூட பின் நம்பர் பதிவதற்கு முன்னால், மேலே எவ்வளவு பணம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது மோசடிகள் UPI-யில்தான் அதிகமாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்களோ, அங்கீகரிக்கப்பட்ட அலுவலகப் பணியாளர்களோ எவரும் OTP-யை நம்மிடம் போன் செய்து கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டாலும் கண்டிப்பாக நாம் கொடுக்கக் கூடாது. IVR-ல் (Interactive Voice Response) மட்டுமே நமது தகவல்களைக் கேட்க வாய்ப்புள்ளது. ஆனால், இதிலும் நம்மைத்தான் பதிய சொல்வார்களே தவிர நம்மிடம் OTP உள்ளிட்ட தகவல்களைக் கேட்க மாட்டார்கள். ஒரு வேளை உங்களுக்கு அப்படி ஏதாவது அழைப்பு வந்தால், நிச்சயம் அது மோசடி அழைப்புதான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, ட்விட்டர் போன்ற ஆன்லைன் தளத்தில் போன் நம்பரை பதிவு செய்து தகவல்களைக் கேட்க வேண்டும் என்பதில்லை. நாம் ட்விட்டரில் IRCTC போன்றவற்றை டேக் செய்து ஏதாவது பதிவு செய்து கேட்கும்போது, நமது செல்போன் நம்பரைத் தவிர வேறு எதையும் கூறக் கூடாது.
மேலும் வங்கியில் இருந்து ஆன்லைனில் KYC அப்டேட் செய்ய சொல்லி ஏதேனும் இமெயில் அல்லது குறுஞ்செய்தி வந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. வங்கியின் நெட் பேங்கிங் தளம் மூலமோ, நேரடியாக அருகில் உள்ள வங்கிக்கிளைக்கு சென்றுதான் KYC அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.