Published:Updated:

`மத்திய அரசின் கோரிக்கை; உர்ஜித் படேலின் ராஜினாமா?’ - முக்கியத்துவம் பெற்ற ஆர்பிஐ கூட்டம்

`மத்திய அரசின் கோரிக்கை; உர்ஜித் படேலின் ராஜினாமா?’ - முக்கியத்துவம் பெற்ற ஆர்பிஐ கூட்டம்
`மத்திய அரசின் கோரிக்கை; உர்ஜித் படேலின் ராஜினாமா?’ - முக்கியத்துவம் பெற்ற ஆர்பிஐ கூட்டம்

இன்று நடைபெற்று வரும் ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கூட்டம், மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சமீபத்தில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு  3 கோரிக்கைகளை விடுத்தது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்புப் பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது மூன்றில் ஒரு கோரிக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.  இதனால், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது.

கடந்த மாத இறுதியில், மும்பையில் நடந்த ‘ஏ.டி.ஷெராப் நினைவு’ நிகழ்ச்சியில் பேசிய மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ‘ஒரு நாட்டின் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்' என்று தெரிவித்தார். சமீப காலத்தில் ஆர்பிஐ தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு யாரும் பேசியதில்லை என்பதால், விராலின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இங்குதான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. 

தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியைப் பணியவைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்த அழுத்தத்தினால், ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகப் பல தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நவம்பர் 19 -ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில், படேல் ராஜினாமா செய்வார் என கூறப்பட்டது. 

இதன் பின்னர், சில நாள்களுக்கு முன்பு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் இதன் முடிவில் மத்திய அரசின் சில கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுகொண்டது. இதனால், அரசுக்கும் வங்கிக்கும் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்தது போன்ற செய்திகளும் வெளியாயின.

இந்நிலையில், மும்பையில் ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆர்.பி. ஐ கூட்டம் நீண்ட நேரம் தொடர்ந்து நடைபெறும்  என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபரில் நடந்த போர்டு கூட்டம் சுமார் 8 மணி நேரங்கள் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் வங்களின் பண புழக்கம், வங்கிக்கடன் ஆகியவை  குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முடிவில் மத்திய அரசின் கோரிக்கை, உர்ஜித் படேலின் ராஜினாமா போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  இந்தக் கூட்டம் மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.