Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

ம்ப்யூட்டரை லாக்-ஆஃப் செய்தபோது ஜோஷுக்கு வியர்த்துக்கொட்டியது. இதை எப்படிச்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

செய்யப்போகிறோம்? ஏற்கெனவே இதுமாதிரியான வேலையொன்றை செய்திருந்ததால்தான், ஏ.டி.எம் கொள்ளைக்கு ஒப்புக்கொண்டார்.  காட்டன் ட்ரைலின் அட்மினாக இருந்தபோது இவர் நன்றாக சம்பாதித்தவர்தான் என்றாலும், ஒருநாள் வேலைக்கு அரை மில்லியன் டாலர் என்னும்போது அதை மறுக்க இயலவில்லை. சாண்ட்டோ டொமிங்கோவில் `சரக்கை’ டெலிவரி செய்ய வேண்டுமென்பது ஒரிஜினல் டீலில் இல்லை. அப்படியிருக்க அந்த வேலையையெல்லாம் எப்படிச் செய்தோம் என்பது அவருக்கே மர்மமாக இருந்தது.

அடுத்த நகர்வு என்ன என்பது பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். மீதமிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டால் அவர்களால் இவரைக் கண்டுபிடிக்க  முடியுமா? இந்த யோசனைகள் அவர் மனதில் தோன்றிய வேகத்தில் காணாமல் போனது. இவருடைய ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடும். இவர் உயிரோடு இருக்க வேண்டுமெனில், கொடுக்கப்பட்ட கால அவகாசமான 24 மணி நேரத்திற்குள் பணத்தை எப்படியாவது கண்டுபிடித்துத் தந்துவிட வேண்டும். 

ஆனாலும், தப்புவதற்கு வழி இருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. காணாமல்போன பணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், ஏற்கெனவே செய்ததைவிட ஒரு பெரிய கொள்ளையில் ஈடுபட்டு, பிரச்னையைத் தீர்த்துவிட்டு, கவலைப்படாமல் இருக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

லோட் செய்யப்பட்டிருந்த ஸ்மித் அண்டு வெஸ்ஸான் 0.375 மேக்னம் ரிவால்வாரை வெளியே எடுத்தார். அதை ஒரு சுற்று சுற்றி அதிலிருந்து சரியாக ஆறு புல்லட்களை எடுத்து டேபிளின் மேல் வைத்தார். அதன்பின் பரிசோதித்துப் பார்த்ததில் அது பழுதில்லாமல் அதன் வேலையைச் சரியாகச் செய்தது. அதன்பின் சிங்கிள்-ஆக்‌ஷன் ரிவால்வரில் மறுபடியும் லோட் செய்தார்.

அலமாரியிலிருந்து ஒரு பேக்கை எடுத்து அதில் உதிரியாக இருந்த புல்லட்களையும், இறைச்சி வெட்டும் கத்தி ஒன்றையும் அதற்குள் போட்டுக்கொண்டு வெளியேறினார்.

***

ஐந்து நிமிடத்தில், 100 கிலோ மீட்டர் வேகத்தில் டோனியும், ஏட்ரியனும் ஹைவேயில் விரைந்து கொண்டிருந்தபோது வாஷிங்டன் டிசி, 160 மைல்கள் என எழுதப் பட்டிருந்த போர்டை டோனி பார்க்க நேரிட்டது. ட்ராஃபிக் அதிகமாக இருந்த அந்த நேரத்தில், அவர்கள் சென்றடைய எப்படியும் நான்கு மணி நேரம் ஆகலாம் என நினைத்தார்.

“வாட் தி ஃபக் இஸ் ராங் வித் யூ, ஏட்ரியன்? அங்கே திரையில் யாரைப் பார்த்தீர்கள்? அது குறித்து ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?” என்று டோனி கேட்டார்.

ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்திருந்த அவரது மனதில் கவலை இருந்தது. தான் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக டோனி கோபப்படு வதைப் பார்த்த அவர் இறுதியாக, ‘‘அது இஸ்லாமிய தீவிரவாதக் குழு இல்லை, டோனி” என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

“வேறு யார்?”

“அதைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும்.”

***

ஜோஷ் கேட்டைக் கடந்து சென்று பிரேக்கை அழுத்தினார். கும்மிருட்டு. தெருவிளக்குகள் எல்லாம் அணைந்திருந்தன. வீட்டை நோக்கி அவர் நடந்தார். இரண்டு ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றி ஏழடிக்கு சுவர் எழுப்பப் பட்டிருந்தது. சுவர் ஏறுவதொன்றும் பெரிய சவால் இல்லை. இதைவிட பெரிய சுவர்களிலெல்லாம் அவர் ஏறியிருக்கிறார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் உள்ளே இறங்கி வீட்டை நோக்கி நடந்தார். பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புக்கென்று சிலர் இருப் பார்கள் என அவர் நினைத்தார். அவர்களை மட்டும் கடந்து சென்றுவிட்டால் மற்றவை எல்லாம் தூசுக்குச் சமம். அவர் இருந்த இடத்திலிருந்து முதல் பாதுகாப்பு நிறுத்தம் ஆறு நிமிடத் தொலைவில் இருந்தது. அவர்கள் பதில் பேச வேண்டுமென்றால், யாராவது அவர்களைக் கூப்பிட வேண்டும்.

***

சென்றுகொண்டிருக்கும் போதே, ஏட்ரியன் எஃப்.பி.ஐ அலுவலகத்துக்குப் போன் செய்தார். அதிர்ஷ்டவசமாக ராபர்ட் ப்ரிக் அலுவலகத்தில் இருந்தார். ஏட்ரியன் தான் பார்த்தது அனைத்தையும் கூறினார். ராபர்ட்டுக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

“ராபர்ட், சைட்டுக்கு சில பேக்-அப்களை அனுப்ப முடியுமா? நாங்கள் இன்னும் இருபது நிமிடத்தில் சென்றடைந்து விடுவோம்” என்றார்.

“இதோ, உடனே...!”

ஏட்ரியன் மட்டும் ஆக்‌ஷனில் இறங்கிவிட்டால், யார் தலைமை அதிகாரி என்று தெரிந்து கொள்வது மிகவும் கடினம்.

***

ஜோஷ் தூணுக்குப் பின்னால் மறைந்துகொண்டு பிராதன நுழைவாயிலில் கண்களை மேய விட்டார். அங்கே இரண்டு பாதுகாவலர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அவர் தன்னுடைய 0.357-ஐ தயார் நிலையில் வைத்துக் கொண்டார். 30 தூரத்தில் நின்றுகொண்டு சரியான நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த நேரம் வரவில்லை. பொறுமையாக இருப்பதற்கு அவரிடம் போதுமான நேரம் இல்லை. எனவே, துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தினார்.

சிறிய புகைக்கூட்டம் எழும்பி கலைந்து சென்றது. ஒரு பாதுகாவலர் முகம் குப்புற மார்பிள் தரையில் விழுந்தார். வலியால் கத்தக்கூட அவர் களுக்கு நேரமில்லை. அது மூளை யில் புல்லட்டுகள் செய்யக்கூடிய வேலை. இன்னொரு பாதுகாவ லர் துப்பாக்கியை எடுத்து பதற்றத்துடன் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வாக்கி-டாக்கியில் ஏதோ முணுமுணுத்தார்.

உயிரோடிருந்த பாதுகாவலர் பாதுகாப்புக்காகத் தூணை நோக்கி இடதுபுறம் செல்ல முயற்சி செய்தார். திறந்த வெளியில் இருந்தால் அவர் பாதிப்புக்குள்ளாக நேரிடலாம். அவருக்கு ரிவால்வார் ஹேமரின் சத்தம் கேட்டது. அவன் திரும்பிபோது ஜோஷின் துப்பாக்கியை எதிர்கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை.

ஜோஷ் முன்னேறிச் சென்றார். அது ஒரு பெரிய வீடு. அதில் வசிப்பவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கக்கூடும். கொல்வது அவரது முதல் முடிவல்ல. அவர் எதற்காக வந்தாரோ, அதை மட்டும் எடுத்துச்செல்லவே விரும்பி னார். அது அவரது கனவு களையும் மீறி அவரை செல்வந்தனாக்கிவிடும்.

அவர் வரவேற்பறையைக் கடந்து சென்றார். அவருடைய ஷூ அவருடைய பேக்கில் இருந்தது. தரைத் தளத்தில் ஒரு படுக்கையறை இருந்தது. எல்லோரும் தூங்குகிறார் களா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகக் கதவை லேசாகத் திறந்தார். ஆனால், அங்கே யாரு மில்லை. அதைப் பார்க்கும்போது ஒரு டீன் ஏஜ் பெண்ணின் அறை போல இருந்தது. சுவரெங்கிலும் ஜஸ்டின் பீபெரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அங்கிருந்து அவர் முதல் தளத்துக்குச் சென்றார். அவருக்கு வலதுபுறத்தில் ஸ்டடி ரூம் இருந்தது. அவர் வராந்தாவில் நின்று யோசித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஏதோ ஓர் அறையிலிருந்து குறட்டை விடும் சத்தம் லேசாகக் கேட்டது. ஒரு சில நொடிகள் தாமத்துக்குப்பின், அவர் அதை நோக்கிச் சென்றார். மிகவும் கவனமாகத் தனக்குப் பின்னால் இருந்த கதவை மூடினார்.

அவர் லைட்டை ஆன் செய்துவிட்டு டேபிள் இருக்குமிடம் நோக்கி நடந்து கர்ட்டனை இழுத்தார். ட்ராயரை கலைத்து எதையோ தேடினார், கிடைக்க வில்லை.

‘‘எங்கே இருக்கும் அந்த ரகசியம்?’’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.  ஆவணங்கள் வைக்கப் பட்டிருந்த கோப்பு அல்லது குறுந்தகடு அல்லது ஹார்ட் டிஸ்க்கைத் தேடிக் கொண்டிருந்தார். ஒருவேளை லேப்டாப்பில் இருக்கலாம். ஆனால், லேப்டாப் எதையும் காணவில்லை.

“வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங் ஹியர், ஜோஷ்?” அதுவரை இல்லாத பயம் இப்போது தொற்றிக்கொள்ள பயத்தோடு அவர் திரும்பிப் பார்த்தார். ஸ்டடி ரூமின் கதவு திறந்திருந்தது ஒரு பெண்மணி கதவுக்கருகில் பேஸ்பால் மட்டையோடு நின்றிருந்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

“சில பேப்பர்களைத் தேடி நான் இங்கு வந்தேன்” ஜோஷ் வெகுளித்தனமாகப் பதிலளித்தார்.

`’இந்த இருட்டில்... திருடனைப் போல?”

`மிட்லாண்ட் கஃபேயில் பட்டப் பகலில் செய்வதுபோல இதைச் செய்ய முடியாது, ஸ்வீட் ஹார்ட்’’ என்றார்.

அது அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தான் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டதாக அந்தப் பெண் நினைத்திருந்தார். யாரோ ஒருவர் அவரைப் பார்த்திருக்கக்கூடும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

`’மிட்லாண்ட் கஃபேயில் நீங்கள் அன்றொரு நாள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்பதை என்னிடம் சொல்லலாம் அல்லவா? என்னை வேவு பார்க்க வந்தீர்களா?’’ ஜோஷ் கேலியாகச் சிரித்தார்.
‘`அதைப்பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை, ஜோஷ்’’ என அந்தப் பெண் கத்தினார்.

“சரி, நான் எனது வேலையைப் பார்க்கிறேன். உங்களுக்கு உங்கள் மேல் அக்கறையிருந்தால் போய்த் தூங்குங்கள். நான் எனது வேலையை அமைதியாகப் பார்த்துச் செல்ல வசதியாக இருக்கும்” என்றார்.

“நான் 911-ஐ கூப்பிட்டிருக்கிறேன். அவர்கள் எந்தத் தருணத்திலும் இங்கு வரக்கூடும். அதற்குப் பிறகு நான் தூங்கப் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவரை நோக்கி பேஸ்பால் மட்டையைக் காட்டினார்.
அப்போதுதான் அவர் என்ன தேடிக் கொண்டிருந்தது அவரது கண்ணில்பட்டது. ஆனால், 911-ஐ பற்றிக் குறிப்பிட்டது ஜோஷை கோபத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வேகமாகத் திரும்பி அந்தப் பெண்ணை நோக்கித் துப்பாக்கியால் சுட, புல்லட் அவரது உடலைத் துளைத்துச் சென்று அவருக்குப் பின்னால் இருந்த கதவில் பதிய, அந்த நள்ளிரவில் பயம் கலந்த கத்தலுடன் அந்தப் பெண்ணின் உடல் சரிந்தது.

ஏட்ரியன் காரை க்ரீச்சிட்டு நி்றுத்தியபோது அந்த கத்தல் கேட்டது. டாமிட், அவர் காரிலிருந்து குதித்து வீட்டிற்குள் வேகமாகச் சென்றார். டோனி அவரைப் பின் தொடர்ந்தார். பிரதான வாயிலைத் தள்ளிவிட்டு வேகமாக உள்ளே ஓடினார். போர்டிகோவில் மாநிலக் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பாதுகாவலர்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் இறந்து விட்டிருந்தது போலத் தெரிந்தது. அவர் வேகமாக உள்ளே செல்ல, அனைத்து விளக்குகளும் அணைந்தி ருக்க, முதல் தளத்தில் ஓர் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவர் மாடிக்குச் சென்று வலதுபக்கம் திரும்பியபோது ஜோஷுடன் இடித்துக் கொண்டு கீழே விழுந்தார். ஜோஷ் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்.

‘`ஓடாதீர்கள், எஃப்.பி.ஐ சொல்வதைக் கேளுங்கள்’’ என்று  ஏட்ரியன் கத்தினார். ஜோஷ் நிற்கவில்லை. ஏட்ரியன் துப்பாக்கியால் சுடுவதென்று ஒரு விநாடிக்குள் முடிவெடுத்து சுட்டபோது அது இலக்கைத் தாக்கவில்லை. அவர் சுட்ட புல்லட் பக்கத்து அறையை இணைக்கும் கண்ணாடிக் கதவில்பட, அந்தக் கண்ணாடி சிதறியது.

ஏட்ரியனைவிட டோனி வேகமாக இருந்தார். அவர் வேகமாக ஓடி ஜோஷை நெருங்க, ஜோஷ் பிரதான கேட்டுக்கு வெளியே ஒரு சடலத்தைத் தாண்டி இன்னொரு சடலத்தைத் தாண்டும்போது டோனி அவரை நோக்கிச் சுட, கீழே கிடந்த சடலத்தின் ரத்தம் அவரை வழுக்கி விழச் செய்தது.

ஏட்ரியன் ஜோஷை நெருங்கும்போது டோனி ஏற்கெனவே அங்கேயிருந்தார். ஜோஷிடமிருந்து எந்தவிதச் சலனமும் இல்லை. டோனியினுடைய புல்லட் ஜோஷின் கழுத்தில் பாய்ந்திருந்தது.

“அவனுடைய பேக்கைக் கவனித்துக் கொள்ளுங்கள், உடல் முழுவதும் பரிசோதிக்கவும். நான் உள்ளே சென்று பார்க்கிறேன்” என்று ஏட்ரியன் கூறினார்.

அவர் திரும்பி உள்ளே நடந்து சென்றார். அவர் அனைத்து விளக்குகளையும் போட்டுவிட்டு, முதல் தளத்தில் இருந்த அறைகளை நோக்கிச் சென்றார். முதல் அறையின் கதவைத் திறந்து பார்த்தார். அங்கே யாருமில்லை. இரண்டாவது அறையை அடைந்த தருணத்தில், அவர் தன்னை அறியாமல் வாயில் கை வைத்துக்கொண்டதுடன், மயக்க உணர்வும் ஏற்பட்டது.

நிக்கி டான் தரையில் விழுந்து கிடந்தார். அவருக்கு நினைவில்லை என்றாலும் சுவாசம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக புல்லட் அவரது இதயத்தைத் தாக்கி இருக்கவில்லை. 911 ரெஸ்பான்ஸ் டீம் அப்போதுதான் அங்கே வந்தது.

ஏட்ரியன் நிக்கியைப் பார்த்து, ‘‘ஹோல்ட் ஆன், நிக்கி, ஹோல்ட் ஆன். உதவி இதோ வந்து கொண்டிருக் கிறது’’ என்று சொல்லிக் கொண்டே அவரது வலது கையைத் தூக்கித் தனது கையில் வைக்கும்போது அது கீழே `தட்’ என்று விழுந்தது.

இ.எம்.டி (Emergency      Medical Technicians) அவரைத் தூக்கிச் சென்றனர். ஏட்ரியனுக்கு என்ன நடந்தது என்றே புரிய வில்லை.

இரண்டு பேர் மட்டும்தான் அதுபற்றிச் சொல்ல முடியும். ஒருவர் இறந்துவிட்டார், இன்னொருவர் அவர் கையிலேயே இப்போது இறந்துவிட்டார். அந்த நிலையில்கூட நிக்கி டான் அழகாகத்தான் இருந்தார். கொனே ஐலாண்ட் அவென்யூ சி.சி.டி.வி கேமராவில் பூப்போட்ட உடையில் தோன்றியதைவிட அழகாக இருந்தார்.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

ஓவியங்கள்: ராஜன்

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்