Published:Updated:

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!
கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

ஓவியம்: ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

வாழ்க்கையில் சிக்கல்களும், சரிவுகளும் எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். அது தவிர்க்க முடியாதது. சிக்கல் வருகிறபோது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் குறித்துத்தான் யோசிக்க வேண்டுமே தவிர, பதற்றப்படுவதால் பயன் இல்லை. ஆனால், வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு போதிய வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இருப்பதால், ஏதாவது சிக்கல், பிரச்னை என்றால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ். அவர் தன் மனக் குமறலைக் கொட்டித் தீர்த்தார்.

“நான் நடுத்தர பொருளாதார குடும்பத்தைச் சேர்ந்தவன்.  இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, ஒரு வருடம் இந்தியாவில் பணியாற்றி வந்தேன். 2018 மே மாதம் முதல் நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறேன். என் வயது 27. என்னுடைய மாத சம்பளம் தற்போது ரூ.1.5 லட்சம். சில மாதங்களில் இன்சென்டிவ் கூடுதலாக வரும்போது ரூ.1.75 லட்சம் வரைக் கிடைக்கும்.  எனது செலவுகள் மாதத்துக்கு ரூ.70 ஆயிரம் வரை ஆகிறது.

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஒரு சிக்கல் வந்து சுழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்.

அப்பா பல்வேறு பிசினஸ் களைச் செய்துவந்தார். அவர் பிசினஸ் செய்வதற்காகவும், சென்னையில் வீடு வாங்குவதற்காக வும், மற்ற சில செலவுகளுக்காகவும் ரூ.25 லட்சம் வரை வெளியிடத்தில் கடன் வாங்கியிருந்தார். நான்கு மாதங்களுக்குமுன் எதிர்பாராத விதமாக என் அப்பா இறந்து விட்டார். என்னுடைய அண்ணன் குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார். அப்பா வாங்கிய கடனை அடைக்க என் அண்ணன் பொறுப்பேற்க மறுக்கிறார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் எனக்கு மன உளைச்சலாக உள்ளது.

என் உறவினர்கள் சிலர் அப்பா வாங்கிய வீட்டை விற்றுக் கடனை அடைத்துவிடுமாறு ஆலோசனை சொல்கின்றனர். ஆனால், அவசரத்துக்கு விற்கப் போனால் ரூ.60 - 65 லட்சம் வரைக்கும்தான் கேட்கிறார்கள். ஆனால், ரூ.75 - 80 லட்சம் வரை மதிப்புடைய சொத்து அது என்பதால் எனக்கு விற்பதற்குத் தயக்கமாக இருக்கிறது.

கடன்காரர்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் குறைந்த விலை என்றாலும் விற்றுவிடலாம் என்கிறார் என் அண்ணன். கொஞ்சம் நிதானமாக அணுகினால் நல்ல விலைக்கு விற்கலாம் என்பது என் கருத்தாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என முடிவு எடுப்பதில் எனக்குக் குழப்பமாக உள்ளது. அப்பா செய்து வந்த பிசினஸை குளோஸ் செய்துவிட்டு, பணமாக்கினால்கூட ரூ.2 லட்சம் வரைதான் கிடைக்கும். இன்னொரு சிக்கல் என்ன என்றால், அப்பா வாங்கிய கடனுக்கு என்னிடம் சரியான தகவல்களோ ஆதாரங்களோ இல்லை. அப்பாவுக்குக் கடன் கொடுத்தவர்கள் காட்டும் ஆதாரங்களையே நம்ப வேண்டிய சூழலில் உள்ளேன். இதற்கிடையில் 2020-ல் நான் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்; அதற்குப் பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” எனக் கவலையுடன் சொன்னார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்த சாரதி.

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

“சந்தோஷ், நீங்கள் இப்போதுதான் வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு பிரச்னையைக் கண்டு வரக்கூடிய பதற்றமும் பயமும் இயல்பானதே. உங்களுக்குக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வாய்ப்பு உங்கள் கண்முன் இருக்கும்போது நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முதலில் பதற்றப்படாதீர்கள். உங்கள் அப்பா யார் யாரிடம் எவ்வளவு கடன், எப்போது, எவ்வளவு வட்டியில் வாங்கினார் என்ற முழுமையான தகவல்கள் உங்களுக்குத் தெரியவில்லை. கடன் கொடுத்தவர்கள் சொல்லும் தகவல்கள், ஆவணங்களின் அடிப்படையில் தான் நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தும் நிலையில் இருக்கிறீர்கள். எனவே, முதலில் கடன் கொடுத்தவர்களிடம் நீங்கள் பேசுங்கள். 12% வட்டியில் கடனைத் திரும்பச் செலுத்துவதாகத் தீர்க்கமாகப் பேசி கால அவகாசம் கேளுங்கள்.

நீங்கள் நெதர்லாந்தில் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆவதால், அங்கு பர்சனல் லோன் வாங்க இயலாது. ஆனால், நீங்கள் பணி புரியும் கம்பெனியில் கடன் கேட்டுப் பாருங்கள். கொடுப்பதற்கான வாய்ப்பிருந்து கொடுத்தால் சுலபமாகக் கடனைச் செலுத்தி விடலாம். ரூ.25 லட்சம் 6.75% வட்டியில் கிடைக்குமானால், ரூ.49 ஆயிரம் இ.எம்.ஐ செலுத்தி ஐந்து வருடங்களில் கம்பெனியில் வாங்கிய கடனை அடைத்துவிட முடியும்.

இந்த வாய்ப்பு அமையாத பட்சத்தில் கடன் கொடுத்தவர் களிடம் பேசி 12% வட்டி மட்டும் ஒரு வருடத்துக்குச் செலுத்தி வரவும். மாதம் ரூ.25 ஆயிரம் என்றால் ஓராண்டுக்கு ரூ.3 லட்சம் வரைத்தான் ஆகும். இந்தத் தொகை போனால் போகட்டும் என்ற மனநிலையிலிருந்து செயல்படுங்கள். ஒரு வருட கால அவகாசத்தைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள வீட்டை விற்க முயற்சி எடுங்கள். ரூ.75 லட்சத்துக்கு விலை படியும்நிலையில் விற்று விடலாம். வீட்டை விற்றுக் கடனை அடைத்ததுபோக உங்களுக்குக் கிடைக்கும் பங்குத் தொகையில் 50 சதவிகிதத்தை நிதி சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளவும். மீதம் 50 சதவிகிதத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துகொள்ளவும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆகும் திட்டமிருந்தால் மட்டும் மனை வாங்கவும். 15 வருடங்கள் வரை வெளிநாட்டில்தான் இருக்கப் போகிறீர்கள் எனில், முழுத் தொகையையும் நிதி சார்ந்த முதலீடுகளில் பிரித்து முதலீடு செய்துகொள்ளவும்.

உங்கள் மாதாந்திர செலவுகள் போக மீதம் ரூ.80 ஆயிரம் உள்ளது. இதில் கடனுக்கான வட்டி ரூ.25 ஆயிரம் போக மீதமுள்ள ரூ.55 ஆயிரத்தில் ரூ.35 ஆயிரத்தை 24 மாதங்களுக்கு முதலீடு செய்து வரவும். 8% வருமானம் கிடைக்கும் என்றாலும் ரூ.9.07 லட்சம் கிடைக்கும். இதைக்கொண்டு உங்கள் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம்.

மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தை அவசர கால நிதியாகச் சேர்த்து வரவும். இந்தத் தொகையை நீங்கள் நெதர்லாந்தில் வேலை மாறும் சூழல் ஏதும் வந்தால், அந்த இடைக்காலத்தைச் சமாளிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வப்போது இன்சென்டிவ்வாகக் கிடைக்கும் தொகையை அப்படியே சேர்த்து வரவும். நீங்கள் இந்தியாவுக்கு வந்துபோகும் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள உதவும்.

கடன் பிரச்னைகள் முடிந்த பிறகு உங்கள் எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கவும்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)

is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

 - கா.முத்துசூரியா

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிப்பவரா..?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் கடன் விவரங்கள், பொருளாதாரச் சூழல், வரவு-செலவு, முதலீட்டு விவரங்களை உங்கள் செல்போன் எண்ணுடன் தெளிவாக எழுதி அனுப்புங்கள். சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய தீர்வுகளைச் சொல்கிறோம்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222

முதலீடு மற்றும் கடன்.... ரகசியம் வேண்டாமே!

“வாழ்க்கையில் யாருக்கு எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எதார்த்தமானது. எதிர்காலத்துக்காகச் செய்யப்படும் முதலீடுகள், குடும்ப நலனுக்காக எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளிட்ட நிதி சார்ந்த விவரங்களை குடும்ப உறுப்பினர்களுக்குத் தெளிவாகச் சொல்லவேண்டியதும், அவற்றுக்கான ஆவணங்களின் இருப்பிடத்தை அவர்களுக்குச் சொல்லி வைப்பதும் மிகவும் அவசியம் என்பது அடிப்படையான விஷயம். இதுமட்டுமல்ல, குடும்பத்தின் தேவைகளுக்காகவோ, பிசினஸ் வளர்ச்சிக்காகவோ வாங்கப்படும் கடன் விவரங்களையும் கட்டாயம் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழும்போது, கடன் கொடுத்தவர்கள் சொல்லும் தகவல்களின் அடிப்படையில்தான் குடும்பத்தினர் கடனைத் திரும்பச் செலுத்தும் நிலை வரக்கூடும். எனவே முதலீடு, காப்பீடு, கடன் விஷயங்களை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லாமல் ரகசியம் காக்க வேண்டாமே.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு