Published:Updated:

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!
பிரீமியம் ஸ்டோரி
கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

Published:Updated:
கைகொடுத்தோம் கேரளாவுக்கு!
பிரீமியம் ஸ்டோரி
கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கஸ்ட் 18, 2018. கொச்சி கடற்படைத் தள மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சபீதா ஜபீலுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அவர் வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தூரமே உள்ள மருத்துவமனைக்கு வர இந்தியக் கடற்படையின் ஹெலிகாப்டர் தேவைப்படும் என்று.  அதேபோல் திருச்சூரைச் சேர்ந்த பத்தே வயது நிரம்பிய நந்தனாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய இந்த வருடப் பிறந்தநாளைப் புது நண்பர்களுடன் நிவாரண முகாமில் கொட்டும் மழைக்கிடையே கொண்டாடுவோம் என்று. ஆம்... ஆகஸ்ட்டில் கேரளா அந்த வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது. 483 உயிரிழப்புகள்; 57,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சீரழிவு; 14.5 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் என்று பெரும் பேரிடரைச் சந்தித்தது கேரளம்.

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

விகடனின் பங்கு

இயற்கைப் பேரிடர் நேரங்களில் களத்தில் நின்று நிலவரங்களை நொடிக்கு நொடி வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, வாசகர்களோடு கைகோத்துக் களப்பணி ஆற்றுவது விகடனின் வழக்கம். கடலூர் ‘தானே நிவாரணம்’, காவிரி டெல்டாவில் ஏற்பட்ட வறட்சியின்போது அங்கிருப்போர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது, சென்னை வெள்ளத்துக்குப் பிறகு ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது, `அறம் செய விரும்பு’ மூலம் அரசுப்பள்ளியை மேம்படுத்துதல் என்று பலவற்றை உங்களுடன் இணைந்து நிகழ்த்தி யிருக்கிறோம்.

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

அதேபோல்தான் பேரிடர்த் துயரில் மூழ்கிய கேரளாவுக்கு  முதல் கட்டமாக விகடன் குழுமம் சார்பாக 10 லட்சத்தை அறிவித்துவிட்டு, வாசகர்களையும்  ‘கேரளாவுக்குக் கை கொடுப்போம்’ என அறிவிப்பு விடுத்து, அழைத்திருந்தோம்.

நெகிழ வைத்த வாசகர்கள்

அறிவிப்பு வந்த புத்தகம் வெளியான அன்று காலை 9 மணிக்கே வந்தார் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த திரு. ப.ஆனந்தராஜ். “இப்படியான அறிவிப்பு எப்ப ஆனந்தவிகடன்ல வந்தாலும் என்னால முடிஞ்சதைச் செஞ்சிருக்கேன். விகடன்ல கொடுத்தா அது கரெக்டா சேர வேண்டியவங்களுக்குப் போய்ச் சேரும்னு எங்க அப்பா சொல்லுவார். இந்தாங்க என்னால முடிந்த உதவி” என 2000 ரூபாயைக் கொடுத்தார். ரசீது எண் 01-ஐக் கொடுத்து `நீங்கள்தான் முதல் ஆள்’ என்றதும் நெகிழ்ந்தார்.

அதன்பிறகு எங்களை பிரமிக்க வைத்தார்கள் வாசகர்கள். நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், காசோலைகளாகவும் தங்களால் இயன்ற பண உதவிகளை அனுப்பிவைத்தார்கள். தன் ஒரு மாத பென்ஷன் பணத்தைக் காசோலையாக அளித்த ஒருவர் ‘இன்னைக்கே எடுத்துருங்க சார். ஏடிஎம் கார்டு என் பையன்கிட்ட இருக்கு’ என்றார் சிரித்தபடி.

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

தஞ்சாவூர், பார்வைச் சவால் உள்ளவர்களுக்கான அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், தாங்கள் திரட்டிய ரூபாய் 5640-ஐ வழங்கினார்கள். அப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் பரமசிவம், ``ண்ணா, ஒண்ணு சொல்லணும்ணா... எல்லாருமே கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தோம். ஆனா, என் க்ளாஸ்மேட் அமுதபாரதியோட அம்மா புற்றுநோய்க்கு ஆஸ்பத்திரி போய்ட்டிருக்காங் கண்ணா. அவங்கம்மாக்கு மருந்து வாங்க வெச்சிருந்த பணத்தையும் கொடுத்துச்சுண்ணா” என்றான். நெகிழ்ந்து உறைந்தோம் நாங்கள்.

பெரம்பூரில் உள்ள CTTE கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தாங்கள் சேகரித்த ரூபாய் ஐம்பதாயிரத்தை விகடன் அலுவலகத்துக்கு நேரில் வந்து வழங்கினார்கள். அந்தக் கல்லூரியின் மாணவ சங்கத் தலைவி பெலிசியா, “கேரள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று  3500 மாணவிகளும் முடிவெடுத்து எங்களாலான பங்கைக் கொடுத்தோம். முன்னாள் மாணவிகளையும் தொடர்புகொண்டு நிதி திரட்டினோம். பத்து ரூபாயில் ஆரம்பித்த முயற்சி, 50,000-த்தைத் தொட்டது” என்றார் பெருமிதம் ததும்ப.

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

சேர்த்தோம் கேரளாவில்

விகடன் வாசகர்கள் மற்றும் விகடன் அலுவலக நிதி, விகடன் ஊழியர்கள் வழங்கிய நிவாரண நிதி... மொத்தம் 41,38,393 ரூபாய்க்கான காசோலையை ஜூனியர் விகடன் ஆசிரியர் ச.அறிவழகன், 3.10.2018 அன்று காலை கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார்.

தமிழகம் ஏற்கெனவே செய்திருக்கும் உதவிகளை அன்போடு பகிர்ந்துகொண்ட முதல்வர் பினராயி விஜயன், ``செய்தி நிறுவனமான விகடனும் அதன் ஊழியர்களும், வாசகர்களும் செய்திருக்கும் உதவி மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் நன்றி’’ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

அவருடைய பாராட்டுகள் அனைத்தும் என்றும் எப்போதும் எங்களிடம் நம்பிக்கை செலுத்தித் தோளோடு தோள்நிற்கும் வாசகர்களாகிய உங்களுக்கே சேரும்.

இணைந்து பயணிப்போம்.

விகடன் டீம் - படங்கள்: ம.அரவிந்த், ரா.ராம்குமார்