Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

த்ரில் தொடர் - 32

வாஷிங்டன் டி.சி

ஏட்ரியனுக்கு கடைசியாக அதிர்ஷ்டம் அடித்தது. ட்வீட் கோட்டில் இருந்த ஒருவனின் முகம் ஸ்கேன்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

டேட்டாபேஸில் இருப்பது தெரிய வந்தது. உமர் பாரூக், இரண்டாம் தலைமுறை அமெரிக்கர். நியூயார்க்கில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். மூன்று வருடங்களுக்குமுன் அவனுடைய அப்பா இறந்தவுடன் அவர் செய்த தொழிலைத் தொடர்ந்து செய்கிறான்.

அவனைக் கைது செய்ய இந்த வீடியோ மட்டும் போதாது, ஆனால், மேற்கொண்டு விசாரணை செய்ய இது போதுமானது. கோனே ஐலேண்டின் காபி ஷாப்புக்குச் சென்றதாக உமர் ஒப்புக்கொண்டான். அப்போது அங்கிருந்த நிக்கி டானை மறைந்த செனட்டரின் மனைவி எனத் தெரிந்துகொண்டு அவரிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அவரை கார் இருக்கும் இடம் வரை கூட்டிச் சென்றது ஒரு மரியாதை நிமித்தம்தான் என்றும் சொன்னான். வீடியோவில் ஏ.டி.எம் கொள்ளையர்கள் இவனிடம் ஏதோ சொல்வதுபோல் இருப்பது பற்றியும், விறைப்பாக இருப்பது ஏன் எனவும் கேட்டபோது, பயம்தான் காரணம் என்றான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

எல்லாமே ஒரு உபயோக மில்லாத முடிவை நோக்கியே நகருவதாக நினைத்தார் ஏட்ரியன்.  தனது வழிகாட்டியின் உதவியைக் கேட்க, அவருடைய வீட்டுக் கதவை மீண்டும் தட்டினார்.

‘`ஏட்ரியன்?” - டான் (Dan) புன்னகைத்துக்கொண்டே கதவைத் திறக்க, ஏட்ரியன் உள்ளே நுழைந்தார். டான் அவருடைய வழிகாட்டி, ஓர் அறிவுஜீவி. எஃப்.பி.ஐ-யில்  இரண்டாவது நிலையில் இருக்க வேண்டியவர், அரசியல் சதிகளால் ஒதுக்கப்பட்டார்.  டானினால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், எஃப்.பி.ஐ-யில் வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் அவர் இன்னும் சி.ஆர்.ஆர்.யு-ன் (CRRU) தலைமைப் பொறுப்பிலிருக்கிறார்.

‘`டான், காட்டன் ட்ரெய்லை எப்படிக் கட்டவிழ்ப்பது? இது பல மர்மங்களை அவிழ்ப்பதற்கான திறவுகோல்’’ என்றார்.

‘`அதைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது.  காட்டன் ட்ரெய்லை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எஃப்.பி.ஐ என்ன செய்கிறது என்பது தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு அதை எப்படிக் கொண்டுசெல்வது என எந்த யோசனையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் தவறான `லீடு’களைத் துரத்திக் கொண்டி ருக்கிறார்கள். நீங்கள் தவறான விஷயங்களைத் துரத்திக் கொண்டிருப்பதை நிறுத்தும்போது, அது சரியான விஷயங்களுக்கு வாய்ப்பளிக்கும்’’ என்றார்.

பேச்சைத் தொடர்ந்த டான், ‘‘காட்டன் ட்ரெய்ல் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது, அதை எப்படி ப்ரேக் செய்வது, அதனுடைய விற்பனையாளர் களையும், வாடிக்கையாளர் களையும் எப்படிக் கண்டு பிடிப்பது, எப்படிப் பணம் செலுத்துவதையும், பரிவர்த்தனைகள் நடப்பதையும் தடுப்பது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். காட்டன் ட்ரெய்ல் ஏதாவது தவறு செய்யாதா எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபரேஷனுக்கு நான் பொறுப்பேற்றிருந்தால், நான் இந்த விஷயத்தை வேறுவிதமாகக் கையாண்டிருப்பேன்’’ என்றார். 

‘`அது எப்படியிருந்திருக்கும்?”

‘`நான் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்திருப்பேன். காட்டன் ட்ரெய்ல் ஒரு வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது அல்லது அப்போதுதான் இது கவனத்திற்கு வந்தது. இது வாய்மொழியாகவே பரவலாகத் தெரிய ஆரம்பித்தது என அனுமானித்துக் கொண்டாலும், யாரோ ஒருவர் காட்டன் ட்ரெய்லை மார்க்கெட்டிங் செய்திருப்பார். அதுதான் உங்கள் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்க வேண்டும்.’’

ஏட்ரியனுக்கு குழப்பமாக இருந்தது. ‘`எங்கேயிருந்து ஆராயத் தொடங்குவது?”

‘`இங்கே பாருங்கள் ஏட்ரியன், காட்டன் ட்ரெய்லை ஆரம்பித்த நபர் மெய்யான உலகிலிருந்து தான் (Vertual world) வாடிக்கை யாளர்களை அதாவது, உங்களை அல்லது என்னைப் போன்ற வர்களைத் தேடியிருக்க வேண்டும். சாதாரணமாக இவர்கள் யாரும் அநாமதேயமான டார் (TOR) இணையத்துக்குச் சென்றிருக்க மாட்டார்கள். காட்டன் ட்ரெய்ல் என்றால் என்ன என்பதை நமக்கு அதை ஆரம்பித்தவர்கள் தெரிய வைத்திருந்தால்தான் யாரும் அதிலிருந்து பொருள்களை வாங்க முடியும். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இணைய தளத்தில் காட்டன் ட்ரெய்லைத் தொடங்கியவர்கள் எப்படி புரமோட் செய்தார்கள் என்பதுதான். 

‘`ஆமாம்!” என அதை ஆமோதித்த ஏட்ரியன், ‘`அந்தத் தகவல் அதை யார் ஆரம்பித்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவும்’’ என்றார்.

‘`தோற்றுவித்தவர்கள் இல்லை யென்றாலும், அதில் விருப்பம் காட்டுபவர்களைக் கண்டிப்பாகக் கண்டுபிடிக்க உதவும். அது எளிதான வேலையில்லை. நீங்கள் `வண்டி’க் கணக்கில் டேட்டா, இன்டர்நெட் மூலம் கிடைக்கும் தகவல்கள், ஆன் லைன் மன்றங்கள், பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் வெப்பேஜ்கள், வீடியோக்களை  ஆராய வேண்டும்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

‘`உங்களுக்கு இதற்கு எவ்வளவு காலம் ஆகும், டான்?”

டான் சிரித்துக்கொண்டே, ‘`என்னால் சொல்ல முடியாது. இதற்கு சில மணி நேரங்கள், ஒரு நாள், ஒரு மாதம் அல்லது ஏன் ஒரு வருடம்கூட ஆகலாம். நான் அதிர்ஷ்டக்காரன் இல்லையெனில் அல்லது இதை ஆரம்பித்தவர்கள் அனைத்தையும் மறைத்திருக்கும் பட்சத்தில் ஒருவேளை முடியாமலும் போகலாம். ஒரு வாரத்தில் முடிக்கும் நோக்கத்தில் நான் இதை முயற்சி செய்துபார்க்கிறேன். ஏதேனும் முன்னேற்றம் இருந்தால்  உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

டானுடன் விவாதம் செய்வதில் எந்தப் பலனும் இல்லை. எப்படி இருந்தாலும் அவர் ஏட்ரியனுக்கு உதவுகிறார் என்பதே பெரிய விஷயம்.

மும்பை

‘`தான்யா, நாம் டாப் டென் பட்டியலில் இருக்கிறோம். அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திற்குள் டவுன்ஸ்விலே மொபைல் ஆப் ஆண்ட்ராய்டு ஸ்டோரில் இப்போது ஒன்பதாவது நிலையில் இருக்கிறது. இலவசத் தரவிறக்கதிற்கான காலஅவகாசம் நாளையோடு முடிகிறது’’ என தான்யா வருணை போனில் அழைத்தபோது உணர்ச்சி வேகத்தில் அவளிடம் கூறினான்.

‘`இது எப்படி சாத்தியமாயிற்று, வருண்?”

‘`இது ஒரு நல்ல கேம் என்று நான் நம்பினேன்!”

‘‘யெஸ், வேறெந்த கேமும் நன்றாக இல்லாதபோது எல்லோரும் உன்னுடைய கேமை தரவிறக்கம் செய்திருப்பார்கள். நீ ஒரு புத்திசாலி, ஆண்ட்ராய்டு ஸ்டோர் இன்னும் ஏன் உன்னைக் கண்டுபிடிக்கவில்லை? உன்னைப் பற்றி எனக்குத் தெரியும், வருண். நீ எப்படியாவது வெற்றி பெற நினைக்கிறாய். இதை நீ `ஃபிக்ஸ்’ பண்ணியிருப்பேன்னு நான் நினைக்கிறேன்’’ என்றாள்.

வருண் சிரித்தான். ‘`இந்த இலவச ஆஃபர் முடிவதற்குமுன்பே இது டாப் டென்னில் இடம்பெற வேண்டுமென  விரும்பினேன். அதன் விளைவாக, நாளை முதல், நாம் நம்முடைய ஆப்புக்கு 1.99 டாலர் என விலை நிர்ணயிக்கலாம்.

ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்டோர்ஸ் ஸ்மார்ட்டாக இருந்தாலும், நம் தரவிறக்க பாட்ஸ் (bots) சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், யாராலும் அவர்கள் உண்மையான வாடிக்கையாளர்கள் இல்லை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. ஆனாலும், ஸ்டோரிலிருந்து ஆப்பைத் தரவிறக்கம் செய்வதற்கு கம்ப்யூட்டர் கோட் புரோக்ராம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு நாளுக்கு 40,000 தடவை தரவிறக்கம் செய்யப்படும்போது அது இலவச ஆப் வரிசை கிரமத்தில் டாப் மூன்று என்கிற நிலைக்கு இட்டுச் செல்லும். நாம் வடிவமைத்திருக்கும் பாட்ஸ் தானாக நாளொன்றுக்கு 25,000 தடவை தரவிறக்கம் செய்யும். 10,000 உண்மையான வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்தால் அது ஒரு நாளைக்கு 35,000 தரவிறக்கம் என்ற இலக்கை எட்டும். `அதிகமாக தரவிறக்கம்’ செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் அதிக விளம்பரம் நமக்குக் கிடைக்கும். நமது ஆப்புக்குப் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கும்போது அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்க இந்த பப்ளிசிட்டி உதவும்’’ என்றான்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

‘`இந்த வழிமுறை நேர்மையானதா வருண்?”

வருண் சுற்றிப் பார்த்தான். சந்தீப் அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். ‘`நீ வாடிக்கையாளர்களை மட்டும் ஏமாற்றவில்லை, உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய். வருண், நாம் இந்தத் தொழிலை மிகவும் வெளிப்படையாக நடத்தி வருகிறோம். உன் அப்பாகூட புகழுக்குக் காப்பீடு எதுவும் இல்லை என எப்போதும் கூறுவார்.’’

வருண், தான்யாவிடம் பிறகு அழைப்பதாகச் சொல்லி போனை வைத் தான். ‘‘உண்மைதான் சார், ஆனால், நாம் இப்போதுதான் ஒரு ஆப்பை இந்த அளவுக்கு உருவாக்கியிருக்கிறோம். நாம் ரேட்டிங் ஸ்கேலை உயர்த்தவில்லையெனில், மக்களுக்கு எப்படித் தெரியவரும்? முதல் வாரத்தில் வாய்மொழிச் செய்தி மூலமே நாம் டாப் டென்னில் இடம்பெற்றிருக்கிறோம்! ஆப் ஸ்டோர் அதனுடைய முகப்புப் பக்கத்தில் இதை புரமோட் செய்யும். அதனால் அதிக மக்கள் பார்ப்பார்கள், அதிக மக்கள் வாங்குவார்கள்.”

‘`ஆனால், உன்னுடைய ஆப்பை நீயே வாங்குவது..?” சந்தீப் தனது கண்களை சுழலவிட்டுக் கொண்டே கேட்டார். ‘`இது முட்டாள்தனமாகப் படவில்லையா?” அவருக்குக் கோபம் இருந்தாலும், ஆதித்யாவின் மகனுடன் பேசுகிறோம் என்பதால் அமைதியாகப் பேசினார்.

‘`ஆமாம். இந்த மொபைல் ஆப்பை நாம் எந்த விளம்பரமும் இல்லாமல் வடிவமைத்திருப்பதால், வருமானத்துக்கு ஒரே வழி அதிகமானவர்கள் இதை வாங்குவதுதான். ‘`நான் விளம்பரங்கள் மூலம் இந்த ஆப்பை சந்தைப்படுத்த வேண்டு மெனில், அதற்கான மார்க்கெட்டிங் பட்ஜெட் 1,00,000 டாலர் ஆகும். அதற்குப் பதிலாக, 75,000 டாலர் செலவு செய்து பாட்ஸை வடிவமைத்து அதை வாங்குமாறு செய்திருக்கிறேன். இது சந்தைப்படுத்த வித்தியாசமான வழிமுறை, அவ்வளவுதான்’’ என்றான்.

‘`நான் இதை ஆதித்யா விடம் சொல்ல வேண்டும். அவர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

சந்தீப் அங்கிருந்து சென்று விட்டார். அவர் அங்கிருந்து நகர்ந்தவுடன் தனக்குள் `கேடு கெட்டவன்’ என்று சொல்லிக்கொண்டான். `டாட் எப்படி இவருடன் இணக்கமாகப்போகிறார் என்று தெரியவில்லையே’ என வியந்தான்.

அவன் வருத்தத்துடன் மீண்டும் தான்யாவை அழைத்தான். அவள் முற்றிலும் வேறு விஷயத்துக்கு மாறிவிட்டிருந்ததுடன், மிகவும் உற்சாகமாக இருந்தாள்.

‘`வருண்!” என உற்சாகத்துடன் அழைத்த அவள், ‘`நீ டி.வி பார்த்தாயா?” எனக் கேட்டாள்.

‘`இல்லை, ஸ்வீட்ஹார்ட், நான் பார்க்கவில்லை. நான் ஆபிஸில் இருக்கிறேன்.’’

‘`நிதி மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்’’ என்றாள்.

 (பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன்,(GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

ஓவியங்கள்: ராஜன்

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்