Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

ன்.ஒய்.ஐ.பி-யின் மேல்மட்ட அதிகாரிகள் எல்லோரையும், மாட் உள்பட, சி.பி.ஐ விசாரணை செய்தது.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

மாள்விகாவின் மின்னஞ்சல் அல்லது ஃபோன் பதிவுகளிலிருந்து ஆட்சேபனைக்குரியதாக இருக்கும் தகவல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. நிதி மந்திரியும், தான் தவறெதுவும் செய்யவில்லை என்கிற தன் வாதத்தில் உறுதியாக இருந்ததுடன், அவர் மீது தவறு இருந்தால் அதை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால்விட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

சுவாமி தனது நிலையை மிகவும் தெளிவாகச் சொன்னார். ஒரு வங்கியாளராக, மாள்விகா பற்றி அவருக்கு என்ன தெரியும் எனக் கேட்டபோது அவர், அந்நியச் செலாவணி விஷயத்தில் நடந்த பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்ததாகக் கூறியதுடன், நிதி மந்திரியின் ஈடுபாடு, நாயுடுவின் தன்னிலை விளக்கம்…. என அனைத்தையும் கூறினார். மாள்விகாவை ஒரு பகடைக்காயாக மந்திரி பயன்படுத்தியிருக்கிறார் என மிகவும் உறுதியாகச் சொன்னார். மாள்விகாவின் இறப்பில் மந்திரி சம்பந்தப்பட்டிருப்பார் என உறுதியாக நிரூபணமாகாவிட்டாலும், அதற்கான நோக்கம் இருந்திருக்கக்கூடும் எனச் சந்தேகப்பட சி.பி.ஐ-க்கு இது உதவியது.

மற்றவர்களின் விசாரணையெல்லாம் ஏறக்குறைய முப்பது நிமிடங்களில் முடிந்துவிட்ட நிலையில், சுவாமியின் விசாரணை மட்டும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீட்டித்தது. அவர் கூறிய ஒவ்வொன்றுக்கும் அவரிடம் ஆவணச் சான்று இருந்தது. சி.பி.ஐ விசாரணை செய்தவர்களிலேயே சுவாமி யிடம் செய்த விசாரணையின்போதுதான் அதிக விஷயங்கள் தெரிய வந்ததுடன்  மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

 ***

அன்று மாலை, கல்பனா மட்டும் வீட்டில் தனியாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது, அமைதியைக் குலைக்கும் விதத்தில் ஃபோன் மணி அடித்தது.

‘`மிஸஸ். கல்பனா சுவாமிநாதன்?’’ என மறுமுனையிலிருந்த குரல் கேட்டது.

‘`ஸ்பீக்கிங்’’ என அவர் பதிலளித்தார்.

‘`விபத்தொன்று நடந்திருக்கிறது’’ என மறுமுனையிலிருந்த குரல் கூறியது.

***

யு.எஸ்.ஏ

மறுவாரத்தில் மேலும் 18 லேப்டாப்கள் வெடித்துவிட்டதாகத் தகவல்கள் வந்தன. அதிர்ஷ்டவசமாக, அனைத்து லேப்டாப் களும் வெடிக்கும்போது ஸ்லீப்பிங் மோடில் இருந்ததால், அதை உபயோகிப்பாளர்களுக்கு சீரியாக எதுவும் பாதிப்பில்லை.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

சிறியதாக ஆரம்பித்த பிரச்னை, இரண்டு வாரங்களுக்குள் சுமார் ஆயிரம் புகார்களைத் தொட்டது. அதுவரை, இது வாடிக்கை யாளர்களின் `ஓவர் ரியாக்‌ஷன்’ என அசட்டையாக இருந்துவந்தது டெல் நிறுவனம். உலகளவில் புகார்கள் கிளம்பி னாலும், ஒவ்வொரு தேசத்தைப் பொருத்த மட்டில் புகார்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், பிரச்னை எந்த அளவுக்குப் பெரிது என்பதைத் தீர்மானிக்க முடிய வில்லை. மாதந்திர வாடிக்கையாளர் பரிசீலனைக் கூட்டத்தின்போது உலகெங்கிலும் எழுந்த புகார்களின் எண்ணிக்கையை எக்ஸிக்யூட்டிவ் கமிட்டியில் குறிப்பிடப்பட்டபோது பதற்றம் ஆரம்பமானது. சேவை சம்பந்தப்பட்ட அறிக்கையும் மோசமாக இருந்தது.

கணினிகள் உபயோகத்தில் இல்லாத போதுகூட சூடாவது மிகப் பெரிய பிரச்னை யாக உருவெடுத்தது. டெல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பிரச்னையாக ஆரம்பித்த இந்த விவகாரம், அனைத்து லேப்டாப் தயாரிப்பாளர்களின் பிரச்னையாக மாறியது. எங்கோ மிகவும் கடுமையாகத் தவறு நடந்திருக்கிறது.

***

மும்பை

கல்பனாவுக்குத் தலையில் இடியிறங்கியது போல இருந்தது. என்.ஒய்.ஐ.பி-யில் அனைவரும் செய்தியைக் கேட்டு திகைப் படைந்தனர். முதலில், மாள்விகா தற்கொலை செய்துகொண்டார். இப்போது சுவாமி ஹிட் -அண்ட்-ரன் விபத்தில் மரணமடைந்திருக் கிறார். அப்படித்தான் காவல் துறையும் தெரியாத ஒருவரின் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை சந்தேகங் களையெல்லாம் தெளிவுபடுத்தியது. விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணம்தான் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ட்ராஃபிக் சிக்னலில் காத்திருந்த சுவாமியின் கார்மீது கட்டுப் பாட்டை இழந்த லாரி ஒன்று மோதியதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினார்கள்.

சுவாமியின் எதிர்பாராத மரணச் செய்தி கல்பனாவை நிலைகுலையச் செய்தது. இது அவருடைய குடும்பத்துக்கு கடவுள் கொடுத்த கொடூரமான தண்டனை. அவர் சுவாமியின் அம்மாவை நினைத்துக் கவலைப்பட்டார், செய்தியைக் கேட்டவுடனேயே அவர் ஓர் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.

காவல் துறையினருக்கு சுவாமியின் மரணத்துக்குமுன் நடந்த நிகழ்வுகளை யெல்லாம் ஒன்றிணைப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. நிகழ்வைப் பார்த்தவர்கள், சுவாமியின் சகபணியாளர்கள், சுவாமியின் குடும்பத்தினர் எனப் பலருடனும் நடத்திய நீண்ட உரையாடல்களுக்குப் பின் காவல் துறையினர், அந்த துரதிர்ஷ்டவசமான மாலையில் என்ன நடந்தது என்று அவர்கள் ஒரு அனுமானத்துக்கு வந்தனர்.
 
அன்றைக்கு, சுவாமி கல்பனாவே போனில் அழைத்து வங்கியில் முக்கியமான வேலை ஒன்று இருப்பதாகவும், அதை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குமுன் `மாட்’டைப் பார்த்துவிட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். சி.பி.ஐ விசாரணையின்போது அவர் கூறியதையெல்லாம் `மாட்’டிடம் சொல்ல வேண்டும் என நினைத் திருக்கிறார். அப்போது நேரம் மதியம் ஒரு மணி. அவர் `மாட்’ டைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது அவர் லைனில் கிடைக்கவில்லை.

சி.பி.ஐ விசாரணை சுவாமியைக் களைப்படையச் செய்திருந்தது. மனரீதியில் அவர் மிகவும் சோர்வாக இருந்திருக் கிறார். அத்துடன்,  அன்றைக்குத் தான் அலுவலகத்தில் அவரது கடைசி நாள். எனவே, அவர் அலுவலகத்தில் அவர் சம்பந்தப் பட்ட பொருள்களையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டுமெனத் திட்டமிட்டிருக்கிறார். அப்போதுதான் அவரை ஆதித்யா அழைத்து விசாரணை பற்றி விசாரித்திருக் கிறார். சுவாமி அவரிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு, இரவு சந்திக்கும் போது விளக்கமாகக் கூறுவதாகச் சொல்லி யிருக்கிறார். `பிசினஸ் சம்மிட்’டுக்காக  டெல்லி சென்ற ஆதித்யா, மாலை விமானத்தைப் பிடித்தால் இரவு சுவாமியைச் சந்திக்க முடியும் என நினைத்திருந்தார்.

ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. இடைப்பட்ட சில மணி நேரங்களில் வேகமாக வந்த லாரி சுவாமியின் காரோடு மோதியதில் அவர் உயிரிழந்திருக்கிறார்.  லாரியின் டிரைவர், மக்களின் கோபத்துக்கு ஆளாகக்கூடும் என்றெண்ணி விபத்து நடந்த இடத்திலிருந்து ஓடிவிட்டாலும் அன்று மாலை சாந்தா குரூஸ் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

ஆதித்யா அன்றிரவு தன்னால் முடிந்த மட்டும் கல்பனாவுக்கும், சுவாமியின் அம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிச் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். சந்தீப்பும் நடாஷாவும்கூட அங்கே இருந்தார்கள்.
அவர்கள் களைப்பு நீங்குவதற்காக வெளியே வந்தபோது சந்தீப்பிடம், ‘`சுவாமியின் மரணம் விபத்துபோல எனக்குத் தெரியவில்லை’’ என்றார் ஆதித்யா. மேலும், ‘`விசாரணையின்போது வெளிப்படையாக அவர் சொல்லியது இந்த மரணத்துக்கு வழி வகுத்திருக்க முடியும்?’’ என்றார்.

சிபிஐ, அவர் என்ன சொன்னார் என்கிற முழுவிவரத்தைக் கூறவில்லை. ஆனால், அவர் பெரும் விளைவை ஏற்படுத்துகிற மாதிரி அல்லது இந்த வழக்கு சம்பந்தமாக எதையும் குறிப்பாகச் சொல்லவில்லை’' என்று சொன்னதாக சந்தீப் கூறினார்.

ஆதித்யா, ‘`அவர்களிடம் அவர் என்ன சொன்னார் என்பதை என்னிடம் சுருக்க மாகக் கூறினார், அந்த விஷயங்களை `ஒண்ணுமில்லை’ என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது” என்றதுடன், இதன் மூலாதாரம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க என்ன  செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் நான் செய்வேன்’' என்றும் சொன்னார்.

வாஷிங்டன் DC

‘`க்ளோரியாவின் உறவினர்கள் பற்றி எந்தத் தடயமும் இல்லை.’’

டோனி இதைச் சொன்னபோது டானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘`க்ளோரியாவும், அவளது அம்மாவும் கடந்த செப்டம்பர் மாதம் சென்றதாகச் சொன்னீர்கள், இல்லையா?”

‘`ஆமாம், அப்படித்தான் க்ளோரியா என்னிடம் சொன்னாள். நான் குடியேற்றம் சம்பந்தப்பட்ட டேட்டாவைப் பார்த்தபோது, அவர்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் லண்டன் போனதற்கான பதிவு இருந்தது. லண்டனிலும், ஆம்ஸ்டர்டாமிலும் இருக்கும் நமது அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்.அல் (El Al) பேரழிவில் உயிரிழந்த பலருடைய உறவினர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் க்ளோரியாவின் உறவினர்கள் இல்லை’’ என்றார்.

‘`கொஞ்சம் பொறுங்கள்!’’ என ஏட்ரியன் சொல்லிவிட்டு டேபிளை நோக்கிச் சென்று அங்கிருந்த செல்போனை எடுத்து ஒரு எண்ணுக்கு டயல் செய்தார்.

‘`பான் அமெரிக்கன் இன்ஷூரன்ஸ், எப்படி நான் உங்களுக்கு உதவ முடியும்?”

ஏட்ரியன் சில நிமிடங்கள் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அவர் டானைப் பார்த்து, ‘`நாம் கொஞ்ச நேரம் காத்திருப்போம்’’ என்றார்.

ஐந்து நிமிடத்தில் ஏட்ரியனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சில நிமிடங் களுக்குப் பிறகு இணைப்பைத் துண்டித்தபின் அவருடைய முகத்தில் குழப்பம் தெரிந்தது. ‘`இது வழக்கமான விஷயமாக இல்லை. வித்தியாசமாக இருக்கிறது.’'

‘`நாம் மைக்கிடம் பேசலாமா? ஒருவேளை, அவர் இதுபற்றி சொல்லக்கூடும்.’’

டான் கம்ப்யூட்டர் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றார். `எனக்கு எல்லாம் தெரியும்’ என்பது போன்ற ஒரு தோரணை அவரிடமிருந்தது. ‘`நாம் நாளை காலை வரை காத்திருப்போம். மைக்கிடம் நாம் என்ன பேச வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்’' என்று சொல்லிக் கொண்டே லாக்-இன் செய்து `க்ளாசிஃபைட்’ ஆவணங்களைப் பார்க்கத் தொடங்கினார்.

அவர் பிசியாக இருப்பதைப் பார்த்த ஏட்ரியன், மறுநாள் காலை வரலாம் என முடிவு செய்துவிட்டு, டானிடம் குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38

அவர் ஒரு மைல் தூரம்கூட பயணித்திருக்க மாட்டார், அதற்குள் போன் அடித்தது.  அவர் போனைப் பார்த்தார், அதன்பின் டோனியைப் பார்த்தார். ‘`இப்போது ஏன் அவர் கூப்பிடுகிறார்?”
‘`ஏட்ரியன், உடனே திரும்பி வாருங்கள்!'' டான் உற்சாகத்துடன் அழைத்தார்.

அங்கிருந்து அப்படியே திரும்பியவர் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார். ஏட்ரியன் யூடர்ன் செய்த வேகத்தில் டோனியின் தலை கார் விண்டோவில் முட்டியது.

‘`ஹே”!

‘`ஹேங் ஆன்!” ஏட்ரியன் கத்திக்கொண்டே காரை ஒருநிலைக்குக் கொண்டு வந்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் `ஸ்கீரிச்’ என்ற சத்தத்துடன் டான் வீட்டுக்கு முன்பு கார் நின்றது. காரில் இருந்த இருவரும் தாவி உள்ளே செல்ல, கதவு திறந்திருந்தது.

டான் அவரது கம்ப்யூட்டரில் மூழ்கி யிருந்தார். அவர் மிகவும் கவனத்துடன் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு வரைபடம். அவர்கள் நடந்துவரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.
‘`ஆல்டாய்ட்ஸ், இன்னுமொரு முறை லாக்-இன் செய்திருக்கிறார். நேற்றிரவு. இப்போதுதான் அது குறித்த விவரம் கிடைத்தது.''

‘`எங்கே?”

‘`பிட்காயின் குறியீட்டில் இழந்துவிட்ட எண்களை மீட்பதற்கு உதவி கேட்டு செய்த நிலைத்தகவல்.’'

அவர் ஏட்ரியனிடம் ஒரு காகிதத்தை நீட்டினார். அது பிட்காயின் ஓஆர்ஜி என்கிற தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரின்ட் அவுட். ‘`எனக்கொரு பிரச்னை. நான் என்னுடைய பிட்காயின் பிரைவேட் கீயின் சில எண்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்தேன். அதைக் கரையான் அரித்து விட்டது. எனவே, என்னிடம் இருப்பது குப்பைதான். இன்னொரு இடத்தில் பாதுகாத்து வைத்திருக்கும் மீதமிருக்கும் எண்களிலிருந்து கீயை மறுகட்டமைப்பு செய்ய முடியுமா? இது சம்பந்தமாக எந்த உதவி செய்தாலும் அது பாராட்டுக்குரியது'' என்றிருந்தது அந்த நிலைத்தகவல்.

மும்பை

சேதம் விளைவித்ததற்காக ஐந்து மில்லியன் டாலர் நஷ்டஈடு வேண்டி லீகல் நோட்டீஸ் அனுப்பியபிறகு மாட் மெட்ஸ்கர், எடியோஸின் சேவையை முறித்துக்கொள்வ தாக ஆதித்யாவுக்குக் கடிதம் அனுப்பி யிருந்தார். வழக்கமான சூழ்நிலையில் அவர் சுவாமியின் நோட்டீஸ் காலம் முடியும் வரை காத்திருந்திருப்பார். ஆனால், சுவாமி இறந்து விட்ட நிலையில், அதற்கெல்லாம் அவகாசம் இல்லை என நினைத்திருக்கக்கூடும்.

சேவையை முறித்துக்கொள்வதாக அனுப்பிய நோட்டீஸில் அதற்கான வரை முறைகள் விளக்கத்துடன் குறிப்பிடப்பட்டிருந் தன. ஆதித்யாவுக்கு இந்தச் செய்தி பேரிடியாக இருந்தது. என்.ஒய்.ஐ.பி ஏற்கெனவே லீகல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது, ஆதித்யா எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட லாம் என நினைத்திருந்தார். இப்போது, அதற்கான வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆதித்யா, வங்கியிலிருந்து விலகித் தனியாகத் தொழில் தொடங்கியபோது எடியாஸுக்குக் கிடைத்த முதல் வாடிக்கை யாளர் என்.ஒய்.ஐ.பி. அந்த வங்கியோடு வைத்திருந்த உறவின் மூலம் தனது தொழிலை வளர்த்து வந்தார். இந்த ஒப்பந்த முறிவைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டார்.
 
என்.ஒய்.ஐ.பி நியூயார்க்கில் வேலை பார்த்துவந்த தன்னுடைய பழைய நண்பர் களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இருப்பினும், நிலவிவரும் சூழ்நிலை, பிரைவசி மற்றும் தரவு ஒருங்கிணைவு சம்பந்தப்பட்ட பிரச்னையெல்லாம் பார்க்கும்போது எதுவும் `கூடி’ வராது என்பது அவருக்குத் தெரியும்.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், ஓவியங்கள்: ராஜன்