Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

கூப்பர்டீனோ/மும்பை

லிபோர்னியாவில் இருக்கும் கூப்பர்டீனோ வில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்பது முன்னெப்போதும் இல்லாதது. ஆப்பிள் இன்க், அதனுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றத்தை அறிவித்தது. அதே தினத்தில், டான் மலோய் கையெழுத்திட்ட செய்தி குறிப்பொன்றை எஃப்.பி.ஐ வெளியிட்டது. டெல் நிறுவனம் கேட்டுக்கொண்டதற் கிணங்க யு.எஸ்-ன் மேற்குக் கடற்கரையோரப் பகுதி களில் வெடித்த இரண்டு டஜனுக்கும் அதிகமான கம்ப்யூட்டர்கள் பற்றியும், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற கம்ப்யூட்டர்கள் குறித்தும் எஃப்.பி.ஐ புலன்விசாரணை செய்யவிருக்கிறது.இந்த புலன் விசாரணை எஃப்.பி.ஐ-யின் Crypanalysis and Racketeering Records Unit–ன் தலைவரான டான் மலோயின் தலைமையில் நடைபெறும்.  

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

இதை மொபைல் போனில் பார்த்த ஏட்ரியன் ஆச்சர்யமடைந்தார். இது என்னவென்று அவரால் புரிந்துகொள்ள முடியாததால் டானை அழைத்து “இது என்ன கதை, டான்?” எனக் கேட்டார்.

“செய்தி அறிக்கையைப் பார்த்துவிட்டீர்களா?”

“ஆமாம். ஆனால் அது எதைப் பற்றியது? அதுபற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.”

“அந்த செய்தி அறிக்கையில் என்ன குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பது முக்கியமில்லை. அதில் என்ன குறிப்பிடப்படவில்லை என்பதுதான் புருவத்தை உயர்த்தவைக்கும். நான் டின் குக்-கிடம் பேசினேன்.”

“ஆப்பிள் சி.இ.ஓ?”

“ஆமாம். இந்த ஓவர் ஹீட்டிங் பிரச்னையை சமாளிப்பதற்காக ஆப்பிள் புதிதாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது.”

“இதற்கும் அதற்குமான தொடர்பு என்ன?”

“சிஸ்டத்தில் ஏதோ மால்வேர் (malware) இருக்கிறது. அது எப்படி வந்தது என யாருக்கும் தெரியவில்லை. யு.எஸ்-ல் மட்டும் சுமார் 1,00,000 கணினிகளை அது பாதித்திருப்பது டன், சுமார் 1 மில்லியன் ஸ்மார்ட் போன் களையும் பாதித்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இதில் ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்ட் என அனைத்தும் அடங்கும்.”

“இந்த மால்வேர் என்ன செய்யும்?”

“இது கணினிகளிலும், போன் களிலும் இருக்கும் பிட்காயின் வாலட்டுகளை ஸ்கேன் செய்யும். அப்படிச் செய்யும்போது ஹார்ட் டிஸ்க்கில் பிட்காயின் வாலட்டை அடையாளம் கண்டுகொண்டால், இந்த புரோக்ராம் அதனுடைய பிரைவேட் கீ எண்களைத் தெரிந்துகொண்டு வாலட்டில் இருக்கும் பிட்காயின்கள் அனைத்தையும் ஏற்கெனவே குறியீடு செய்யப்பட்ட மறைமுக மாக இயங்கிவரும் வாலட்டுக்கு மாற்றப்படும். இப்படி எத்தனை வாடிக்கையாளர்கள் அவர் களின் பிட்காயின்களை இழந்தார்கள் என்பது பற்றி எந்தவொரு ஊகமும் இதுவரை இல்லை.”

“ஷிட்! இது மிகவும் அபாயகரமானது.”

“புதிய ஐ.ஓ.எஸ் பதிப்பை வெளியிட்ட ஆப்பிள் மிகவும் கவலையடைந்திருக்கிறது. தேவையான அனைத்து செயலிகளையும் அது ரீலோட் செய்யும்படி தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது. கோர் டேட்டா பேக்-அப் செய்வதற்கும், ரீஇன்ஸ்டேட் பண்ணுவதற்கும் அவர்கள் அக்கறை எடுத்துக்கொண்டார்கள். கோர் வடிவத்தில் இல்லாத தரவுகள் மற்றும் அனைத்து எக்ஸிகியூட்டபிள் ஃபைல் அனைத்தும் அழிக்கப்படும். இந்த விரிவான ரீஃபார்மெட்டிங் வேலை உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் அசெளகர்யத்தைக் கொடுக்கும்” என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

ஏட்ரியன் சூழ்நிலையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முயன்றார்.

“இது மட்டுமில்லை ஏட்ரியன். அந்த மென்பொருள் எக்ஸிகியூட்டபிள் ஃபைலை சிஸ்டத்தின் பூட் டிஸ்க்கிலேயே இருக்கச்செய்து விடுவதால் அது இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்போது உக்ரைனில் இருக்கும் சர்வர் நெட்வொர்க்குடன் இணைந்து விடும்.” 

“`போட்நெட்! (Botnet)’’

‘`ஆமாம், போட்நெட்.  உக்ரைனில் இருக்கும் ஹப்புடன் சிஸ்டம் தொடர்பு கொண்டுவிட்டால், அது பிட்காயினை மைனிங் செய்யும் மென்பொருளை தானாகவே தரவிறக்கிக் கொள்வதுடன், கணினி யிலேயே தங்கிவிடும். கணினி ஸ்லீப்பிங் மோடில் இருக்கும்போது அதனுடைய செயல்பாட்டுத் திறன் நெட்வொர்க்கோடு இணைந்து ரிமோட்டாக பிட்காயின்களை உருவாக்க ஆரம்பித்துவிடும். இது கிராபிக் பிராஸசிங் யூனிட்டுடன்   தொடர்புகொண்ட செயல்பாடு என்பதால் அதிகமாக உஷ்ணத்தை ஏற்படுத்தி கணினியை வெடிக்கச் செய்துவிடுகிறது. இது மிகவும் ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்ட தன்னைத்தானே அழித்துக்கொள்ளக்கூடிய மால்வேர் ஆகும். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்து கொள்வதோடு பழைய பதிப்பை அழித்துவிடும் திறன்கொண்டது. இந்த மால்வேர் சுயமாக தன்னைப் பரப்பிக் கொள் வதில்லை என்பது ஆறுதலான விஷயமாகும். உபயோகிப்பாளர்கள் ஏதாவது ஒன்றை க்ளிக்கினால் இது ஆக்டிவேட் ஆகிவிடும். நாம் இது சம்பந்தமாக ஏதாவதொன்றை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும்.”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

போனைத் துண்டித்தபின் ஏட்ரியன் ஏ.சி.பி ஷோமைப் பார்த்து, “இதை நாம் அவசரப்பட்டுச் செய்யவேண்டாம். இது சம்பந்தமாக இன்னும் அதிகமான விஷயங்கள் இருக்கின்றன என நான் நினைக்கிறேன். நாம் தயார்நிலைக்கு வந்தபின் சந்தேகத்துக்குரியவரைச் சந்திக்கலாம். அவன்(ர்) எங்கேயும் போய்விடப் போவதில்லை” என்றார்.

ஏட்ரியன் வருத்தப்பட்டார். அவருடைய மனம் முழுவதும் மால்வேர் நிறைந்திருந்தது.

மும்பை

காலை 6.15 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்த ஆதித்யா ப்ளாக்பெரியை எடுத்து மெயில் களையெல்லாம் ஸ்க்ரோல் செய்துகொண்டே பாத்ரூம் நோக்கிச் சென்றார். ஆப்பிளிலிருந்து மெயிலா..? அவர் பிரஷ் பண்ணுவதை நிறுத்தி விட்டு அந்த மெயிலின் சப்ஜெக்ட் வரியைப் படித்தார்: `கங்கிராஜுலேஷன்ஸ்’ என்றிருந்தது!

மெயிலை க்ளிக் செய்து படித்த அந்தத் தருணத்தில் அவர் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது.  “வருண்..!” எனக் கூப்பிட்டுக்கொண்டே சென்றார். அவர் புத்துணர்ச்சியுடன் வருண் அறைக்குச் சென்றார். அவன் அங்கில்லை என்பது தெரிந்தவுடன் போன் செய்தார்.

“வருண், நீ எங்கே இருக்கிறாய்? ஒரு விஷயத்தை இப்போதே உன்னிடம் சொல்ல வேண்டும்.”

“டாட். நீங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க போல இருக்கு. என்ன ஆச்சு?”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

“நீ நினைத்ததை சாதித்துவிட்டாய், மகனே! `மோஸ்ட் டவுன்லோடட்’ பட்டியலில் டவுன்ஸ்விலே செயலி முதலிடத்தில் இருக்கிறது!”

“வாவ், ரியலி?” வருண் முகத்திலும் புன்னகைப் பரவசம். “இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் டாட். நீங்கள் அற்புதமான ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.”

“இது ஒரு நல்ல நேரத்தில் நடந்திருக்கிறது வருண். எடியோஸ், என்.ஒய்.ஐ.பி பிரச்னை களிலிருந்து வெளியே வந்திருக்கும் நமக்கு இப்போதைய தேவை நல்லவொரு பொதுமக்கள் தொடர்பு ஆகும். அதற்கு இது உதவி செய்யும். ஊடகத்தில் இது குறித்து நன்றாகப் பேசப்படும் என நான் நம்புகிறேன்.”

அவருக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் வருண் ஜாக்கிங்கிற்காக வெளியே போய் இருக்கிறான் என்கிற விஷயத்தையே மறந்துவிட்டிருந்தான். வருண் சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தபின் புன்னகையோடு வலதுபக்கம் பார்த்து, `ஆப்பிள் ஸ்டோரில் நாங்கள் நம்பர் ஒன். ஹெள கூல் இஸ் தட்?” என்றான்.

“கமான்”, தான்யா கண்களைச் சுழற்றினாள். “இதிலென்ன இருக்கிறது?” எனச் சொல்லிவிட்டு தோளைக் குலுக்கிக்கொண்டாள். “நீ பாட்ஸை (Bots) உபயோகித்து உன்னோட புரோக்ராமை டவுன்லோட் பண்ணியிருப்பே” என்றாள்.

“ஷட் அப், யூ இடியட்” என்று கத்திய வருண் “நம்முடைய செயலி பணம் கொடுத்து வாங்கும் செயலி ஆனவுடன் நான் பாட்ஸ் (bots) உபயோகிப்பதை விட்டுவிட்டேன்” என்றான்.

 அவள் இந்த பதிலால் திருப்தி அடையாதவள் போல காட்டிக்கொண்டு பாந்த்ரா-ஒர்லி கடல்பாலத்துடன் ஒர்லி கடற்கரை இணையும் சந்திப்பை நோக்கி ஓடினாள்.

“வெயிட்! வெயிட்!’’ என கத்திக்கொண்டே வருண் அவள் பின்னால் ஓடினான். “இது ஒரு அருமையான செய்தி. இதனுடைய மதிப்பு உன்னைப்போன்ற சாமான்யர்களுக்குத் தெரியாது!” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி தோள்பட்டையைப் பிடித்து நிறுத்த முயன்றான்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

அவள் சிரிக்க அவளுடைய அழகான முகம் பிரகாசமானது. “யூ ராக், வருண், யூ ராக். நான் வேடிக்கைக்காக அப்படிச் சொன்னேன்’

என்றவளின் முகத்தில் புன்னகை இன்னும் அதிகமானது.

“வெயிட், ராக் என்று சொன்னதும் வேறொன்று நினைவுக்கு வருகிறது.”

வருண் தனது பாக்கெட்டி லிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான். மெரூன் நிறத்திலான பெட்டியில் `T’ என எழுதப்பட்டிருந்தது. அவன் முழங்காலிட்டு, ஒரு கையில் இதயத்தைத் தொட்டுக் கொண்டும், இன்னொரு கையில் அந்த சிறிய பெட்டியிலிருந்த மோதிரத்தையும் வைத்திருந்தான்.

“என்னைத் திருமணம் செய்துகொள்!” என்றான்.

தான்யா அவன் கையிலிருந்த தனிஷ்க் ஒற்றைக்கல் மோதிரத்தைப் பார்த்தாள். ஜொலிக்கும் அந்த வைர மோதிரத்திலிருந்து அவள் கண்ணையெடுக்கவில்லை.

“தான்யா?”

“நீ ஏதாவது சொன்னீயா, வருண்?” தான்யா குறும்பாகக் கேட்டாள்.

“நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா..? என்னுடைய முழங்கால்கள் வலிக்கின்றன.”

“கண்டிப்பாக, நான் திருமணம் செய்து கொள்வேன் வருண். அவனை அவள் இழுத்து அணைத்துக்கொண்டாள். “நான் திருமணம் செய்துகொள்வேன். எனக்காக இருப்பவன் நீ ஒருவன்தான்” என்றாள்.
 
“உன்னுடைய கையைக் கொடு” என வருண் கேட்க அவனை நோக்கி தனது இடது கையை நீட்டினாள். அவளது மோதிரவிரலில் அவன் மோதிரத்தைப் போடப் போனபோது ஏற்கெனவே ஒரு மோதிரம் இருப்பதைப் பார்த்துவிட்டு, “இதைக் கழட்டி விடு” என்றான்.

தான்யா அதைக் கழட்ட முயன்றாள், ஆனால் முடியவில்லை.

“நான் முயன்று பார்க்கிறேன்” என்றான் வருண்.

“பரவாயில்லை. இது பழைய மோதிரம்தான் எனவே கழட்ட வரவில்லை. இந்த விரலில் உன்னுடைய மோதிரத்தைப் போடு என்று மோதிரவிரலுக்கு அடுத்த விரலை நீட்டினாள்.

மோதிரத்தை வருண் அவளுடைய இன்னொரு விரலில் போட்டுவிட்டான்.

தான்யா அந்த ஒற்றைக்கல் மோதிரத்தைப் பார்த்து, பரவசப்பட்டு முத்தம் கொடுத்த பின், வருணை மீண்டும் அணைத்துக்கொண்டாள்.

“ஐ லவ் யூ, பேபி,” என்றான்.

“நானுந்தான், வருண். எப்போதும் என்னோடு இரு.”

“நான் ஒரு போன் செய்து கொள்ளட்டுமா, மிகவும் முக்கியமானது” -தான்யா தலையசைத்தாள்.

“டாட்!” வருண் போனில் கத்தினான். “தான்யா, ஆம் என்று சொல்லிவிட்டாள், டாட். இது என் வாழ்க்கை யிலேயே மிகச் சிறந்த நாள். பை, டாட்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
 
அவன் சுற்றிலும் பார்த்தான். தான்யா அவனை மீண்டும் அணைத்துக்கொண்டாள். “யாரையாவது கூப்பிட்டு இந்த விஷயத்தைச் சொல்வதற்கு எனக்கு ஆசையாக இருக்கிறது” என்றாள்.

வருண் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டு “இப்போது நான் இருக்கிறேன்” என்றான்.

சில விநாடிகளுக்குப் பிறகு பிடியைத் தளர்த்தி அவளை விடுவித்தவன், “வா, நாம் போகலாம்” என்றான். நான் நாளை உக்ரைன் செல்வதற்கு எல்லாம் பேக் செய்ய வேண்டுமென்றான்.

“ஓ, யெஸ்.” முதலீட்டு வங்கியாளர் பரிந்து ரைப்பின் பேரில் சிறிய கேமிங் நிறுவனத்தைப் பார்ப்பதற்காக வருண் உக்ரைன் போகவிருப்பது தான்யாவுக்குத் தெரியும்.

“நீ எப்போது திரும்பி வருவாய்?”

`மூன்று நாள்களாகும். ஆனால், இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும், தான்யா. டின்னர் இன்றிரவு? என்ன சொல்கிறாய்?”

தான்யாவுக்கு டின்னருக்கு செல்லக்கூடிய மூட் இல்லையென்பதால் “சினிமாவுக்குப் போவோம்” என்றாள். வருண் சம்மதித்தான்.

அன்றிரவு அவர்கள் படம் பார்த்துவிட்டு திரும்புகையில் தான்யாவை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு செல்வதற்காக வந்தான்.

தான்யா வீட்டுக் கதவை திறந்த அந்தத் தருணம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “ஓ மை காட்! வாட் த…”! அவளுடைய கைகளால் அவளையறியாமலே வாயை மூடிக்கொண்டாள்.

வருண் அவளைத் தாண்டி உள்ளே சென்றான். வீடு முழுவதும் கன்னா  பின்னாவென்றிருந்தது. அறை கலன்கள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. எல்லாப் பக்கமும் பேப்பர்கள் சிதறியிருந்தன… அவர்கள் இல்லாதபோது யாரோ வந்து வீட்டைச் சூறை யாடியிருக்கிறார்கள்.

வருண் அதிர்ச்சியடைந்தான். அவன் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்க்க, எல்லா அறைகளும் சின்னாபின்னமாக ஆக்கப் பட்டிருந்தது.

“உன் அம்மாவிடம் இருந்த ஒன்று யாருக்கோ தேவைப்படுகிறது; அதனால்தான் இப்படி நடந்திருக்கிறது” என்றான்.

“என்ன? யாரால் இப்படிச் செய்யப்பட்டது?”

“என்னால் ஒரேயொருவரைக் குறிப்பிட முடியும். ஏனெனில், அவருடைய நடத்தை வழக்கமானதாகத் தெரியவில்லை.”

தான்யா குழப்பத்துடன் வருணைப் பார்க்க அவன், “நிதி மந்திரிதான் அது. அவர் அன்றைக்கு என்ன கேட்டார் என நினைவிருக்கிறதா? உன்னுடைய அம்மா எனக்காக ஏதாவது விட்டுச் சென்றிருந்தால்…” என நிதி மந்திரி அவளிடம் கூறியதை நினைவுபடுத்தினான்.

மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டினாள் தான்யா.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41

அருகிலிருக்கும் காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆதித்யாவும் அங்கே வந்துசேர்ந்தார்.

வீடு சூறையாடப்பட்டபோது கட்டடத்தில் இருந்த சி.சி.டி.வி வேலை செய்யவில்லை என்று தெரியவந்தபோது அனைவரும் அதிர்ச்சிக் குள்ளாயினர். விநோதமாக, அன்றைக்கு மாலை நேரத்தில் மட்டும் கரன்ட் தடைப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மும்பையின் தெற்குப் பகுதியில் கரன்ட் கட் என்பது கேள்விப்படாத ஒன்று என்பதால் எந்தவொரு கட்டடத்திலும் பவர் பேக்-அப் இருந்ததில்லை.

கட்டடத்தின் காவல்காரர், மற்ற வேலையாட்கள் என அனைவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது. யாருக்கும் எதுவும் தெரிந்திருக்க வில்லை.

வருணும், தான்யாவும் போலீசில் புகார் செய்ய முயன்றபோது அவர்கள் புகாரை பதிவு செய்ய முடியாது என நிராகரித்தார்கள். அவர்கள் சண்டைபோட்டார்கள்; வாதம் செய்தார்கள். ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள் காவல்நிலையத்தை விட்டு வெளியேறும் போதும் “என்ன செய்கிறோம், பாருங்கள்” என மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு வந்தார்கள்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், வருண் தான்யாவிடம் சில நாள்கள் அவர்களுடன் வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டான். அவள் அதை நாகரிகமாக மறுத்துவிட்டாள்.

அம்மாவோடு சம்பந்தப்பட்ட பல நினைவுகள் அவள் மனதில் இருந்தன. “என்னால் விட்டு விட்டு வரமுடியாது, வருண். இந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு என்னால் வேறெங்கும் செல்ல முடியாது” என்றாள்.

 (பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு