Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 42

ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

மும்பை

வீட்டை ரணகளப்படுத்தியிருந்தது பற்றி சி.பி.ஐ-யில் புகார் கொடுக்க விரும்பினாள் தான்யா. கபீர்கான் அவளுக்காகக் காத்திருந்தார். அவரை அலுவலகத்துக்குச் சென்று சந்திப்பதற்குமுன்பே அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தாள். கபீர்கானின் டேபிளுக்குமுன்பாக அவள் உட்கார்ந்து ஓரளவுக்கு செளகர்யமான நிலைக்கு வந்தபின், அவர் பேச ஆரம்பித்தார். ‘`நேற்றிரவு உங்களது வீட்டில் நடந்த `ரெய்ட்’ உங்களைப் பாதித்திருக்கும் என்று தெரியும்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - 42

‘`ரெய்ட்?” தான்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளால் இந்தக் கோணத்தில் யோசிக்க வேண்டுமென்று அதுவரை தோன்றவில்லை.

‘`யெஸ், சி.பி.ஐ உங்கள் வீட்டை ரெய்ட் செய்தது. நான்தான் அதற்குக் காரணம்’ என்றார்.

‘`நீங்கள் எப்படி ரெய்ட் செய்ய முடியும்? இது சட்டத்துக்குப் புறம்பானது. நான் உங்களை கோர்ட்டுக்கு அழைக்காமல் விடமாட்டேன்’’ என்றாள்.

‘`எனது விருந்தினராக இருங்கள்” என்று ஆணவத்துடன் கூறியவர், மேலும் ‘‘அதற்குத் தேவையான நீதிமன்ற அனுமதியும் இரண்டு ஆர்டர்களும் இருக்கின்றன’’ என்று சொல்லிவிட்டு, தோளைக் குலுக்கிக்கொண்டார்.

‘`என்னுடைய வீட்டிலிருந்து என்னென்ன எடுத்தீர்கள்?”

பிட்காயின் பித்தலாட்டம் - 42

‘`நாங்கள் எடுத்த பொருள்கள் குறித்த பட்டியலையும், அனுமதிப் பத்திர ஒப்புதலையும் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறோம். நாளடைவில் நீங்கள் அந்தப் பட்டியலை கோர்ட்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

‘`இது பற்றி நான் புகார் செய்யப் போகிறேன்?’’  என்றாள் தான்யா.

‘`யாரிடம்...?”

‘`உள்துறை மந்திரியிடம்...’’

‘‘தாராளமாக’’ என்று சொல்லிவிட்டு, உள்துறை மந்திரியின் தொலைபேசி எண்ணையும் ஒரு பேப்பரில் எழுதித் தந்தார். அவளை விசாரிக்க அவள் வீட்டுக்குச் சென்றபோது அவள் நடந்து கொண்ட விதத்துக்குப் பழிவாங்குவதுபோல அவர் நடந்துகொண்டார்.

மும்பை

டோனி, ஏட்ரியன்,  ஏ.சி.பி ஷோம் என மூவருமாக சேர்ந்து ஆதித்யாவை விசாரிக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றனர்.

ஆதித்யா தனது வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். சமீபத்திய வீழ்ச்சிக்குப்பிறகு, தொடர்ந்து எடியாஸின்  பாதுகாப்பு முறையைத் தணிக்கைச் செய்வதற்கென்று நிறுவனமொன்றின் சேவையைப் பெற்று அவர்கள் பரிந்துரைப்படி அப்க்ரேட் செய்வது, பிரச்னைகளைச் சரிசெய்வது என முடிவு செய்திருந்தனர். தரம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கும் அவர், சிறப்பான சேவை வழங்கும் நிறுவனத்தை இதற்காக நியமிக்க விரும்பினார். முதல்கட்டமாக, நான்கு பன்னாட்டு நிறுவனங்களை அவர் தேர்வு செய்திருந்தார். அதில் மூன்று நிறுவனங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் ஒரு சந்திப்பை முடித்துவிட்டு, தன் அறைக்குத் திரும்ப, இன்டர்காம் ஒலித்தது. 

‘‘உங்களைச் சந்திக்க சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களை உள்ளே அனுப்பட்டுமா ஆதித்யா’’  என அவரது செகரட்டரி கூறினார்.

‘‘ஹ்ம்ம்ம்… அவர்களை உள்ளே அனுப்புங்கள், அப்படியே எங்களுக்கு காபிக்கும் ஏற்பாடு செய்து விடுங்கள், எனக்கு ப்ளாக் காபி’’ என்றார்.

‘`குட்மார்னிங். இந்த குறுகிய அவகாசத்துக்குள் எங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, மிஸ்டர் ஆதித்யா ராவ்’’

‘`இது எனக்குப் பழகிவிட்டது ஜென்டில்மென், குறிப்பாக உங்களுடைய சமீபத்திய நியூயார்க் பிரச்னைக்குப்பிறகு’’ என ஆதித்யா சிரித்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 42

‘‘இவர்கள் எஃப்.பி.ஐ ஸ்பெஷல் ஏஜென்ட்டுகள் ஏட்ரியன் ஸ்காட், டோனி க்ளேர். ஏ.சி.பி ஷோம்’’ என அறிமுகம் செய்து வைத்தார்.

‘`நன்றி, ஏ.சி.பி ஷோம். உங்கள் கண்காணிப்பில் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்’’ என ஆதித்யா சொன்னதைக் கேட்டு ஷோம் சிரித்தார். 

‘‘நன்றி மிஸ்டர் ராவ். நாங்கள் உங்களை இப்போது சந்திப்பதின் நோக்கம், நியூயார்க்கில் நடந்த ஏ.டி.எம் கொள்ளை சம்பந்தமாக நீங்கள் நிறுவனத்துக்குள் நடத்திய விசாரணையின்போது டேட்டா வெளியே தந்ததில் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த யாருடைய ஈடுபாடாவது இருப்பது தெரிய வந்ததா?’’ ஏட்ரியன் அந்தக் கொள்ளை சம்பந்தமாக விசாரிப்பதற்காக வரவில்லை என்றாலும், இப்படிப் பேச்சினைத் தொடங்குவது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது.

ஆதித்யா, ஷோமைப் பார்த்தார். அவருக்கு லேசான குழப்பம். இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து இந்த மாதிரியான கேள்விகளுக்கு அவர் உள்ளாகி யிருக்கிறார். அவருடைய இன்டர்காம் மீண்டும் ஒலித்தது.
   
‘`யெஸ்?”

‘`ஆதித்யா, இன்னொரு டீமும் இங்கு இருக்கிறது. அவர்களைக் காத்திருக்குமாறு சொல்லவா?’’

‘`வேண்டாம். அவர்களைச் சந்திக்குமாறு  சந்தீப்பிடம் சொல்லுங்கள். நான் விரைவில் கலந்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார். அவர் அங்கிருந்த மூன்று பேரையும் பார்த்து, ‘‘எங்கள் சிஸ்டத்தின் பாதுகாப்பு குறித்து காலாண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்வது பற்றி சில பன்னாட்டு நிறுவனங்களோடு பேசி வருகிறோம்’’ என்றார்.

‘`யாரையெல்லாம் சந்திக்கிறீர் கள்?’’ என மிகவும் அமைதியாக ஏட்ரியன் கேட்டார்.

‘`இன்று காலையில்தான் ஆரம்பித்தோம். இதுவரை ஃபயர் வால்ட் (FireValut) மட்டும்தான். இன்றைக்கும், நாளைக்குமாக இன்னும் மூன்று சந்திப்புக்கள் இருக்கின்றன.’’

‘`இந்த பரபரப்பான சூழ்நிலை யிலும் எங்களைச் சந்திக்க நேரம் கொடுத்ததுக்கு நன்றி, மிஸ்டர் ராவ். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்’’ என்று ஏட்ரியன் கேட்க, அதுவரை நடந்தது அனைத்தையும் ஆதித்யா கூறியதுடன், அதிலிருந்து வெளியே வந்தது எப்படி, அதனால் அவர்களின் பெயருக்கு ஏற்பட்ட களங்கம், வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்கள் செய்த முயற்சி, க்ளையன்ட் என்.ஒய்.ஐ.பி இதன்மூலம் இழந்தது என எல்லாவற்றையும் கூறினார். ஆதித்யா சொன்னதை அனைவரும் சுமார் 15  நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

டோனி திடீரென்று எழுந்து அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பேக்கை நோக்கிச் சென்று, அதிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டு டேபிள் இருக்கும் இடத்துக்கு மீண்டும் திரும்பிய அவர், ஆதித்யாவை நோக்கி கையை நீட்டினார்.

‘`மிண்ட்டா?”

‘`இல்லை, வேண்டாம்.’’

‘`இனிப்பில்லாத ஆல்டாயிட்ஸ்’’ எனச் சொல்லும்போது `ஆல்டாயிட்ஸ்’ என்கிற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

‘`இல்லை, வேண்டாம்’’ என்று ஆதித்யா மீண்டும் சொன்னார். 

‘`வொண்டர்ஃபுல், இனி இதெல்லாம் எனக்குத்தான் என உற்சாகத்துடன் டோனி சொல்லிக்கொண்டு அந்த சிறிய டப்பாவை தனக்கு முன்பாக டேபிளில் வைத்தார். ஆதித்யாவின் எதிர்வினையை ஏட்ரியன் மிகவும் கவனமாகக் கேட்டார். அவருடைய நடவடிக்கை யில் எந்தவொரு மாறுதலும் இல்லை.

கலந்துரையாடல் தொடர்ந்தது. ‘ஆல்டாயிட்ஸ்’ என அவர் இடையில் குறிப்பிட்டது எந்தவொரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. 25 நிமிடங் களுக்குப்பிறகு ஏட்ரியன் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்.
‘`தாங்க்ஸ் மிஸ்டர். ராவ்.’’

‘`உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், என்னை அழைப்பதற்கோ, மின்னஞ்சல் செய்வதற்கோ தயங்க வேண்டாம்.’’

‘`நான் உங்களுக்கு ஃப்ராஸ்டி.காம் (Frosty.com) ஐடி-யில் மின்னஞ்சல் அனுப்பினால் உங்களுக்கு ஓகே-வா?’’ என ஏட்ரியன் ஓர் ஆச்சர்யத்தைக் கொடுத்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 42

‘`Frosty.com...?’’ ஆதித்யா உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டதுபோல காட்டிக்கொண்டார். ‘`அந்த ஐடி பெயரில் எதுவும் இல்லை. நான் உங்களுக்குக் கொடுத்த கார்டில் என்னுடைய ஐடி இருக்கிறது. அந்த ஐடி-யையே தயவுசெய்து உபயோகிக்கவும். எனது குழுவிலிருந்து யாராவது ஒருவர் உடனடியாகப் பதிலளிக்கும்படி நான் ஏற்பாடு செய்கிறேன்.’’
 
அப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது சந்தீப் உள்ளே நுழைந்தார். ‘`ஹாய், சந்தீப். நல்லது நீங்களே இங்கே வந்துவிட்டீர்கள். இவர்கள்    எஃப்.பி.ஐ-யைச் சேர்ந்த ஏஜென்டுகள் ஏட்ரியன் ஸ்காட், டோனி க்ளேர்’’ என அறிமுகப்படுத்தினார்.

‘`எஃப்.பி.ஐ... உங்களுக்கு இன்னும் நேரம் ஆகுமா?’’ என்று கேட்டார்.
 
‘`ஏறக்குறைய முடிந்துவிட்டது, சந்தீப். ஏ.டி.எம் கொள்ளை சம்பந்தமான அப்டேட்டுக்காக அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’’ என்றார்.

அவர்கள் சென்றபின் சந்தீப் மீண்டும், ‘`நீங்கள் என்னைக் கூப்பிட்டிருந்தால் அவர்களுக்கு நான் சரியான தகவலைக் கொடுத்திருப்பேன்’’ என்றார்.

‘`இட்ஸ் ஓகே. நான் பார்த்துக் கொள்கிறேன். ஏதாவது பிரச்னை இருந்தால் கண்டிப்பாக  உங்களை அழைக் கிறேன்’’ என்று சொல்லிக் கொண்டே பிரசன்டேஷன் செய்யக் கிளம்பினார் ஆதித்யா.

எடியாஸின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த டோனியும், ஏட்ரியனும் ஷோமுடன் போலீஸ் ஜீப்பில் ஏறினர்.

‘`விநோதமாக இருக்கிறது. ஆல்டாயிட்ஸ், ஃப்ராஸ்டி என சொல்லி அவரை எதிர்கொண்ட போது அவரிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லையே’’ என ஏட்ரியன் ஆரம்பித்தார். ‘`அவர் இந்தக் கொள்ளைக்கு மாஸ்டர் மைண்ட்டாக  இருந்திருந்தால் நாம் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்திருப்பார்.’’
 
‘`ஆனால், நம்மிடம் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரம் இருக்கிறதே!’’

‘`அது உறுதியான ஆதாரம் என கண்டிப்பாகச் சொல்ல முடியாது, டோனி. இருக்கும் சூழ்நிலையில் இதுபோதாமல்கூட இருக்கலாம்’’ என ஏட்ரியன் அக்கறையுடன் கூறினார்.

‘`நீங்கள் எடுத்த படங்களில் இருந்த ஐ.பி முகவர் ஆதித்யா அறையிலிருக்கும் வைஃபையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவேளை, அவரது லாப்டாப்பாக இருக்கலாம். ஆனால், அது எதை நிரூபிக்கிறது? அவர் ஆல்டாயிட்ஸாக இருக்கலாம். ஆனால், ஏ.டி.எம் கொள்ளையில் ஆல்டாயிட்ஸின் சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அவர் காட்டன் ட்ரையிலுக்குப்பின்னால் இருக்கும் மூளையாக இருக்கலாம் என்றுதான் நாம் சந்தேகப்பட்டோம்.’’

‘`முன்னேறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லாமல் ஒரு முட்டுச்சந்தில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு வந்து ஒன்றரை நாள் ஆகிவிட்டது, இன்னும் நாம் வழிதெரியாத இடத்தில் தான் நிற்கிறோம்’’ என்று டோனி புலம்பினார்.

அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பியபின், ஏட்ரியன் ஏ.சி.பி ஷோம் பக்கம் திரும்பி, ‘`எனக்கு ஒரு அரைமணி நேரம் கொடுங்கள், நான் ஃப்ரெஷ் ஆகிக்கொண்டு கீழே வந்துவிடு கிறேன்’ என்று சொல்லிவிட்டு, லிஃப்டை நோக்கிச் சென்றார். டோனியும் அவரைத் தொடர, ஏ.சி.பி ஷோம் லாபியில் காத்திருந்தார்.

‘`இது குறித்து கொஞ்சம் தகவல் தெரிந்தபின், எங்காவது போய் ரிலாக்ஸ் செய்து கொள்ளவேண்டும், ஆதித்யா குறிப்பிட்டது போல, யாராவது ஒரு ஃப்ரெஞ்ச் பெண்ணுடன்...’’ என்று லிஃப்டுக்குள் நுழையும் போது டோனி கூறினார்.

‘`ஹாஹா!” ஏட்ரியன் சிரித்தார். `’நீங்கள் உங்கள் காமவெறியையும் எப்படி மேனேஜ் பண்றீங்க டோனி?”

‘`இப்போதைக்கு கன்ஃபஸ்ஷன் ஆஃப் தி ஹூக்குருடன். (confessions of the hooker)’’

ஏட்ரியன் தங்கியிருக்கும் தளத்துக்கு லிஃப்ட் வந்தடைந்த நேரத்தில் டான் அவரைத் தொலைபேசியில் அழைத்தார்.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு