Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 45

ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

வாஷிங்டன் டி.சி

பெரிய ஜன்னல் இருக்கும் அறைக்கு ஆதித்யா அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த 30 நிமிடங்கள் அவர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார்.
 
நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். “குட்மார்னிங், மிஸ்டர். ராவ்” என்றார் முதலில் வந்தவர். அவரைப் பார்க்கும்போது முன்பு மும்பையில் பார்த்ததைப்போல இல்லாமல் அச்சுறுத்தலாக இருந்தது.  

“ஏஜென்ட் ஸ்காட்... கைதிபோல நான் ஏன் இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறேன்?”

“நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்று சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.” ஆதித்யாவின் தோள்பட்டையில் கைவைத்த அவரை சேரின் பின்பகுதி நோக்கித் தள்ளினார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 45

“வாட்? நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் எங்கே இருக்கிறேன்?”

“மிஸ்டர் ராவ். அடிப்படையான சில விதிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, நான் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

ஆதித்யா இந்தமாதிரியான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பது இதுவே முதல்முறை. சட்டத்துக்குக் கட்டுப்பட்ட மனிதராகவே உலகம் இவரை இதுவரைப் பார்த்திருக்கிறது. ஏட்ரியன் டிஸ்யூக்கள் இருந்த பெட்டியை அவர் பக்கம் தள்ளினார்.

“தாங்க் யூ” என்று சொல்லிவிட்டு இரண்டு டிஸ்யூக்களை எடுத்துக்கொண்டார்.

“மிகவும் பதற்றமாக இருக்கிறீர்கள்போல தெரிகிறதே மிஸ்டர் ராவ். நீங்கள் இதை முதன் முதலாகக் கேட்டதற்காகச் சொல்கிறேன். நீங்கள் வாஷிங்டன் டி.சியில் இருக்கும் எஃப்.பி.ஐ-யின் ஆபிஸில் இருக்கிறீர்கள்” என்றார்.

 ஆதித்யா காரணம் கேட்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 45

“நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா, மிஸ்டர் ராவ்? இன்றைக்கு நான் கேள்விகள் கேட்பேன்.”

ஆதித்யா இன்னொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டே “எனக்கு வக்கீல் தேவை” என்றார்.

“உங்கள் வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது” என்று ஏட்ரியன் வேகமாகப் பதிலளித்தார்.

“எனக்கான சட்ட உதவியை நீங்கள் மறுக்க இயலாது. அது உங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது” என்றார்.

“இந்த நாட்டு சட்டங்கள் பற்றி உங்களைவிட எனக்கு நன்றாகவேத் தெரியும். அப்படித் தேவைப்படுமெனில் அப்போது பார்த்துக்கொள்வோம்” என்ற பதில் ஆதித்யாவை பயத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

“பிட்காயின்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

“பத்திரிகைகள், புத்தகங்கள், இணையதளங்களின் மூலம் ஒருவருக்கு என்ன தெரிந்திருக்குமோ, அதுதான் எனக்கும் தெரியும். எனக்குத் தெரியாதது ஏதாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் உண்டு.”

“நீங்கள் பிட்காயின் வைத்திருக்கிறீர்களா?”

“இல்லை. ஆனால், கடைசி முறையாக நான் செக் செய்தபோது, பிட்காயினை வைத்திருப்பது குற்றமில்லை எனத் தெரியவந்தது. அது குற்றமா?”

“இல்லை” என்ற ஏட்ரியன் “கண்டிப்பாக அது குற்றமில்லை” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார். “அப்படியென்றால் உங்களிடம் பிட்காயின்கள் எதுவுமில்லையா? பிட்காயினை வாங்க வேண்டும் அல்லது அதை டீல் செய்ய வேண்டுமென்று நினைத்ததுண்டா?”

“ஒருபோதும் இல்லை. எங்களுடைய கேமிங் நிறுவனமான இண்டீஸ்கேப்பின் கேம்களை விளையாடும் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணமாக பிட்காயின் வசூலிக்கலாம் என ஆலோசித்தோம். ஆனால், பிட்காயின் மதிப்பின் நிலையற்ற போக்கால் நாங்கள் அந்த யோசனையைச் செயல்படுத்தவில்லை.”

“நீங்கள் ஆல்டாய்ட்ஸ் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?”

“மிண்ட்டா?”

“நான் ஜோக் கேட்கும் மூடில் இல்லை ராவ்.”

“எனக்குத் தெரிந்த ஒரே ஆல்டாய்ட்ஸ் மிண்ட்தான் ஏஜென்ட் ஸ்காட்.”

பிட்காயின் பித்தலாட்டம் - 45

“காட்டன் ட்ரைய்ல்? அதுபற்றியாவது தெரியுமா? என ஏட்ரியன் தொடர்ந்து கேட்டார்.

அவர்கள் இருந்த அறை கதவைத் திறந்துகொண்டு நான்காவது ஏஜென்ட் உள்ளே வந்தார். அவர் ஏட்ரியனைப் பார்த்து, “ஏஜென்ட் ஸ்காட், டான் மல்லாய் உங்களோடு பேச விரும்புகிறார்” என்றார்.

“நான் இன்னும் 30 நிமிடத்தில் வந்துவிடுவேன் என அவரிடம் தயவு செய்து சொல்ல முடியுமா?”

மும்பை

இரண்டு பேருக்கென்று ஒரு தனிப்பட்ட பகுதியை செலினி பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். செலினிக்கு வரும் யாருக்குமே வழக்கமாக சாலட், பீசா, ரெட் ஒயின் கொடுக்கப்படும். செலினி பீசா என்றால் தான்யாவுக்குக் கொள்ளைப் பிரியம். அவள்தான் இன்றைக்கு இந்த ரெஸ்டாரென்டையேத் தேர்ந்தெடுத்தது. 

கடிகாரத்தில் நள்ளிரவு மணி ஒலிக்க, இசைஞர்கள் குழு வந்து, ‘ஹேப்பி பர்த்டே’ பாட, கேக் வந்தது. அதோடு தான்யாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிய, வருண் அவளை அணைத்து முத்தமிட்டான்.
அங்கே அவர்கள் சுமார் மூன்று மணிநேரம் இருந்திருப்பார்கள். தான்யாவுக்கு போதை ஏறியிருந்தது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வருண் அவளை கார் இருக்குமிடத்திற்குக் கூட்டிச் சென்று மெர்சிடீஸின் முன் சீட்டில் அவளை கவனமாக உட்கார வைத்தபின் தான்யாவின் அபார்ட்மென்டுக்குச் சென்றான்.

மறுநாள் காலையில் தான்யா வருணை எழுப்பினாள்.

நேற்று அவளுடைய மோதிரம் எப்படி அவனுடைய கையைப் பதம்பார்த்தது என்பதுபற்றி சொல்ல நினைத்தான். ஆனால், அவளுடைய பிறந்தநாள் என்பதால் சொல்லவில்லை.

பிட்காயின் பித்தலாட்டம் - 45

வாஷிங்டன் டி.சி

ஆதித்யா ரிட்ஷ் ஹோட்டலில் அவரது அறையில் இருந்தார். கடந்த 24 மணி நேரம் அவர் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார். வோர்ல்டு கேமிங் கவுன்சில் நிகழ்வில் கலந்து கொள்ள ஒரே ஒரு முறை வெளியே சென்று வந்தார். உண்மையிலேயே, `வளர்ந்துவரும் சந்தைகளில் சிறப்பான கேமிங் நிறுவனமாக’ இண்டீஸ்கேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆதித்யாவை இந்தமாதிரி அதிர்ச்சிக்குள்ளாக்கிய தற்காக ஏட்ரியனுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. எனவே, அவர் விழா அமைப்பாளர்களிடம் சொல்லி பரிசைக் கொடுக்கும்படி கூறினார். எஃப்.பி.ஐ போன்று பெரிய இடத்து சிபாரிசு என்பதால் விழா அமைப்பாளர்களும் ஒப்புக் கொண்டனர். இது தெரியவந்த ஆதித்யா, விழா மேடைக்குச் செல்லவில்லை.

ஏட்ரியன், ஆதித்யாவிடம் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால், ஆதித்யா கவலையிலிருந்தார். யாரோ ஒருவர் அவரது நிறுவனத்தையும், புகழையும் தனது ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பெயரில் யாரோ ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் கற்பனை செய்திருந்ததைவிட மிகவும் சீரியஸாகி விட்டிருப்பதை உணர்ந்தார். செனட்டரின் கொலை, பிட்காயின்கள், காட்டன் ட்ரைய்ல், மால்வேர் (malware) என இவற்றையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே, விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏட்ரியன் அவரை மேலும் சில நாள்கள் தங்கியிருக்க கேட்டுக்கொள்ள, அவரும் அதற்குச் சம்மதித்தார். அதற்குக் கைமாறாக, அவருடைய நிறுவனத்தைச்சுற்றிப் படர்ந்திருக்கும் பிரச்னை களையும் தீர்த்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். எஃப்.பி.ஐ இதற்குச் சம்மதம் தெரிவித்ததோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை குறித்து அவருடைய நிறுவனத்தில் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அப்படித் தெரியவந்தால் அது விசாரணையைப் பாதிக்கும் என்றும் கூறினார். இந்தக் காரணத்தினால்தான் தனது அறையில் இருந்த ஆதித்யா பொழுது போவதற்காகத் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட சேனலில் முப்பது நிமிடம் முழுவதும் ஹூக்கரின் லீலைகள் குறித்த செய்தி மட்டுமே ஒளிபரப்பானது. மூன்று பேர்களோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டதாக ஹூக்கர் கூறியிருந்தாலும்கூட, அவர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும்புள்ளிகள் என்பதால் அவர்களின் பெயர் நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை.

இந்த புரோக்ராம் ஆதித்யாவிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனது லேப்டாப்பில் ஹூக்கருடைய ப்ளாக்கின் URL –ஐ டைப் செய்து சமீபத்தில் எழுதப்பட்ட பதிவிலிருந்து படிக்க ஆரம்பித்தார். அவர் கண்கள் விரிந்தன. அவள் பொய் சொல்கிறாளா அல்லது அவள் உண்மையைத்தான் எழுதுகிறாளா?

அவர் போனில் ஒரு நம்பரை டயல் செய்தார். “குட் ஆஃப்டர்னூன் ஏஜென்ட் ஸ்காட். ஆதித்யா ராவ் பேசுகிறேன்.”

“மிஸ்டர் ராவ்... நானே உங்களை வந்து பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்” என்றார்.

“ப்ளீஸ் கம். இன்று மாலை இருவரும் சேர்ந்து ட்ரிங்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.”

“நான் ஹூக்கர் சீரிஸின் சமீபத்திய பதிவுகளைப் படித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சமீபத்திய ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தீர்களா? தயவுசெய்து அதைப் படித்து விட்டு என்னைக் கூப்பிடுங்கள்” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள், ஏட்ரியனிடமிருந்து அழைப்பு வந்தது. “Holy motherfucker! இது எங்கேயிருந்து கிளம்பி யிருக்கிறது?”

“நாம் இருவரும் சேர்ந்து குடிக்கிறோம்தானே, ஏஜென்ட் ஸ்காட்?”

“ஆமாம், கண்டிப்பாக. இன்னும் இருபது நிமிடத்தில் அங்கிருப்பேன்” என்றார்.

மும்பை

வார இறுதியில் தான்யா வுடைய பிறந்தநாளைக் கொண் டாடிவிட்டு திங்கள்கிழமை வருண் ஆபிஸுக்கு வந்தான்.

வழக்கம்போல, அவனுடைய லேப்டாப்பை லாக்இன் செய்து வாராந்திர விற்பனை குறித்த தகவல்களைப் பார்த்தான். ஆப் ஸ்டோரில் இண்டீஸ்கேப்பின் டவுன்ஸ்விலே ஆப் பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை அந்த அறிக்கையில் இருக்கும்.

பிட்காயின் பித்தலாட்டம் - 45

அந்த அறிக்கையைப் பார்த்தவுடனே, ஏதோ சரியில்லாததுபோலத் தோன்றியது. வாரந்திர விற்பனை குறைந்திருந்தது. கடந்த வாரத்தைவிட 30% குறைவாக இருந்தது. அவன் அதை நாள் வாரியாக பார்க்கும்போது திங்கள் முதல் வெள்ளி வரை விற்பனை நிலையாக இருந்தது.  சனிக்கிழமை, விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால், ஞாயிறு விற்பனை சனிக் கிழமை விற்பனையைவிட 80% குறைவாக இருந்ததைப் பார்த்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, வார இறுதியில் விற்பனை கூடுதலாக இருக்கும். ஆனால் 80% குறைவு எனும்போது எங்கேயோ பிரச்னை இருக்கிறது எனத் தெரியவந்தது.

அவன் ஆப் ஸ்டோரை லாக்இன் செய்து செக் செய்தான். விவரங்கள் இருந்தன. விலை, ரெவ்யூக்கள் என அனைத்தும் இருந்தன.டவுன்லோடுக்கான பட்டன் மிஸ் ஆகியிருந்தது. ஆப் ஸ்டோர் இணையத்தில் நுழையும் எவரும் டவுன்ஸ்வி லேயே தேடினால் அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், அவர்களால் டவுன்லோட் செய்ய முடியாது.

“What the f…k?” அவன் கத்தினான். அது இண்டீஸ்கேப் அலுவலகம் முழுவதற்கும் கேட்டது. அவன் தன்னுடைய செக்ரட்ரியை அழைத்து, “டவுன்ஸ்விலே கேமிங் டைரக்டரை உடனடியாக என் அறைக்கு வரச் சொல்லுங்கள்” என்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், டவுன்ஸ்விலேக்கு பொறுப்பேற்றிருக்கு டைரக்டர் அவனுடைய அறையில் லாப்டாப், லஞ்ச் பேக்குடன் இருந்தார். “சாரி ஸார், உங்களுடைய செக்ரட்டரி கூப்பிடும்போது பார்க்கிங் பகுதியில் இருந்தேன்” என்றார்.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு