Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 46

பிட்காயின் பித்தலாட்டம் - 46
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - 46

பிட்காயின் பித்தலாட்டம் - 46

மும்பை

சில நிமிடங்களுக்குப் பிறகு உக்ரைனிலிருந்து வருணுக்கு வந்த அழைப்பு சில நிமிடங்கள் நீடிக்க, இடையிடையே கோபம் தெறித்தது. அழைப்பின் முடிவில், வருணின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. அவன் உடனடியாக ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

பிட்காயின் பித்தலாட்டம் - 46

சில நிமிட சிந்தனைக்குப் பிறகு, அவன் ஆதித்யாவை மறுபடியும் செல்போனில் அழைத்தான். ஆதித்யா போனை எடுக்கவில்லை; மீண்டுமொருமுறை அழைத்து இணைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து லைனில் இருந்தான். அவன் பொறுமை இழந்திருந்த நேரத்தில் ஆதித்யாவின் குரல், ‘`ஹாய், வருண்” என்றது.

‘`யுஎஸ்-ல் ஏதாவது பிரச்னையா?”

‘`இல்லை. ஏன்?’’ என்று ஆதித்யா மெதுவாகக் கேட்டார்.

‘`ஏனென்றால் நீங்கள் ட்ரிப்பை ஒத்திப் போட்டீர்கள்?’’

“என்னுடைய பழைய நண்பர்கள் சிலரைச் சந்திப்பதற்காக ஓரிரு நாள்கள் ஒத்திப்போட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்குமுன்பு நான் இங்கு வேலை பார்த்தது உனக்குத் தெரியும்தானே?”

‘`புரிகிறது, டாட். ஆனால், இங்கே சில பிரச்னைகள் இருக்கின்றன.’’

‘`என்ன பிரச்னைகள்?”

‘`சந்தீப் அங்கிள் உங்களைக் கூப்பிட்டுப் பேசினாரா?”

‘`ஆமாம், அவர் கூப்பிட்டார். அது தானாகவே சரியாகிவிடும். ரிலாக்ஸ், வருண்!’’

‘`எஃப்.பி.ஐ, டாட்?’’

‘`வாட்?”

‘`ஆமாம். டாட். எஃப்.பி.ஐ சர்வர்களிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் டவுன்ஸ்விலே எஃப்.பி.ஐ-யின் உத்தரவின்பேரில் நீக்கப்பட்டு விட்டது.’’

‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’ ஆதித்யாவுக்கு ஆர்வம் மேலிட்டது. ஏனென்றால், அதை ரகசியமாக வைத்திருப்பதாக அவருக்கு எஃப்.பி.ஐ உறுதி அளித்திருந்தது. ஆதித்யாவின் டீம் கேமை சரிசெய்தபின் மீண்டும் அதே சர்வர்களில் ரீலோட் செய்யும்போது பிரச்னை எதுவும் இருக்காது எனவும் உறுதியளித்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - 46

‘`உக்ரைனில் நாம் வாங்கவிருந்த நிறுவனமானது சர்வர்களை இயக்கும் நிறுவனமொன்றில் சிறிய பங்குதாரராக இருக்கிறது. அவர்கள் சொன்னார் கள். அவர்கள் சர்வரில் நமது கேமுடைய ஆஃப்பை அணுகும் வழியை மூடிவிடும்படி கூறியிருக்கிறார்கள். எனவே, நம்முடைய கேமை விளையாட லாக்இன் செய்தாலும் வாடிக்கை யாளர்களால் விளையாட முடியாது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு எனச் சொல்லும்படி எஃப்.பி.ஐ அவர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறது. அவர்களால் எந்தவொரு சர்வரை அணுகுபவர்.களையும் தடுக்கமுடியாது. ஏனெனில், அது அவர்கள் சட்ட எல்லைக்கு அப்பாற்பட்டது. ஃபேஸ்புக்குக்கிடமும் இதே மாதிரிதான் சொல்லி யிருப்பார்கள் என நான் சந்தேகப்படுகிறேன்.’’

‘`நாசமாப்போச்சு, இது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே?’’ என்று ஆதித்யா கூறினார்.

அவருடைய குரல் விநோதமாக இருந்ததை வருண் தெரிந்துகொண்டு, ‘‘டாட், இது  உங்களுக்கு முன்பே தெரியுமா?”

அவனுடைய கேள்வியால் ஆதித்யா சுதாரித்துக் கொண்டார். ‘`என்னமாதிரியான கேள்வி இது, வருண்?”

‘`சாரி. நான் குழம்பிப் போயிட்டேன் போலிருக்கு. சரி, நீங்க எப்ப வர்றீங்க?”

‘`இந்த வார இறுதியில் வருகிறேன்’’ என்று அவர் கூறியதுடன் உரையாடல் முடிவுக்கு வந்தது.
 
அன்று மாலை தான்யா அலுவலகத்துக்கு வந்தாள். அவளிடம் வருண் தான் எதிர் கொண்டிருக்கும் பிரச்னைகளையெல்லாம் சொல்ல, அதில் அவளும் அக்கறை கொண்டாள். இதனால் அவர்களுடைய டின்னர் ப்ளானை ரத்து செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாம் என முடிவு செய்தாள்.

வாஷிங்டன் டி.சி

வருணிடம் பொய் சொன்னது ஆதித்யாவுக்கு சரியெனப்படவில்லை. ஆனால், அவருக்கு வழி யில்லை. ஏனெனில், அவருடைய அழைப்புகளை எல்லாம் எஃப்.பி.ஐ கண்காணித்து வருகிறது. இந்த பிரச்னையெல்லாம் சுமூகமாக முடிய வேண்டு மென்று அவர் நினைத்தார். அந்த சமயம், கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ‘‘ஏஜென்ட் ஸ்காட்!” என்றபடி உள்ளே நுழைந்தவர், ‘`நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்’’ என்றார்.

‘`எதைப்பற்றி?” ஆதித்யா கொஞ்சம் விலகிக் கொள்ள, ஏட்ரியன் உள்ளே நுழைந்தார். ஜன்னலுக்குப் பக்கத்திலிருந்த சோபாவை நோக்கி ஏட்ரியன் நடந்து சென்று உட்கார்ந்தார்.

‘`என்.ஒய்.ஐ.பி சி.இ.ஓ-வின் கொலையில் நீங்கள் எந்தவொரு முறையிலாவது சம்பந்தப்பட்டிருக் கிறீர்களா?”

‘`மாள்விகா...? ஓ, நோ! ஃபார் காட் சேக்!’’

‘`அப்படியென்றால் சி.பி.ஐ மூலமாக மும்பைக் குற்றவியல் பிரிவிலிருந்து எங்களுக்கு ஏன் வேண்டுகோள் வரவேண்டும், அதாவது குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் இந்தியா திரும்ப வேண்டுமென்று?”

பிட்காயின் பித்தலாட்டம் - 46

‘`அப்படியா..? எஃப்.பி.ஐ இதற்கெல்லாம் இணங்குமா?’’

‘`அப்படியொன்றுமில்லை. ஆனால், உங்களுடைய உள்துறை அமைச்சகம்மூலமாக யு.எஸ் அரசுக்கு வேண்டுகோள் வந்திருக்கிறது. நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஏ.டி.எம் கொள்ளையில் வங்கியின் சி.இ.ஓ-வும் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருக்கிறது. நாளை நீங்கள் மும்பை  திரும்பவேண்டும். டோனி உங்களோடு வருவார். நான் ஓரிரு நாள்களில் உங்களோடு சேர்ந்துகொள்வேன். ஏதோவொன்று அங்கே நடப்பதாகத் தெரிகிறது. எனக்கு கலிஃபோர்னியா வில் ஒரு வேலை இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு, கதவை மூடுவதற்கு முன்பாக ‘‘மும்பையில் சந்திக்கலாம்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

மும்பை

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆதித்யா மும்பை விமான நிலையம் வந்தடைய சி.பி.ஐ குழுவினர் அவரை உடனே அழைத்துச் சென்றனர். அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் என்பது யாருக்கும் தெரியாது.

அடுத்தநாள், அதிகாலையில் சந்தீப் ஸ்ரீவஸ்தவாவின் வீட்டிற்குள் சி.பி.ஐ குழுவினர் புகுந்து அடையாளம் எதுவும் இல்லாத வேனில் அவரைக் கூட்டிச் சென்றனர்.

தான்யா வீட்டிலிருந்த வருண் தூக்கத்திலிருந்து எழுந்து டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அதிகாரிகள் கதவைத் தட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்ட கார், பாந்த்ரா-குர்லா வளாகத்திலிருக்கும் சி.பி.ஐ அலுவலகத்துக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

தான்யா, வருண், சந்தீப் ஆகியோரைக் கொண்டுவரும்போது, மும்பை சைபர் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த ஏ.சி.பி ஷோமும், டோனியும் அந்த அறையில் இருந்தனர்.

‘`சி.பி.ஐ பிராந்திய இயக்குநர் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்’’ என்றும் கூறினார் ஏ.சி.பி ஷோம்.

ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களானது. ஒரு மணி நேரம் ஆனது. ஆனால், எதுவும் நடக்க வில்லை. கடைசியாக, மதியம் 2.30 மணிக்கு அதாவது, அவர்கள் வந்துசேர்ந்த நான்கு மணி நேரத்திற்குப்பிறகு, கதவைத் திறந்துகொண்டு மூன்று பேர் வந்தனர்.

‘`ஆதித்யா..?” சந்தீப் ஆச்சர்யத்துடன் கூப்பிட, மற்ற இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘`நீங்கள் எப்போது வந்தீர்கள்?”

‘`ஹாய், சந்தீப், நான் நேற்றே வந்துவிட்டேன்’’ என்றார் ஆதித்யா. அவருடைய கண்கள் வருணை நோக்கிச் செல்ல, அவர் சொன்ன பதில் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. யாருடனும் ஏன் தொடர்புகொள்ளவில்லை என்பதற்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை. வருண் தொடர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டே யிருந்தான். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.
 
ஆதித்யாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர், ‘`என்னுடைய பெயர் ஏட்ரியன் ஸ்காட். நான் எஃப்.பி.ஐ-யைச் சேர்ந்தவன்’’ என்றார்.

‘`கபீர் கான் – சி.பி.ஐ பிராந்திய இயக்குநர்’’ என அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘`ஓகே, நாம் ஆரம்பிக்கலாம்’’ என்று கபீர் கான் கூறினார். ‘`ஃபோக்ஸ், உங்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன. அந்த வேலையை எளிதாகச் செய்யலாம் அல்லது கடினமாகவும் செய்யலாம். நம்மால் எளிதாகச் செய்ய முடிந்தால், நம் வேலையை வேகமாக முடித்துவிட்டு டின்னர் சாப்பிட வீட்டுக்குப் போய்விடலாம்’’ என்றார். யாரும் எதுவும் பேசவில்லை.

‘`ஓகே. முதல் கேள்வி. மாள்விகா ஷேகல்,      என்.ஒய்.ஐ.பி-யின் (NYIB) சி.இ.ஓ கொலை செய்யப் பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?”

பிட்காயின் பித்தலாட்டம் - 46

‘`நான் உங்களிடமும், உங்கள் சி.பி.ஐ-யிடமும் அவர் கொலை செய்யப்பட்டார் எனச் சொல்லி யிருக்கிறேனே’’ என்று தான்யா கோபத்துடன் கூறினாள். ‘`மந்திரி என்னுடைய அம்மாவைப் பயன்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு ஆர்.பி.ஐ கவர்னர் ஆகவேண்டுமென்கிற ஆசை இருந்தது. அவருக்கு அந்தப் பதவி கிடைக்க தான் உதவுவதாக மந்திரி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அவருடைய தவறுகளை அம்பலப்படுத்தப் போவதாக அம்மா அவரை மிரட்டியிருக்கலாம். அதன் காரணமாக, அவர் அம்மாவைக் கொன்றிருக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றாள்.

‘`உன்னுடைய அம்மா மந்திரியுடன் சேர்ந்திருப்பதை நீ எப்போதாவது பார்த்தி ருக்கிறாயா?” என்று கபீர் கான் கேட்டார்.

தான்யா ஒரு நிமிடம் யோசித்தாள். சி.பி.ஐ இந்தக் கேள்வியை ஏற்கெனவே அவளிடம் கேட்டிருக்கிறது. அவள் `இல்லை’ என்று தலை யாட்டி விட்டு வருணைப் பார்த்தாள். இதைத்தான் அவனும் அவளிடம் ஏற்கெனவே சொல்லியிருந் தான்.

‘`எங்கேயோ கேள்விப் பட்டதை வைத்துக்கொண்டு குற்றம் சாட்டுகிறாய், அப்படித் தானே? ஆதாரம் இல்லாமல், ஒரு பிரபலமான மனிதர் இந்த குற்றத்தைச் செய்திருக்கிறார் என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?”

‘`நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமில்லை. மந்திரியே என் அம்மாவை விரும்பியதாகக் கூறியிருக்கிறார்.அம்மா இறந்தபின் எங்களைப் பார்க்க வந்தபோது அம்மாமீது மிகவும் அன்பு வைத்திருந்தாக அவரே சொன்னார்.’’ தான்யா அவளது ஊகத்தை நிலைநிறுத்த முயன்றாள். ‘`எல்லாம் நல்லபடியாக நடந்தால் இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகக் கூட சொன்னார்.’’

‘`உன்னுடைய அம்மாவை அவர் கொலை செய்யவில்லை என்பதற்கு அவர் சொல்லிய காரணமாகக்கூட இது இருக்கலாம் இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பார், தான்யா!’’ வருண் இடையில் புகுந்து சொல்ல அவள் அவனைப் பார்த்தாள்.

‘`நான் சொல்வது தவறாக இருந்தாலும் நிதி மந்திரியுடனான நீண்ட உரையாடல்களை, சில வேளைகளில் பின்னிரவில்கூட, எப்படி விளக்குவீர்கள். நான் பயணத்திலிருந்தபோது யாரோ வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தங்கியிருக்கிறார்கள்.’’

‘`அது மந்திரியாகத்தான் இருக்குமென்று நீ நினைக்கிறாய். மாள்விகாவின் மொபைல் ஹிஸ்டரியை நாங்கள் செக் செய்து பார்த்தபோது, அசாதாரணமான நேரங்களில் மந்திரிக்கு அவர் போன் எதுவும் செய்ததாகத் தகவல் இல்லை. மாள்விகாவுடன் ஆன உறவு தொழில் நிமித்தம் சார்ந்தது தானே தவிர வேறெதுவுமில்லை’’ என நிதி மந்திரி கூறியிருக்கிறார்.

‘`அவர் ஒரு பொய்யர். அவர் சொல்வதை நீங்களும் நம்புகிறீர்களா?’’ என அவரை தனது சொற்களால் தான்யா தாக்கினாள். அவள் அப்படிப்  பேசுவதை கபீர் விரும்பவில்லை.

‘`இதுபற்றி நிதி மந்திரியிடம் எதுவும் கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, தான்யா’’ ஆதித்யா முதல் தடவையாகப் பேசினார்.

‘`ஏனென்றால்... ஏெனன்றால்... அது நான்தான். நீ வீட்டில் இல்லாதபோது நான்தான் உன்னுடைய வீட்டுக்குச் சென்றவன். அங்கிருந்த பாதி க்ளாஸ் விஸ்கியும் என்னுடையதுதான்’’ என்றார் ஆதித்யா.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

ஓவியங்கள்: ராஜன்

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்