Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 47

பிட்காயின் பித்தலாட்டம் - 47
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - 47

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

தான்யா அதிர்ச்சியடைந்தாள். ‘`நீங்கள் இரண்டு பேரும் உறவுகொண்டிருந்தீர்களா?” எனக் கேட்டதும், ஆதித்யா மீண்டும் தலையாட்டினார்.

‘`இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. உன் அம்மா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாங்கள் சந்திப்பதை நிறுத்திக் கொண்டோம். நிதி மந்திரி பற்றி நான் ஏற்கெனவே சிபிஐ-யிடம் சொல்லியிருக்க வேண்டும். மாள்விகா தான் நிதி மந்திரியைப் பயன்படுத்திக்கொண்டாரே தவிர, நிதி மந்திரி அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாள்விகாவைப் பொறுத்தவரை, நிதி மந்திரியுடனான தொடர்பின்மூலம் தனக்கு        ஆர்.பி.ஐ கவர்னர் பதவி கிடைக்க வேண்டும் என்பதே. மாள்விகாவின் துருப்புச் சீட்டு நிதி மந்திரிதான்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - 47

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘`நீங்கள் மாள்விகாவைப் பார்ப்பதை ஏன் நிறுத்திக் கொண்டீர்கள்?” - கபீர் கேட்டார்.

வருணையும் தான்யாவையும் பார்த்து, ‘‘இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நட்புக் கொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டபின், எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்று நினைத்தோம்.’’

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எங்கள் இருவருக்குமான நட்புத் தொடர்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, நாங்கள் எங்கள் நட்பைத் தொடராமல் நிறுத்திக்கொண்டோம்.’’

‘`இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” - வருண் கேட்டான்.

‘`நான் என்ன சொல்லியிருக்க முடியும்?” வருணிடம் கேட்டார் ஆதித்யா. 

‘`அவருடைய பிறந்தநாளன்று தற்கொலை செய்துகொள்ள இது ஒரு காரணமாக இருக்கலாம்’’ என ஷோம் தர்க்கரீதியான முடிவுக்கு வர முயன்றார்.

‘`அவர் அன்றைக்குத் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார்’’ என ஆதித்யா கூறினார்.

‘`எப்படிச் சொல்கிறீர்கள்?’’ -கபீர் கேட்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 47

‘`அன்றிரவு அவர் தான்யாவிடம் வருணுக்கும் அவளுக்குமிடையேயான உறவு பற்றி கேட்க நினைத்திருந்தார். விருந்து முடிந்தபின் தான்யாவுடனும், வருணுடனும் நாங்கள் வெளியே செல்ல முடிவு செய்திருந்தோம். அவர் இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு இதுகுறித்து எனக்கு நினைவூட்டினார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவிலிருந் திருந்தால் இதுபற்றி ஏன் எனக்கு அவர் நினைவூட்ட வேண்டும்?”

இதுவரை அமைதியாக இருந்த சந்தீப், ‘`எப்படி இதுகுறித்து எதையும் எங்களிடம் சொல்லாமல் இருந்தீர்கள் ஆதித்யா?” அவருடைய குரல் குற்றம்சாட்டுவதுபோல இருந்தது.

‘`உங்களுக்கும், சுவாமிக்கும் மாள்விகாவைப் பிடிக்காது. அவருடனான எனது உறவைச் சொல்லியிருந்தால், நமக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டிருக்கும். இதுகுறித்துப் பேசுவதை மாள்விகாவும் அசெளகர்யமாகக் கருதினார்.”

‘`இந்த குடும்ப ட்ராமா போதும். நாம் அடுத்த கேள்விக்குச் செல்லலாம். ஏதோ சதி நடந்திருக் கிறது என அனுமானித்துக் கொண்டாலும், எந்தவித மோதலோ, கொலை செய்ததற்கான தடயமோ இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மாள்விகா மாடியிலிருந்து குதித்துவிட்டார் என அனுமானம் செய்துகொள்வது எளிது’’ என்று கபீர் கான் சொன்னார்.

‘`அதைத்தான் நாங்களும் சொன்னோம்’’ என்று சொல்லி, ஏ.சி.பி ஷோம் தனது இருப்பைக் காண்பித்துக் கொண்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 47

‘`ஆனால் அப்படியா நடந்தது..?” அறையில் இருந்த அனைவர்களையும் கபீர் பார்த்துக் கேட்டார். எல்லோரும் அவரையும் அதன்பின் ஆதித்யாவையும் பார்த்தனர்.

‘`நான் ஏற்கெனவே சொன்னதுபோல இது தற்கொலையாக இருக்க முடியாது’’ என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் ஆதித்யா. ‘‘ஆனால் ஏன், எப்படிக் கொல்லப்பட்டார் என்று எனக்கு எதுவும் தெரியாது.’’

கபீர் ஏட்ரியனைப் பார்த்து கேலியாக, ‘`இவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் அல்லது வடிகட்டின முட்டாள்களாக இருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டார்

‘`இவர்கள் மிகவும் ஸ்மார்ட்’’ மற்றவர்களைப் பார்த்து.

அமைதியாக இருந்த வருண், “எங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவது எதுவும் எங்களுக்குப் புரியவில்லை.’’

கபீர் சத்தமாக, ‘‘என்னது, உங்களது நேரத்தை வீணடிக்கிறோமா? உங்கள் கேலித்தனமான ட்ராமாவை நாங்கள் ஃபாலோ அப் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். ஆனால், நீங்கள் அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கொள்ளமாட்டீர்களா?’’ என்றார்.

 கபீர் தோளைக் குலுக்கிக்கொண்டு, அறையில் அங்குமிங்குமாக நடந்தார். அவருடைய கையில் இன்னும் அந்தப் பொட்டலம் இருந்தது. அவர் அதை உயர்த்தி எல்லோருக்கும் தெரியும்படி காட்டினார். அதன்பின், ‘`இதுதான் மாள்விகாவைக் கொன்றது. ஹெம்லாக் சீட்ஸ் (Hemlock seeds).’’

‘`ஹெம்லாக் சீட்ஸ்...?” -ஆதித்யா ஆச்சர்யத்துடன் சத்தமாகக் கேட்டார்.

‘`ஆமாம். இது ஒரு தாவர வகை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டும் வளரக்கூடியது. இதன் விதைகள் அதிக விஷத் தன்மை கொண்டவை. ஒருவர் இறப்பதற்குச் சின்ன `டோஸ்’ போதுமானது.

இதை உட்கொண்டால் பாதத்தில் ஆரம்பித்து இதயம் வரை கொஞ்ச கொஞ்சமாக ஏறி தசை பக்கவாதத்தை உருவாக்கிச் செயலற்றதாக்கிவிடும். ஆனால், அவருடைய இதயத்தை அது அடைவதற்குமுன்பே அவள் கீழே விழுந்திருக்கக் கூடும். ஏனெனில், அவருடைய கால்களின் கீழ்ப் பகுதி தசை வாதத்தினால் நிலையற்றதன்மையை அடைந்திருக்கும். மாடியில் குறைவான உயரத்தில் இருந்த சுற்றுச் சுவரால் அவர் விழுவதைத் தடுக்க முடியவில்லை’’ என்றார்.

***

‘`இங்கிருந்து நீங்கள் தொடர விரும்புகிறீர்களா?” என ஏட்ரியனைக் கேட்டார் கபீர். ஏட்ரியன் அனைவரையும் திரும்பிப் பார்த்தார். ‘`சதோஷி நகாமோட்டோ... யாருக்காவது தெரியுமா?”

‘`பிட்காயினை ஆரம்பித்தவர்தானே?” வருண் கேட்டான்.

‘`இது ஒரு புனைப்பெயர் எனப் பரவலாக அறியப்படுகிறது. அவர் யார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விநோதம் என்னவெனில், இந்தப் பெயர் நான்கு ஜப்பானிய நிறுவனப் பெயர்களின் – sa = Samsung, toshi = Toshiba, naka = Nakamichi and moto = Motorola – கலவையாகும். எனவே, இந்தப் பெயரை வைத்துப் பார்க்கும்போது, ஜப்பானியப் பொருள்கள் அல்லது தொழில் நுட்பத்தின்மீது பரவசம்கொண்ட ஒருவராக அவர் இருக்கக்கூடும்.’’

‘`சதோஷி நகாமோட்டோவுக்கும் மாள்விகா  இறப்புக்கும் என்ன தொடர்பு?” என்றார் ஆதித்யா.

‘`கடந்த சில வாரங்களாக `ஹூக்கர்’ என்கிற பெயரில் ஒரு ப்ளாக்கர் `Confessions of a Hooker’ என்கிற ப்ளாக்கின் ஒரு பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறாள். அவள் வெளியிடும் பட்டியலில் எங்கே நம் பெயர் இருக்குமோ எனச் செல்வந்தர்களும், பிரபலமானவர்களும் கவலைப் படுகிறார்கள். ஹூக்கர் யார் என்று இதுவரை யாருக்கும் தெரியாததால், அவள் பட்டியலில் இருக்கும் அடுத்த நபர் யார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இந்த வார இறுதியில் அவள் வெளியிட்ட பதிவில் மூன்று பிரபலங்கள் - NBA விளையாட்டு வீரர், ஹாலிவுட் நட்சத்திரம் மற்றும் ஓர் அரசியல்வாதி, அத்துடன்  செனட்டர் ஜில்லியன் டான் - தொடர்புகொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தாள்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - 47

ஆதித்யா பெருமையுடன் சிரித்துக்கொண்டார். அவர்தான் இதுபற்றி ஏட்ரியனிடம் கூறினார்.

‘`ஜில்லியன் டானைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” ஏட்ரியன் கேட்டார்.

‘`ஆமாம். அவர் கொலை செய்யப்பட்டார் எனக் கேள்விப்பட்டேன்’’ என்றாள் தான்யா.

‘`நானும்கூட அதைபற்றி பேப்பரில் படித்தேன்’’ என்று சந்தீப் சன்னமான குரலில் கூறினார்.

‘`அமெரிக்க ஜனாதிபதிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஜில்லியன் டான். அவருடைய புகழுக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் அது நேரடியாக அல்லது மறைமுகமாக ஜனாதிபதியைப் பாதிக்கும். அவர் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவரைக் கொன்றவர்கள் யார் என்கிற துப்பு கிடைக்குமா என்று தெரிந்துகொள்ள நாங்கள் அவருடைய வீட்டை சோதனை போட்டோம். ஆனால், எந்தத் தடயமும் கிடைக்க வில்லை. இப்போது, ஹூக்கர் பதிவுக்குப் பிறகு, கவலையடைந்த ஜனாதிபதி மீண்டும் புலன் விசாரணை நடத்தும்படி எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.’’

அறையில் இருந்த அனைவருக்கும் எதுவும் புரியவில்லை.

‘`நாங்கள் `சல்லடை’ வைத்து அவர் வீட்டை அலசினோம். அப்போது கைப்பற்றப்பட்ட அவருடைய லேப்டாப்பில் பரபரப்பு ஏற்படுத்தக் கூடிய எந்தவித விஷயமும் இல்லை. ஆனால், அவருடைய வீட்டை இரண்டாவது முறை சோதனையிட்டபோது அவருடைய ஸ்டடி டேபிளில் `மாக்புக் ஏர்’ வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் இடம் இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த மாக்புக்கில் மூன்று நிலை கொண்ட                            encryption-க்குப்பிறகு இருந்த தரவுகள் யாரையும் மடக்குவதற்குப் போதுமானதாக இருந்தது.’’

‘`அது என்ன?’’ கபீர் கேட்டார். அவர்கள் இருவரும் மிகவும் குஷியாக இருந்தனர்.

‘`அதுபற்றி விரைவில் சொல்கிறேன்’’ என்ற ஏட்ரியன் தொடர்ந்து, ‘`அவர் படித்த பல்கலைக் கழகமான ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசியராக இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக அங்கே அவர் கற்றுத் தருகிறார். செனட்டருக்கான வேலை அதிகமிருந்ததால், ஆறு மாதங்களாக அவருடைய வருகை மிகவும் குறைவாக இருந்தது.

நான்கு வருடங்களுக்குமுன்பு, பல்கலைக்கழக அனுமதியில்லாமல் ஒரு ரகசியமான புராஜெக்ட்டில் ஈடுபடுத்த டாப் மூன்று மாணவர் களைத் தேர்வு செய்தார். அந்த புராஜெக்ட்டின் முடிவு என்ன?’’ அவர் எல்லோரையும் பார்த்தார்,

ஒரு மர்மமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. ‘`முழுத் திட்டம், நிமிடம் வாரியாக பிட்காயின் குறித்த விவரங்கள், செயல்முறைகள், அதை வெளியிடும் முறை, சந்தை விலை குறித்த முறைமை, பரிவர்த்தனைகள், பரிவர்த்தனைகள் சரிபார்ப்பு, பிட்காயின் மைனிங் போன்ற அனைத்தும் இருந்தது. இந்தத் திட்டத்திலிருந்துதான் எல்லாம் ஆரம்பமானது. இந்தக் குழுதான் பிட்காயினைக் கண்டு பிடித்தவர்கள்.’’

இதைக் கேட்ட ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘`க்ரிப்டோக்ராஃபி வல்லுநரான ஜில்லியன் டான்தான் இளம் வயதில் சதோஷி நகாமோட்டோ.’’ மீண்டும்தான் பேசுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் நோட்டமிட்டார். `மாற்று நாணயமுறைக்கான’ ரகசிய கமிட்டியின் தலைவராக இவர் செயல்பட்டார். பிட்காயின் போன்ற நாணய முறைகளின் மதிப்புக் குறித்து இந்த கமிட்டிதான் விவாதம் செய்துவந்தது. இது தற்செயலாக அமைந்ததா அல்லது இந்தப் பொறுப்பு கிடைக்கவேண்டுமென்பதற்காக லாபியிங் செய்தாரா தெரியவில்லை.’’

வருண், “இதைச் சொல்வதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால், முழுவதை யும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்டுபிடித்த டேட்டா அவரது கம்ப்யூட்டரிலும் இருந்திருக்கும். ஏனெனில், அவர் அமெரிக்க அரசின் சார்பாக இந்த கமிட்டிக்கு தலைமை வகித்து வந்திருக்கிறார்.’’

‘`நல்ல கேள்வி’’ என்று ஒப்புக்கொண்ட ஏட்ரியன், ‘`இங்கேதான் ஹூக்கர் நுழைகிறாள். கடந்த வாரம் வெளியான ஹூக்கர் பதிவு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. அவர் ஆதித்யாவை சுட்டிக் காட்டி, “பதிவு வித்தியாச மாக இருந்ததை இவர்தான் கண்டுபிடித்தார்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - 47

வருண் தலையாட்டினான். ஆதித்யா அவனை நேராகப் பார்த்தார். ஏட்ரியன், ‘`அந்த ப்ளாக்கின்படி, அவளை `வார்ம்-அப்’ செய்ய ஜில்லியனுக்கு நேரமாகும் என்பதால், அவருக்கு அவள் வைத்த செல்லப் பெயர் – ஃப்ராஸ்ட்டி. வித்தியாசமான செல்லப் பெயர். காட்டன் ட்ரைய்லை புரமோட் செய்வதற்காக யாரோ ஒருவர் பயன்படுத்திய பெயரும் ஃப்ராஸ்ட்டிதான்.’’

‘`காட்டன் ட்ரைய்ல்..?” சந்தீப் கேட்டார். ஆதித்யா அதுகுறித்து அவரிடம் வேகமாகச் சொல்லி முடித்தார்.

‘`க்ரிப்டோகரன்சியும், ஃப்ராஸ்ட்டியும் போதாதென்று, ஜில்லியனுடன், இன்னொரு மனிதரை ஸ்டான்ஃபோர்டு விடுதியில் சந்தித்ததைப் பற்றியும் அவள் விளக்கமாகச் சொல்லியிருந்தாள்.’’

‘`ஓ, மூன்று பேரா? வாவ்!’’ ஏ.சி.பி ஷோமின் கண்களில் பிரகாசம் தெரிந்தது. இதைக் கேட்டவுடன் யாரேனும் பதற்றப்படுகிறார்களா என அவர் சுற்றிலும் பார்த்தார்.

‘`காட்டன் ட்ரைய்ல், க்ரிப்டோக்ராஃபி, ஸ்டான்ஃபோர்டு, ஃப்ராஸ்ட்டி… இவையெல்லாம் தற்செயலானதாக நமக்குத் தெரிந்தாலும் இதை நிராகரித்துவிட முடியாது. எஃப்.பி.ஐ-யில் இருக்கும் எங்களுக்கு இது தற்செயலானதாகத் தோன்றவில்லை என்பதால், நாங்கள் ஸ்டான் ஃபோர்டுக்குச் சென்றோம். ஜில்லியன் டான் அங்கு மிகவும் பிரபலமானவராக இருந்தார்   என்பதைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்கிற அந்தஸ்து அவரைக் காப்பாற்றி வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மாணவருடன் அவர் நெருக்கமாக இருந்ததுடன், அந்த மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு அடிக்கடி செல்பவராகவும் இருந்திருப்பது தெரியவந்தது. ஹூக்கரையும் அவரோடு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் அங்கு செல்வதையும், வெளியேறுவதையும் யாரும் பார்க்கக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டனர். ஆனால், அவரது அந்தஸ்து தெரிந்ததால், அதுபற்றி யாரும் பேசவில்லை.’’

ஏட்ரியன் ஏ.சி.பி ஷோம் பக்கம் திரும்பி, ‘`காபி கிடைத் தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

‘`இதோ வரவழைக்கிறேன்’’ என்று சொல்லிக்கொண்டே மற்றவர்களையும் பார்த்து, ‘`காபி வேண்டுமா?” எனக் கேட்க அனைவரின் கையும் உயர்ந்தது. ‘`நான் முன்பே கேட்டிருக்க வேண்டும்’’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே வெளியே செல்ல, ஏட்ரியன் பேச்சைத் தொடர்ந்தார்.

‘`திரும்பவும் மேக்புக்குக்கு வருகிறேன். ஜில்லியன் லேப்டாப்பில் கண்டுபிடித்த அந்த என்க்ரிப்டட் அறிக்கையில் மூன்று ஸ்டான் ஃபோர்டு மாணவர்களின் பெயர் இருந்தன. ஊகியுங்கள் பார்க்கலாம்? அந்த மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட்டார்கள்.’’

(பித்தலாட்டம் தொடரும்)

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்