Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 48

பிட்காயின் பித்தலாட்டம் - 48
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 48

ஓவியங்கள்: ராஜன்

பிட்காயின் பித்தலாட்டம் - 48

ஓவியங்கள்: ராஜன்

Published:Updated:
பிட்காயின் பித்தலாட்டம் - 48
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 48

மும்பை

‘`ஒருவன் ஜப்பானிய நாட்டைச் சேர்ந்தவன், விடுதியில் தூக்குப் போட்டுக்கொண்டான். இன்னொருவன், ஸ்டான்ஃபோர்டிலிருந்து வெளியேற்றப்பட்டவன், டோனியால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துபோனான்.’’

‘`மூன்றாவது நபர் எங்கே?’’ கபீர் கேட்டார்.

‘`அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம்.”

‘`அடப்பாவிகளா... யார் அது?’’ ஏ.சி.பி சத்தமாகக் கேட்டார். யாரும் பேசவில்லை.

‘`ஹூக்கரின் மூன்று பேரும், ஜில்லியனும் மூன்றாவது மாணவர் தங்கியிருந்த விடுதியில் இருந்தனர். பிட்காயினைக் கண்டுபிடித்த நான்கு பேர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே சென்றபிறகும் ஜில்லியனுடன் தொடர்பில் இருந்தவர். சைபர் ஸ்பேசில் அவருக்குப் பெயர் ஆல்டாய்ட்ஸ்.  ஜில்லியனின் லேப்டாப்பை டிக்ரிப்ட் செய்தபோது அனைத்துத் தகவல்களும் கிடைத்தது.

அந்த முக்கியமான நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு டோனி நுழைந்தார். அவருடைய கையில் லேப்டாப் இருந்தது. அவருடன் மும்பைக் காவல் துறையின் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரும் இருந்தார். டோனி, ஏட்ரியனின் காதில் ஏதோ முணுமுணுக்க, ஏட்ரியனின் நெற்றி யிலிருந்த மனஅழுத்த ரேகைகள் ரிலாக்ஸ் ஆனது. அவர் எல்லோரையும் பார்த்துப் பேசினார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 48

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`ஆல்டாய்ட்ஸ் யார் என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு ஆதாரம் இருக்கிறது. அந்த உண்மையான ஆல்டாய்ட்ஸ் இப்போது எழுந்து நிற்கலாம்!”

சற்று நேரம் கடந்தவுடன், ‘`நான் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதில் எனக்குப் பிரச்னை எதுவுமில்லை.’’ அவர் தோளைக் குலுக்கிக்கொண்டு, ஆதித்யாவுக்கு வலதுபக்கம் சென்று, அவரின் அருகில் இருந்த தான்யாவைப் பார்த்து, ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’’ என்று கேட்டார். 

‘`இது பொய்!” என்று சத்தமாகக் கத்தினாள் தான்யா. ‘`இந்த பிட்காயின் ஊழலில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னைக் குற்றம்சாட்ட முடியும்’’ என்று கேட்டாள் தான்யா. அதில் அவளது கோபம் தெரிந்தது.

‘`இது மட்டுமில்லை. உன் அம்மாவைக் கொன்றதும் நீதான்’’ - கபீர் அதிர்ச்சியளித்தார்.

‘`ஓ மை காட்!’’ என்று சொல்லிக்கொண்டே தனது கைகளை உதட்டில் வைத்துக்கொண்டாள்.

‘`நான்சென்ஸ். நான் மிகவும் நேசித்த அம்மாவை நான் ஏன் கொல்ல வேண்டும்?”

‘`நீ கொலை செய்தவர்களில் உன் அம்மாவும் ஒருவர். இதுபற்றி பிறகு சொல்கிறேன். முதலில், நீ எப்படிக் கொலை செய்தாய் என்று கூறுகிறேன்.’’ கபீர் அவளை நேரடியாகப் பார்த்தார்.

‘`எந்த ஆதாரமும் இல்லாமல் எனது பெயரைக் கெடுக்கிறீர்கள்’’- தான்யா கோபத்தில் கத்தினாள்.

‘`வெயிட், வெயிட்!’’ கபீர் பிரீஃப்கேஸிலிருந்து இன்னொரு பிளாஸ்டிக் பொட்டலத்தை எடுத்தார். அறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே உயர்த்திப் பிடித்து அதை லேசாக ஆட்டினார்.

‘`வாசபி’’ சந்தீப் முணுமுணுத்தார். ‘`வாசபி வாசனைகொண்ட கொட்டைகள்?”

‘`இவை உன் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தன தான்யா?”

‘`வாசபி வாசனை அம்மாவுக்குப் பிடிக்கும். அவர் குடிக்கும்போது இதை உபயோகிப்பார்.’’ 

 ‘`இதில் ஒன்றைச் சாப்பிட்டுப் பார்க்கிறாயா? எங்களுக்காக ஒன்றே ஒன்று...?’’

பிட்காயின் பித்தலாட்டம் - 48

‘`அவள் சாப்பிடமாட்டாள். அவளுக்கு அது அலர்ஜி” என்றான் வருண்.

‘`இதனால் பெரிதாகத் தீங்கெதுவும் இல்லை. ஒரே ஒரு கொட்டை, நைட்டிங்கேல்?” ஏட்ரியன் நடந்துபோய் அவள் பக்கத்தில் நின்றுகொண்டார்.

‘`அவள் சாப்பிடமாட்டாள். காரணம், இந்தக் கொட்டைகளில் ஹெம்லாக் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட விஷம் தடவப்பட்டிருக்கிறது. மாள்விகா குடிப்பதற்கு மதுக்கிண்ணத்தை எடுத்துச்சென்ற தான்யா, இந்தக் கொட்டை களையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் தடவப்பட்டிருந்த விஷம் சில நிமிடங்களுக்கு உள்ளாகவே வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. மாடியிலிருந்து அவரை விழ வைத்திருக்கிறது. இதற்கிடையே நிதிமந்திரிக்கும், உன் அம்மாவுக்கும் நெருக்கம் இருந்ததாகச் சொல்லி ஊரை நம்ப வைக்க முயற்சி செய்தாய்.  ஒருவேளை `தற்கொலை’ கதை உதவாவிட்டால், கொலைக்கு நிதி மந்திரிதான் பொறுப்பு என உலகை நம்ப வைக்கவும் முயற்சி செய்திருக்கிறாய். பிரமாதம், தான்யா பிரமாதம்.’’

‘`அம்மாவை நான் கொல்லவில்லை. ஹெம்லாக் விதைகள் விஷத்தன்மை கொண்டது என்பதும் எனக்குத் தெரியாது. நானே அம்மாவைக் கொலை செய்ததாக நீங்கள் சொன்னாலும், அதற்கு என்ன ஆதாரம்?’’

கபீர் சிரித்தார். தான்யா ஆம்புலன்ஸுக்குள் நுழைவது போலிருந்த புகைப்படத்தை எடுத்து, அதைப் பெரிதுப்படுத்தி காட்டினார் அவர்.   அதில் அவளுடைய பேக் திறந்தபடி இருந்தது. இரண்டாவது போட்டோ தான்யாவுடைய பேக்கின் குளோஸப் போட்டோ. பேக்கின் உள்ளே, சிறிய பாட்டில் இருந்ததை அனைவராலும் பார்க்க முடிந்தது.

‘`என் கையில் நீங்கள் பார்க்கும் இந்த பாட்டில் தான்யாவின் பேக்கில் பார்த்த அதே பாட்டில் தான்.” அவர் தான்யா பக்கம் திரும்பி, ‘‘இந்த பாட்டில் உங்கள் பேக்கிற்கு எப்படி வந்தது என்று சொல்ல முடியுமா? ஃபோர் சீஸன்ஸ் மது பானத்தோடு வாசபிக் கொட்டைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்லியிருந்தாலும், உன் அம்மாவுக்காக நீ ஏன் வாசபி கொட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும்?’’ இதுபற்றி ஃபோர் சீஸன்ஸ் உறுதியளித்து எழுதிய மெயிலைக் காண்பித்தார்.

அமைதி. அவள் தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டி ருப்பது போல் தெரிந்தது.

‘`எல்லாவற்றையும்விட வாசபிக் கொட்டைகள்தான் இதற்குக் காரணம் என ஏன் நீங்கள் சந்தேகிக்க வேண்டும்?” - ஆதித்யா கேட்டார்.

‘‘சமையலறையில் க்ளீனிங் செய்வதற்குரிய சாமான்களோடு சேர்ந்து இதுவும் இருந்தது. வாசபிக் கொட்டைகளை ஏன் அதோடு சேர்த்து வைக்கவேண்டும் என எங்களுக்குச் சந்தேகம் வந்ததால் சோதனை செய்தோம். அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. மாள்விகாவின் உள்ளுறுப்புகளை மறுஆய்வு செய்யச் சொன்னோம். அப்போது நச்சுத்தன்மைக்கான தடயங்கள் இருப்பது தெரியவந்தது.’’

பிட்காயின் பித்தலாட்டம் - 48

‘‘ஆரம்பத்தில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் இது குறிப்பிடப்பட வில்லையா?” - ஆதித்யா கேட்டார்.

‘`இல்லை. நச்சுயியல் சோதனையில், ஒரு பரிசோதனையின்மூலம் அனைத்து விஷப் பொருள்களையும் தெரிந்துகொள்ள முடியாது. பிரேதப் பரிசோதனையின்போது சில அடிப்படை விஷப் பொருள்களின் கலப்பு குறித்து மட்டுமே செய்யப்படும். சந்தேகம் இருந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட நச்சுப்பொருள் கலந்திருக்கக்கூடும் என நினைக்கும்பட்சத்தில் தடயவியல் நச்சுயியல் உபயோகமாக இருக்கும்.’’

ஆதித்யா, தான்யாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார். ‘`ஆனால், இதை நம்ப முடியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும். தான்யா, மாள்விகாவை கொன்றிருக்க முடியாது!”

‘`மிஸ்டர் கான் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை ஆதித்யா அங்கிள். நான் அம்மாவைக் கொல்லவில்லை!”

‘`அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்’’ என்றார் கபீர்.

‘`ஆனால், மிஸ்டர் கான், தான்யாதான் மாள்விகாவைக் கொலை செய்திருக்கக்கூடும் என வைத்துக்கொண்டாலும் அப்படிச் செய்வதற்கான உந்துதல் என்னவாக இருந்திருக்கமுடியும்?’’

‘`இது வாசபியினால் மட்டும் இல்லை, மிஸ்டர் ராவ். மாள்விகா இறந்தபோது அவருடமிருந்தது அனைத்தையும் கவனமாகப் பார்த்தால், அவர் தற்கொலை செய்துகொண்டார் என நாம் தவறான முடிவுக்கு வருவோம். அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றபோது ஏற்கெனவே அவரிடமிருந்தது அப்போது இல்லாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சி.பி.ஐ இந்த வழக்கை மறுபரிசோதனை செய்ய ஆரம்பித்தபின், சில நாள்களுக்குமுன்புதான் நாங்கள் இதைக் கண்டுபிடித்தோம்’’ யாருடைய எதிர்வினைக்கும் காத்திராமல் அவர் இன்னொரு புகைப்படத்தை வெளியே எடுத்தார்.

அந்தப் புகைப்படத்தில் மாள்விகா ஒயின் க்ளாஸ் வைத்திருந்தார். அது விருந்தின்போது எடுக்கப்பட்டது. ‘`அப்போது அவர் அணிந்திருந்த எல்லாவற்றையும் கவனமாகப் பாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே மேலும் சில புகைப் படங்களை அவர் தனது பேக்கிலிருந்து எடுத்தார். ‘`ஆம்புலன்ஸ் வருவதற்குமுன்பும், ஆஸ்பத்திரிக்குச் சென்றடைந்தபின்பும் எடுக்கப்பட்ட இந்தப் படங்களைப் பாருங்கள்’’ என்றார்.

கபீர் அங்கிருந்த ஒவ்வொருவரிடம் கேட்டார். யாரும் பதிலளிக்கவில்லை. ‘‘தான்யா, உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?”

‘`அவள் சொல்லமாட்டாள். நானே சொல்லிவிடுகிறேன்’’ என கபீர் தொடர்ந்தார். ‘`மாள்விகா ஒயின் க்ளாஸ் வைத்திருக்கும் படத்தில் அவருடைய வலது கையில் மோதிரம் அணிந்திருக்கிறார். அடுத்த படம் அவர் விழுந்த இடத்தில் எடுத்தது. அப்போதும் அந்த மோதிரம் அவர் கையில் இருந்திருக்கிறது. மூன்றாவது படம் ஆஸ்பத்திரியில் எடுக்கப் பட்டது. அதில் மோதிரம் `மிஸ்ஸிங்’! இதோ இங்கே பாருங்கள்!’’ என்று சொல்லி மேலும் இரு படங்களைக் காண்பித்தார்.

‘`அவருடைய விரல்களைப் பாருங்கள்” என கபீர் வலியுறுத்தி னார். ‘`விருந்தின்போது எடுத்த படத்தில் மோதிரம் இல்லை. ஆனால், ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸிலிருந்து இறங்கும் போது இருக்கிறது!”

எல்லோரும் அதைப் பார்த்து முடித்தவுடன், அவர், ‘`தான்யா இப்போது அந்த மோதிரத்தைப் போட்டிருக்கிறாள்” என்றார்.

‘`இது என் அம்மாவின் மோதிரம். அவருடைய விரலிலிருந்து கழட்டிப்  போட்டிருக்கிறேன். இது எப்படி நீங்கள் சொல்வதை நிரூபிப்பதாக இருக்கிறது? நீங்கள் மறைமுகமாக எதைச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள்?’’ என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டவள், ‘`நான் தவறெதுவும் செய்யவில்லை’’ என்று அழுது கொண்டே வருணை நோக்கிச் சென்று கட்டிக் கொண்டாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - 48

வருண் அவளை லேசாகத் தள்ளிவிட்டுக் கொண்டே ‘`ஏன் தான்யா, இந்த மோதிரத்தைப் பற்றி என்னிடம் பொய் சொன்னாய்?’’ அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டு லேசாக மேலே தூக்கினான். தான்யா அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். ஆனால், அவள் நினைத்திருந்ததைவிட வருணின் பிடி இறுக்கமாக இருந்தது.

‘`நீ என்னைக் காயப்படுத்து கிறாய் வருண்’’ என அவள் கூறினாள். வருண் அதுபற்றி கவலைப்படவில்லை. அவளுடைய விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்ற முயற்சி செய்தான். தான்யா தனக்கு அதிர்ஷ்டமானது என்று சொன்னது அவள் விரலை விட்டு எளிதாக எடுக்க வந்தது. குடித்திருந்த தான்யாவுடன் படுக்கையில் படுத்திருந்தபோது அவன் விரலைக் கீறிவிட்ட இந்த மோதிரம் கழட்டுவதற்கு எளிதாகவே இருந்தது.

வருண், ஏட்ரியன் இருக்குமிடத்திற்குச் சென்று மோதிரத்தைக் கொடுத்துவிட்டு தான்யா பக்கம் திரும்பி, ‘`நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ப்ரப்போஸ் செய்தபோது நீ ஏன் இந்த மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்கிறது, கழற்ற வராது என்று சொன்னாய்?”

‘`எனக்குத் தெரியவில்லை, வருண். என்னை நம்பு! எனக்குத் தெரியாது.’’
 
அப்போது, ஏட்ரியன் பூதக்கண்ணாடி ஒன்றை எடுத்து மோதிரத்தை பரிசோதித்துப் பார்க்க ஆரம்பித்தார். அதில்...

(பித்தலாட்டம் தொடரும்)

-  ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism