Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 49

பிட்காயின் பித்தலாட்டம் - 49
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 49

ஓவியங்கள்: ராஜன்

பிட்காயின் பித்தலாட்டம் - 49

ஓவியங்கள்: ராஜன்

Published:Updated:
பிட்காயின் பித்தலாட்டம் - 49
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 49

மும்பை

‘`பிட்காயினின் பிரைவேட் கீ இதில் எப்படிப் பொறிக்கப்பட்டது என்பதை உன்னால் விளக்க முடியும்!” என்றார் ஏட்ரியன்.

‘`எந்த பிரைவேட் கீ பற்றி நீங்கள் பேசு கிறீர்கள்? எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.”

‘`பிட்காயினைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான நீ இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது ஸ்வீட் ஹார்ட்!’’ என்றார் ஏட்ரியன்.

அவர் மற்றவர்கள் பக்கம் திரும்பி பிட்காயின் வாலெட்டில் பிரைவேட் கீ என்றால் என்ன என்று சுருக்கமாகக் கூறினார். அதன்பின் தான்யா பக்கம் திரும்பி, ‘`ஸ்வீட் ஹார்ட், நீ உன் அம்மாவைக் கொலை செய்ததற்குக் காரணம் பிட்காயினுக்கு மட்டும்தானே?” என்றார்.

‘`பணத்துக்காக மாள்விகாவைக் கொல்ல வேண்டும் என்கிற அளவுக்கு அவரிடம் பணமில்லை. தவிர, தான்யா மட்டும்தான் அவருடைய வாரிசு. மாள்விகாவிடம் உள்ளது எல்லாமே தான்யாவுக்குத்தானே’’ என்றார் சந்தீப்.

பிட்காயின் பித்தலாட்டம் - 49

‘`அவரிடம் போதுமான அளவுக்குப் பணம் இருந்தது” என்று ஆதித்யா கூற, அனைவரும் அவரைப் பார்த்தனர். ‘‘நிதி மந்திரிக்காகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணமோசடி (Money laundering) வேலையை மாள்விகா செய்தார். அவையெல்லாம் பணத்துக் காகவும், ஆர்.பி.ஐ கவர்னர் வேலைக்காகவும்தான் அவர் செய்து வந்தார். நிதி மந்திரி ஏறக்குறைய ரூ.500 கோடியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததற்காக சுமார் ரூ.50 கோடியைப் பெற்றார். அதையெல்லாம் அவர் பிட்காயின்களாக வைத் திருந்தார். அந்த பிட்காயின்களை  இழந்துவிடுவமோ என்கிற பயம் அவருக்குள் இருந்து வந்தது. எல்லாப் பணத்தையும் பிட்காயின்களாக வைத்திருப்பது பைத்தியக்காரத்தனம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் கேட்க வில்லை. மற்றவர்கள் அணுகமுடியாத அளவுக்கு அவர் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.’’

‘`அவையெல்லாம் இதோ இந்த லேப்டாப்பில்  இருக்கிறது. அவருடைய பிட்காயின் வைப்பு, பரிவர்த்தனை விவரங்கள் எல்லாம் இருக்கிறது. Unencrypted வடிவத்தில் டான் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த 750GB மெமரி கொண்ட லேப்டாப்பில் 1GB–க்குத்தான் டேட்டா இருக்கிறது. இதிலிருந்து இந்த லேப்டாப்பின் உபயோகம் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான்; அதாவது, அவருடைய பரிவர்த்தனைகள் குறித்த பதிவுகளை மட்டும் நிர்வகித்துக்கொள்வதற்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த லேப்டாப் இணையத்தை உபயோகிப்பதற்காக இதுவரை லாக் ஆன் செய்யப்படவே இல்லை’’ என்றார் டோனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்காயின் பித்தலாட்டம் - 49

சி.பி.ஐ-க்கு மெயில் அனுப்பிய அந்த இரவு வருணுக்கு நினைவு வந்தது. அவன் தான்யாவைப் பார்த்தான். அவளுடைய கண்களில் பயம் தெரிந்ததுடன், மிகவும் கவலையுடன் காணப் பட்டாள். எல்லாம் தெரிந்துவிட்டது என்கிற கவலையா? அவன் யோசித்தான். அவளை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தான். ‘`அதனால்தான் இந்த லேப்டாப் மூலம் இணையத்தைப் பயன்படுத்த அன்றைக்கு நீ  அனுமதிக்கவில்லையா தான்யா?” என்று கேட்டான்.

‘`எப்போது வருண்..?’’

‘`ஒரு நாள் இரவு நிதி மந்திரிக்கு எதிராக சுவாமி அங்கிள் வாக்குமூலம் கொடுத்தது பற்றி சி.பி.ஐ-க்கு செய்தி அனுப்பும்போது நீ அந்த செய்தியை இன்னொரு லேப்டாப்புக்கு மாற்றச் சொன்னாய். இன்னொரு லேப்டாப் தானாகவே வை-ஃபையுடன் தொடர்பு கொண்டுவிடும் என்பதற்காக நீ மாற்றச் சொல்கிறாய் என நினைத்தேன். இதிலிருக்கும் அவருடைய நிதி சம்பந்தமான விவரங்களை யாராவது ஹேக் செய்து திருடிவிடுவார்கள் என்பதால் அனுமதிக்கவில்லை என்று நான் அப்போது நினைக்கவில்லை. முட்டாள்போல, நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்பினேன்’’ என்று சொல்லிக்கொண்டே வருண் இன்னொரு பக்கம் பார்த்தான். அவன் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது.

தான்யா அவனை முறைத்துப் பார்த்தாள். ‘`தான்யா, உன் அம்மா பிட்காயினாக எவ்வளவு பணம் வைத்திருந்தார்?’’ என கபீர் கேட்டார்.

‘`போதும்!” அவள் கத்தினாள். ‘`முதலில் என் அம்மாவை நான் கொன்றதாக குற்றம் சாட்டினீர்கள். அதன்பின், அவருடைய எல்லா பிட்காயின்களையும் திருடியதாகச் சொன்னீர்கள். உங்களுக்குள் என்ன இருக்கிறது என கடவுளுக்குத் தான் தெரியும்’’ என்றாள்.

‘`கொஞ்சம் பொறு, கொஞ்சம் பொறு!’’  ஏட்ரியன் சத்தம் போட்டார். ‘`உன்னைக் குற்றம் சாட்டியது இதற்காக மட்டுமில்லை. போதை மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அனைத்துவிதமான குற்றங்கள் நடக்கும் அநாமதேய இனையதளமான காட்டன் ட்ரைய்லின் நிறுவனரும் நீதான். ஜில்லியன் டானைக் கொலை செய்ய ஏற்பாடு செய்ததும் நீதான். ஏனெனில், அவர் தான் செய்த காரியங்கள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் சொல்லி இனி எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுவிட வேண்டு மென்று நினைத்திருந்தார். ஐந்து மில்லியன் டாலர் ஏ.டி.எம் கொள்ளை நடக்கவும் நீ உதவியதுடன், பயங்கரமான மால்வேர்களையும் கட்டவிழ்த்து விட்டு, உலகளவில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களையும், ஸ்மார்ட் போன்களையும் செயலிழக்கச் செய்திருக்கிறாய்’’ - ஏட்ரியனின் முகத்தில் கோபம் தெறித்தது.

தான்யா தன் கைகளால் வாயை மூடிக் கொண்டாள். ‘`நீங்கள் சீரியஸாகத்தான் சொல்கிறீர்களா?’’ என்று கேட்டாள்.

‘`இதற்குமேல் சீரியஸாக ஆக முடியாது மிஸ் நைட்டிங்கேல்.’’

‘`இதற்கு என்ன ஆதாரம்?’’ என்று தான்யா கேட்டபோது அவளது குரலில் பயம் மற்றும் விரக்தி வெளிப்பட்டது.

‘`வெல். ஜில்லியன் டான் அனைத்தையும் விட்டுவிடுவதாக எடுத்த முடிவு சம்பந்தமாக உனக்கும் அவருக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடல் அவர் லேப்டாப்பிலிருந்து தெரிய வந்தது. ஏனென்றால், அவர் எதிர்பார்த்தைவிட இது பெரிதாக இருந்தது. உங்கள் இருவருக்கு மிடையே நடந்த உரையாடல் இப்போது என்.எஸ்.எ வசம் இருக்கிறது. அவரை மிரட்டி எழுதிய மின்னஞ்சல்கூட இருக்கிறது. நீ சொல்வதை அவர் கேட்காவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று அவர் கொல்லப்படுவதற்கு 12 நாள்களுக்கு முன்னால் நீ எழுதிய மெயிலும் இருக்கிறது. இந்தக் குற்றச் சாட்டுகளை எல்லாம் மறுப்பதற்கு உனக்கு வாய்ப்பு தரப்படும். ஆனால், அவையெல்லாம் உண்மையில்லை என்று நீ நிரூபிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

உனக்கும், ஜில்லியன் நடந்த உரையாடல்கள் உன்னுடைய  லேப்டாப்பிலும் இருக்கிறது. அதுவும் ஜில்லியனின் லேப்டாப்பில் இருக்கும் உரையாடலும் ஒன்றுக்கொன்று பொருந்துகிறது. உங்கள் இருவருக்குமிடையேயான உரையாடலை இரண்டு லேப்டாப்களைப் பயன்படுத்தி, ஆய்வு செய்துபார்த்தால், உங்கள் இருவருக்கும் இடையேயான விரோதம் அதிகரித்து வந்திருப்பது தெரிகிறது. எனவே, ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன தான்யா.’’

‘`இல்லை, நான் ஜில்லியனைக் கொல்லவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன். அவரை நான் ஏன் கொல்ல வேண்டும்?”

‘‘ஆ… கடைசியாக ஒரு வாக்குமூலம். ஆக, உனக்கு ஜில்லியனைத் தெரியும்.’’ என்று வளைத்தார் ஏட்ரியன். தான்யாவிடமிருந்து  பதிலில்லை.

பிட்காயின் பித்தலாட்டம் - 49

‘`காட்டன் ட்ரைய்லை நடத்துவதற்கு உனக்குப் பணம் தேவை. எனவே, ஏ.டி.எம் கொள்ளைக்குச் சூத்ரதாரியாக இருந்திருக்கிறாய்.’’ 

‘`இல்லை. நான் செய்யவில்லை. இது ஒரு செட்-அப். ஏ.டி.எம் கொள்ளை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் என்னுடைய வக்கீலிடம் பேச வேண்டும்’’ என்று தான்யா அழாத குறையாகக் கெஞ்சினாள்.

‘`உனக்கு வக்கீல் கிடைப்பார். ஆனால், அது எங்கள் விசாரணை முடிந்தபிறகே சாத்தியப்படும். நியூயார்க்கில் ஏ.டி.எம் கொள்ளை ஐந்து டெபிட் கார்டுகளைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து கார்டுகளும் என்.ஒய்.ஐ.பி-யின்  மூத்த அதிகாரிகளுடையது. தற்செயலாக, அவர்கள் எல்லோரும் நான்கு மாதங்களுக்குமுன்  உன்னுடைய வீட்டிற்கு டின்னருக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, என்.ஒய்.ஐ.பி–யில் புதிய சி.இ.ஓ பதவியேற்ற சமயத்தில் அவருக்காக உங்கள் வீட்டில் நடந்த வெல்கம் பார்ட்டிக்கு வந்திருக்கிறார்கள். ‘‘உங்கள் குடும்பத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்கிற பெயரில் ஆடிய முட்டாள்தனமான விளையாட்டின்போது அவர் களிடமிருந்து அவர்களின் பர்ஸ்களையெல்லாம் வாங்கி தனி அறையில் வைத்தபின், அவர்களது மனைவிமார்களைக் கூப்பிட்டு அவரவர் கணவருடைய பர்ஸை அடையாளம் கண்டுகொண்டு எடுக்கும்படி சொல்ல, வேறு அறையில் பர்ஸ்களை வைக்கும்போது நீ அதிலிருந்த கார்டை ஸ்கிம் செய்து அந்த விவரத்தை நியூயார்க்கில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறாய். இன்று காலையில் உன்னுடைய அபார்ட்மென்டை சோதனையிட்ட போது பாத்ரூமிலிருந்து கார்டை ஸ்கிம் செய்யக்கூடிய கருவி கிடைத்தது. நீ மாட்டிக்கொள்ளமாட்டாய் என்கிற தைரியத்தில் இருந்ததால், அந்த ஸ்கிம்மரிலிருந்து இன்னும் அந்த ஐந்து கார்டுகள் குறித்த விவரம் அழிக்கப்படாமலேயே இருக்கிறது. ஏ.டி.எம் கொள்ளையில் இது உன்னை மையப்படுத்துகிறது’’ என்று சொல்லிவிட்டு, கார்டு ஸ்கிம்மர் அனைவருக்கும் தெரியும்படி உயரமாகத் தூக்கிக் காண்பித்தார். அது கருப்பாக, சிறிதாக ஒரு பேட்டரி சார்ஜர் போல இருந்தது.

‘`இதற்குமுன் இதை ஒரு போதும் நான் பார்த்ததில்லை’’ என்றாள் தான்யா.

‘`உன்னுடைய கைரேகை இந்த கருவி முழுவதும் இருக்கிறது’’ என்றார் கபீர். ‘`எந்தவிதக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக இவையனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இன்றைக்கு உன்னுடைய வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களின் விவரமும், ஒரு நாள் இரவு நடந்தப்பட்ட ரெய்டின்போது எடுக்கப்பட்ட பொருள்களின் விவரமும் இந்த பேப்பரில் பட்டியிலிடப்பட்டிருக்கிறது.’’

‘`இது ஒரு செட்-அப்!’’ தான்யா இன்னும் மறுத்துக்கொண்டிருந்தாள்.

‘‘நீ எல்லாவற்றையும் செட்-அப் என்றுதான் சொல்வாய். எது நிஜம் என்று கடவுளுக்குத் தெரியும்’’ கபீர் சொன்னார்.

‘`இப்போது, உன் மீதான கடைசிக் குற்றச்சாட்டு, `உலகெங்கிலும் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவிய மால்வேர்  தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கான `விதை’ டவுன்ஸ்விலே கேமிலிருந்தது. கேமைத் தரவிறக்கம் செய்யும் ஒருவர் மால்வேரையும்  தரவிறக்கம் செய்தார், அது இரண்டு காரியங்களாற்றியது’’ என்று ஏட்ரியன் சொன்னபோது, ஆதித்யாவும், வருணும் அதிர்ச்சியாகி அவர் அது என்னவென்று விரிவாகச் சொன்னார்.

‘`எனக்கும் இந்த கேமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதபோது நான் எப்படி அதை செய்திருக்க முடியும்?’’ என்று கேட்டார் தான்யா.

‘`இல்லை, நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.’’

‘`லக்‌ஷ் மாத்தூர் யார்?”

அவளிடமும், வருணிடமும் ஒரு போட்டோவைக் காண்பித்தார் ஏட்ரியன்.

பிட்காயின் பித்தலாட்டம் - 49

ஏட்ரியன் காட்டிய போட்டைவை அவள் அதைப் பார்த்தபோது, அவள் தலைசுற்ற ஆரம்பித்தது. ‘`இவன் என்ன செய்திருக்கிறான்?”

‘`வெல், இண்டீஸ்கேப்பில் நீ அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறாய், இல்லையா?”

‘`இல்லை, நான் வாங்கிக் கொடுக்கவில்லை’’ தான்யா திடமாக மறுத்தாள். “அவன் வேலை வேண்டுமென்றதால் நான் அவனுடைய சி.வி.யை இண்டீஸ்கேப்புக்கு ஃபார்வர்ட் பண்ணி வைத்தேன்.’’

‘`அவ்வளவுதானா?” கபீர் கேட்டார். அவருடைய முகம் அபாயகரமான தோற்றம் கொண்டதாக இருந்தது.

‘`நீ அவனை எப்படிச் சந்தித்தாய்?”

(பித்தலாட்டம் தொடரும்)

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism