Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 50

பிட்காயின் பித்தலாட்டம் - 50
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 50

ஓவியங்கள்: ராஜன்

பிட்காயின் பித்தலாட்டம் - 50

ஓவியங்கள்: ராஜன்

Published:Updated:
பிட்காயின் பித்தலாட்டம் - 50
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 50

மும்பை

‘`நீ அவனை எப்படிச் சந்தித்தாய்?” - கபீரின் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள் தான்யா.

‘`பாந்த்ரா ஓட்டர்ஸ் கிளப்பில் நடந்த விருந்தின்போது அவனைப் பார்த்தேன். அவன் என்னருகில் வந்து பேச ஆரம்பித்து, அன்றிரவு என்னை வீட்டில் ட்ராப் செய்தான், அவ்வளவுதான்!’’

பிட்காயின் பித்தலாட்டம் - 50

வருண் முகத்தில் ஓர் எதிர்ப்பு உணர்வு தெரிந்தது. ‘`அவ்வளவுதானா, இல்லை இன்னும் ஏதாவது இருக்கிறதா?”

‘`வருண் என்னை நம்பு, இதற்குமேல் எதுவும் இல்லை. நாங்கள் விருந்து முடிந்து திரும்பிச் சென்று கொண்டி ருக்கும் போது, அவனை வேலையிலிருந்து போகச் சொல்லிவிட்டதாகவும், வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு, எனக்குத் தெரிந்தவர் களிடம் சொல்லி வேலை வாங்கித் தரும்படி கேட்டான். நான் அவனது சி.வி-யை உனக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். அதை நான் உன்னிடமும் சொன்னேன்!”

‘`உன்னுடைய அபார்ட் மென்ட்டுக்குக் கீழே உள்ள அபார்ட் மென்ட்டுக்குள் நுழையாவிட்டால் நீ சொன்னதை நான் நம்பியிருப்பேன். அவனை அன்றைக்குப் பார்த்தபோது என்னால் புள்ளிகளை இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், சில தினங்களுக்குமுன், நான் அவனை சந்தீப் அங்கிள் இருக்கக்கூடிய தளத்திலும் பார்த்தேன். அப்போதுதான் அன்றைக்கு  இவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதிலிருந்து எனக்கு என்ன தெரிகிறது என்று சொல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்காயின் பித்தலாட்டம் - 50

உன் அபார்ட்மென்ட் இருக்கும் கட்டடத்தி லேயே வசித்துவரும் அவனுடைய சி.வி-யை அனுப்பியபோது அவனை உனக்குத் தெரியாது என்றுதான் சொன்னாய். அதன்பின், அவன் என்னுடைய உலகப் புகழ்பெற்ற கேமைச் சீரழித்ததும் இல்லாமல், புகழிலும் கறைபடியும்படி செய்துவிட்டான். இனியும் நான் உன்னை எப்படி நம்ப முடியும்?”

‘‘அவன் என்ன செய்துவிட்டான்?’’ தான்யா மிகவும் அப்செட் ஆகியிருந்தாள். ‘`நான் எதுவும் செய்யவில்லை. நான் உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை’’ என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.
வருண் முகத்தில் சங்கடம் தெரிந்தாலும் அவன் விடவில்லை.

‘`இந்த லக்‌ஷ் மாத்தூர்தான் சர்வரில் கேமைத் தரவேற்றம் செய்தவன். தரவேற்றம் செய்தபோது புரோக்ராமிங் குறியீட்டைச்  சேர்க்கிறான் என நினைத்தோம். ஆனால், அது வைரஸ். டவுன்ஸ்விலே விளையாடக்கூடிய அனைத்துக் கருவிகளிலும் அதைத் தரவிறக்கம் செய்யும்போது அது டிஜிட்டல் பிட்காயின் வாலெட்டுகளை ஸ்கேன் செய்வதுடன், அதிலிருந்து அவனுடைய தனிப்பட்ட பிட்காயின் சேகரிப்புக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டி ருக்கிறது. அத்துடன், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் அனைத்தையும் பிட்காயினை உருவாக்கக்கூடிய (Miners) நெட்வொர்க்குடன் இணைத்துவிடவும் செய்திருக்கிறது. உலகளவில் கம்ப்யூட்டர் தகர்ந்துபோகவும், அதிகமாக சூடாகவும் இந்த `மைனிங்’ செயல்பாடு காரணமாக இருந்திருக்கிறது. இந்தக் கருவிகளை உபயோகித்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்களைப் பற்றி நான் இங்கு சொல்லவேண்டிய அவசியமே இல்லை.’’

ஏட்ரியன் மேலும், ‘‘நாங்கள் அவனை விரைவில் கைது செய்வோம். நேற்றுவரை அவனுடைய வாலெட்டுக்கு 51,894 பிட்காயின்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் அதிகமான தொகையாகும்’’ என்றார்.

தான்யா, வருண் பக்கம் திரும்பினாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. அவள் கோபமாக இருந்ததுடன் அவமானப்படுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டுவிட்டோம் என நினைத்தாள்.

‘`லக்‌ஷ் மாத்தூர்தான் இதெல்லாம் செய்தான் என்று உனக்கு எப்படித் தெரியும் வருண்? உனக்குத் தெரிந்திருந்தால், நீ ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை? நீயும் அவர்களில் ஒருவனா?’’ என்று சொல்லிவிட்டு கபீர்கானையும், ஏட்ரியன் ஸ்காட்டையும் பார்த்தாள். ‘`நீங்கள் எல்லோரும் என்னோடு விளையாடிக் கொண்டி ருக்கிறீர்கள்…  நான் உன்னை நம்பினேன் வருண்’’  - அவள் உணர்ச்சிவசப்பட்டாள்.

‘`போதும்’’- ஏட்ரியன் ஸ்காட் குரலை உயர்த்தி ‘`இந்த ட்ராமா போதும் நைட்டிங்கேல்’’ என்றார்.

தான்யா அவரைப் பார்த்தாள். ‘‘உன்மீது உள்ள குற்றங்களில் போதுமான அளவுக்குச் சூழ்நிலை ஆதாரம் இருந்தாலும் சாட்சியம் இல்லாத ஒரே குற்றம் ஜில்லியனின் கொலை சம்பந்தப்பட்டதுதான். இருந்தாலும்கூட, மாள்விகா ஷேகலின் கொலை, காட்டன் ட்ரைய்ல் நடத்தியது, ஏ.டி.எம் கொள்ளைக்குத் துணைபோனது, உலகளவில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களைச் செயலிழக்கச் செய்தது ஆகிய குற்றங்களுக்காக உன்னை எங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ள முடியும். இனி உனது வாழ்நாளை சிறையில் மட்டுமே கழிக்கத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன தான்யா’’ என்று ஏட்ரியன் கடுமையாகப் பேசினார்.

அவர் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததிலிருந்து கடந்த இரண்டரை மாதக் காலமும் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தார். இதை அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.

‘`நான் என்னுடைய வக்கீலை உடனடியாகப் பார்க்க வேண்டும். நீங்கள் தேவையில்லாத குப்பை விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்குப் பங்கில்லாத விஷயங்களில் எல்லாம் என்னை மாட்டிவிடப் பார்க்கிறீர்கள்!’’ என்றாள் தான்யா.

இதைக் கேட்ட ஏட்ரியன் ஒரு குண்டைப் போட்டார். ‘`தப்பியோடி இந்தியாவில் ஒளிந்துகொண்டிருக்கும் நீ ஓர் அமெரிக்கப் பிரஜை’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 50

அவர் கபீர் பக்கம் திரும்பி, ‘`அவளிடம் இருப்பது அமெரிக்க பாஸ்போர்ட்’’ என்றார். அதன்பின் கபீரைத் தனியாக அழைத்துச்சென்று, ‘`மிஸ்டர் கான், நாம் இப்போது அவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைபர் குற்றங்கள் வரலாற்றிலேயே மோசமானதும், பெரியது மான இந்தக் குற்றங்கள் குறித்த விசாரணையைத் தொடர அமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்வதற்கான அனுமதியைப் பெற முடியுமா? ஜில்லியன் டான் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் தெரிவிக்க ஜனாதிபதியின் அனுமதி தேவை. அவருடைய அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவு என்பதால், என்னால் அதை மீற முடியாது’’ என்றார்.

‘`இதற்கு சி.பி.ஐ ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திங்கள்கிழமை நீதிமன்றம் திறக்கும்போது நாம் இந்த வழக்கை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், என்னால் இதைச் செய்ய முடியாது’’ என்றார்.
‘`என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் கான்?’’ ஏட்ரியன் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

‘`தான்யா மாள்விகா கொலையில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். மக்களில் பெரும்பாலானவர்கள் இதில் நிதி மந்திரி சம்பந்தப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

‘`அது எனக்குத் தெரியும்.’’

‘`அந்தப் பிரச்னையை முதலில் நாம் தீர்க்கவேண்டும். நிதி மந்திரிக்கும், இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று முதலில் நாம் தெளிவுபடுத்த வேண்டும். தான்யாவை அவளது அம்மாவின் கொலைக்காக `புக்’ செய்தால்தான் இதை நாம் செய்ய முடியும்?

குற்றம் இந்தியாவில் நடைபெற்றிருப்பதால், அவர் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும், முதலில் இந்தியாவில்தான் குற்றம் பதிவு செய்யப்பட வேண்டும்’’ என விளக்கினார்.

‘`ஆ… புரிந்தது. வேறு வழி ஏதாவது இருக்கிறதா?” - கவலையுடன் கேட்டார் ஏட்ரியன்.

(பித்தலாட்டம் தொடரும்)

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism