Published:Updated:

ஆட்டோ, சிலிண்டரைத் திருடி திருச்சி வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

ஆட்டோ, சிலிண்டரைத் திருடி திருச்சி வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!
ஆட்டோ, சிலிண்டரைத் திருடி திருச்சி வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

லாக்கர்கள் வாடிக்கையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், கொள்ளைபோன நகைகளுக்கும் தங்களுக்கும் பொறுப்பல்ல என வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

திருச்சியில் நடந்த வங்கிக் கொள்ளை சம்பவம், த்ரில் கதைகளை மிஞ்சும் வகையில் உள்ளது. திருச்சி, நெம்பர் 1 டோல்கேட் அடுத்த பிச்சாண்டவர் கோயில் பகுதியில் இயங்கி வருகிறது, பஞ்சாப் நேஷனல் வங்கி. இங்கு அந்தப் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் கணக்கு வைத்திருப்பதுடன், நகை அடகு வைத்துள்ளனர். மேலும், பலர் தங்களது நகைகள், ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை லாக்கரில் வைத்துள்ளனர்.

இப்படி இருக்க குடியரசு தினம் மற்றும் ஞாயிறு விடுமுறை என இரண்டு நாள்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு, கடந்த 28-ம் தேதி காலையில், பணியாளர்கள் வங்கியைத் திறந்து பார்த்தபோது வங்கியின் பின்புறச் சுவரில் ட்ரில்லிங் மெஷின் மூலம் பெரிய ஓட்டைப் போட்டு ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு நகைகளும், ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த வங்கியின் சி.சி.டி.வி கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு கிடந்த காஸ் வெல்டிங் சிலிண்டரில் உள்ள பதிவுவெண்ணை வைத்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் திட்டமிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை, சங்கிலியாண்டபுரம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சதீஷ் என்பவரின் ஆட்டோவை எடுத்துவந்தும், திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஷகிலா வெல்டிங் பட்டறையில் உள்ள காஸ்சிலிண்டரை திருடி வந்தும் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆட்டோவின் உரிமையாளர், பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்றபோது `ஆய்வாளர் இல்லை' என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

அதே நாளில், சமயபுரம் அருகே தமிழ்ச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான ஹைவே டிபார்ட்மென்டல் ஸ்டோரில் ஜன்னல் கம்பிகளை அறுத்து, 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 15,000 மதிப்புள்ள பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் பஞ்சாப் யூனியன் வங்கியில் சி.சி.டி.வி கேமரா ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றதுபோல், டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இருந்த கம்யூட்டர், கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் உடைத்துள்ளனர். வங்கியிலும், வங்கி லாக்கரை மட்டுமல்லாமல் வங்கி மேலாளர் அறையில் இருந்த ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையடித்துள்ளனர்.

ஆட்டோ, சிலிண்டரைத் திருடி திருச்சி வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

இதுகுறித்து சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன்குமார் உள்ளிட்ட மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் அப்பகுதியில் இருந்த வேறு கடைகளின் சி சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். மேலும், கொள்ளையர்களின் கையில் வங்கியின் ப்ளூ பிரின்ட் இருந்திருப்பது தெரியவருகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் துணையுடன் இந்தக் கொள்ளை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்திலும், திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக டிஜிட்டல் மேப்பிங் என்ற முறையிலும் இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளை நடந்ததாகச் சந்தேகப்படும் 27-ம் தேதி இரவு ரோந்து செல்லாத, கொள்ளிடம் போலீஸ் ஏட்டு சகாயராஜ் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வங்கியில்  உடைக்கப்பட்டுள்ள 5 லாக்கர்களில், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் வசித்து வரும் சூர்யா ஜமால் பயன்படுத்திய எண் 39 லாக்கரில் 130 பவுன் தங்க நகைகளும், 1 கிலோ வெள்ளிப் பொருள்களும் வைத்திருந்தாராம். சமயபுரம் பழூர் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி பயன்படுத்தி வந்த 114 லாக்கரில் இருந்த 100 பவுன் தங்கநகை, 1 கிலோவுக்கு மேல் வெள்ளி மற்றும் பணம் இருந்ததாம். திருச்சி நெ.1 டோல்கேட் ஆனந்த நகரைச் சேர்ந்த சுரேஷ் குமார், தற்போது சிங்கப்பூரில் இருப்பதால் அவர்  பயன்படுத்தி வந்த 223 என்ற லாக்கரைக் கணக்கிட முடியவில்லை. மேலும், திருச்சி மன்னார்புரத்தினைச் சேர்ந்த ஜி.கே இன்டஸ்ட்ரீஸ் பார்க் உரிமையாளர் பயன்படுத்தி வந்த லாக்கர்கள் 299, 300-ல் முக்கிய ஆவணங்கள் மட்டுமே இருந்துள்ளன. மேலும், லாக்கரிலிருந்து உடைத்து எடுத்துச் செல்லப்பட்ட நகை மற்றும் பணத்தில 40 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை மட்டுமெ வெளியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

இதுகுறித்து உமா மகேஸ்வரியின் தாயார் செண்பகம், ``எனது பேத்தியின், மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லலாம் என்று இருந்த நிலையில் வங்கியில் 100 பவுனுக்கு மேலாக நகைகள் மற்றும் டாக்குமென்டுகள் பறிபோனதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேத்தியை எப்படித் திருமணம் செய்துகொடுப்போம்” எனக் கலங்கினார்.

ஆட்டோ, சிலிண்டரைத் திருடி திருச்சி வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா-உல்-ஹக், ``வங்கிக் கொள்ளையில் 100-க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் திருடு போயுள்ளன. வங்கியின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளி யாரென்று விசாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாடிக்கையாளர்கள் திருடப்பட்ட 5 லாக்கரில் 3 சாவி உரிமையாளர் மட்டுமே வந்துள்ளனர். மீதமுள்ள உரிமையாளர் வந்தால்தான் முழுமையாகத் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

500 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த மற்ற வாடிக்கையாளர்கள், வங்கி லாக்கர் மீது நம்பிக்கை இல்லாததால், 320 வாடிக்கையாளர்கள் தங்களின் லாக்கரிகளில் இருந்த உடைமைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இப்போது லாக்கர்களில் எதுவும் இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட லாக்கர்கள் வாடிக்கையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், கொள்ளைபோன நகைகளுக்கும் தங்களுக்கும் பொறுப்பல்ல என வங்கி நிர்வாகம் கூறியதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு