நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?

எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?
பிரீமியம் ஸ்டோரி
News
எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?

எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?

வீ ட்டுக்குத் தேவையான பொருள்கள்  வாங்குவதில் ஆரம்பித்து, குழந்தை களின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுவது வரை பெரும்பாலானவர்களின் வாழ்க்கை, கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதிலுமே கழிந்துகொண்டிருக்கிறது.  கடனே வாங்கக் கூடாது என்பது சரியான அணுகுமுறை அல்ல என்றாலும், எடுத்ததற்கெல்லாம் கடன் வாங்குவதும் மகா தவறு.  எந்தெந்தக் காரணங்களுக்காக நாம் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்?

எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?

1. முதலீடு

மனை வாங்குவதாக இருந்தாலும், பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதாக இருந்தாலும் கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது. பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பணத் தேவை அதிகமாக இருக்கும். பெரும்பாலான வங்கிகள் இந்த சமயத்தில்தான்ஆஃபர்களை அள்ளி வீசும். தனிநபர் கடனைத் தேடி வந்து தருவார்கள். கேட்காமலே கிடைக்கிறது என்பதற்காகக் கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது. தனிநபர் கடன் பாதுகாப்பற்றது, சுமார் 14% - 20% வரை இந்த வகைக் கடனுக்கு வட்டி விதிப்பார்கள். இது மாதிரியான பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என்றால், சேமிக்கும் பணத்தை வைத்து, நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்து முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.

கடன் வாங்கி முதலீடு செய்வதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்னை என்னவெனில், நாம் செய்யும் முதலீடுகள் வருமானத்தைக் கொடுக்காமல், நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டால், கடனுக்கான வட்டியும், முதலீட்டின் மீதான நஷ்டமும் ஒருசேர நம் கழுத்தை இறுக்க ஆரம்பித்துவிடும்.

நம்மில் பலர் நிலம் வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இன்றைய சூழ்நிலையில், நடுத்தர மக்களால் கடன் மூலமாகத்தான் சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடிகிறது.  முறையான வருமானம் இருக்கும்பட்சத்தில், வீடு கட்டுவதற்காக கடன் பெறுவது சரி. ஆனால், நிலத்தில் முதலீடு செய்வதற்காகக் கடன் பெறுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவசரத் தேவைக்காகப் பணம் வேண்டும் என்றால், நிலத்தை உடனே விற்று பணமாக்க முடியாது.

2. சுற்றுலா

வருடத்துக்கு ஒருமுறையாவது, சுற்றுலா  போக வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், அதற்காகச் சேமிக்கிறோமா என்றால், இல்லை என்பதுதான் பெரும்பாலானவர் களின் பதில். இன்றைய நிலையில் வங்கிகள் சுற்றுலா செல்வதற்காகவும் கடன்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அப்படியே இல்லையென்றாலும் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்டு என்பதுதான் பலரின் பொதுவான எண்ணம். கடன் வாங்கிப் பயணிப்பதால் சுகத்துக்கு மாறாக, பணச் சுமைதான் அதிகரிக்கும்.

பயணம் என்பது திடீர் தேவைகளுக்குள் வராது என்பதாலும், திட்டமிடலுக்குப் போதுமான கால அவகாசம் இருக்கும் என்பதாலும், சுற்றுலா பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக பட்ஜெட் போடுவது அவசியம். அதற்கான தொகை கையில் இருக்கும்பட்சத்தில் கவலை இல்லை. இல்லாதபட்சத்தில், அந்தத் தொகையைச் சேமிக்கும் வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தொகையைச் சேமித்துக் கொண்டு சுற்றுலாவுக்குக் கிளம்புங்கள்.

3. திருமணம்

நம் கலாசார முறைப்படி, திருமணம் என்பது மிகப்பெரிய செலவு வைக்கக்கூடிய ஒரு விஷயம். அதைச் சமாளிக்க முடியாமல்தான் பெரும்பாலான குடும்பங்கள் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்கின்றன. கல்யாணத்துக்காகக் கடன் வாங்கிவிட்டு, அதைக் காலம் முழுக்க கட்டிக் கொண்டிருப்பவர்களையும் அன்றாடம் பார்க்கிறோம். 

திருமணத்தைக் காரணம் காட்டி கடன் சுமையை அதிகரித்துக்கொள்வது,  திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை முறையில் மிகப்பெரிய குழப்பத்தை கணவன் மனைவிக்குள் ஏற்படுத்தும். எனவே, கடன்களை அதிகப் படுத்துவதைவிட, திருமணச் செலவுகளைச் சிக்கனப்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.

4. ஆடம்பர வாழ்க்கை

நம் அருகில் இருப்பவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்துப் பார்த்தே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் ஏ.சி வாங்கினால், நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவர் காஸ்ட்லியான ஸ்மார்ட்போன் வாங்கினால், நாமும் அதிக விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி, வாழ்க்கை முறையை ஆடம்பரப்படுத்திக்கொள்கிறோம். விலை அதிகம் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள், ஐபோன் என அனைத்தையும் காசு கொடுத்து வாங்கினால் பரவாயில்லை. இ.எம்.ஐ மூலம் வாங்குவதில்தான் பிரச்னை அதிகம் இருக்கிறது.

முதலில் அதிக கடன் வாங்கிவிட்டு, சரியாகக் கட்டாமல் விடும்போது உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். வீட்டுத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவது செலவு கணக்கில்தான் சேரும். செலவு செய்வதற்காகச் சம்பாத்தியத்தைத்தான் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, கடன் சுமையை பெருக்கிக் கொள்ளக்கூடாது.

ஆக, கடன் வாங்குவதற்கு முன்பாக, இந்தக் கடனை வாங்குவது சரியா என ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது.

- செ.கார்த்திகேயன்