நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

நான் வசிக்கும் வீடு தரைதளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்டது. எனக்கு இப்போது பணச் சிக்கல். முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

கதிரேசன், விழுப்புரம்

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“தாராளமாக விற்கலாம். இதற்கு உங்கள் வீட்டின் பிளானில் முதல் தளத்தை விற்க அனுமதி பெற்றிருக்கவேண்டியது அவசியம். முதல் தளத்தின் வீட்டை வாங்குபவருக்கு, அந்த வீட்டின் பரப்பளவு விகிதத்துக்கேற்ப வீட்டு மனையின் பரப்பில் பிரிக்கப்படாத நிலப்பகுதியைக் (UDS) கணக்கிட்டு, அவருக்கு ஒதுக்க வேண்டும். மாடியில் கட்டுமானம் இல்லாத காலியிடம் இருந்தால், அது உங்களுக்கே சேரும். மேல்தள வீட்டுக்குத் தனி மின் இணைப்பு, கதவு எண், மேலே செல்வதற்கான படிகள் உள்ளிட்ட மற்ற விவரங்களையும் இறுதிசெய்த பிறகு விற்பனை செய்யலாம்.”

நான் ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கிறேன். என் குழுத் தலைவி, தனியார் நிதி நிறுவனம் மூலமாக எனக்குக் கடன் வாங்கித் தருவதாகச் சொல்கிறார். `அந்தத் தனியார் நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளதா?’ எனச் சந்தேகம் வருகிறது. அதில் கடன் பெறலாமா?

ஈஸ்வரி, சாத்தூர்.

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப்  பொது மேலாளர் (ஓய்வு)

“வங்கிகளில் கடன் பெறுவதுதான் பாதுகாப்பான வழிமுறை. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க மட்டுமே முடியும். அதன் செயல்பாடுகளில் நேரடியாகத் தலையிடமுடியாது. சிபில் ஸ்கோரில் சரியான ரேட்டிங் இல்லாத வர்களும், வங்கி கேட்கும் எல்லா ஆவணங்களையும் தரமுடியாதவர்களும்தான் தனியார் நிதி நிறுவனங்களை நாடுவார்கள். எனவே, இதற்கான ரிஸ்க்கையும் அவர்களேதான் ஏற்க வேண்டும்.”

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

எனக்கு வயது 25. நான் 12,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் முதலீடு செய்ய விரும்பு கிறேன். இந்தத் தொகையை ஆண்டு்தோறும் 20% என்கிற அளவில் அதிகரிக்கவும் விரும்புகிறேன். இதற்கேற்ற திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.

ராகேஷ், சென்னை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“இந்த இளம் வயதில் மாதம் ரூ.12,000 சேமித்து முதலீடு செய்வது நல்ல விஷயம். அதை ஆண்டு தோறும் 20% அதிகரிக்க நினைப்பது இன்னும் மகிழ்ச்சி. இந்தத் தொகையை முதலீடு செய்யும் தொகுப்பில், 25% லார்ஜ்கேப் ஃபண்ட், 50%  மல்டி கேப் ஃபண்ட், மீதி 25% சிறிய மற்றும் நடுத்தர வகையான ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  ஐ.சி.ஐ.சி.ஐ புரூ.  நிஃப்டி நெக்ஸ்ட் 50 லார்ஜ்கேப் ஃபண்டில் ரூ.3,000, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் ஆகிய மல்டிகேப் ஃபண்டுகளில் தலா ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் என்ற ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.3,000 என முதலீடு செய்யலாம்.”

என் வயது 70. என் பேத்திக்கு 10,000 ரூபாயை மாதந்தோறும் ரொக்கமாக அன்பளிப்பாக வழங்குகிறேன். இந்தத் தொகைக்கு வருமான வரி உண்டா, எனது வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டுமா?

செல்வராஜன், ஈரோடு

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்

“உங்கள் வருமான வரிக் கணக்கில் காட்டப் பட்ட தொகையிலிருந்து உங்களுடைய பேத்திக்கு அளிக்கும் அன்பளிப்புக்கு வருமான வரி வராது. ஆனாலும் இந்த அன்பளிப்பை நீங்களும் உங்கள் பேத்தியும் அவரவர் வருமான வரிக் கணக்கினைத்  தாக்கல் செய்யும்போது கணக்கில் காட்டுவது நல்லது. வருமான வரிக் கணக்கில் காட்டாத தொகையிலிருந்து உங்கள் பேத்திக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தால், அந்தத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.”

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

பி.எஃப்.சி (PFC) நிறுவனத்தின் 250 பங்குகளை வைத்திருக்கிறேன். தற்போது ஆர்.இ.சி, பி.எஃப்.சி நிறுவனங்கள் இணையப்போவதாகக் கூறுகிறார்கள். இப்போதே எனது பங்குகளை விற்பனை செய்துவிடுவது நல்லதா?

தேவராஜ், மதுரை

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“தற்போது உங்கள் முன்னிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்று, இப்போதே உங்கள் பங்குகளை விற்பது. இரண்டாவது, இரு நிறுவனங்களின் இணைப்புக்கான பங்குப் பரிமாற்ற விகிதம் அறிவிக்கப்படும் வரை காத்திருப்பது. பொதுவாக, மின்துறை சார்ந்த பங்குகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே,  நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்கலாம்.’’ 

நாவல் பழக் கொட்டைகளுக்கு மலேசியாவில் அதிக விற்பனை வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அதை ஏற்றுமதி செய்யும்படி நண்பர் ஒருவர் எனக்கு யோசனை கூறுகிறார். ஏற்றுமதித் துறையில் முன் அனுபவமில்லாத நான், இதைச் செய்யலாமா?

விக்னேஷ் குமார், திருச்சி

எஸ்.சிவராமன், ஏற்றுமதி ஆலோசகர்

“வாய்மொழியாக யாராவது சொல்வதை வைத்து ஏற்றுமதித் துறையில் இறங்குவது தவறு. ஒரு பொருளை ஏற்றுமதி செய்யும்போது,  அதை வாங்க வெளிநாட்டில் ஆள் இருக்கிறாரா என்பதைத் தீர விசாரிக்க வேண்டும். அந்தப் பொருளுக்கு எந்த அளவுக்கு ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள பிரத்தியேக இணையதளங்கள் உள்ளன. அதேபோல, ஏற்றுமதிக்கான பொருள் நமக்கு எந்த அளவுக்குக் கிடைக்கும், அதை எப்படிப் பக்குவப்படுத்தி அனுப்புவது என்பது குறித்தெல்லாம் ஆராயவேண்டும். ஆய்வுக்குப் பிறகு, நம்மால் லாபகரமாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபடலாம்.”

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

என் வயது 32. எனது ஓய்வூதியத்துக்காக 18 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கவரேஜ் கொண்ட பாலிசியில், கடந்த ஜூலை 2016-ம் ஆண்டில் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்தேன். இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ.48,000.  இந்த பாலிசியைத் தொடரலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

வினோத்குமார், ராஜபாளையம்

ஸ்ரீதரன், வெல்த் லேடர், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“எண்டோவ்மென்ட் பாலிசியைப் பொறுத்த வரை, இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு என இரண்டும் கலந்திருக்கிறது. இதன்மூலம் கிடைக்கும்  வருமானம் 4 - 6% என்கிற அளவிலேயே இருக்கும். நீங்கள் எடுத்த பாலிசியின் மொத்த பிரீமியம் ரூ.8.65 லட்சமாகவும், பாலிசியின் முதிர்வுத்தொகை ரூ.17 - 20 லட்சமாகவும்  இருக்கும். இதுவே 4,000 ரூபாயை மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், 18 வருடத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்த பாலிசியை பெய்ட்அப் (Paidup) பாலிசியாக மாற்றிவிட்டு, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.”

பாம்புக்கடி, நாய்க்கடி காயங்களுக்கான சிகிச்சை களுக்கும் மருத்துவக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யலாமா, இதில் ஏதேனும் விதிமுறைச் சிக்கல் உண்டா?

மகேந்திரன், காரைக்குடி

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றுக்கான சிகிச்சை, `விபத்தால் ஏற்பட்ட காயம்’ என்ற வகையில் மருத்துவக் காப்பீட்டுக்கான க்ளெய்ம் கணக்கில் கொள்ளப்படும். குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் உள்நோயாளி யாகச் சிகிச்சை பெற்றால் மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757,
அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.