அரசியல்
சமூகம்
Published:Updated:

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

ஆபத்தான நிலையில் ஸ்ரீ ஞானானந்த கிரி அறக்கட்டளை...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கர் ஆலயம் மற்றும் குருஜி மருத்துவமனையை நிர்வகிக்கும் ஸ்ரீஞானானந்த கிரி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் கசிகின்றன. மேலும், இதன் மடாதிபதி இரண்டு கோடி ரூபாயுடன் மாயமாகிவிட்டதாகவும், அறக்கட்டளையின் மருத்துவமனை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அறக்கட்டளைக்கு நெருக்கமானவர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள், “ஜோதிர் மடப் பரம்பரையில், ஆறாவது பீடாதிபதியான சத்குரு ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான ஸ்ரீஹரிதாஸ் கிரி சுவாமிகள், தன் குருஜியின் பெயரில் 1982-ம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன்கீழ் பாண்டுரங்கர் ஆலயம், ஏழைமக்கள் பயனடையும் வகையில் குருஜி தொண்டு மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன. ஹரிதாஸ் கிரி மறைவுக்குப் பிறகு, அவரின் சிஷ்யர் ஞாமாஜி மடாதிபதி ஆனார். 2011-ம் ஆண்டு ஞாமாஜியும் மறைந்தார். இவர்கள் இருக்கும்வரை மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டது. கோயிலில் அன்னதானமும் சிறப்பாக நடந்தது.

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

அதன் பிறகு, ஞாமாஜியின் சிஷ்யர் அருண் என்பவர் மடாதிபதி ஆனார். அதன் பின்புதான், குளறுபடிகள் தொடங்கின. மருத்துவமனையை சரியாகக் கவனிப்பதில்லை. கோயிலில் இலை போட்டு வயிறார அன்னதானம் படைப்பது நிறுத்தப்பட்டு, தொன்னைகளில் வெரைட்டி சாதம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு மடாதிபதி அருண், அறக்கட்டளைக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் பணத்துடன் மாயமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அறங்காவலர் ராமசுப்பிரமணியத்தைக் கேட்டால், ‘அருண் இமயமலைக்குச் சென்றுவிட்டார்’ என்கிறார். ஹரிதாஸ் கிரியின் சிங்கப்பூர், லண்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் இந்த அறக்கட்டளை நிர்வகிக்கப்படுகிறது. அதற்கு முறையான கணக்கு உள்ளதா என்பதும் சந்தேகமாக உள்ளது. சமீபகாலமாக ‘போதிய வருமானம் இல்லை’ என்று கூறி அறக்கட்டளை மருத்துவமனையை, மூட முயற்சி நடக்கிறது” என்றார்கள் வருத்தத்துடன்.

இதுகுறித்து குருஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நரசிம்மன் நம்மிடம், “கிராம மக்களுக்கு சேவை செய்யக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையைக் கவனித்துக்கொள்ள, என்னை இங்கு அழைத்துவந்தார்கள். 17 ஆண்டுகள் சேவை நோக்குடன் சிகிச்சை அளித்துவருகிறேன். மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு அதிகம் வருவார்கள். மருந்து, மாத்திரைகள் நன்கொடையாகவும் தள்ளுபடி விலையிலும் கிடைக்கின்றன. ஸ்கேன் எந்திரம், ஆர்.ஓ வாட்டர் எந்திரம் நன்கொடையாகக் கிடைத்தன. ஆபரேஷன் தியேட்டர், ஐம்பது படுக்கை வசதிகள்,  சித்த மருத்துவம், ஆம்புலன்ஸ் என்று எல்லா வசதிகளும் இங்கு உண்டு. ஆனால், நிர்வாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை... படிப்படியாக டாக்டர்கள், நர்ஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. ஒரு டாக்டர், மூன்று நர்ஸ், ஒரு டெக்னிஷியன், ஒரு கம்பவுண்டர் மட்டுமே இருக்கிறோம். இப்போது எங்களையும் வெளியே அனுப்பிவிட்டு, மருத்துவமனையை மூட நினைக்கிறார் அறங்காவலர் ராமசுப்பிரமணியம். கேட்டால் வருமானம் இல்லை என்கிறார். நன்கொடை பணம் எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. கணக்குவழக்கும் காண்பிப்பது இல்லை” என்றார் வேதனையுடன்!

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

தென்னாங்கூர் கிராம மக்களிடம் பேசினோம். “இந்த மருத்துவமனைக்கு இரவு 12 மணிக்கு வந்தாலும் டாக்டர் வந்து அவசரச் சிகிச்சை அளிப்பார். ஆம்புலன்ஸ் வசதியும் செய்துகொடுக்கிறார்கள். கட்டணம் மிகவும் குறைவு. ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்க்கிறார்கள். ஆனால், இந்த மருத்துவமனையை மூடப்போவதாகச் சொல்கிறார்கள். இதை மூடிவிட்டால் நாங்கள் 20 கி.மீ தொலைவு சென்றுதான் சிகிச்சை பெறவேண்டியிருக்கும்” என்றார்கள் கவலையுடன்!

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

இதுகுறித்து அறங்காவலர் ராமசுப்பிரமணியத்திடம் கேட்டோம். “அறக்கட்டளைக்கு வரும் நன்கொடை நின்றுவிட்டது. ஒருவர் இருவர் அளிக்கும் நன்கொடையை வைத்துச் சமாளித்துவருகிறேன். மடாதிபதி அருண் இமயமலைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவரைத் தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அவர் இரண்டு கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றாரா என்பது எனக்குத் தெரியாது. என் உறவினர் கிருஷ்ணசாமி என்பவர், இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் என்பதற்காக அறங்காவலராக இருக்கிறேன். மருத்துவமனையை மூடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. டாக்டர் நரசிம்மனுக்கு 83 வயதாகிவிட்டது. அவருக்கு காது சரியாகக் கேட்கவில்லை. அதனால், அவரது சேவை போதும் என்று சொல்லி, கிளம்பச் சொல்கிறோம். ஆனால், அவர் கிளம்பாமல் என்னைப் பற்றித் தவறாகக் கூறிவருகிறார்” என்றார்.

மடாதிபதி அருண் எங்கே என்பதில் தொடங்கி... நன்கொடைகள் நின்றதாகச் சொல்லப்படுவதுவரை இந்த அறக்கட்டளை தொடர்பாக எழும் கேள்விகள் ஏராளம். பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதன் நிர்வாகத்துக்கு இருக்கிறது.

- கா.முரளி