Published:Updated:

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?
பிரீமியம் ஸ்டோரி
News
ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

ஆர்.மோகனப் பிரபு, cfa

ம் நாட்டில் தனிமனிதர்கள் போதிய அளவுக்குப் பணம் இல்லாமல் தவிப்பது  ஒருபக்கமிருக்க, நமது தேசிய வங்கியான ரிசர்வ் வங்கியும் நாட்டுக்குத் தேவையான அளவுக்குப் பணத்தைத் (ரூபாய்) திரட்ட  முடியாமல் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்திய வங்கிக் கட்டமைப்பில் நிலவிவரும் இந்தப் பணத் தட்டுப்பாட்டினைக் குறைக்க, மத்திய ரிசர்வ் வங்கி, ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.35,000 கோடி) டாலர்- ரூபாய் மாற்றுத் திட்டத்தை (Long Term Dollar-Rupee Swap) அறிவித்துள்ளது.   

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

இந்த திட்டத்தின்படி, வங்கிகள் தம்மிடமுள்ள டாலர் தொகையை ரிசர்வ் வங்கியிடம் அளித்து விட்டு, அதற்கு ஈடான ரூபாய் தொகையை வாங்கிக்கொள்ளலாம் என்றும், மூன்றாண்டு களுக்குப் பிறகு,  ரூபாயை வட்டியுடன் (Premium) செலுத்திவிட்டு, ரிசர்வ் வங்கியிடமிருந்து டாலரை வங்கிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி இப்படிப் புதுமையான முறையில் பணம் திரட்ட என்ன காரணம்,  பரிசோதனை ரீதியிலான இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றியடையும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?குறைந்தது அந்நியச் செலாவணி... 

ரிசர்வ் வங்கி தரும் தகவல்களின்படி (15.03.2019), கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 19.5 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம், ஏற்றுமதியில் தள்ளாட்டம், அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் போன்ற காரணங்களினால் ஏற்பட்ட ரூபாய் சரிவினைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி அதிகளவு டாலர்களைச் சந்தையில் விற்பனை செய்ய நேரிட்டது. இந்த நடவடிக்கை யினால் சுமார் ரூ.1,30,000 கோடி சந்தையிலிருந்து உள்வாங்கப்பட்டுவிட்டது.  
 
ரொக்க நடமாட்டம் அதிகரிப்பு

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குமுன்  (28.10.2016), பொதுமக்களிடம் இருந்த ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.17,01,380 கோடி. பணமதிப்பு நீக்கத்துக்குப்பின் மூன்றாண்டு களுக்குள், ரொக்க நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (01.03.2019) அதாவது, ரூ.20,27,900 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.3,07,600 கோடி அளவிற்கு ரொக்க நடமாட்டம் மக்களிடையே அதிகரித்துள்ளது.  

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

டெபாசிட்டாக உள்ள பணம், ரொக்கமாக வெளியேறும்போது, கடன் வழங்கப் போதுமான பணம் வங்கிகளிடம் இல்லாமல் போகிறது. உலகமே டிஜிட்டல் மயமானாலும், இந்தியாவில் இன்னும்கூட ரொக்கப் பணமே வர்த்தகப் பரிமாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தப் பண நடமாட்டம் இன்னும்கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பணப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வங்கி டெபாசிட் Vs வங்கிக் கடன்கள்

கடந்த ஓராண்டில் மட்டும் வணிக வங்கிகள் வழங்கியுள்ள நிகரக் கடன் தொகை ரூ.12,30,460 கோடி. வங்கிகளின் மொத்தக் கடன் அளவு கடந்த ஆண்டைவிட 14% வரை உயர்ந்துள்ளது. என்றாலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக் கேற்றபடி வங்கிகளின் வட்டி விகிதங்கள் உயராத காரணத்தினால்  வங்கிகளின் டெபாசிட் தொகை  10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வளர்ந்துள்ளது. தேசிய சிறுசேமிப்புத் திட்டங்களைவிட வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதும் இன்னொரு காரணம்.

அடுத்த இரண்டாண்டுகளில், கடன் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில்,  வட்டி விகிதங்களை உயர்த்தாம லேயே புதிய டெபாசிட்டுகளை அதிக அளவு பெறுவது இந்திய வங்கிகளுக்குச் சவாலாகவே இருக்கும்.
 
மத்திய அரசின் துல்லியக் கடன் தாக்குதல்


கடந்த சில ஆண்டுகளாக  எதிர்பார்த்த அளவு வரி வருவாய் உயராததாலும்,   வருவாய்க்கேற்றவாறு செலவினங்களைக் கட்டுப் படுத்த முடியாததாலும்  மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் பணத் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் அரசுமுறைக் கடன் ரூ.7,78,191 கோடி அதிகரித்து, டிசம்பர் 2018 இறுதியில் ரூ.74,67,901 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்குதல் போன்ற கவர்ச்சித் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலையை இன்னும்கூட சிக்கலாக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தும் பணப் பற்றாக்குறை

அந்நியச் செலாவணி வெளியேற்றம், அதிகப் படியான ரொக்க நடமாட்டம் உட்படப் பல காரணங்களினால் கடன் சார்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு பாதித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாகக் குறைந்ததற்குச் சந்தையில் நிலவும் நிதிப் பற்றாக் குறையும் ஒரு முக்கியக் காரணம்.   

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

குறிப்பாக, தனிநபர்களுக்கு அதிகம் கடன் தரும்  வங்கிசாரா நிறுவனங்கள் வழங்கும் கடன் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி தனது உற்பத்தியை 26% குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது. பிற தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைக்கும் முடிவை எடுத்து வருகின்றன. 

மந்தமாகியுள்ள இந்தப்  பொருளாதார சூழ்நிலையை உற்சாகப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தைக் கடந்த பிப்ரவரியில் 0.25% அளவுக்குக் குறைத்த போதிலும், கடன் சந்தையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ரிசர்வ் வங்கியின் ஓப்பன் மார்க்கெட் ஆபரேஷன்

கரன்சித் தாள்களை அச்சடிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு மத்திய வங்கியால் பணத்தை உருவாக்க முடியும். நடப்பு நிதியாண்டில், இதுவரை ரூ.2,26,682 கோடி அளவுக்கு மத்திய அரசின் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி பொது சந்தையிலிருந்து வாங்கியதன் மூலம் ஏராளமான நிதியை ரிசர்வ் வங்கி நேரடியாக உருவாக்கி இருந்தாலும்கூட நிகர பணப் பற்றாக்குறை முழுமையாக நீங்கவில்லை. இந்த நிலையில்தான், பணத் தட்டுப்பாட்டினைக் குறைக்க டாலர் - ரூபாய் - மாற்று என்னும் நூதன முயற்சியை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது.

திட்ட நடைமுறை

கடந்த 13.03.2019 அன்று வெளிவந்த ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வங்கிகளானது ரிசர்வ் வங்கியிடம் டாலரைச் சமர்ப்பித்துவிட்டு, டாலருக்கு நிகரான ரூபாயைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாண்டுகளுக்குப்பிறகு, ரூபாயை நிகர வட்டியுடன் திரும்பச் செலுத்திவிட்டு, டாலரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு பில்லியன் டாலருக்கு நிகரான 6,900 கோடி ரூபாயை (26.03.2019 USD/INR Spot Rate = 69.00) பெற்றுக்கொள்ளும் ஒரு வங்கி, மூன்றாண்டுகளுக்குப்பிறகு 8,000 கோடி ரூபாயைத் (28.03.2022 USD/INR Forward Rate = 80.00) திரும்பச் செலுத்திவிட்டு, ஒரு பில்லியன் டாலரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தேசக் கணக்கில், வழங்கவேண்டிய பிரீமியம் ஒரு டாலருக்கு 11 ரூபாய் ஆகும். தோராய நிகர வட்டி விகிதம் 3.5%.

இந்தியா மற்றும் அமெரிக்கச் சந்தைகளின் வட்டி விகித எதிர்பார்ப்புக்களுக்கு இடையேயான வித்தியாசமே டாலர் பிரீமியம்; அதாவது, நிகர வட்டி விகிதம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய பிரீமியத்தின் துல்லியமான அளவு 26.03.2019 அன்று நடைபெறவுள்ள ஏலத்தின்மூலம் நிர்ணயிக்கப்படும் என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது.

வங்கிகளுக்கு என்ன லாபம்...?

இந்த ஏலத்தினால் இந்திய வங்கிகள் ஆதாயம் அடைய குறைவான வாய்ப்புக்களே உள்ளன. உதாரணமாக, மூன்றாண்டு டாலர் டெபாசிட்டுக்கு 3.9% வட்டி வழங்கும் ஒரு இந்திய வங்கி, டாலர் தொகையை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்துவிட்டு, ரூபாயாகப் பெற்றுக்கொண்டால் கூடுதலாக 3.5% வட்டி செலுத்தவேண்டியிருக்கும். அதாவது, மொத்த வட்டி விகிதம் 7.4% (3.9% + 3.5%) ஆகும். ஆனால், நேரடியாக இந்திய ரூபாயில் டெபாசிட் பெற 6.8% வட்டி செலுத்தினால் போதுமானது.

மேலும், டாலர் தொகையிலேயே கடன் பெற்றுக்கொள்வதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில், ரூபாயாக மாற்றித்தான் கடன் தரவேண்டும் என்ற அவசியம் இந்திய வங்கிகளுக்கு இல்லை. எனவே, வேறுவிதமான அழுத்தங்கள் இருந்தாலே தவிர, இந்திய வங்கிகள் இந்தத் திட்டத்தில் பங்கு பெற வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

குறைந்த வட்டியில் சந்தையிலிருந்து டாலரை திரட்ட வல்லமைகொண்ட பன்னாட்டு வங்கி களுக்கு, இந்த ஏலம் பலன் தரலாம். உதாரணமாக, பன்னாட்டு சந்தையில் குறைந்த (2.8%) வட்டியில் டாலர் திரட்டும் திறன் படைத்த ஒரு வங்கி, அந்த டாலர் தொகையை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து விட்டு, அதற்கு ஈடான இந்திய ரூபாயை உள்நாட்டு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, 7% வட்டி பெற இயலும்பட்சத்தில், ரிசர்வ் வங்கிக்கு வழங்க வேண்டிய 3.5% வட்டி மற்றும் டாலர் வட்டி 2.8% போக, நிகர வருவாய் 0.7% கிடைக்கும்.

இதுபோன்றதொரு கூடுதல் வருவாய்க்கு ஆசைப்பட்டு, பன்னாட்டு வங்கிகள் உலகச் சந்தையில் டாலரைத் திரட்டி நமது ரிசர்வ் வங்கி யிடம் அளிக்கும்பட்சத்தில் உள்நாட்டுப் பணப் பற்றாக்குறை குறையக்கூடும். இதனால் உள்ளூர் வட்டி விகிதங்களும் குறையக்கூடும். 26.03.2019 தேதியிட்ட ஏலம் வெற்றி பெற்றால், இதே ரீதியில் மேலும் பல ஏலங்கள் நடத்தப்படலாம்.

அமெரிக்காவின் தற்போதைய தேக்க நிலையினால், அந்த நாட்டு மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற சந்தை எதிர்பார்ப்பினால் அதிக டாலர் தொகை இந்தியாவிற்கு இந்த வழியில் வர வாய்ப்புக்கள் உள்ளன. 

ஆனால், பணப் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதங்களைத் தற்காலிகமாகக் குறைக்க மட்டுமே இந்தத் திட்டங்கள் உதவும். உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவிப்பதே பணப் பற்றாக்குறைக்கு நீண்ட காலத் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

(குறிப்பு:
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே. உதாரணத்திற்குக் கையாண்டுள்ள தகவல்கள் யாவும் சுலபமான புரிந்துகொள்ளலுக்கு மட்டுமே!)