Published:Updated:

ராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி! ஹெச்.ராஜா திரட்டினார் 

ராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி! ஹெச்.ராஜா திரட்டினார் 
ராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி! ஹெச்.ராஜா திரட்டினார் 

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மத மாற்றத்தைத் தடுத்ததால் இஸ்லாமியர்கள் சிலரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரியாஸ், முகமது அசாருதீன், முஹம்மது ரிஸ்வான் தவ்ஃபீக் முகமது, பர்வேஸ் தவ்ஹீத், பாட்ஷா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமலிங்கம் கொல்லப்பட்டது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராமலிங்கம் குடும்பத்துக்கு உதவும்படி உலக நாடுகளில் இயங்கி வரும் பல்வேறு இந்து அமைப்புகளிடம் அவர்  கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, ராமலிங்கத்தின் குடும்பத்துக்குப் பல நாடுகளில் இருந்து நிதியுதவி திரண்டது. 

திரண்ட நிதியை ஹெச்.ராஜா ராமலிங்கத்தின் குடும்பத்தின்  வங்கிக் கணக்கில் செலுத்தினார். பின்னர், இன்று ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற ஹெச்.ராஜா ரூ.56 லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டதற்கான ரசீதை குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய ஹெச்.ராஜா, ``ராமலிங்கம் மத மாற்றத்தை எதிர்த்த காரணத்தினால் கொல்லப்பட்டார்.  உலகளவில் இந்துக்களின் கூட்டமைப்பு பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு நிதி திரட்டினேன். ராமலிங்கத்தின் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது'' என்று தெரிவித்தார்.