Published:Updated:

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு
பிரீமியம் ஸ்டோரி
இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

சேனன்

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

சேனன்

Published:Updated:
இறையாண்மை இல்லாத இலங்கை அரசு
பிரீமியம் ஸ்டோரி
இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

ன்றைய காலகட்டப் பல்துருவ உலகின் விசைகளின் கூர்மையான முரண்கள், இலங்கை அரசியலில் கணிசமான தாக்குதல்களை ஏற்படுத்திவருவதை நாம் பார்க்கிறோம். இலங்கை ஓர் இறையாண்மையற்ற அரசதிகாரம் உள்ள நாடு என்பதை இவை நிரூபித்துவருகின்றன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தியப் பொருளாதார ஆதிக்கமும், தெற்கில் சீனாவின் ஆக்கிரமிப்பும் வேர் ஊன்றியுள்ளது. தற்போதய அரசின் பொருளாதார முன்னெடுப்புகள், மேற்குலகின் வழிகாட்டலில் நடந்துவருவதையும் பார்க்கிறோம்.

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

சீனப் பொறிக்குள் சிக்கியுள்ள சிறு துண்டுத் தீவான இலங்கை, கடனிலிருந்து மீற முடியாத பொருளாதாரமாக மாறியுள்ளது. 2010-ம் ஆண்டில் GDP-யில் 36% வீதமாக இருந்த கடன், 2015-ம் ஆண்டில் 94% வீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, கடனுக்குத் திருப்பிக் கட்டப்படும் வட்டியும் முதலும் மட்டும் $4.28 பில்லியன் டாலர்கள். இது GDP-யின் 5% வீதத்தை விழுங்கிவிடும் என கணிப்பிடப்பட்டுள்ளது. கடனில் ஒரு பில்லியன் டாலர்களைக் குறைப்பதற்காக கம்பான்தோட்டை துறைமுகம் மற்றும் அதைச் சுற்றிய 15,000 ஏக்கர் காணி, சீனாவின் முழு கட்டுப்பாட்டுக்கு என விடப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, கொழும்பில் கட்டப்படும் துறைமுக நகரம் முற்றுமுழுதாகச் சீனக் கட்டுப்பாட்டில் நடக்கிறது. அங்கு சீனா வைக்கும் சட்டம் மட்டுமே செல்லும். இலங்கை அரசின் எந்தச் சட்டமும் – கட்டுப்பாடும் அங்கு செல்லுபடியாகாது.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் இயங்கவைப்பதற்கு ஆவனசெய்துவருகிறது இந்திய அரசு. இது மட்டுமன்றி, திருகோணமலை துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளது. இந்தத் துறைமுகத்துக்கு அருகில், சம்பூரில்  ஓர் அணுமின் நிலையத்தை நிறுவும் முயற்சியைப் பல்வேறு போராட்டங்களையும் தாண்டி நிறைவேற்றி வருகிறது இந்திய அரசு. உலகிலேயே மிக குறைந்த போக்குவரத்து உள்ள விமான நிலையமாகக் கருதப்படும் மாத்தளை விமான நிலையத்தையும் “சும்மாத்தானே கிடக்கு. எங்களுக்குத் தாருங்கள்” என வாங்கியுள்ளது இந்தியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

தற்போதைய இலங்கை அரசுடன் நெருக்கத்தைக் காப்பாற்ற விரும்பும் மேற்குலக அரசுகள், இலங்கைக்கான கடன் வழங்குவதற்கு ஈடாகத் தமது கொள்கைகளை முன்னெடுக்கும்படி பணித்துவருகிறார்கள். தற்போதைய அரசின் அனைத்து பட்ஜெட்டும் ஐ.எம்.எப் கோரிக்கைகளை உள்வாங்கியதாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் இலங்கை வாழ் மக்களின் மேலான கரிசனையால் நடப்பவை அல்ல, பூகோள அரசியலின் புயலில் சிக்கி இழுபடுவதன் விளைவுகள்!

ழப்படுகொலையுடன் 2009-ல் யுத்தம் முடிந்த கையுடன் எழுந்த பொருளாதார நெருக்கடியை பாவித்து, தனது செல்வாக்கை நிறுவ மேற்குலகச் சக்திகள் வேகமாக நகர்ந்தன. ஐ.எம்.எப் உடனடியாக $1.5 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்க முன்வந்தது. இலங்கை அரசு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த திசையில் இலங்கை அரசியல் நகரவில்லை. தொடர்ந்த சீன உறவுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் ஐரோப்பிய கமிசன் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2010-ல் ரத்துசெய்தது. ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை என்ற அச்சுறுத்தலை ஆரம்பித்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ரத்து
செய்வதற்காக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு பங்காற்றியபொழுது, அவர்களின் மனித உரிமையை முதன்மைப்படுத்தாத உள்நோக்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு 2015 தேர்தலின்போது, அரசதிகாரம் மாறுமாயின் அது மீண்டும் மேற்குலக மற்றும் இந்தியச் செல்வாக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், அந்தத் தேர்தல் பல்துருவங்களின் கடும் மோதல்தளமாக மாறியது.

கொழும்புத் துறைமுக நகருக்கு ஒதுக்கப்பட்ட பணம், எவ்வாறு ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்கு வாரி இறைக்கப்பட்டது என்பதை ‘நியு யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை பல்வேறு ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் தூதரகம் பிரசார வேலைகளில் நேரடியாகத் தலையிட்டது. வழமைக்கு மாறாக – சட்டத்துக்குப் புறம்பாக சீனத் தூதரே களத்தில் இறங்கி பிரசாரம் செய்தார். குறைந்தபட்சம் $7.6 மில்லியன் டாலர்கள் ராஜபக்சவின் பிரசாரத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜபக்ச கட்சிக்குள் உடைவை ஏற்படுத்தி, மைத்திரி தலைமையில் பலரைப் பிரித்தெடுக்கவும், ‘தமிழ்த் தேசிய கூட்டமை’ப்பின் முழு ஆதரவை வென்றெடுக்கவும், இந்திய மற்றும் மேற்குலகப்  பணம் வாரி இறைக்கப்பட்டதாகப் பேசப்படுவது நம்பக்கூடிய விசயமே. இருப்பினும், இவற்றுக்கான சரியான ஆதாரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் மைத்திரி உடைவில், இந்திய அரசின் கை உண்டு என்பதை இன்று பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவிய ராஜபக்ச, தனது அரசதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் சூழ்ச்சியில் இறங்கிய தருணம், அதைத் தடுப்பதற்கு இந்தியத் தலையீடு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இத்தருணத்தில், சீன அணு ஆயுத நீர்மூழ்கி ஒன்று கம்ப்பான்தோட்டை வந்ததாகவும், அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கத்தான் இந்தியப் போர்விமானங்கள் கொழும்பில் தாழ்வாகப் பறந்து எச்சரிக்கை விட்டதாகவும், அமெரிக்க ஆயுதக் கப்பல் இலங்கை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்தத் தேர்தலின் பின்பு, தமது திசையில் அரசியல் நகர்வதை ஊக்குவிக்க மீண்டும் ஐ.எம்.எப் கடன் வழங்க முன்வந்தது. ஐக்கிய நாடுகள் சபை, தமது அழுத்தத்தைக் குறைத்து இலங்கை அரசை அனுசரிக்கும் காலக்கெடுக்களை வழங்கத் தொடங்கியது. நிறுத்திவைக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பி வழங்கியது. இதை முறியடிக்க, சீனக் காசில் ராஜபக்ச 2018-ல் நடத்திய பாராளுமன்ற சூழ்ச்சியும் துருவ முரண் கூர்மைப் பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அச்சமயம் ராஜபக்ச பிரதமராவதற்கான அங்கீகாரம் சீனாவிடமிருந்து துரித கதியில் வந்துசேர்ந்ததை அவதானிக்க வேண்டும். சீனத் தூதுவர் வெளிப்படையாக ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க, மேற்கும் இந்தியாவும் கடுமையான கண்டனங்களுடன் தம்மை சனநாயகவாதிகளாகக் காட்டிக் கொண்டனர். ரணில் மீண்டும் பிரதமராகிய பின் பாராளுமன்றம் கூடியபொழுது, அமெரிக்கத் தூதுவர் பாராளுமன்றத்துக்கு உள்ளிருந்து ‘ட்வீட்’களைவிட்டு ‘தெட்டத் தெளிவான’ செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். தாம் சீன நலனுக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதே அவர் செயலின் சாராம்ச செய்தி. 

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

த்தகைய நேரடித் தலையீடு, இலங்கைக்குள் இருக்கும் கட்சிகளையும் துருவமயப்படுத்தியிருக்கிறது. ஐ.தே.கட்சி மேற்குலகின் நலனையும், ராஜபக்ச அரசியல் சீன நலனையும், த.தே.கூ இந்திய நலனையும் நேரடியாகப் பிரதிபலிக்கும் முறையில் இசைவாக்கம் அடைந்துள்ளன. த.தே.கூ பல்வேறு சக்திகளின் நலன்களுக்கு இடையில் வளைந்தோடி, தமிழர் நலன்களைப் பெற்றுத்தருவதாகப் பிரஸ்தாபிப்பது, வலதுசாரிய ஐ.தே.கட்சி பிரதமர் ரணில் முன்வைக்கும் கொள்கையின் எதிரொலி மட்டுமே. கடந்த பாராளுமன்ற கெடுபிடிக்குள்ளும் கூட்டமைப்பு நித்திரை கொண்டிருந்தது. அவர்கள் கால்களுக்குக் கீழ் வெடித்துக்கொண்டிருந்த குண்டுச் சுவாலைகள் படர்ந்து, அவர்களைச் சுடத் தொடங்கிய பிறகுதான் அவர்கள் பதறியடித்து எழுந்தனர். எழுந்த கையுடன் “இந்தியா” என்ற ஒரு கூக்குரலை வைத்தனர். இந்தக் கேவலத்தில், எதை வைத்து அவர்கள் துருவங்களைச் சமநிலைப்படுத்திய அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள் என இன்றுவரை சொல்லவில்லை. இந்தியா/மேற்கு – எதிர் - சீனா என்ற நேர்க்கோட்டு சூத்திரத்தைவைத்து லகுபடுத்திய தர்க்க முடிவுகளுக்கு வருவதை ‘ராஜதந்திரமாக’ அவர்கள் முன்வைக்கிறார்கள்.

பல்துருவ நிலைமை, ஒரு குறிப்பிட்ட சக்தி நிலைகொள்ளும் தன்மையைத் தகர்த்து,  ஆதிக்கம் மையம்கொள்ளும் புள்ளியை அவ்வப்போது நகர்த்திவருவதை இலங்கை அரசியலில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இது, த.தே.கூட்டமைப்பின் கிட்டப் பார்வைக்கு எட்டப்போவதில்லை. தற்போதைய உலக நிலவரம், வளத்துக்கான போட்டியைக் கூர்மைப்படுத்தி உலக அரசியல் நிலவரத்தைத் தொடர்ந்து மறுசீரமைவுக்கு உள்ளாக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய நெருக்கடியில், பொருளாதாரங்களும் அரசியலும் தேசிய எல்லைகளை நோக்கி முடங்குவதைப் பார்க்கிறோம். இத்தகைய உலகமயமாதலின் தலைகீழ் திருப்பத்தில் பொருளாதார வலுவற்ற சிறு நாடுகளின் நவகாலனித்துவத் தன்மையானது, மேலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, இலங்கை போன்ற நாடுகளில் இறையாண்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி வரும் பொருளாதார நெருக்கடி, அதை மேலும் கூர்மைப்படுத்தும் சாத்தியமே உள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகள் எதுவுமே இலங்கை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. இதேசமயம், முரண் அரசியலின் விளைவாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவு அதிகரித்துள்ளது. ரணிலை முறியடிக்க, ‘முஸ்லிம் மக்களை பொது எதிரியாக நிறுத்த’ முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய பல்வேறு அமைப்புகளை உருவாக்கிவருகிறார். குடும்பத்துக்குள் இருக்கும் முரண்பாட்டையும் மீறி, அடுத்த தேர்தலில் சனாதிபதி போட்டிக்கு அவர் நிறுத்தப்படுவார் எனப் பேசப்படுகிறது. அடுத்த தேர்தலும் ஒரு போர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. இந்நிலையில், தூரநோக்குப் பார்வை உள்ள அரசியலை நோக்கி ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் நகர வேண்டும். இடைக்காலத் தரகர்களைத் தாண்டி, எமது நலன்களை முன்வைக்கும் தூரநோக்கு அரசியற் பார்வை மற்றும் திட்டமிடல் உள்ள சுதந்திர அமைப்பைக் கட்டுவது நோக்கி நாம் நகரவேண்டும். அந்த திட்டமிடலில், தமிழ் நாடு மற்றும் இந்தியா எங்கும் துன்பப்படும் பெரும்பான்மை மக்கள் எமது நட்புச் சக்தியே. அந்தப் பலம் சமரசமற்ற முறையில் திரட்டப்படுவது மட்டுமே எம்மைத் தளைகளிலிருந்து விடுவிக்கும்.