நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

கேள்வி - பதில்

என்னுடைய குடும்பத்தினர் மதுரையில் வசிக்கிறார்கள். நான் மட்டும் பணிநிமித்தமாக சென்னையில் வசிக்கிறேன். எங்கள் அனைவருக்கும் ஒரே மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க முடியுமா என்பதற்கு விளக்கம் தரவும்! 

மகேஷ்குமார், சென்னை

ஸ்ரீதரன், வெல்த்லேடர்

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

“ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, இந்தியாவிற்குள் உங்கள் குடும்பம் எங்கிருந்தாலும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொரு பாலிசி தாரருக்கும் தனித்தனி பாலிசி அட்டை வழங்கப் படுவதால் பாலிசியின் க்ளெய்மில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது.”

நான் 2017, ஜூலை மாதத்தில் ஓர் இடத்தை வாங்கினேன். அதில் 2018, மே மாதத்தில் வீடு கட்டத் தொடங்கினேன். அந்த வீட்டின் ஒரு பகுதியை 2019, ஜூன் மாதத்தில் விற்பனை செய்யவுள்ளேன். இதிலிருந்து கிடைக்கும் ஆதாயம், நீண்ட காலத்தில் சேருமா அல்லது குறுகிய காலத்தில் சேருமா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்! 

ராஜகோபால், மதுரை

பி.கமலேசன், ஆடிட்டர்


“வருமான வரிச் சட்டம் 1961 செக் ஷன் 45-ன்படி, குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கான அதிகபட்ச கால அளவீடு 24 மாதங்களாக உள்ளது. நீங்கள் வீடு வாங்கிய தேதியிலிருந்து கணக்கிட்டால், இந்த விற்பனை 24 மாதங்களுக்குள் நடந்துள்ளது. எனவே, இது குறுகிய கால மூலதன ஆதாயத்தில்தான் சேரும்.”

தமிழகத்திலிருந்து கத்தார் நாட்டுக்கு நான் ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அந்த நாட்டில் எந்தெந்தப் பொருள்கள் அதிகம் இறக்குமதி செய்யப்படு கின்றன என்பதைச் சொல்ல முடியுமா?

பார்த்திபன், சென்னை

எஸ்.சிவராமன், ஏற்றுமதி ஆலோசகர்

“மத்திய கிழக்கு நாடுகளில் வளம்மிக்க நாடான கத்தார், நமது இந்தியப் பொருள்களைக் கணிசமான அளவு இறக்குமதி செய்துவருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் கிடைக்கக்கூடிய பொருள்களான அரிசி, உப்பு, தேயிலை, பால், வெண்ணெய், நெய், சீஸ், தேன், தேங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வாழைப் பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை, அனைத்து விதமான காய்கறிகள், மிளகாய்த்தூள், சீரகம் மற்றும் பிற நறுமணப்பொருள்கள், பிஸ்கட், முந்திரி முதலிய விவசாய மற்றும் உணவுப் பொருள்கள் மற்றும் தங்க நகைகள், கட்டுமானம் செய்யத் தேவையான இரும்பு ராடுகள், குழாய்கள், எலெக்ட்ரிக்கல் பேனல் போர்டுகள் போன்றவை பெருமளவில் அங்கே இறக்குமதி செய்யப் படுகின்றன. எனவே, இவற்றில் எதையாவது ஏற்றுமதி செய்தால், வெற்றிகரமாகச் செயல்பட முடியும்.”

மெடிக்ளெய்ம் பாலிசியைப் பயன்படுத்தி ஓர் ஆண்டில் அதிகபட்சம் எத்தனைமுறை க்ளெய்ம் செய்யலாம், ஓர் ஆண்டுக்கான காப்பீட்டு வரம்பை எட்டிவிட்டால், அதன்பிறகும் க்ளெய்ம் செய்ய வாய்ப்புள்ளதா?

செல்வி, திருச்சி

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர் 

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

“அந்த ஆண்டுக்கான காப்பீட்டு வரம்பை எட்டும்வரை எத்தனை முறைவேண்டுமானாலும் க்ளெய்ம் செய்யலாம். இதில் எண்ணிக்கை வரம்பு என்று எதுவும் கிடையாது. காப்பீட்டு வரம்பை எட்டிவிட்டால், அந்த ஆண்டு முடியும்வரையிலான எந்தச் சிகிச்சைக்கும் க்ளெய்ம் செய்ய முடியாது.”

ஜோதி லேபாரட்டரீஸ் (Jyothy Laboratories Ltd) நிறுவனத்தின் 250 பங்குகளை 180 ரூபாய்க்கு வாங்கினேன். இந்தப் பங்கின் விலை குறைந்து, தற்போது 161 ரூபாயாக வர்த்தகம் ஆகிறது. இந்தப் பங்கு சரிவிலிருந்து மீண்டுவருமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்றுவிடலாமா?

முத்துகுமார், ராஜபாளையம்


எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்


“இந்தப் பங்கு நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை, ஆண்டின் அதிகபட்ச இறக்கத்தில் உள்ளது. எனினும், இந்த நிறுவனம் லாபத்தில் இயங்குவதால், ஓரளவு நல்ல நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, சற்றுப் பொறுமையாக, பங்கு விலை மீண்டெழுந்து வரும்வரை பங்குகளைக் கைவசம் வைத்திருப்பது சரியாக இருக்கும்.”

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளின் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு இதுதான் சரியான சமயம் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்து சரிதானா, ஸ்மால் அல்லது மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா என்று சொல்லவும்.

கிருஷ்ணசாமி, திண்டுக்கல்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


“கடந்த ஒரு வருடத்தில் மிட்கேப் பங்குகள் 12 சதவிகிதமும், ஸ்மால்கேப் பங்குகள் 22 சதவிகிதமும் விலை குறைந்துள்ளன. கடந்த சில மாதங்களில் இவை சற்று உயரத் தொடங்கியிருப்பதாலும் தேர்தல் முடிவுகள் நெருங்கி வருவதாலும் நிபுணர்கள் இவற்றை மீண்டும் பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய பங்குகளும் இவற்றின் ஃபண்டுகளும் பலமான ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆதலால், இவற்றில் முதலீடு செய்பவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்குப் பொறுமை காக்க வேண்டியிருக்கலாம். 

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

இப்படிக் காத்திருக்கும் பொறுமையும் சக்தியும் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், இன்றைய சூழலில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.”

சொந்தப் பயன்பாட்டிற்கான காரை கமர்ஷியல் பயன்பாட்டிற்கு மாற்றும்போது இன்ஷூரன்ஸில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டியிருக்குமா அல்லது எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாமா?

கிஷோர்குமார், சென்னை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


“கமர்ஷியல் பயன்பாட்டிற்கு வாகனத்தை மாற்றும்போது கண்டிப்பாக இன்ஷூரன்ஸில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். முதலில், பதிவுச் சான்றிதழில் (ஆர்.சி புக்) மாற்றம் செய்ய வேண்டும். வாகனத்தின் கமர்ஷியல் பயன்பாட்டிற் காக எஃப்.சி பார்த்து, பர்மிட் வாங்க வேண்டும்.

வாகனத்தை கமர்ஷியலாகப் பயன்படுத்தும் போது பயணிகளுக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் ஆவதால், கூடுதல் பிரீமியத்துடன் இன்ஷூரன்ஸில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.”

இரண்டு அடுத்தடுத்த வீடுகளை நான் விலைக்கு வாங்கியுள்ளேன். இரண்டு வீடுகளுக்கும் இடைப்பட்ட பொதுவான சுற்றுச்சுவரை இடித்து, இரண்டுக்கும் ஒரே சுற்றுச்சுவராக மாற்றவுள்ளேன். அதன்பின்னர் இது ஒரே சொத்தாகக் கருதப்படுமா அல்லது வெவ்வேறாகத் தான் இருக்குமா?

செந்தில்குமார், செங்கல்பட்டு

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்


“பொதுவான சுவரை இடித்தால் மட்டுமே ஒரே சொத்தாகக் கருதப்படாது. இரண்டுக்கும் தனித்தனி சொத்து வரிதான் வசூலிக்கப்படும்.

நீங்கள் தனித்தனியாக வாங்கிய வீடுகளை ஒரே சொத்தாக மாற்ற விரும்பினால், அதற்கென முறையாக விண்ணப்பித்துத்தான் மாற்றம் செய்ய முடியும்.”

தொகுப்பு : தெ.சு.கவுதமன்   

மதுரையில் குடும்பம்... சென்னையில் நான்... ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.