
முதலீட்டாளர்களே உஷார்! - மியூச்சுவல் ஃபண்டைவிட அதிக வருமானம்!
நம் நாட்டில் நிதிக்குப் பஞ்ச மிருக்கலாம். ஆனால், மோசடி நிதி நிறுவனங்களுக்குப் பஞ்சமே இல்லை. சில நிதி நிறுவனங்கள், வங்கிகளைவிட அதிக வருமானம் தருவதாகச் சொல்லி மக்களின் கவனத்தைத் தன்பக்கம் இழுத்து வருகின்றன. வங்கி வைப்புநிதியில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், அதிக லாபம் வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவி மக்கள் இந்த நிதி நிறுவனங்களின் சதிவலையில் சிக்கிப் பணத்தை இழக்கிறார்கள்.

சில வாரங்களுக்குமுன் நாணயம் விகடன் வாசகர் ஒருவர் நம் கவனத்துக்குக் கொண்டுவந்த நிதி நிறுவனம் ஒன்று, மியூச்சுவல் ஃபண்டைக் காட்டி மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்துவருகிறது. அந்த வாசகர் நம்மிடம் சொன்னதாவது...
‘‘சென்னை வளசரவாக்கத்தில் இருக்கிறது டி.ஹெச்.ஆர்.ஐ மியூச்சுவல் பெனிஃபிட் ஃபண்ட்ஸ் (DHRI Mutual Benefit Funds) என்கிற நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தரும் வருமானத்தைவிட 5 பைசா அதிக வட்டி தருகிறோம் என்கிறது இந்த நிறுவனம். தவிர, பணம் போட்ட ஏழு மாதங்களில் அசலையும் வட்டியையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம் என்கிறது. இந்த நிறுவனத்தினர் சொல்வதை நம்பிப் பணம் போடலாமா’’ என்று நம்மிடம் கேட்டார் அந்த வாசகர்.
வாசகர் சொன்ன அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் (http://dhrimutualfunds.com) சென்று, அதில் குறிப்பிடப் பட்டிருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டு, ஒரு முதலீட்டாளர்போல பேசத் தொடங்கினோம். அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டவர், அந்த நிறுவனத்தில் பணம் போட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விளக்கமாகச் சொன்னார்.
‘‘நாங்கள் தரும் பணத்தை நீங்கள் எதில் முதலீடு செய்வீர்கள்’’ என்று நாம் கேட்க, ‘‘மியூச்சுவல் ஃபண்டில்’’ என்றார். ‘‘பிறகு ஏன் உங்கள் நிறுவனத்தை மியூச்சுவல் பெனிஃபிட் ஃபண்ட்ஸ் என்று வைத்திருக்கிறீர்கள்’’ என்றோம். அதற்கு, ‘‘மியூச்சுவல் ஃபண்டுடன் சில பெனிஃபிட்களையும் சேர்த்துத் தருவதற்காக இப்படிப் பெயர் வைத்திருக்கிறோம்’’ என்று புது விளக்கம் தந்தார்.

‘‘மியூச்சுவல் ஃபண்டில் எந்த மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்கிறீர்கள்’’ என்று நாம் கேட்க, ‘‘மருத்துவக் கல்லூரிகள், இன்டர் நேஷனல் பள்ளிகள், பெட்ரோலியம் எனப் பல துறைகளில் முதலீடு செய்கிறோம்’’ என்று சொல்ல, நமக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது.
‘‘மியூச்சுவல் ஃபண்டில் போடுவோம் என்று சொல்லிவிட்டு, மருத்துவக் கல்லூரி என்றெல்லாம் சொல்கிறீர்களே!’’ என்று இடைமறிக்க, அலுவலகத்துக்கு நேரில் வந்தால் விளக்கம் தருவோம் என்று பதில் வந்தது. உரிய விளக்கம் பெற நாம் அந்த அலுவலகத்துக்குப் போனோம்.
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் ஒரு மாடி வீடு இருந்தது. வெளியில் நிறுவனத்தின் பெயரைச் சொல்லும் பலகை எதுவும் இல்லை. பி.டி.டி டிரஸ்ட் என்று மட்டும் போர்டு இருந்தது. ஒன்பது ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கிவருவதாக இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனத்தின் பெயர்ப் பலகைகூட வெளியே இல்லையே என்கிற ஆச்சர்யத்துடன் அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்தோம்.
அந்த அலுவலகத்தில் ஒரு நிதி நிறுவனம் இயங்குவதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. சற்று நேரம் காத்திருந்த பின், அருகிலுள்ள அறையி லிருந்து டி.ஹெச்.ஆர்.ஐ மியூச்சுவல் பெனிஃபிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பிரவீன் குமார் வந்தார். ‘நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் நிறுவனர் இரண்டுமே நான்தான்’ என அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாம் நாணயம் விகடனிலிருந்து வந்திருப்ப தாகச் சொன்னோம்.

‘‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதனால்தான் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளைவிட 5 பைசா கூடுதலாக தருகிறோம்’’ என்றார் அவர்.
‘‘மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. சந்தையின் போக்குக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி-யில் தினசரி ஏற்ற இறக்கம் இருக்கும். இந்த நிலையில், நீங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளைவிட 5 பைசா அதிகம் தருவதாகச் சொல்கிறீர்களே, எப்படி” என்று நாம் கேட்ட வுடன் கோபமானார் பிரவீன் குமார். ‘‘மியூச்சுவல் ஃபண்டைவிட நான் அதிக வருமானம் தருகிறேன். அந்த அடிப்படையில் நான் சொல்கிறேன். அதை நீங்கள் எப்படிக் கேள்விக்குள்ளாக்க முடியும்’’ என்று கேட்டார்.
‘‘உங்கள் நிறுவனத்தின் இணையதள முகவரி, இ-மெயில் முகவரி அனைத்திலும் மியூச்சுவல் ஃபண்ட் என்றே வைத்திருக்கிறீர்கள். முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நீங்கள் செபி அல்லது ஆம்ஃபியில் பதிவு செய்திருக் கிறீர்களா, அப்படிப் பதிவு செய்திருந்தால், அதைக் காட்ட முடியுமா’’ என்று நாம் கேட்க, ‘‘அதையெல்லாம் முதலீட்டாளர் களுக்குக் காட்டுவேன். உங்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை’’ என்று சொல்லி, நம்மை வெளியே அனுப்பினார். அரசு அமைப்புகளில் முறைப்படி பதிவு செய்துகொண்ட ஒரு நிறுவனம், அதற்கான சான்றுகளைக் காட்ட ஏன் தயங்க வேண்டும்?
இந்த நிறுவனம் குறித்து மியூச்சுவல் ஃபண்ட் விநியோ கஸ்தரும், நிதி ஆலோசகருமான முத்துகிருஷ்ணனிடம் கேட்டோம். ‘‘இந்த நிறுவனத்தின் பெயரைப் பார்த்தால், இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தான் என்று மக்கள் நினைப்பார்கள். இதன் இணைய தளத்தின் முகப்பிலேயே மியூச்சுவல் ஃபண்ட் விளம் பரத்தை வைத்திருக்கிறது. செபியிடம் பதிவு செய்யாமல் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்று பெயர் வைக்கக்கூடாது. முதலீட்டுக்கு உத்தரவாதமும் தரக்கூடாது. இதுபோன்ற நிதி நிறுவனங்களிடம் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிறுவனம் குறித்து செபி, ஆம்ஃபி, பொருளாதாரக் குற்றப்பிரிவு போன்ற அமைப்புகள் விசாரித்து, உண்மை நிலையை விளக்குவது அவசியம்!
தெ.சு.கவுதமன்