நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

த்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்). என்.பி.எஸ்-ல் முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் மற்ற முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாக  இருப்பதே இதற்குக் காரணம். குறிப்பாக, என்.பி.எஸ் முதலீட்டின்மூலம் கிடைத்த லாபம், பிராவிடன்ட் ஃபண்டைவிட அதிகமாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

மூன்று ஃபண்ட் நிறுவனங்கள்

இன்றைய நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வூதியச் சேமிப்பானது எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி மற்றும் யூ.டி.ஐ ஆகிய மூன்று ஓய்வூதிய ஃபண்ட் மேலாளர்கள்மூலம் சமமாகப் பிரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்த மூன்று நிதி மேலாளர்களும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக தனித்தனியாக (Scheme-CG & Scheme-SG) மியூச்சுவல் ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார்கள்.

தற்போதைய நிலையில், இந்த இரண்டு பிரிவுகளும் நிர்வகிக்கும் சொத்து மதிப்புகள் முறையே ரூ.1.1 லட்சம் கோடியாகவும், ரூ.1.6 லட்சம் கோடியாக இருக்கிறது. இவற்றில் 15% ஈக்விட்டியிலும், 85% அரசுப் பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பாண்டுகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு களில் இவ்விரு பிரிவுகளும் கொடுத்திருக்கும் வருமானத்தைக் கணக்கிடும்போது, ஸ்கீம்-சிஜி சராசரியாக 9.1 சதவிகிதமும், ஸ்கீம் -    எஸ்.ஜி சராசரியாக 9.5 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கிறது. இதே கால கட்டத்தில், பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வழங்கியிருக்கும் வருமானம்     8.7 சதவிகிதமாக இருக்கிறது.

புதிய விதிமுறைகள்

இதுபற்றி நிதி ஆலோசகர், யு.என்.சுபாஷிடம் கேட்டோம். “என்.பி.எஸ் திட்டத்தில் ஆரம்பக் காலத்தில் அதிகக் குழப்பம் இருந்தது. அதனால் இதில் முதலீடு செய்வதற்குப் பலரும் யோசித்தார்கள். ஆனால், இப்போது குழப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, இதில் முதலீடாகும் தொகையின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. 

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

கடந்த 1.4.2019-ம் தேதி முதல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் என்.பி.எஸ் முதலீட்டிற்கு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, அரசு சந்தாதாரர்கள் தனியார் துறை ஃபண்டு களையும் தேர்வு செய்யலாம். முன்பு இது பொதுத்துறை ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றிருந்தது.

என்.பி.எஸ் திட்டத்தின்கீழ் வரும் அரசு சந்தாதாரர்கள் இனி ஆண்டுக்கு ஒருமுறை தங்களது ஃபண்டுகளை மாற்றி அமைக்கலாம். முன்பு அரசு சந்தாதாரர்களுக்கு இந்த வசதி இல்லாமல் இருந்தது. என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்வரை இடையில் எடுக்க முடியாது என்றிருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எடுக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

பழைய திட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழங்கும் மூன்று பொதுத்துறை ஃபண்டுகளின் முந்தைய செயல்பாட்டை வைத்து முதலீடு மேற்கொள்ளப் படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய முறையே தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நிரந்தர வருமானம் வேண்டும் என எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பான விருப்பத் தேர்வுப் பிரிவின்கீழ் ஃபண்டுகளை தேர்வு செய்யும்போது, 100 சதவிகித நிதியும் அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

அதிக வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஊழியர்கள் கன்சர்வேட்டிவ் லைஃப் சைக்கிள் முறையைத் தேர்வு செய்தால் குறைந்தது 25% நிதியானது பங்குச் சந்தையிலும், 75% நிதியானது லைஃப் சைக்கிள் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். மாடரேட் லைஃப் சைக்கிள் முறையைத்  தேர்வு செய்தால் 50% நிதியானது பங்குச் சந்தையிலும், மீதமுள்ள 50% நிதியானது லைஃப் சைக்கிள் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்யப்படும்.

என்.பி.எஸ் திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், 15% நிதி ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் அதன் வருமானம் நீண்டகால அடிப்படையில் நன்றாக இருக்கும். இதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.

ஆனால், இ.பி.எஃப் முதலீட்டுத் திட்டங்களில் ஈக்விட்டி ஃபண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு விகிதம் மிக மிகக் குறைவு என்பதால், அதன் வருமானமும் குறைந்து காணப்படுகிறது.

இன்றைய நிலையில் ஓய்வுக்காலத்துக்காக வி.பி.எஃப் திட்டங்களை அணுகுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஓய்வுக்கால நிதி சேமிப்புக்கு பி.எஃப். மட்டும்தான் ஒரே வழி என நினைக்காமல், ஓய்வுக்காலத்துக்கான  கூடுதல் முதலீட்டை என்.பி.எஸ் திட்டங்களில் செய்யலாம்” என்றார்.

என்.பி.எஸ் ஃபண்டுகள்

என்.பி.எஸ்-ல் டயர்-1 பென்ஷன் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்தவை, கார்ப்பரேட்  கடன்,  அரசு பாண்டுகள் என மூன்றுவிதமான திட்டங்கள் உள்ளன. 

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

கடந்த மூன்றாண்டுகளில் இந்த மூன்று திட்டங் களில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள்  நல்ல லாபம் தந்துள்ளன. பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் நிர்வகிக்கும் ஃபண்ட் கடந்த மூன்றாண்டு காலத்தில் அதிகபட்சமாக 15.40% லாபம் தந்திருக்கிறது. குறைந்தபட்சமாக, எல்.ஐ.சி ஃபண்ட் 12.97% லாபம் தந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட் அதிகபட்சமாக 10.52% லாபம் தந்திருக்கிறது. குறைந்தபட்சமாக யூ.டி.ஐ ரிட்டயர்மென்ட் சொல்யூஷன் ஃபண்ட் 10% லாபம் தந்திருக்கிறது.

என்.பி.எஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபம்    இ.பி.எஃப் முதலீடுகள்மூலமான லாபத்தைவிட அதிகமாக இருப்பதால், முதலீட்டின் ஒருபகுதியை இதில் போடலாம் என்பது நிதி ஆலோசகர்களின் ஆலோசனை ஆகும்.

இன்று 35 வயதாகும் ஒருவர் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 10 சதவிகித லாபத்துடன் மாதம் ரூ.50,000, ரூ.75,000, ரூ.1 லட்சம், ரூ.1.5 லட்சம் பென்ஷன் பெற, இப்போது மாதம் அவர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள  அட்டவணை 3-யைப் (முதலீட்டின்மூலம் கிடைக்கும் மாதாந்தர பென்ஷன்) பார்க்கவும். இந்தக் கணக்கீடு தோராயமானதே.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யும்முன், அது பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம். என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 17 இலக்க நிரந்தர பி.ஆர்.ஏ.என் கணக்கு (Permanent Retirement Account Number) எண் வழங்கப்படும். பி.ஆர்.ஏ.என் பதிவு செய்த இருபது நாள்களில் இந்த எண் மற்றும் அதற்கான கார்டு கிடைத்துவிடும். அதற்கான தகவல் எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

என்.பி.எஸ்... பிராவிடன்ட் ஃபண்டைவிட கூடுதல் வருமானம்!

18-60 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். அரசு ஊழியர்களுக்கு இது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா ஊழியர்கள், பெண்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான என்.பி.எஸ் சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதல் வகையில், வருடத்துக்கு ரூ.500 குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாகவும், இரண்டாவது வகையில் ரூ.1,000 குறைந்தபட்ச முதலீடாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டை இடையில் நிறுத்துவது என்.பி.எஸ் திட்ட விதிமுறை மீறலாகக் கருதப் படுகிறது.

என்.பி.எஸ் முதலீட்டை இடையில் நிறுத்தினால், அந்தக் கணக்கு முடக்கப்படும். இதற்கு ரூ.100-யை அபராதமாகச் சேர்த்து, குறைந்தபட்ச முதலீட்டைச் செய்தால்தான் அந்தக் கணக்கைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும்.

ஓய்வுக்காலத்துக்காக இருக்கும் இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை அதிக ரிஸ்க் இல்லாத நிரந்தர வருமானம் தரக்கூடியது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டுப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம். அதாவது, ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வகையில் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முடியும்.

என்.பி.எஸ் சந்தாதாரர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கவேண்டும், எந்த வகையான முதலீட்டைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் தெளிவு இல்லையெனில், அவர்களின் வயது அடிப்படையில் முதலீடு செய்யப்படும். இளம் வயதில் இருப்பவர்களுக்கு அதிக ரிஸ்க் உடைய முதலீடும், வயது அதிகமாக இருப்பவர்களுக்குக் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடும் தேர்வு செய்யப்படும்.

என்.பி.எஸ் திட்டத்தில் இடையில் பணம் எடுக்க முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது உள்ள புதிய விதிமுறைகளின்படி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பணத்தை வெளியே எடுக்க முடியும். அதாவது, திருமணம், குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான மருத்துவச் செலவுகள், உயர்கல்வி, திருமணம், முதல்முறையாக வீடு வாங்குவது போன்ற காரணங்களுக்காகப் பணத்தைத் திரும்ப எடுக்கலாம். ஆனால், என்.பி.எஸ் கணக்கிலிருந்து மொத்தமாக மூன்று முறைதான் இடையில் பணம் எடுக்க முடியும்.

என்.பி.எஸ் திட்டத்தில் கணக்குத் தொடங்கு வதற்குக் கட்டணம் ரூ.40 (கார்வி மற்றும் என்.எஸ்.டி.எல்), ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் ரூ.95 (என்.எஸ்.டி.எல்), ரூ.58 (கார்வி), ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.4 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்படுகிறது.

என்.பி.எஸ் திட்டத்தில் நிர்வாகக் கட்டணம் மிகவும் குறைவு. பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு   1 - 2 சதவிகிதம் நிர்வாகக் கட்டணம் இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் 0.01% ஆகும்.

என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சிசிடி-யின் படி கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய்க்கும், 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கும் வரிவிலக்குப் பெற முடியும். ஆகமொத்தமாக, 2 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்குப் பெற முடியும்.

இதுவரை என்.பி.எஸ் திட்டத்தில் சேராதவர்கள் இனியாவது சேர்ந்து பயன் பெறலாமே!

செ.கார்த்திகேயன்