கட்டுரைகள்
Published:Updated:

திட்டமிடுங்கள்... தீர்மானியுங்கள்!

சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பு

ஊரடங்கு அறிவிப்பு

சிக்கனம் - சேமிப்பு - சுகாதாரம்... அடுத்த 6 மாதமும் இதுதான்!

வல்லரசு நாடுகளும்கூடக் கலங்கிப்போயிருக்கின்றன. கண்களுக்குப் புலப்படாத கொரோனா உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் அஸ்திவாரங்களே ஆடும்போது வளரும் நாடான இந்தியா மட்டும் தப்பிக்க முடியுமா? உலகப் பொருளாதாரச் சரிவு நம் வாழ்வை நேரடியாக பாதிக்கப்போகிறது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் அதன் தாக்கம் இருக்கும். வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு மாதிரியான சூழல்களை இனிவரும் நாள்களில் எதிர்கொள்ள நேரிடலாம். அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்கிறோமா?

இந்த நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் நிதித் திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு தனிநபரும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன என்பதைப் பற்றி நிதி ஆலோசகர் சுரேஷ்பார்த்தசாரதியிடம் பேசினோம். அவர் தந்த எளிமையான வழிகாட்டுதல்களின் தொகுப்பு இது.

மிச்சமாவதைச் சேமிக்கலாம்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நாள்களில், அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம் அல்லது விடுப்பில் இருக்கிறோம். வெளிப்போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் செலவுகள் உட்பட இதர போக்குவரத்துச் செலவுகள் மிச்சமாகும். தவிர, பேரிடருக்கு நிவாரண நிதியாகக் குறிப்பிட்ட தொகையை அரசு அறிவித்திருக்கிறது. அதே போல் ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமைகளை வழக்கத்தைவிட அதிகமாக அறிவித்திருக்கிறது. இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நிறைய மிச்சப்படுத்தலாம். இப்படி மிச்சமாகும் பணத்தை ஆடம்பரமாகச் செலவழிக்காமல் முழுமையாகச் சேமிக்கத் தொடங்க வேண்டும்.

வைப்பு நிதியை எடுப்பதற்கு முன்...

அரசு தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து மூன்று மாத சம்பளத் தொகை வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதைத் திரும்பச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. கையில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே பணமின்றித் தவிப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவைக்கேற்ப பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வைப்பு நிதியை மிகமிக அவசியத் தேவையுள்ளோர் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வைப்பு நிதி என்பது அவரவர்களின் ஓய்வுக்காலத்திற்காகச் சேமித்து வைக்கப்படும் நிதி என்பதையும் மறந்துவிடக்கூடாது.

சேமிப்பு
சேமிப்பு

அவசரக்கால நிதி அவசியம்

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் அவசரக்கால நிதி என்கிற ஒன்றை எல்லோருமே உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர் சமயங்களிலும் வீட்டில் ஏதாவது எதிர்பாராத செலவுகள் வரும்போதும் நமக்கு இந்த அவசரக்கால நிதி, பேருதவி புரிகிற ஒன்றாக இருக்கும். மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசரக்கால நிதிக்கென ஒதுக்குவதைக் கட்டாயமாக்குங்கள். அவசரக் கால நிதியைக் கையில் இருப்பாகவோ அல்லது வங்கியில் சேமிப்புக் கணக்கிலோ வைத்துக் கொள்வதைவிட டெப்ட் அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளலாம். இதனால் வங்கியில் கிடைக்கும் வட்டியைவிடச் சற்றே கூடுதல் வட்டியும் கிடைக்கும்.

கல்விக்கடன் பெறலாம்!

பெற்றோர்களுக்குக் காத்திருக்கும் மிகப் பெரிய பிரச்னையே ஜூன் மாதம் தொடங்கப்படும் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமே. இன்றைய சூழலில் கிண்டர் கார்டன் படிப்பிற்கே பல லட்சம் வரை செலவாகிறது. அப்படியிருக்க, பெற்றோர்களின் பரிதவிப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆனால் இந்தச் சூழலைச் சமாளிக்க நிறுவனங்கள் தரும் ‘லீவ் டிராவல் அலவன்’ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு எங்கும் சுற்றுலா செல்லாத பட்சத்தில், இந்த லீவ் டிராவல் அலவன்ஸைப் பள்ளிக் கட்டணத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உயர் கல்விக் கட்டணங்களுக்குக் கல்விக் கடன் வாங்குவதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. இந்தியாவில் கல்விக் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் குறைவாகவே உள்ளதால் தாராளமாக கல்விக் கடன் பெற்றுக் கட்டணத்தை சமாளிக்கலாம்.

திட்டமிடுங்கள்... தீர்மானியுங்கள்!

மருத்துவச் செலவுகளுக்கு...

எப்போதும் யாருக்கும் எதுவும் நேரலாம் என்கிற கொரானா காலகட்டத்தை மனதில் கொண்டு உடல்நலக் காப்பீட்டின் அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றைய தேதியில் 100 பேரில் 40 பேர்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துள்ளனர் என்கிறது ஆய்வு. இன்று நீங்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கினால்கூட இனி வரும் நாள்களில் ஏற்படும் எதிர்பாராத மருத்துவச் செலவுகளை தாராளமாகத் தவிர்க்கலாம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரையில் எடுத்தவுடன் பல ஆயிரங்களில் பிரீமியம் கட்டவேண்டும் என்றெல்லாம் இல்லை. அவரவர் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, சிறிய தொகையில் இருந்து பெரிய தொகை வரை பாலிசி இருக்கிறது. லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் குறைந்தது மூன்று லட்சம் ரூபாய்க்காவது பாலிசி எடுத்தால் மட்டுமே எதிர்பாராத மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியும். அதேபோல் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா
கொரோனா

எதிர்காலத்திற்குத் திட்டமிடுங்கள்

பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத் தலைவர் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருப்பார். அவரின் வருமானத்தை வைத்துத்தான் அந்தக் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நாளை எதிர்பாராத விதமாக குடும்பத் தலைவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், அந்த ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து தவிப்புக்குளாகிவிடும். இதுபோன்ற நேரங்களில், இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அந்த நிலையில் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்த்து சங்கடப் படுவதைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் தொகையை க்ளைம் செய்து, அதை ஒரு வங்கிச் சேமிப்புக் கணக்கில் போட்டுவிட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்தே நாம் நம்முடைய தேவைகளைச் சந்தித்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு இன்று 30 வயதுள்ள ஒரு நபர் 50 லட்சத்திற்கான பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் வருடாவருடம் 7000-8000 வரை பிரீமியம் செலுத்த நேரிடும். ஆனால் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் அந்தப் பாலிசித் தொகையைப் பெற்று வங்கியில் போட்டால்கூட நல்ல தொகை நமக்கு வட்டியாகக் கிடைக்கும். அதனை வைத்தே நம்மை விட்டுச் சென்ற நம் அன்புக்குரியவர்களின் கனவுகளையும் இலக்குகளையும் நம்மால் நிறைவேற்ற முடியும்.

சிம்பிளே சிறப்பு!

இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் ஆடம்பரங்களைத் தவிர்த்து மினிமலிஸ வாழ்வுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டால் அதிக கடன்கள் இன்றி மகிழ்ச்சியோடு ஆபத்துகளைக் கடந்துவிடலாம். உடனே ஒரு திட்டம் தீட்டுங்கள். கொஞ்ச நாள்களுக்கு ஆடம்பரத் தேவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அத்தியாவசியத் தேவைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிதிச்சிக்கலும் வராது, கொரோனாவும் உங்களை ஒன்றும் செய்யாது!