Published:Updated:

`குறைந்தது நேரடி வரி வருமானம்..!' -வருமானத்தைப் பெருக்க என்ன வழி?

வரி வருமானம்
வரி வருமானம்

நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருமானம்மூலம் ரூ.13 லட்சம் கோடி ஈட்ட வேண்டும் என மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், கடந்த ஒன்பது மாதங்களில் ரூ.9 லட்சம் கோடிகூட எட்டவில்லை.

இந்திய நிதித் துறையின் தலைமை நகரம் (Financial hub) என்றால் அது மும்பைதான். இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தலைமை அலுவலகத்தை மும்பையில்தான் வைத்திருக்கின்றன. இதனால்தான் மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் நேரடி வரி வருவாயில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடம் மும்பைக்கு இருக்கிறது. ஆனால், கவலைதரக்கூடிய செய்தி என்னவெனில், மும்பை மூலம் கிடைக்கும் நேரடி வரி வருவாய் இந்த ஜனவரி 15 வரையிலான காலத்தில் 13% குறைந்திருக்கிறது என்பதுதான். இந்த வரி வருமானக் குறைவு மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை இன்னும் அதிகப்படுத்தும் என்பதால், நேரடி வரி வருமானத்தைப் பெருக்கும் வழிகள் பற்றி ஆராயத் தொடங்கியிருக்கிறது.

வரி வருமானம்
வரி வருமானம்

இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மும்பை மூலம் வசூலான நேரடி வரி வருமானம் ரூ.2.20 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2.30 லட்சம் கோடி வரி வருமானம் கிடைத்தது. மும்பை நகரத்தின்மூலம் கிடைக்கும் வரி வருமானம் குறைந்திருப்பதைக் கண்டு வருமான வரித் துறையினர் கவலை அடையத் தொடங்கியுள்ளனர். மீதமுள்ள மூன்று மாதங்களிலும் வரி வருமானம் குறையும்பட்சத்தில், மத்திய அரசாங்கத்தின் வருமான வரி இலக்கினை எட்டமுடியாமலே போகும் என்பதே வரித் துறையினரின் கவலைக்குக் காரணம்.

பங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்? #SmartinvestorIn100Days நாள் - 86

நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருமானம்மூலம் ரூ.13 லட்சம் கோடி ஈட்ட வேண்டும் என மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், கடந்த ஒன்பது மாதங்களில் ரூ.9 லட்சம் கோடிகூட எட்டவில்லை. இதனால் ரூ.5 லட்சம் கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் வருமானத் வரித் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பரில்தான் நேரடி வரி வருமானம் குறையத் தொடங்கியது. இந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முன்கூட்டியே கட்டப்படும் நேரடி வரி வருமானம் ரூ.73,000 கோடி மட்டுமே வசூலாகியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.77,000 கோடி நேரடி வரி வருமானம் வசூலானது.

வரி வருமானம்
வரி வருமானம்

நேரடி வரி வருமானம் குறைந்திருக்கும் நிலையில், முன்கூட்டியே கட்டப்படும் தனிநபர் வருமான வரி ரூ.33,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ.24,000 கோடி மட்டுமே வசூலானது.

அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருமானம் குறைந்துவரும் நிலையில், வரும் பட்ஜெட்டில் புதிதாக வரி ஏதேனும் விதிக்கப்படுமா, ரூ.5 லட்சத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்கிற சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலே போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு