Published:Updated:

பள்ளிகளில் கற்பிக்காத நிதி மேலாண்மையைக் குழந்தைகளிடம் வளர்ப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை
குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை

சேமிப்பிலிருந்து செலவழிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், பணத்தின் மதிப்பை உணர்ந்து வளர்வார்கள். அவர்களின் சேமிப்பாக இருக்கும்போது, அந்தச் செலவு தேவைதானா, தவிர்க்கலாமா என்று யோசிக்கும் பக்குவம் வரும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த தலைமுறைக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கும்போது 'சஞ்சயிகா' என்ற சிறுசேமிப்புத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது. அதன்படி, மாணவர்கள் கொடுக்கும் பணத்துக்கு அஞ்சல்தலைகளை வாங்கி ஒட்டி ஆண்டு முழுக்கச் சேமிப்பார்கள். தின்பண்டங்களுக்காகப் பெற்றோர் அளிக்கும் தொகையில் பத்து பைசா, இருபது பைசா என ஆண்டுமுழுவதும் சேமித்து வந்தார்கள். இன்னும் சில பெற்றோர்கள், குழந்தைகளுக்காக அஞ்சலகச் சேமிப்புத்திட்டம் தொடங்கவும் செய்தார்கள். சிறுசேமிப்பு என்பது மாணவர்களுக்கான ஒழுக்கங்களில் ஒன்றாகக் கற்பிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை
குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை

தற்போது மதிப்பெண்களுக்குப் பின்னால் ஓடக்கூடிய கல்விமுறையில் சேமிப்பு குறித்து பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளும் சூழல் இல்லை. தனியார் பள்ளிகளிலும்கூட சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு பெரிதும் இல்லை. சில பள்ளிகளில் மட்டுமே முன்மாதிரியாக, மாணவர் வங்கி, அஞ்சலகச் சேமிப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். சிறுசேமிப்பு குறித்த ஆர்வம் மாணவப் பருவத்திலேயே உண்டாக்கப்படுவது மிகவும் அவசியம். சிறுசேமிப்புப் பழக்கம்தான் நம் செலவுகளில் எது தேவையானது எது தேவையற்றது என்று பிரித்தறியும் குணத்தை வளர்க்கும். உடல் நலத்துக்கு ஒவ்வாத நொறுக்குத்தீனிகளுக்காக வீணாகச் செலவழிப்பது குறையும். மாணவர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும்.

மாணவர்களின் சிறுசேமிப்புப் பழக்கம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலரும் ஆசிரியருமான மு.மகேந்திரபாபுவிடம் கேட்டோம். "மாணவர்களுக்குச் சேமிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள்தாம் முதலில் தூண்ட வேண்டும். உண்டியலில் சேமிப்பது, அஞ்சலகம் மற்றும் வங்கிக்கணக்கில் சேமிக்கும் பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். சில வீடுகளில் அப்படிச் சேமிக்கும் பழக்கமுள்ள மாணவர்கள் இருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர் தருணங்களில் தங்கள் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்த குழந்தைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

மு.மகேந்திரபாபு
மு.மகேந்திரபாபு

சேமிப்பிலிருந்து செலவழிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், பணத்தின் மதிப்பை உணர்ந்து வளர்வார்கள். அவர்களின் சேமிப்பாக இருக்கும்போது, அந்தச் செலவு தேவைதானா அல்லது தவிர்க்கலாமா என்று யோசிக்கும் பக்குவம் வரும். தேவை, அவசியம், அவசரம் போன்றவற்றுக்கான வித்தியாசத்தை அவர்களால் உணர முடியும். அதேபோல பள்ளிகளில், அரசின் சார்பாக சிறுசேமிப்புத்திட்டம் இல்லையென்றாலும்கூட ஆசிரியர்களே தன்முனைப்போடு அந்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேமிப்புப்பழக்கம் இல்லாதவர்கள், கல்லூரி முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து மாதச்சம்பளம் வாங்கும் சூழலில், அந்த வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவிடத் தவறிவிடுகிறார்கள். அதிகப்படியான செலவுகள், இன்னொருபுறம் கடன்கள் என இரண்டும் சூழ்ந்த வாழ்க்கைச் சூழலுக்குள் பயணிக்கிறார்கள். பணியிழப்பு போன்ற நிலை வரும்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய நிலை மாற வேண்டுமானால் நிதி மேலாண்மை குறித்த அறிவு குழந்தைகளுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப குழந்தை வளர்ப்பு எப்படியிருக்க வேண்டுமென்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் விளக்குகிறார்.

"பெற்றோர்களின் மனநிலையில்தான் முதலில் மாற்றம் வர வேண்டும். பள்ளி, கல்லூரிப் படிப்பு முடித்த பின்புதான் நம் குழந்தைகளால் சம்பாதிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நிதி மேலாண்மை என்பதைக் கற்றுத்தர வேண்டும். ஏனென்றால், தற்கால இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு வரித்திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே சேமிப்பு, முதலீடு குறித்து சிறுவயதிலேயே சொல்லித் தர வேண்டும். அதை அவர்களே பிராக்டிகலாகச் செய்யும் வாய்ப்பைத் தர வேண்டும்.

பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்
பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்

குழந்தைகளின் பொறுப்பில் பொருள்களை வாங்கவிட வேண்டும். அவர்களுக்கு பொருள்களின் விலை குறித்த அறிவு வளர வேண்டும். வீட்டு மின் கட்டணத்தைக் கட்டுதல், கேஸ் இணைப்புக்குப் பணம் செலுத்துதல், குடிநீருக்கான வரி உள்ளிட்டவற்றைச் செலுத்தும் பொறுப்பைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதுவும் ஒரு படிப்புதான். அன்றாடச் செலவுக்குத் தரப்படும் பாக்கெட் மணியைச் சேமிக்கக் கற்றுத்தர வேண்டும். மிக முக்கியமான ஒரு உளவியல் சிந்தனை என்னவென்றால், எளிய வாழ்க்கை முறையை உயர்வாகச் சொல்லி வளர்க்க வேண்டும். பெற்றோரும் அப்படியே வாழ வேண்டும். அப்போதுதான் எளிய வாழ்க்கைமீதான ஆர்வம் இயல்பாகவே வரும்.

சிறுவர்களுக்குச் சேமிப்புக் கணக்குத் தொடங்க வேண்டும். வங்கியில் செக் போட்டுப் பணம் எடுப்பது, மியூச்சுவல் ஃபண்டில் சேமிப்பது, எதுவுமில்லாதபோது உண்டியலில் சேமிப்பது என்று பல்வேறுவிதமான சேமிப்பு முறைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் குடும்பச் சுற்றுலா செல்வதைப் பழக்கமாக்கிக்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான சுற்றுலாவுக்கு இந்த ஆண்டிலிருந்தே சேமிக்கப் பழக்க வேண்டும். நிறைய செலவுகள் பட்டியல் இருக்கும். அவற்றில் மிக முக்கியமல்லாத செலவுகளைத் தள்ளிப்போடுவது லாபகரமானது என்றால் அவற்றைத் தள்ளிப்போடலாம்" என்றார்.

குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை
குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை

குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணர்வில் இந்தியர்கள் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். பெற்றோரைச் சார்ந்தே பிள்ளைகள் வளர்வதும், பிள்ளைகளுக்குப் பொறுப்பைக் கொடுக்காமல் செல்லம் கொடுத்து வளர்க்கும் வளர்ப்பு முறையுமே இதற்கு முக்கியக் காரணமாகிறது. பெற்றோருக்கும் நிதி மேலாண்மை விழிப்புணர்வும் பொறுப்பும் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் இவ்விஷயத்தில் தங்களைத் திருத்திக்கொண்டு, பிள்ளைகளுக்கு சேமிப்பு, முதலீடு செய்வதற்கு முன்னுதாரணமாக மாற வேண்டும்.

சேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு