Published:Updated:

வட்டி உயர்வு: பி.எஃப் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் வழிகள்!

சம்பளத்தில் குறைவாக பிஎஃப் பிடித்தால், பணியாளர் வி.பி.எஃப் மூலம் தன் பி.எஃப் கணக்கில் அதிக தொகையைச் சேர்க்கலாம்.

பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்) வட்டி விகிதம்,  2018-19-ம் ஆண்டுக்கு 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆறு கோடி பேர் பயன் அடைகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? பி.எஃப் முதலீட்டை எப்படி லாபகரமாகப் பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.

1
PF

பி.எஃப். பங்களிப்பை அதிகரித்தல்..!

தனியார் நிறுவனங்களில், ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12 சதவிகிதம் அல்லது கட்டாய பி.எஃப் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,800 பி.எஃப் பிடிக்கப்படும். இதே தொகையை தொழில் நிறுவனமும் செலுத்தும்.

இதுதவிர, பணியாளர் விரும்பினால் அதிகபட்சம் அவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் ஒருவரின் வசதி மற்றும் தேவையைப் பொறுத்து, 88 சதவிகிதம் வரைக்கும் கூடுதலாக பி.எஃப் பிடிக்க செய்யலாம். அதேநேரத்தில், சம்பளத்துக்கு வெளியே இருந்து பணத்தை கொண்டு வந்து பி.எஃப் கணக்கில் செலுத்தமுடியாது. மற்றபடி முழுச் சம்பளத்தையும் பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். இதனை 'பணியாளர்  விருப்ப பிஎஃப்' (வி.பி.எஃப்) என்பார்கள். இந்த வி.பி.எஃப் தொகையும் பி.எஃப் கணக்கில் சேர்க்கப்பட்டு மொத்தத் தொகையாக பராமரிக்கப்படும்.

சம்பளத்தில் குறைவாக பிஎஃப் பிடிக்கப்படுபவர்கள், பணியாளர் வி.பி.எஃப் மூலம் தன் பி.எஃப் கணக்கில் அதிக தொகையை சேர்க்க முடியும். இதன் மூலம் அவர் பணி ஓய்வு பெறும்போது, பெருந்தொகையை பெற முடியும். வி.பி.எஃப் மூலம் சிறிய தொகையைக் கூட பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். வி.பி.எஃப் ஆக மாதம் ரூ. 100 என்பது போல் சிறு தொகையை கூடப் பிடிக்க சொல்லலாம். வி.பி.எஃப் கணக்கில் பிடிக்கும் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை கூட்டவோ குறைக்கவோ அனுமதிக்கப்படுகிறது. வி.பி.எஃப் பிடிக்க நிறுவனத்தின் காசாளரிடம் தகவல் சொல்லிவிட்டால் அல்லது எழுத்து அல்லது இ-மெயில் மூலம் எழுதிக் கொடுத்துவிட்டால் போதும்.

2
Tax benefit

வருமான வரிச் சலுகை..!

பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால் அது 100 சதவிகிதம் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இதற்கு தற்போது ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கி  ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானமான சுமார் 7 சதவிகித்தை விட அதிகம். அடுத்து பி.எஃப்  மற்றும் வி.பி.எஃப் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு 80-சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த பி.எஃப் முதலீட்டில் வட்டிக்கு வட்டி வழங்கப்படுவதால், பணம் வேகமாகப் பெருகுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பி.எஃப் வட்டி விகிதம்!  

நிதி ஆண்டு --------------------->வட்டி விகிதம் (%)

2014-15 --------------------------------> 8.75

2015-16 --------------------------------> 8.80

2016-17 --------------------------------> 8.65

2017-18 --------------------------------> 8.55

2018-19 --------------------------------> 8.65

3

யாருக்கு ஏற்றது?

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெற இருப்பவர்கள் வருமான வரியைச் சேமிக்க நினைத்தால், பங்குச் சந்தை சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்), வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்குப் பதிலாக, வி.பி.எஃப் முதலீட்டைக் கவனிக்கலாம்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் -ல் திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதில் ரிஸ்க் அதிகம். மேலும், பணி ஓய்வுக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் இந்த ரிஸ்க் எடுக்க முடியாது. வி.பி.எஃப் மூலம் செய்யப்படும் தொகை, பணி ஓய்வின் போது பி.எஃப் உடன் சேர்ந்து கிடைத்துவிடும் என்பதால் இ.எல்.எஸ்.எஸ் போல் மூன்று ஆண்டுகள் காத்திருப்புக் காலம் இல்லை. வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து, வருமான வரிச் சலுகை பெற்றாலும், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு ஆண்டு தோறும் வரி கட்ட வேண்டும். பி.எஃப்-ல் அப்படி இல்லை. வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. பி.எஃப்-ல் பணம் கட்டும் போதும் வரிச் சலுகை, முதலீட்டு பெருக்கத்துக்கும் வரிச் சலுகை, ஓய்வுக் காலத்தில் திரும்ப எடுக்கும் போதும் வரிச் சலுகை கிடைக்கிறது.

4
PF

கடன் வசதி..!

இந்தத் தொகையை மனை, வீடு வாங்க, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய, அவசரச் செலவு, மருத்துவச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை அடைக்க பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் தொகையை உபயோகித்துக் கொள்ளலாம். அடுத்து மிக முக்கியமாக இந்தத்  தொகையை எந்தக் கடனுக்கும் இணையாக அட்டாச் செய்ய முடியாது.

பி.எஃப். முதலீட்டை எப்படி லாபகரமாக மாற்றலாம் என்பதை விளக்கி உள்ளோம். பயன்படுத்தி பலன் பெறுங்கள்..!

Vikatan