Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

readers experience
பிரீமியம் ஸ்டோரி
News
readers experience

ஓவியங்கள் : பிள்ளை

முதலீடுகளைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்!

என் பணம் என் அனுபவம்!

சமீபத்தில் என் மைத்துனர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சம்பளம், சேமிப்பு குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் அவர், சில இன்ஷூரன்ஸ் பாலிசிகள் தவிர, வேறு முதலீடுகள் எதையும் செய்யவில்லை. மாதச் செலவுகள் போக மீதமாகும் பணத்தை அப்படியே வங்கிச் சேமிப்புக்கணக்கிலேயே வைத்திருந்தார். சேமிப்புக் கணக்கில் மட்டும் மூன்று லட்சம் ரூபாய் வைத்திருந்தார். அவரிடம் சில முதலீட்டு விஷயங்களைச் சொன்னேன். அவர் எதையும் உள்வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் எஃப்.டி-யிலாவது பணத்தை மாற்றி வைத்திருங்கள் என்று சொன்னேன். என் மைத்துனர் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படித்தான் புதிய முதலீடுகளை அறிந்துகொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வளர்த்தெடுக்கக்கூடிய முதலீடுகளைக் குறித்துத் தெரிந்து கொள்வது மிக முக்கியம்!

-சுரேந்தர், சென்னை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
என் பணம் என் அனுபவம்!

கொஞ்சம் யோசித்தால் பட்ஜெட்டுக்குள் செலவை முடிக்கலாம்!

சமீபத்தில் என் மகளுக்குத் திருமணம் செய்து முடித்தேன். பட்ஜெட்டுக்குள் செலவை அடக்க பலவிதங்களிலும் யோசித்ததால் கடன் வாங்காமல் கல்யாணத்தை நடத்தி முடித்துவிட்டேன். பெரிய செலவுகளில் முக்கியமான ஒன்று ஜவுளி எடுப்பது. பெண்ணுக்குத் தேவையான துணிமணிகள் தவிர குடும்பத்தினர், உறவினர்களுக் கென பெரிய தொகை தேவைப்பட்டது. புடவை மட்டும் 40 எடுக்க வேண்டியிருந்தது. அப்போது என் மனைவி சொன்ன யோசனை அருமையாக இருந்தது. “என் சித்தப்பா மகன் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். அவரிடம் சொல்லி மொத்த வியாபாரக் கடையில் வாங்கலாம்” என்றாள் அவள். நான் உடனே என் சித்தப்பா மகனிடம் சொன்னேன். அவர் வழக்கமாக பர்ச்சேஸ் செய்யும் வியாபாரக் கடைக்கு அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தார். இதனால் துணிமணி வாங்கு வதற்கான செலவில் 30% வரை மிச்ச மானது. பட்ஜெட்டுக் குள் குடும்ப விழாவை செய்து முடிக்க நினைப்பவர்கள் இப்படியெல்லாம் யோசிக்கலாமே!

-வேலுச்சாமி, கம்பம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

கடன் வாங்குவது தவறில்லை!

நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, சின்னதாக ஹோட்டல் ஒன்றினை ஆரம்பித்தேன். பிசினஸ் நன்றாகப்போனது. என் நண்பனும் என்னைப் போலவே, அவனுடைய ஊரில் ஹோட்டல் வைத்துள்ளான். ஒருநாள் அவனைச் சந்திக்கும்போது, அவன் ஹோட்டலை விரிவுபடுத்துவதற்காக வங்கியில் கடன் வாங்க உள்ளதாகச் சொன்னான். என்னையும் வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யுமாறு சொன்னான். எனக்குக் கடன் வாங்குவது என்றாலே பயம். சொந்தப் பணத்தைக் கொண்டுதான் ஹோட்டலை விரிவுப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஹோட்டலைப் பெரிய அளவில் விரிவுப்படுத்த இயலவில்லை. ஆனால், அடுத்த ஐந்து வருடங்களில் என் நண்பன் இரண்டு கிளைகளை ஆரம்பித்து நடத்திவருகிறான். பிசினஸ் நன்றாக நடக்கும்போது விரிவாக்கம் செய்ய கடன் வாங்கலாம் என்பதை அப்போது உணர்ந்தேன்!

-சிவகுமார், தூத்துக்குடி

என் பணம் என் அனுபவம்!

கடனாளியாக்கிய சொந்த வீட்டு ஆசை!

நான் எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்துவருகிறேன். என் மனைவி, “நமக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிவிட்டால் நிம்மதியாக இருக்கலாம்” என்றாள். நானும் குறைவான விலைக்கு வீட்டுமனை கிடைக்குமா எனத் தேடினேன். அப்போது நண்பர் ஒருவர் அரசியல்வாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றார். “டாக்குமென்ட் எதுவும் கிடையாது. ஆனால், பிரச்னை எதுவும் வராமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று அந்தப் பிரமுகர் கூறினார். நான் சேமிப்பில் இருந்த ரூ.4 லட்சத்தைக் கொடுத்து இடம் வாங்கினேன். பிறகு, வட்டிக்குக் கடன் வாங்கி வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். வீடு முக்கால்வாசி முடிந்திருந்தது. திடீரென நகராட்சியிலிருந்து அதிகாரிகள் வந்து, அந்த வீட்டை இடித்துத் தள்ளினார்கள். அரசியல் பிரமுகரிடம் கேட்டால், “இதுமாதிரி ரிஸ்க்கெல்லாம் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டார். என் சேமிப்பு பணம் மொத்தமும் போய், கடனாளியாகி நிம்மதி இழந்து தவிக்கிறேன்.

-மணிமாறன், போன் மூலமாக

என் பணம் என் அனுபவம்!

சாட்சியும் ஆதாரமும் முக்கியம்!

நான் தனியார் பள்ளியொன்றில் பணியாற்றி வருகிறேன். எதிர்வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் நன்றாகப் பழகி வந்தேன். நானும் என் கணவரும் வேலைக்குச் சென்றுவிடும் சமயங்களில் என் குழந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தால், பெரும்பாலான நேரங்கள் எதிர்வீட்டில்தான் இருப்பார்கள். எதிர்வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் தாத்தா, பாட்டி என என் குழந்தைகள் பிரியமாக இருப்பார்கள்.

மகன், மருமகள், குழந்தைகள் என அனைவரும் 10 நாள்கள் சுற்றுலா சென்றுவிட, பெரியவர்கள் மட்டும் தனியாக இருந்தார்கள். அப்போது உறவினர் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சைக்கு அவசரமாகப் பணம் ரூ.40,000 தேவைப்படுவதாகவும் மகன் ஊரிலிருந்து வந்ததும் தந்து விடுவதாகவும் சொல்லி எதிர்வீட்டு அம்மா எங்களிடம் பணம் கேட்டார். நான் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த வைத்திருந்தத் தொகையிலிருந்து ரூ.40,000 கொடுத்தேன். மகன், மருமகள் ஊரிலிருந்து வந்தபிறகு ஒருமாதம் ஆகியும் பணத்தைத் திரும்பத் தரவில்லை. நான் கேட்டுவிடலாம் என நினைத்த நேரத்தில், அந்த அம்மா திடீரென நெஞ்சுவலி வந்து இறந்துபோனார். துக்கவீட்டில் எப்படிக் கேட்பது எனத் தயக்கத்தில் கேட்க வில்லை. நான்கு மாதம் கழித்துக் கேட்டபோது, “எங்களுக்குத் தெரியாமல் என் அம்மா யாரிடமும் கடன் வாங்கமாட்டார். எங்களிடம் இதுபற்றி எதுவும் சொல்ல வில்லையே” என்று சொல்லிவிட, நான் பணத்தை வாங்க முடியாமல் தவித்துவருகிறேன். பெரிய தொகை கொடுக்கல் வாங்கலின்போது சாட்சியும் ஆதாரமும் முக்கியம் என்பது புரிந்தது.

-மதுமிதா, புதுக்கோட்டை

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்